திருமண உறவில் ஏற்படும் எந்த விதமான பிரச்னைகளுக்கு, திருமண பந்தத்தைத் தாண்டி வெளியே வருதல் ஒரு நல்ல தீர்வாக அமையும்? எந்த சமயத்தில் அது நமக்கே ஆபத்தானதாக முடியும்? என்ற விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை.

தங்கள் துணைவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மனநிலைப் பிறழ்வு ஏற்பட்டால் (According to the section 13 of the Act – Incurability of Unsound Mind) வேறு நபருடன் அவர் உடலுறவு வைத்திருந்தால் (Divorce on the Ground of Adultery) அல்லது குடும்ப வன்முறைக்கு உட்படுத்தினால் (Domestic Violence) விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று நம் திருமணச் சட்டம் சொல்கிறது. தனது மனைவிக்கும் அவளுடன் தான் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் ஒரு ஆண் பொருளாதாரப் பாதுகாப்பு, அடிப்படை உரிமை மற்றும் வசதிகளையும் கொடுக்கத் தவறினால், அதனால் அவளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினால் அந்த உறவிலிருந்து அப்பெண் வெளியேறுவதற்கு சட்டம் இடமளிக்கிறது.

தன் மனைவிக்கோ அல்லது கணவருக்கோ தகுந்த பாலியல் துணையாக ஒருவர் இல்லாத பட்சத்தில் (Divorce on the Ground of Impotency – Section 12 (1) (a)) அவர்களை விட்டுப் பிரியும் சுதந்திரத்தைக் கொடுப்பதோடு, அத்திருமணமே செல்லாது ( Nullification of Marriage) என்ற தீர்ப்பையும் சட்டம் கொடுக்கிறது. உடல் ரீதியிலான பிரச்சினைகளால் ஒருவர் தன் துணைக்கு பாலியல் இன்பத்தைத் தர முடியாமல் போவதென்பது நாம் அறிந்ததே (Physical Impotency). இதன் அடிப்படையில் விவாகரத்து பெற வேண்டுமென்றால், அதற்குப் போதிய மருத்துவ ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் (Medical proof). ஆனால், பல சமயங்களில் உடலளவில் எந்தப் பிரச்னைகளும் இல்லாவிட்டாலும் மன பாதிப்புகளினால், உணர்வுரீதியிலானப் பிரச்னைகளால் கலவி கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். இந்த உளவியல் ரீதியிலான பிரச்னைகளால் கலவியில் ஈடுபட முடியாத காரணத்தின் அடிப்படையிலும் ( Psychological impotency As a Ground of Divorce Under Hindu Marriage Act, 1955 ) விவாகரத்து பெறலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்து அதனடிப்படையில் நிறைய தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது.

தன் கணவர் மீது மிகுந்த அன்புள்ள பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இரண்டு விஷயங்களை சகித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களது கணவர் அன்பையும் காதலையும் பொழிபவராக இருந்தால் மட்டுமே மனமுவந்து அப்படி வாழ்வது சாத்தியமாகும். சில சமயங்களில் ஒருவேளை அவர் அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் குழந்தைகளுக்காகப் பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிப்பார்கள்.

எந்த இரண்டு சூழல்களில் தெரியுமா? உடல் நலமில்லாத கணவரைப் பிரியாமல் அவரை கவனித்துக் கொண்டு அவருடன் வாழ்வது.
கணவர் சம்பாதிக்காவிட்டாலும் அந்தப் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டு குடும்பத்தை சமாளிப்பது.

நமது சமூகத்தைப் பொறுத்தவரை வீட்டு வேலை செய்தாவது நோயாளிக் கணவனையும், பணம் ஈட்டாத கணவனையும் ஏற்றுக் கொண்டு வாழும் பெண்கள்தான் அதிகம். கணவனை மட்டுமல்லாது தங்கள் குழந்தைகளையும் பொறுப்பாய் வளர்த்து அவர்களையும் அவர்கள் சொந்தக் கால்களில் நிற்க வைத்து விடுகிறார்கள். சட்டமே இந்த இரண்டு காரணங்களுக்காகவும் விவாகரத்துப் பெறுவது சரிதான் என்று சொன்னாலும் இதற்கெல்லாம் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றப் படிகளில் நம் பெண்கள் கால் வைப்பதில்லை. இவ்விரண்டு காரணங்களுக்காகத் திருமணத்தைத் தாண்டிய உறவுகளையும் பெரும்பாலும் நாடுவதில்லை.

சட்டப்படி விவாகரத்துப் பெற்று ஒரு திருமண பந்தத்திலிருந்து சட்ட ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மனதளவிலும் வெளியேறி இன்னொரு துணையுடன் வாழ்க்கை நடத்துவதற்கும் ஒரு திருமண
பந்தத்தில் இருந்துகொண்டே இன்னொரு நபருடன் உறவு வைத்துக் கொள்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

திருமணம் செய்து கொண்ட அனைவருக்குமே இந்த அடிப்படை வேறுபாடு மேம்போக்காகப் புரிந்திருந்தாலும், அதை மீறும்போது ஏற்படும் ஆழமான பிரச்னைகளைப் பெரும்பாலும் அவர்கள் புரிந்து வைத்திருப்பதில்லை. தற்காலிகப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வை எடுத்து விட்டுப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் ‘திரு திரு’வென விழிக்கிறார்கள். தாங்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் ரகசியமாகவும் திருமணத்தை மீறிய உறவைக் கையாண்டு கொண்டிருக்கிறோம் என்ற மிதப்பில் இருப்பவர்களுக்கும்கூட ஒரு காலகட்டத்தில் மிகப் பெரிய சறுக்கல் ஏற்படத்தான் செய்கிறது. இந்த சறுக்கல், மனதளவிலும் இயல்பு வாழ்க்கையிலும் மீண்டும் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்றுவிடுகிறது.

ஆண்கள் தங்களது மனைவியிடம் இந்தக் குறை, அந்தக் குறை, அவள் தனக்குக் காதலைக் கொடுக்கவில்லை, கத்தரிக்காயைக்
கொடுக்கவில்லை எனப் பல காரணங்களை அள்ளித் தெளித்தாலும், காமத்திற்கான தேடல்தான் பெரும்பாலும் அங்கே பிரதானக் காரணமாகிறது. ‘காமம் மட்டும்தான் என் தேவை’ என பகிரங்கமாக, குறைந்தபட்சம் தங்கள் மனதுக்குள்ளாவது ஒப்புக் கொள்ளும் ஆண்கள் பாலியல் தொழிலாளர்களை நாடுகிறார்கள். உணர்வு ரீதியிலான பிணைப்பு அங்கு ஏற்பட வாய்ப்பில்லாததால், தங்கள் மனைவியிடமும் அவர்கள் இயல்பாக நடந்து கொள்கிறார்கள். ஆனால், பாலியல் தொழிலாளர்களிடம் செல்வது இழுக்கு, இருந்தாலும் என் காம வேட்கைக்கு ஒரு இரை வேண்டுமென நினைக்கும் ஆண்கள் தங்களுக்குத் தெரிந்த பெண்களிடம் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கு One night stand, Friends with benefits, Friends only to Cuddle என்று ரகம் ரகமாக, விதம் விதமாகப் புதுப் புது பெயர்கள் இப்போது இளைஞர்கள் மத்தியில் உலா வருகின்றன.

‘நான் உனது வேலையில் பங்கெடுத்துக் கொள்கிறேன், நீ உன்னைத் தா… நான் உனக்கு ஆடைகளோ, விலையுயர்ந்த பொருLகளோ வாங்கித் தருகிறேன், ஊர் சுற்றும் செலவுகளை ஏற்றுக் கொள்கிறேன், அல்லது ஒரு பெரிய வாய்ப்பைத் தருகிறேன்…’ இப்படி ஏதாவது ஒரு பேரம் பேசி படுக்கைக்கு அழைப்பதுதான் இந்த புதிய சொற்களின் சாராம்சம். ‘உனக்கும் ஒரு பலன், எனக்கும் ஒரு பலன்… அவ்வளவுதான். இருவரும் கூடலை அனுபவிப்போம், அது முடிந்ததும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுவோம். இதுதான் உனக்கும் எனக்கும் உள்ள உறவு. இந்த எல்லையை மீறி, என்னைத் திருமணம் செய்து கொள், வாழ்க்கை முழுவதும் கூட வா என்றெல்லாம் பிதற்றக்கூடாது’ என்று பலவித ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருவருக்கும் நடுவில் ஒரு கோடு போட்டு, ‘இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வராதே, நானும் வரமாட்டேன்…’ என்று வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

இது அப்படியே சுபமாய், சுகமாய் நீளுமா என்றால் அதுதான் இல்லை. பாலியல் தொழிலாளர்களிடம் இருப்பது போல், ஒருமுறை பார்த்த முகத்தைத் திரும்பவும் பார்க்கக்கூட அவசியமில்லாத நிலை இத்தகைய உறவுகளில் சாத்தியமில்லை. ஒரே பாலியல் தொழிலாளரிடம் மீண்டும், மீண்டும் சென்றால்கூட அந்தப் பெண் ‘இது ஒரு தொழில் முறை உறவுதான்’ என்ற மன நிலையில் திடமாய் இருப்பதால் அந்த ஆணிடம் உணர்வளவில் அதீத சார்புத்தன்மை கொண்டிருக்கமாட்டாள். மிக மிக அரிதாகத்தான் ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணுக்கும் அவளது
வாடிக்கையாளருக்குமான உறவு காதலாகவோ அல்லது திருமணத்திலோ சென்று முடிகிறது. அப்படியே நடந்தாலும் அந்தத் திருமண பந்தமோ, காதலோ மிக விரைவிலேயே முடிந்தும் விடுகிறது. ஆனால், மேலே சொன்ன இந்தப் புதுப் புது பெயர்களுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைந்த உறவுகள், சேர்ந்து வாழ்தலாகவோ (Living together) காதலாகவோ உருமாற்றமடைய வாய்ப்புக்கள் அதிகம். இவ்வுறவில் ஈடுபட்டுள்ள இருவருக்குமே திருமணமாகியிருக்கவில்லை என்றால் இச்சூழலை அவர்கள் சமாளிப்பது சுலபம்.

Woman with broken heart. Girl watching ex boyfriend dating new girlfriend. Flat vector illustration. Jealousy, heartbreak, breakup concept for banner, website design or landing web page

ஒன்று, சிறிது நாட்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் அல்லது ஒருவேளை அப்போது பிரிவு ஏற்பட்டாலும் வேறு ஒரு நபருடன் திருமணம் அல்லது காதல் என்று நுழைந்து தங்கள் மனநிலையையும் வாழ்க்கையையும் செப்பனிட்டுக் கொள்வார்கள். ஆனால், அந்த ஆண் அல்லது பெண் இருவரில் யாரோ ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ வேறு ஒரு நபருடன் திருமணமாகி, அவர்கள் திருமண பந்தத்திலிருக்கும்போதே இப்படி இன்னொருவருடன் உறவு
வைத்திருந்தார்கள் என்றால், அது மிகப் பெரிய சிக்கல்களை உருவாக்குகிறது. அவர்களது துணைவர்களின் மனநிலை மட்டுமல்லாது ஒரு காலகட்டத்தில் இந்த உறவில் ஈடுபட்டிருக்கும் இருவரின் மனநிலையிலேயேகூட விவரிக்க முடியாத மாற்றங்கள் ஏற்படத்
தொடங்குகின்றன. தனிநபர் பிரச்சினை என்பது கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சம்பந்தப்பட்ட இருவரின் குழந்தைகள், கணவன், மனைவி இருவரின் பிறந்த வீட்டு, புகுந்த வீட்டு உறவு வட்டம் என அனைவரையும் அழுத்தத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் மனதிற்குள்
பொங்கியெழுந்து சீறிப் பாயும் குற்றவுணர்ச்சி, இயலாமை, சுய வெறுப்பு, ஏமாற்றப்பட்ட விரக்தி எல்லாம் பீறிட்டு மூன்றாம் மனிதர்களின் மீது அவை தெளிக்கப்படும்போது, மெல்ல ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாக அவை உருமாறி விடுகின்றன.

ஆண்களால் எந்த நிலையிலும், தங்கள் மனதை சுதாரித்துக் கொண்டு அந்த உறவின் தேவை முடிந்து விட்ட பிறகு அந்த உறவிலிருந்து வெளியேறி எதுவுமே நடக்காதது போல் பின்வாங்கி தன் குடும்பத்துடன் ஐக்கியமாகிவிட முடியும். மிக அரிதாகவே ஆண்கள் இத்தகைய உறவுகளில், ஏன் எல்லா உறவுகளிலுமே உணர்வு ரீதியிலான அதீதப் பிடிப்பைக் கொண்டிருப்பார்கள். ஆனால், பெண்களின் நிலை அப்படியல்ல. உணர்வு ரீதியிலான பிடிப்பு ஒரு ஆணிடம் ஏற்பட்டால் மட்டுமே அவளால் முழுதாக அவனுடன் உடலுறவு கொள்ள முடியும். சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், அவர்களும் கூட பெரும்பாலும் பல மனக்கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு அப்படி மாறியிருப்பார்கள்.

ஒருவேளை, ‘நாங்கள்லாம் அப்படியில்லப்பா … ஆம்பளைங்க மாதிரியே நாங்களும் செக்ஸ்ல எக்ஸ்பெரிமெண்ட் மட்டும் செஞ்சுட்டு, நாசூக்கா நழுவி வெளியே வந்துருவோம்ல?’ என சுடிதார் காலரைத் தூக்கி விட்டபடி சவால் விடும் பெண்கள்கூட, நாள்கள் நகர நகர மாறிப்போவார்கள்.

தான் கூடலில் ஈடுபட்டுள்ள ஆணுடன் மனதளவில் நெருக்கமாக ஆரம்பிப்பார்கள். அந்த நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடனான உணர்வியல் சார்புத்தன்மையை (Emotional Dependency) அதிகரித்து, ஒரு கால கட்டத்தில் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் முழுக்க முழுக்க அவனை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அவள் தன் கணவனின் குறைகளைப் பற்றி சொல்லும்போது உறவின் ஆரம்பக் கட்டத்தில் அக்கறையாய் கேட்ட அதே ஆண் அவளுடனான உறவைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்படும்போதோ அல்லது வேறொரு பெண்ணிடம் நாட்டம் ஏற்பட்டு விடும்போதோ மெதுவாக இவளைப் புறக்கணிக்கத் தொடங்குவான். அவள் கணவனைப்
பற்றியென்ன, அவள் எதைப் பற்றிப் பேசினாலும் அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டான். இத்தகைய சூழல்களில்தான் பெரும்பாலும் பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அல்லது கணவனும் கைவிட்டு, இப்போது பாதியில் வந்தவனும் போய், அந்தரங்கத் துணையென்று யாருமில்லாத ஒரு
நிலையிலிருக்கிறோம் என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தவறான உறவுகளுக்குள் மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்ளத்
தொடங்குவார்கள்.

Woman using mobile phone while lying on bed at bedroom

ஒன்று மிக அதிகமாகத் தனிமையை நாடி மது, போதைப் பழக்கங்களுக்குள்ளாவது அல்லது எப்போதும் நட்பு என்ற பெயரில் ஒரு
கூட்டத்துடன் சுற்றிக் கொண்டிருப்பது இவ்விரண்டில் ஒரு முறையைத்
தேர்ந்தெடுப்பார்கள். என்னதான் அவளைச் சுற்றி ஒரு கூட்டமிருந்தாலும் மனதுக்குள் ஒரு ஆபத்தான தனிமை அவளை வட்டமிட்டுக் கொண்டேதானிருக்கும். அந்த கும்பலுடன் சேர்ந்து பல தவறுகள் செய்ய அவள் தூண்டப்படலாம் அல்லது தன்னைச் சுற்றி அந்த நபர்கள் இல்லாத தனிமைப் பொழுதுகளில், ‘எல்லோரும் அவர்கள் வாழ்க்கையைப் பார்க்கப் போய் விட்டார்களே நமக்கு யாருமில்லையே’ என்ற விரக்தியில் தற்கொலையை நாடலாம். இதனால்தான் நிறையப்பேர் சொல்லக் கேட்டிருப்போம்… ‘நேத்து வரைக்கும் எங்க கூடத்தான் சுத்திட்டிருந்தா, நல்லாத்தான் ஜாலியா சிரிச்சுப் பேசி, ஆடிப்பாடிட்டிருந்தா. இங்க பாருங்க எங்க கூட சந்தோஷமா அவ இருக்கற வீடியோவை! ஸ்டேட்டஸ்லாம் போட்டா… ஆனா, ஏன் இப்படி திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டாள்னு தெரியலையே’ என்று கதறுவார்கள். காரணம்… வெறுமை, குற்றவுணர்ச்சி, தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் அல்லது கைவிடப்பட்டு விட்டோம், பயன்படுத்தப்பட்டுத் தூக்கியெறியப்பட்டுவிட்டோம் என்ற
விரக்திதான்.

‘தனியாயிருப்பதென்பது வேறு, தனிமையாயிருப்பதென்பது வேறு.’ மனதைக் கையாளும் திறன் உங்களுக்குக் கைவந்தால் மட்டுமே எத்தகைய உறவுச் சிக்கல்கள் வந்தாலும், அவற்றைச் சரியாகக் கையாண்டு நீங்கள் வாழ்க்கையை அழகாய் நகர்த்திச் செல்லமுடியும்.
சரி, அப்படியென்றால், திருமணத்தின் அடிப்படைத் தேவையான, நோக்கமான அன்பும் கலவியும் தன் கணவனிடமிருந்து கிடைக்கப் பெறாத பெண்களுக்கு என்னதான் தீர்வு…? ஏதோ ஒரு வெற்றிடம் இருப்பதால்தானே அவள் மனம் இன்னொருவனை நாடுகிறது..? என்று நீங்கள் கேட்கலாம். பல சமயங்களில் வெற்றிடம் என்ற ஒன்று இல்லாதபோதே அவ்வாறிருப்பதாய் கற்பனை செய்து கொள்ளும் மிகச்சிலருமிருக்கிறார்கள். பல சமயங்களில் அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவதென்பது இருவருக்குமே தெரிவதில்லை. குறைந்தபட்சம் பெண்களுக்கு இந்தப் புரிதலிருந்தால், சூட்சுமம் தெரிந்தால் அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். தங்களைத் தற்காத்துக் கொள்ளலாம்.

ஆனால், இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமென்றால், அதற்கான முழு முயற்சியையும் பொறுப்பையும் ஆண்கள்தான் எடுத்துக் கொண்டாகவேண்டும். இந்தப் புத்தகம் முழுவதுமே அதற்கான தீர்வுகள்
சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளைப் பயன்படுத்திப் பாருங்கள்.
இன்னொன்று… எது எதார்த்தம், எது எதிர்பார்ப்பு என்ற புரிதலில்லாமலிருப்பது. உங்கள் அதீத எதிர்பார்ப்புகள் எந்த ஆணாலும் பூர்த்தி செய்ய முடியாதவைகளாக இருக்கும் பட்சத்தில், காலம் முழுவதும் எந்த ஆணாலும் அவற்றைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியாது என்று நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். அந்த நிஜத்தைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்வதுதான் பெண்களுக்கு நல்லது. பல தருணங்களில் ‘வேறு வழியில்லை’ என்ற நிஜத்தை உணரும்போது அதற்காக மனமுடைந்து போவதை விட்டு, சரியான நபர்களின் வழிகாட்டுதல்களுடன் அவற்றைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். இவையெல்லாம் என்னுடைய சொந்தக் கருத்துக்களோ, அறிவுரைகளோ அல்லது நான் இந்த திருமணத்தை மீறிய உறவுகளைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டதோ அல்ல. எது சரி எது தவறு என்று நான் தீர்ப்பு சொல்லவுமில்லை. இன்னும் சொல்லப்போனால், ஒழுக்கம், நியாயம், தர்மம் இவற்றைச் சார்ந்த கருத்துக்களையும் நான் இங்கு பதிவு செய்யவில்லை.
இந்த அத்தியாயம் முழுக்க, முழுக்க தனிப்பட்ட முறையில் தங்கள் வாழ்க்கையில் சில காலகட்டங்களில் தாங்கள் எடுத்த முடிவால் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு சின்னாபின்னமானோம் என்பதை என்னுடன் பகிர்ந்து கொண்ட சில பெண்களின் அனுபவங்களே.

காரணம் எதுவானாலும், திருமணத்தை மீறிய உறவுகளில் ஈடுபட்டு நமக்கும் நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு சமாளிக்கும் திறமையும் இயற்கையான மன அமைப்பும் ஆண்களுக்கு இருப்பதை போல் பெண்களுக்கில்லை என்பதுதான் இந்தக் கதைகளின் மையக்கரு. ஒரே மாதிரியாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கைக் கதைகளிருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று வித்தியாசமான கதைகளை மட்டும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

‘இப்படி இருந்திருந்தால், அந்தப் பெண் சமாளித்திருப்பாள்’, ‘அப்படிப்பட்ட பெண்ணாயிருந்திருந்தால் அவள் இரண்டு உறவுகளையும் கைக்குள் போட்டு வைத்திருந்திருப்பாள்’, என்று நீங்கள் காரணம் சொல்ல முடியாதபடி, மூன்று பேருமே மூன்று விதமான குணாதிசயங்கள் கொண்டவர்கள்.

அவர்களின் பொருளாதார சூழலும் வேலைகளும் வளர்ந்த விதமும் முற்றிலும் வெவ்வேறானவை. நீங்கள் புருவம் உயர்த்துமளவுக்கு, இதில் ஒரு கதையில் அந்தப் பெண்ணின் கணவனே அவளை இன்னொரு உறவுக்கு அனுமதித்தவர். அப்படியிருந்தும் என்னென்ன சிக்கல்கள் அவளுக்கு ஏற்பட்டன என்பதை ஒவ்வொன்றாய் பார்க்கலாம். இந்தக் கதைகளை நீங்கள் கேட்டு முடித்தவுடன், திருமண உறவு மீறிய காமம்தான் இம்மூன்று கதைகளிலுமே உள்ள பொதுப் பிரச்னை என்பது உங்களுக்குப் புரியும். முதலில் கேளுங்கள். பிறகு இந்த சூழல் வராமல் எப்படித் தடுக்கலாம், ஒருவேளை நீங்கள் இந்தச் சூழலிலிருந்தால் அதற்கு என்ன தீர்வு என்பதைப் பற்றியெல்லாம் அலசலாம். (இந்த உண்மைக் கதைகளில் நான் குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் கற்பனையே)

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாய் வாணி. பள்ளி இறுதி வகுப்பு, கல்லூரி எனப் படிக்கும் வயதிலிருக்கும் இரண்டு குழந்தைகள், சொந்தமாகத் தொழில் செய்யும் கணவர். அவர் சார்ந்திருக்கும் துறையில் அன்றும் தற்போதும் பிரபலமாயுள்ளவர். நேர் வகிடெடுத்து தலைபின்னி, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, புடைவை கட்டி எனப் பார்ப்பதற்கு மிகவும் மங்கலகரமாயிருந்தார். நடிகை சரிதா போன்ற உடல்வாகு, மாநிறம். மிகவும் அமைதியான, மென்மையான குரலில்தான் பேசினார். தனக்கு தெய்வ பக்தி அதிகம் எனவும், வீடு, குழந்தைகள், சமையல் என்றிருப்பது அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினார். அப்படித்தான் என்னாலும் உணர முடிந்தது. அவர் பொய் சொல்வதுபோல் தெரியவில்லை. நன்றாக சம்பாதிக்கும் கணவர், அருமையான குழந்தைகள். இவருக்கு என்ன பிரச்னையிருக்கும் என்று யாராலும் யூகிக்கக் கூட முடியாது. அவரது கணவர் என்னிடம் பேசும்போதுகூட, ‘ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறாள்’ என்றார். அவரது குரல் மிகவும் மென்மையாகவும், மரியாதை நிரம்பியுமிருந்தது. மனைவி சரியாக வந்து சேர்ந்து விட்டாளா, எப்போது கிளம்புவாள் என்றெல்லாம் அவர் தன் மனைவியிடம் அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கணவர் இந்தப் பெண்ணுக்கு ஒரு பிரச்னையாக இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இரண்டு, மூன்று நாள்கள் தொடர்ந்து வந்த அவரது மனைவி, தனக்கு ஏதோ பதட்டமாக இருப்பதாகவும் சில மூச்சுப் பயிற்சிகள் செய்யும் போது, தான் மனதளவில் அமைதியாக உணர்வதாகவும் சொன்னாரேயொழிய அவரது உண்மையானப் பிரச்னை என்னவென்று வாயே திறக்கவில்லை.

உண்மையான காரணம் சரிசெய்யப்படாதவரை, தற்காலிகப் பயிற்சி முறைகள் ஒருபோதும் சரியான தீர்வைத் தராது. உங்களது மன அழுத்தத்துக்கான காரணம் என்னவென்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் வெளிப்படையாகப் பேசினால்தான் என்னால் உங்களுக்கு உதவ முடியுமென்றேன். அப்போதும் அவர், ‘எனக்கு எந்தப்
பிரச்னையுமில்லை’, என்று சமாளித்தார். அவளது கணவர் என்னிடம் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கும் போது நான் ஏதாவது உளறி விடுவேனோ என்ற பயம் இருந்தது அவருக்கு. “நிச்சயமாய் சொல்லமாட்டேன்…”, என்ற நம்பிக்கையளித்த பிறகு மெதுவாக பேசத் தொடங்கினார்.

“எனக்கும் என் கணவருக்கும் திருமண வயதைக் கடந்த பிறகுதான் திருமணமானது. லேட் மேரேஜ். திருமணமான புதிதில் ஒரு சாதாரண பிஸினஸ் செய்துகொண்டு அமைதியான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தோம். இரண்டாவது குழந்தையும் பிறந்தது. தொழிலில் இன்னும் கொஞ்சம் பணம் முதலீடு செய்யத் தொடங்கினார் என் கணவர். ஒரு கட்டத்தில், வார்த்தைகளில் சொல்ல முடியாதளவிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஆகிவிட்டது. நான் பெரிதாக எதற்கும் ஆசைப்படமாட்டேன். வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குப் பிரச்னையிருக்கக்கூடாது. ஆனால், வீடு மட்டும் பார்ப்பதற்கு நன்றாயிருக்க வேண்டும் என்று நினைப்பேன். மிகப் பெரிய பிரமாண்டமான வீடு இல்லையென்றாலும் ஓரளவிற்குப் பெரிய வீடு, நல்ல பெரிய சோஃபா, வீட்டு உபயோகப் பொருள்கள் என எல்லாம் வாங்கிப்போட்டு சொந்தக்காரர்கள் மெச்சும்படி, பார்த்து வியக்கும்படிதான் அதுவரைக்கும் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

தொழிலில் இப்படி நஷ்டத்தின் மேல் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தபோது என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. அவர் வேறு ஏதாவது தொழிலில் ஈடுபட்டு கடனை அடைப்பதை விட்டுவிட்டு, குடிக்க ஆரம்பித்தார். குடி என்றால் கொஞ்சம் நஞ்சம் குடியில்லை, தன் நிலை மறக்குமளவிற்குக் குடிக்கத் தொடங்கினார். பல நாள்கள் நான் அவரது வாந்தியையும் அங்கேயே சிறுநீர் கழித்துவிட்டு அதன் மேலேயே தூங்கும் அவரையும் சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டது. ஒரு தனியறையில் அடைந்து கிடக்க ஆரம்பித்தார். ஆனாலும் அந்தக் கடையிலிருந்த
அனைவரையும் வேலையை விட்டு அனுப்பிவிட்டு, எங்களுக்கு உதவியாயிருந்த ஒரு பையனை மட்டும் வேலைக்கு வைத்திருந்தோம். இவர் இப்படி சாக்கடைக்குள் புரண்டு கொண்டிருக்கும்போது அவனும் அவரை சுத்தம் செய்ய எனக்குப் பல நாள்கள் உதவியிருக்கிறான். இந்தக் காலகட்டத்தில் எனக்கும் என் கணவருக்குமிடையே சுத்தமாய் உடலுறவு என்பதே இல்லை. போதாக்குறைக்கு அவர் செய்த இந்தக் குடி அட்டகாசத்தால் எனக்கு ஏகப்பட்ட மன உளைச்சல். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு , கடையில் எனக்குத் துணைக்கிருக்கும் அந்தப் பையனிடம்தான் புலம்பிக் கொண்டிருப்பேன். என்னை விட அவன் பதினைந்து வயது இளையவன். எனக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவான்.
ஒரு கட்டத்தில் எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு இறுக்கமானது. ஆனால் இப்போது நாங்கள் சண்டை போட்டுக்கொண்டேதானிருக்கிறோம், பேசிக்கொள்வது இல்லை. நான் அவனை வேலையைவிட்டு நிறுத்திவிடலாம் என்று சொன்னால், என் கணவர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார்…”, என்ற புள்ளியிலேயே நின்றார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்பது போல், அவர்கள் கஷ்டப்பட்ட காலத்தைப் பற்றி சொன்ன அப்பெண், இப்போது தாங்கள்
நல்ல நிலைக்கு வந்த பிறகும் அந்தப் பையனை ஏன் திட்டுகிறார்… ஏன் அவனை வேலையை விட்டு அனுப்ப வேண்டுமென்கிறார், ஏன் அவனுடன் தினமும் சண்டை… என்பதைப் பற்றியெல்லாம் எதும் சொல்லவில்லை.
‘அவனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மன உளைச்சல் வருகிறது, அவனை வேலையை விட்டு எப்படியாவது அனுப்ப வேண்டும், என்னால் குடும்பத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை… அவனுக்குத்தான் இப்ப கல்யாணம் ஆகிருச்சுல்ல, வேற வேலை பார்த்து அவன் பொண்டாட்டியைக் காப்பாத்த வேண்டியதுதானே…’ என்று திரும்பத் திரும்ப மனநிலைப் பிறழ்வுள்ள ஒரு நபரைப் போல் பேசிக்கொண்டேயிருந்தார். நான்கைந்து நாள்கள் கடந்திருந்தும் தினமும் இதே பல்லவி மட்டும்தான். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் அவர் முடிச்சுப் போட்டாலும் எனக்குப் புரிந்து விட்டது… “சரி, சொல்லுங்கள் அப்புறம் எப்படி அவ்வளவு பெரிய கடனிலிருந்து மீண்டு வந்தீர்கள்…?” எனக் கேட்க அவர் நிறுத்திய இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்தார்…

“இனி இவரை நம்பி பிரயோஜனமில்லைனு ஒரு முடிவுக்கு வந்து நான்தான் மேம் எங்க வீட்டை விக்கற முடிவுக்கு வந்தேன். தினம் கடன் கொடுத்தவங்க வருவாங்க… ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன்னு வாங்கி கடைசியில கந்து வட்டி வாங்கற நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுட்டாரு. கடன் கொடுத்தவங்க அசிங்கம் அசிங்கமா பேசுவாங்க… அந்தப் பையன்தான் அவங்ககிட்டப் பேசி சமாளிச்சு அனுப்பி வைப்பான். பணத்தை எப்ப வேணும்னாலும் திரும்ப சம்பாதிச்சுக்கலாம். ஆனால், இப்படியே கடன் வட்டிக்குக் குட்டி போட்டுட்டிருந்தா நம்ம நிலைமை
அதோகதிதான், நாங்க நடுத் தெருவுலதான் நிற்க வேண்டியிருக்கும்னு எனக்குப் புரிஞ்சு போச்சு… அதனால, பேங்க் மேனேஜர்கிட்டப் பேசி, எங்க வீட்டை ஏலம் விடச் சொன்னேன். பேங்க்ல நாங்க வாங்கியிருந்த வீட்டுக் கடன் போக மீதிப் பணம் கையில கெடைச்சது… எவ்வளவு ஆசையா வாங்கின வீடு … அது எங்கக் கையை விட்டுப் போனப்ப அவ்வளவு அழுதேன். மனசு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு…” சொல்லும்போதே அவளது கண்கள் கலங்கி குரல் கரகரத்தது. “நான் ஆசையா வாங்கின சோஃபா முதற்கொண்டு வீட்டு உபயோகப் பொருள்கள் எல்லாத்தையும் வித்து, கடன்களை அடைச்சேன். வெளிய வந்து ஒரு சாதாரண வீட்டையும், அது கூட சேர்ந்தே கடையும் ஆரம்பிச்சோம். இது எல்லாத்துக்கும் அந்தப் பையன்தான், அலைஞ்சு திரிஞ்சு கூட நின்னு உதவி செஞ்சான்.”

“அதுக்கப்புறம் தொழில்ல கவனம் செலுத்தி இவர் பணப்பிரச்னை வராம பார்த்துக்கிட்டாரு. ஆனாலும், எங்களுக்குள்ள இந்தப் பிரச்னைகளுக்கு முன்னாலிருந்த அந்தப் பழைய அந்நியோன்யம் வரவேயில்லை. உடலளவில் நெருக்கமும் இல்லாமப் போச்சு. நான் ரொம்ப மனசொடிஞ்சு போயிருந்தேன்…” என்றவர் ஒருநாள் தயங்கித் தயங்கி அந்த விஷயத்தை சொன்னார். “அந்தப் பிரச்சினையான காலகட்டத்துல அந்தப் பையனோட இருந்த நெருக்கமும் அவன் கொடுத்த மன ஆறுதலும் எங்களை
உடலளவிலும் இணைய வைச்சிருச்சு. என் கணவர்கூட எனக்கு அப்ப சுத்தமா தாம்பத்திய உறவே இல்லை. ஆனாலும் எனக்கு குற்றவுணர்ச்சி அப்பவும் இருந்துச்சு… இப்பவும் இருக்கு. இப்பல்லாம் என் கணவரை அவர்
முகத்துக்கு நேராப் பார்க்கவே எனக்கு பயமாயிருக்கு…” என்று அழத் தொடங்கினார். “அதே சமயம் அந்தப் பையனும் இந்த உறவைத் தொடர்வது தவறு. நான் விலகிக் கொள்கிறேன் என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு விட்டுப் போனாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவனைப் பார்த்தாலே எனக்குக் கோபமாகவும் அவன் மனைவியை நினைத்தாலே பொறாமையாகவுமிருக்கிறது.
அவனுடன் நான் நெருக்கமாக இருந்த பொழுதுகளை என்னால் மறக்கவே
முடியவில்லை. அவனைப் பார்க்கும்போதெல்லாம் அதேதான் நினைவுக்கு வருகிறது. அவ்வப்போது நான் என் கணவருடன் உறவு வைத்துக்கொண்டாலும், அவருடன் என்னால் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியாமல் அவனது நினைவுதான் வருகிறது. அவனை இப்போது பார்க்கும் போதெல்லாம், இப்போது மீண்டும் இந்த உறவைத் தொடரவேண்டும் என்றுதான் என் மனம் சொல்கிறது. அவன் என்னை ஒதுக்குவதை என்னால் தாங்கவே முடியவில்லை. அவன் ஏன் பயப்படுகிறான், ஏன் அவனுக்கு இப்போதெல்லாம் என் மீது அந்த ஆர்வம் தோன்றுவதில்லை… என எனக்கு நானே கேட்டு புலம்பிக் கொண்டிருக்கிறேன். யாரிடம் சொல்வதென்றே தெரியவில்லை. என் கணவருக்கு இந்த விஷயங்கள் எதுவுமே தெரியாது. அவர் புன்னகையுடன் என்னிடமும் அந்தப் பையனிடமும் சிரித்துப்பேசும்போதெல்லாம் எனக்கு மனசு என்னவோ செய்கிறது. ‘நாம கஷ்டப்பட்ட காலத்திலிருந்து கூடவே இருக்கறவன்… எப்பவும் நாம இவனை விட்டுடக் கூடாது…’ என அவர் அவனைப் பற்றி நம்பிக்கையுடன், நன்றியுணர்வுடன் பேசும் போதெல்லாம், எனக்கு என் கணவரிடம் உண்மையை சொல்லி விடவேண்டும் போலிருக்கிறது…”

“இந்த பதட்டம் ஒரு பக்கம், அவனை பார்க்கும் போதெல்லாம் என்னை இப்பொழுது அவன் கண்டு கொள்வதில்லையே என்ற கோபம் மறுபக்கம், அத்துமீறி அவன் மீது எழும் காமம் ஒருபுறம் என என்னாலேயே என் மனதை சமாளிக்க முடியவில்லை. அவனாகவும் வேலையை விட்டுப் போக மாட்டேங்கிறான்… என்ன செய்வதென்றே புரியவில்லை…” என்று சொல்லி அழுதார். இப்போது வேறு ஒரு துறையில் என் கணவர் பிரபலமாகி விட்டார். உங்களுக்கே அது தெரியும். இழந்த எல்லா வசதிகளையும் திரும்ப மீட்டு விட்டோம். என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக வீட்டு வேலைகள், சமையல் அத்தனையும் செய்து கொண்டு, என் கணவரைப் பார்க்க வருபவர்களை வரவேற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், இந்த மன அழுத்தத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை …” என்றார். “என் கணவர் எவ்வளவு மென்மையானவர் என்று உங்களுக்குத் தெரியும். நான் சொன்னால் புரிந்து கொள்வார். அந்த இக்கட்டான சூழலில் நடந்த தவறு அது என்று புரிந்து கொண்டு விடுவார். கட்டாயம் அவன் மேல் அவருக்குக் கோபம் வரும்… அவன் மீது மட்டும்தான் கோபம் வரும். அவனை வேலையை விட்டு அனுப்பி விடுவார். நான் மெதுவாக என் மனதை சரி செய்து கொள்வேன்…” என்றார்.

நான் படித்துப்படித்து அவளிடம் சொன்னேன்…”அவனை வேலையை விட்டு அனுப்பி பழி வாங்கவேண்டும் என்ற எண்ணமும், அவன் மனைவி மீது பொறாமையும் இப்போதும் உங்கள் மனதில் நிறைந்துள்ளது. உங்கள்மேல் தவறில்லை. அது ஏதோ ஒரு விபத்து என்று நினைத்து முதலில் உங்களை நீங்களே மன்னியுங்கள். நீங்கள் அவன் மீது உணர்வளவில் நெருங்கி விட்டீர்கள். ஆனால், அவனுக்கு அவ்வாறில்லை. அந்த உணர்வுகளை விட, நிஜ வாழ்க்கை முக்கியம் எனவும் இதனால் அவனது திருமண வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்றும் நினைக்கிறான். உங்களுக்குத் திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறார்கள். குடும்பம் இருக்கிறது. அதை விட்டு விட்டு உங்கள் கணவரைப் பிரிந்து இவனை திருமணம் செய்து கொள்ள முடியாது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவன் தனக்கென்று ஒரு வாழ்க்கைத் துணையும், குடும்பமும் வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது..? இதெல்லாம் தெரிந்துதானே இந்த விஷப் பரீட்சையில் இறங்கினீர்கள்.?” என்று கேட்டேன்.

அவரிடமிருந்து எந்த பதிலுமில்லை. அழுது கொண்டேயிருந்தார். நான் தொடர்ந்தேன்…”உங்கள் கணவர் நன்றாகப் பேசுகிறார் என்பதற்காக நம்பி விடாதீர்கள். அவர் இப்போது மகிழ்ச்சியாயிருக்கிறார் என்றால், தான் இப்போது தன் தொழிலில் வெற்றி பெற்றுவிட்டதன் வெளிப்பாடு அது. அதற்காக இந்த விஷயத்தையும் சிரித்துக் கொண்டே எளிதாய் எடுத்துக் கொள்வார் என்று நம்பி தயவு செய்து அவரிடம் சொல்லி அவரது மனநிம்மதிக்கு உலை வைத்து, உங்கள் வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கும் அந்தப் பையனுக்கும் இவ்வளவு உறவுச் சிக்கல்கள் இருந்தாலும் ஒரு தொழிலாளராக அவன் உங்கள் கணவருக்கு இன்றுவரை உண்மையாயிருக்கிறான். நீங்களே சொன்னபடி பண விஷயத்தில் எந்தத் திருட்டுத்தனமும் செய்யாமல் நேர்மையாயிருக்கிறான். அது உங்கள் கணவருக்கும் அவனுக்குமுள்ள வேலை நிமித்தமான புரிதல், தொடர்பு… அதை அப்படியே விட்டு விடுங்கள். அவனுடன் பேசாதீர்கள். அவன் முகத்தில் விழிப்பதைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கணவர் மீது உங்களுக்கு இப்போதும் கோபமிருப்பது நியாயம்தான். அவர் அன்று பொறுப்பில்லாமல் உங்களை நிர்கதியாய் நிற்க வைத்து, பேச்சளவில் கூட ஆறுதலாயில்லாமல் இன்னொருவனிடம் நீங்கள் சறுக்குவதற்குக் காரணமாயிருந்து விட்டாரே என்று நீங்கள் பொறுமுவதும் சரிதான். அந்த வெறுப்பினால்தான் அவரோடு இப்போழுது உங்களால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை. அந்த சமயத்தில் அவன் காட்டிய நெருக்கத்தை நீங்கள் இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த இரண்டுமே கடந்து போன இறந்த கால உணர்ச்சிகள். அவற்றைத் தூக்கிப் போட்டு விடுங்கள். உங்கள் கணவரை மன்னியுங்கள், அவனை மறக்க முயற்சி செய்யுங்கள். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகளுக்கு திருமணமாகும் வரையாவது இவற்றைக் கடைபிடியுங்கள். பிறகு உங்கள் குழந்தைகள் வீட்டில் அவ்வப்போது தங்கி உங்கள் மனதைக் கொஞ்சம் திசை திருப்பலாம். அவன் மீது உங்களுக்கிருக்கும் பொசசிவ்னெஸ், அவன் மனைவி மீதுள்ள வயிற்றெரிச்சல் இவைதான் இப்போது உங்களை ஆட்டி வைக்கிறது. நீங்கள் உங்கள் கணவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னால், உங்கள் ஆசைப்படியே அவனை வேலை விட்டு நிச்சயமாய் அனுப்பி விடுவார். ஆனால், அதன் பிறகு உங்கள் வாழ்க்கைக்கும் எந்த விதத்திலும் உத்தரவாதமில்லை…” என்று முடித்தேன்.

அதன் பின் நான் சொன்னபடியே நடந்து கொள்வதாகவும், இப்போது எந்தப் பிரச்னையுமில்லையென்றும் தன் கணவருடன் சுமூகமாக இருந்து குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொண்டிருப்பதாவும் சொன்னாள். அதன் பிறகு சில மாதங்கள் வரை எந்தத் தகவலுமில்லை அந்தப் பெண்ணிடமிருந்து. திடீரன ஒருநாள் அவளது கணவர் என்னை அலைபேசியில் அழைத்தார். அவள் அந்தப் பையனை வேலையிலிருந்து நிறுத்தி விடுமாறு பிரச்சினை செய்ததோடு, அசாதாரணமாகக் கத்திக் கொண்டு அழுவதாகவும், எனக்கு ஏதாவது இந்த விஷயத்தைப் பற்றித் தெரியுமா என்றும் கேட்டார். “ஏதோ அவனுடன் சண்டையாம்…” என்று பட்டும் படாமல் சொன்னேன். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு, அலைபேசியை ஒரு வழக்கறிஞரிடம் கொடுத்தார்.
அந்த வழக்கறிஞர் அவள் மேல் பாவம், புண்ணியமெல்லாம் பார்க்கவில்லை.

பட்டென தேங்காய் உடைத்தது போல், “மேடம், எல்லாம் கைமீறிப் போச்சு மேடம். ரெண்டுபேரும் எல்லாத் திருட்டுத்தனமும் பண்ணிட்டாங்க. அவனை வேலையை விட்டு அனுப்பியாச்சு… இனி சட்டப்படி என்ன செய்யணுமோ அதைப் பார்த்துக்குவோம். சார் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிரச் சொன்னார், அதான்…” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார். நான் உறைந்துபோய் நின்றேன். அந்தப் பெண்ணின் மென்மையான குரலும் அழுகைகளும் அவ்வளவு பிரச்னைகளுடன் வந்திருந்தாலும் அவள் என்னிடம் மிக ஒட்டுதலாய் பேசியதும், அவள் எங்கிருக்கிறாள் என்று அவ்வப்போது கேட்டுக்கொண்ட அவளது கணவனின் அக்கறையான விசாரிப்புக்களும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

இப்போது சொல்லுங்கள் திருமணத்தை மீறிய உறவுகள், பாலியல் பிரச்னைகளுக்குத் தீர்வாகுமா..?

இன்னும் பேசுவோம்…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.