கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது வார இறுதியில் என் அத்தை வீட்டிற்குச் செல்வது வழக்கம். கடந்த ஆறு ஆண்டுகளாக இதுதான் என் சனி, ஞாயிறுகளின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாகச் சில முக்கியமான மாற்றங்களை உணர்கிறேன். ரயில் நிலையத்தில் இருந்து வீடு வரை உள்ள இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஆறேழு கருத்தரித்தல் மையங்கள். புரியும் படியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஃபெர்டிலிட்டி சென்டர்கள். இதை மனித குலத்தின் வரமென்று சொல்வதா இல்லை சாபமென்று சொல்வதா என்பதில் எனக்கு ஒரு குழப்பம். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தையைக் கொடுக்கும் இந்தச் சிகிச்சை முறை ஒரு வரமாகத்தானே இருக்க வேண்டும் என்று பலர் நினைப்பதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால், வழக்கம் போல ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வளவு கருத்தரித்தல் மையங்கள் இல்லையே. ஏன் இப்போது மட்டும் இவ்வளவு? மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் ஏதோ ஒரு முக்கிய நிகழ்வை எதிர்கொள்ள போகிறோமா என்கிற கேள்வியும் எழுகிறது. ஒரு காலத்தில் குழந்தை என்றாலே சுகப்பிரசவம்தான். ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது குழந்தை என்றாலே சிசேரியன் என்று ஆகிவிட்டது. சுகப்பிரசவங்கள் எட்டாவது அதிசயமாக ஆனதற்கு எப்படிச் சில காரணங்கள் இருக்கின்றனவோ, அதேபோல இனிவரும் காலங்களில் குழந்தை என்றாலே ஐவிஎஃப் என்கிற நிலை உருவாவதற்கும் சில காரணங்கள் உண்டு என்பதில் எந்த ஓர் ஆச்சரியமும் இல்லை. அதற்கான காரணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஐவிஎஃப் பற்றிய புரிதல் வேண்டும்.

ஐவிஎஃப் சிகிச்சை முறை என்பது பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்தணுவையும் செயற்கையாக அதாவது உடலுக்கு வெளியே ஆய்வுக்கூடங்களின் உதவியோடு சேர்த்து கருவாக்கி, அதைப் பெண்ணின் கருப்பையில் வைப்பது. ஆனால், இது அவ்வளவு எளிதான சிகிச்சை கிடையாது. உடலுக்குள் இருக்கும் வெப்ப நிலையையும் கருவுறுதலுக்குத் தேவையான புரதங்களையும் அதன் சூழலையும் மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அப்படியே செயற்கையாக உருவாக்க முடியாது. அப்படி உருவாக்க முடிந்தால் மனிதன் இயற்கையை மிஞ்சி இருப்பானோ என்னவோ. இந்தச் சிகிச்சை முறையின் குறைவான வெற்றி விகிதத்திற்கு இதுவே அடிப்படை காரணம்.

இங்கு யாரும் எடுத்த உடனே ஐவிஎஃப் முறைக்குப் போவதில்லை. யாரும் விரும்பியும் அந்தச் சிகிச்சையை மேற்கொள்வதில்லை. “விசேஷம் எதுவும் இருக்கா?”, “கல்யாணம் ஆகி ரெண்டு வருசத்துக்கு மேல ஆயிருச்சுல இன்னுமா தள்ளி போடுறீங்க”, “எதாவது பிரச்னை இருந்தா டாக்டர போய்ப் பார்க்கலாம்ல” போன்ற சமுதாய வற்புறுத்தலுக்கும் எதிர்பார்ப்புக்கும் பயந்துதான் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டால் என்ன என்கிற எண்ணம் பலருக்கு வருகிறது. இந்த எண்ணம் தவறில்லை, ஆனால் இது எப்போது வருகிறது என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பெரும்பாலும் ஐவிஎஃப் சிகிச்சைக்கு வருபவர்கள் 35 வயதைக் கடந்த தம்பதியராகதான் இருக்கிறார்கள். 35 வயதுக்குள் சிகிச்சை பெறும் தம்பதியர் குறைவாக இருப்பதும் இந்தச் சிகிச்சை முறையின் வெற்றி விகிதத்தைக் குறைக்கிறது. முன்பு சொன்னது போல கருவுற்ற பெண்ணின் வயது குழந்தையின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

தாமதமாக இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதின் பிண்ணனியில் இருப்பது அறியாமையும் அலட்சியமும். ஆனால், இதை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. உடலளவில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்வதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதன் பிறகு மருத்துவ ஆலோசனை, உடல் பரிசோதனை என்று மேலும் தாமதமாகி விடுகிறது. கடைசியாக ஐவிஎஃப் தவிர வேறு வழி இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, சிகிச்சைப் பெறுவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அதற்குள் வயது ஓடிவிடுகிறது. காலம் யாருக்காகவும் நிற்காது என்பதற்கு இதுவே சான்று.

ஐவிஎஃப் முறை அம்மாவின் ஆரோக்கியத்தின் மீது கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் சிகிச்சையின் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளும் ஊசிகளும்தாம். அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நீண்ட கால பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதிலும் குறிப்பாக ஹார்மோனல் இம்பேலன்ஸை உருவாக்கும் வல்லமை வாய்ந்தவை. பெரும்பாலும் ஐவிஎஃப் சிகிச்சையானது முதல்முறையிலேயே வெற்றி அடைவதில்லை. இரண்டு அல்லது மூன்றாவது முயற்சியில்தான் இந்தச் சிகிச்சை வெற்றியடைகிறது. சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்தச் சிகிச்சை கைகூடுவதே இல்லை.

இளநிலைப் படித்துக்கொண்டிருக்கும் போது சில பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. அதில் ஒரு பெண்ணிற்கு 25 வயதுதான் இருக்கும். அவருக்கு 5 முறைகளுக்கும் மேலாக தானாகவே கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. அவரையும் சிதைவுற்ற அந்தக் கருவையும் பரிசோதித்துப் பார்த்தப் பிறகு அந்தப் பெண்ணுடைய மரபணுவில் பிரச்னை இருப்பதும் இயற்கையாக அவரால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் அவருக்கு ஐவிஎஃப் சிகிச்சை முறை பரிந்துரைக்கப்பட்டது. காரணம் ஐவிஎஃப் சிகிச்சை முறையில் ஆரோக்கியமான கருமுட்டைகளைப் பரிசோதித்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்க முடியும். சில பிரச்னைகளுக்கு ஐவிஎஃப்தான் தீர்வு.

இந்தச் சிகிச்சை முறையை வெறும் அறிவியல்ரீதியாகவும், மனரீதியாகவும் எதிர்கொள்ள முடியாது. இதில் சட்டச் சிக்கல்களும் வியாபார நோக்கங்களும் அடங்கி இருக்கின்றன. இதற்கு உதாரணம்தான் சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டு சர்ச்சைக்கு உள்ளான பிரபலம். ஐவிஎஃப் முறைக்கும் வாடகைத்தாய்க்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டால், சம்மந்தம் இருக்கிறது. வாடகைத்தாய் முறையிலும் ஐவிஎஃப் சிகிச்சைதான் மேற்கொள்ளப்படுகிறது.

கருத்தரித்தல் மையங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் ஐவிஎஃப் சிகிச்சையில் சிறப்புப் பயிற்சிப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்தச் சிகிச்சை முறையின் போது அம்மாவிற்கும் குழந்தைக்கும் உண்டான பரிசோதனைகள் அனைத்தும் முறையாகச் செய்திருக்க வேண்டும். மரபியல் பரிசோதனை செய்திருக்க வேண்டும். சிகிச்சைப் பெற வந்திருக்கும் தம்பதியரில் யாருக்கு மரபணு சார்ந்த பிரச்னை இருக்கிறது என்பதைப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு, சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரம் அந்த ஆணாலோ பெண்ணாலோ கருத்தரிக்கவே முடியாது என்கிற நிலை வரும்போது வேறோர் ஆணுடைய விந்தணுவையோ அல்லது பெண்ணுடைய கருமுட்டையையோ ஐவிஎஃப் சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் அந்தத் தம்பதியின் முழு சம்மதத்துடன் மட்டும்தான். இதற்கு முறையான ஆவணங்களைத் தயார் செய்து குழந்தைப் பெறப் போகும் தம்பதியரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். அந்தத் தம்பதிக்கு விருப்பமில்லை என்றால் அவர்களை எந்தக் காரணம் கொண்டும் வற்புறுத்தக் கூடாது.

கருமுட்டை மற்றும் விந்தணுக்களைத் தானம் செய்பவர்களுக்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அதையும் முறையாகக் கடைப்பிடித்திருக்க வேண்டும். அண்மையில் வெளியான ஒரு செய்தியில் பதினாறு வயது சிறுமியின் கருமுட்டைகளைத் தானம் செய்த கருத்தரித்தல் மையத்தின் மேல் அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இது போன்ற சம்பவங்கள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தண்டனைக்குரிய குற்றங்கள். இது போல் நடக்காமல் இருக்க ஐவிஎஃப் சிகிச்சை முறை பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் வேண்டும்.

ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகளின் உடல், சாதாரணமாகப் பிறக்கும் குழந்தைகளின் உடலைவிடப் பருமனாக இருக்கும். இதுபோன்ற சில பக்கவிளைவுகளும் ஐவிஎஃப் முறைப்படி பிறந்த குழந்தைகளுக்கு உண்டு. அதுமட்டுமின்றி இந்தச் சிகிச்சை முறையில் சுகப்பிரசவம் அரிது. ஏற்கெனவே தீவிர சிகிச்சையால் சோர்வுற்ற அம்மாவின் உடலை இது இன்னும் சோர்வாக்கும்.

சமூகத்தின் எதிர்பார்ப்பிற்காவும், தங்களின் விருப்பதிற்காகவும் இவ்வளவு வலி மிகுந்த சிகிச்சையை மேற்கொள்ள விரும்பும் மக்கள் ஏனோ பெற்றோரின்றி தவிக்கும் குழந்தைகளைத் தத்தெடுப்பது பற்றிச் சிந்திப்பதுக்கூட இல்லை. குழந்தை தத்தெடுப்பில் இருக்கும் சட்டச் சிக்கல்கள்தாம் சிந்திப்பதைத் தடுக்கிறதோ? இருக்கலாம், இருந்தாலும் கொஞ்சம் மாறலாம். நம் தேவையும் அறியாமையும்தான் இங்கு நிறைய வியாபாரங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

சுற்றுச்சூழலும் உணவுமுறையும்தான் இந்தத் தலைமுறையின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. நமது விழிப்புணர்வாவது அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கட்டும்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.