இக்கட்டுரையை நான் எழுதுவதன் நோக்கம் என்பது குடும்ப நாவல்களை விரும்பி வாசிக்கும் பெண்களின் வாசிப்புத் தேர்வுகள் குறித்துக் கேலி செய்வதோ அல்லது அங்கு இயங்கும் எழுத்தாளர்களின் எழுத்தைத் தரம் பிரிப்பதற்காகவோ அல்ல.  

இங்கே எல்லாரின் ரசனைகளும் ஒரே போல இருப்பது இல்லை. அறிவுபூர்வமாக வாசிக்கும் பெண்களும் உண்டு. உணர்வுபூர்வமான வாசிப்பை விரும்பும் பெண்களும் உண்டு. ஏன்?  என்னைப் போன்று இரண்டையும் படிப்பவர்களும் உண்டு.

அது அவரவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் விருப்பங்களையும் பொறுத்தது. இங்கே ஆண்களை விடவும் அதிகம் பெண்கள்தாம் புத்தகம் வாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இருந்தும் புத்தகத்திற்காக அதிகம் செலவழிப்பவர்கள் என்று பார்த்தால் ஆண்கள்தாம்.

இங்கே இணைய வாசிப்பைப் பெண்களிடையே பிரபலமாக்கியது ஒரே ஒரு வார்த்தைதான். அதுதான் இலவசம்! ஏனெனில் இன்றும் பெண்கள் புத்தகங்களுக்காகச் செலவழிப்பதை எல்லாம் குடும்பங்கள் விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை. 

அந்த வகையில் இங்கு மானாவாரியாகக் குவிந்து கிடக்கும் தமிழ் நாவல்களின் இணையத்தளங்கள் (websites)  வழியாக வாசகர்கள் எத்தனை நாவல்களை வேண்டும் என்றாலும் இலவசமாக வாசிக்கலாம். பெயர்கள், மின்னஞ்சல்கள் போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. குறைந்தபட்ச ஒரு மொபைல்போனும் அதனுடன் இணையச் சேவை மட்டும் இருந்தால் போதும்.

ஆனால் இங்கே படிப்பதுதான் இலவசமே ஒழிய அது போன்ற இணையத்தளங்களை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது எல்லாம் இலவசம் கிடையாது.

மாதத்திற்கோ அல்லது வருடத்திற்கோ ஒரு குறிப்பிட்ட தொகையை எழுத்தாளர்கள் அந்தத் தளத்திற்காகச் செலவழிக்க வேண்டும். அந்தத் தொகை என்பது இணையதளத்தின் வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் செயல்பாட்டின் வேகத்தைப் பொறுத்து அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.

அதேபோல ஒவ்வொரு முறை அத்தளத்திற்கு வாசகர்கள் வந்து போகும் போது அதில் வரும் விளம்பரங்களைத் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் சொடுக்கினால் கூகுள் ஹேட் சென்ஸ் வழியாக 0.01$ வருமானம் அத்தள உரிமையாளரைச் சென்று சேரும்.  

உண்மையில் இங்குள்ள தள உரிமையாளர்கள் எவ்வளவு வருமானம் பார்க்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு தளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தொடர்கள் எழுதினால் நிச்சயம் அங்கே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் படிக்க வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதுவும் தினமும் பதிவுகள் போடும் எழுத்தாளர்களின் பதிவுகளை ஆர்வமாக வாசிப்பவர்கள் அத்தியாயங்கள் எப்போது வருமென்று காத்திருப்பதோடு ஒரே நாளில் அதிகபட்சம் பத்துக்கும் மேற்பட்ட முறைகள் அந்தத் தளத்தை எட்டிப் பார்க்கிறார்கள்.  

ஒவ்வொரு தொடரின் பதிவும் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போதும் ஆயிரத்திற்கும் மேல் வாசகர்கள் அங்கே குவிகிறார்கள். இருபதிலிருந்து முப்பது பேர் வரை கருத்திடுகிறார்கள். இப்படி அங்கே எழுதும் ஒவ்வோர் எழுத்தாளரும் வருடத்திற்கு மூன்றிலிருந்து ஐந்து நாவல்கள் வரை எழுதி முடிக்கிறார்கள்.

தொடர்கள், முடிக்கப்பட்ட நாவல்கள் என்று எழுத்தாளர்களின் பெயர் வாரியாக வாசகர்கள் படிக்க வசதியாகத் தங்கள்  ஃபோரம்களை (Forum)  வடிவமைத்திருப்பார்கள். இப்படியாக நூறுக்கும் மேற்பட்ட நாவல்களும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அத்தியாயங்களும் அத்தளத்தில் இருக்கும்.

இப்படியாக இயங்கும் இத்தளங்களின் உள்ளிருக்கும் டேஷ்போட்களில் செஷன் (session) என்று ஒன்று உண்டு. எத்தனை நிமிடங்கள் ஒரு பார்வையாளன் அந்தத் தளத்தில் நீடிக்கிறான் என்பதைப் பற்றிய நேரக்கணக்கு அது. அப்படி வாசகர்கள் அத்தளத்தில் நீண்ட நேரம் நீடிப்பதால் தளங்களில் வருமானம் பெருகும்.

ஆனால் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சாதாரணமாக அப்படி ஒரே தளத்திற்குள் கட்டிப் போட்டு வைத்திருப்பது சாதாரண வேலை இல்லை. அதற்காகத்தான் தள உரிமையாளர்கள் நாவல் போட்டிகளை வைக்கிறார்கள்.

எழுத்தையும் இலக்கியத்தையும் வளர்க்கும் நோக்கத்தில் நடத்தப்படும் போட்டி இல்லை என்பதை விடவும் இது முழுக்க முழுக்கத் தங்கள் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக அவர்கள் சுயநலத்துடன் நடத்தப்படும் போட்டி.

ஆரம்பத்தில் ஒரு தளத்தில் ஆரம்பித்த ‘நாவல் போட்டி’ இப்போது ஒவ்வொரு தளத்திலும் தொடர் கதையாகிப் போனது. வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் இது போன்ற போட்டிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பெயர் கொடுத்து புதிதாக எழுத வருகிறார்கள். அவர்கள் எழுதுகிற தொடரை  அத்தியாயங்களாகப்  பிரித்துப் போட்டி நடக்கும் தளத்தில் பதிவேற்றம் செய்வதுதான்  இந்தப்  போட்டியின் முக்கிய விதிமுறை. அந்த விதிமுறைதான் அவர்களின் வியாபார உத்தியும்.

முழு நாவல்களை விடவும் அத்தியாயங்களாகப் போடுவதுதான் இங்கே லாபம். முதலில் கதைச் சுட்டியை (Link)  அழுத்தி உள்ளே செல்ல வேண்டும். பின்னர் ஒவ்வோர் அத்தியாயத்துக்கும் இணைப்பையும் அழுத்தி உள்ளே சென்று அதனுள் இருக்கும்  ப்ளாக்  லிங்கை  அழுத்திச் சென்றால்தான்  ஓர் அத்தியாயத்தை வாசிக்க முடியும்.

வாசகர்கள் அத்தளங்களில் நீடிப்பதற்கான நேரக்கணக்கு இப்படிதான் அதிகரிக்கிறது. ஒரே பதிவில் மொத்த அத்தியாயத்தின் சுட்டிகளையும் கொடுக்க முடிந்தாலும் கொடுக்க மாட்டார்கள். வாசிப்பு எண்ணிக்கை அதிகரிக்க இது போன்று அத்தியாயங்களாகப் பிரித்துப் பதிவிடுவது ஒரு சிறந்த வழிமுறை.

ஒவ்வோர் அத்தியாயத்தையும் தோராயமாக ஆயிரம் பேர் படிக்க வருகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முப்பது எழுத்தாளர்கள் எழுதும் முப்பது பதிவுகளின் வாசிப்பு எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்!

அந்நியன் படத்தில் ஒரு வசனம் வருமே. ‘அஞ்சு பைசா திருடுனா  தப்பா… அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடின… அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி தடவ அஞ்சு அஞ்சு பைசாவா திருடினா’ இதுவும் அது மாதிரியான விஷயம்தான்.

அதேபோல போட்டிகளின் விதிமுறைகளை எழுத்தாளர்கள் மீறுவதை விடவும் போட்டியை நடத்துபவர்கள்தாம் அதிகமாக மீறுகிறார்கள். அதில் முக்கியமான விதிமீறல் என்றால் போட்டியின் காலக்கெடுவை நீட்டிப்பது.

உதாரணத்திற்குப் போட்டியின் விதியில் குறிப்பிட்ட நேரத்திற்குச் சரியாக முடிக்கப்பட்ட கதையும் நேரத்தை நீடித்த பின் தாமதமாக முடிக்கும் கதைக்கும் ஒரே மாதிரியான வெற்றி வாய்ப்புகள் உண்டு.

குடும்ப நாவல் போட்டிகள் பொறுத்தவரை நீதிபதிகள் எல்லாம் யாரும் இல்லை. வாசகர்களை ஓட்டுப் போட வைத்துப் போட்டியின் முடிவைத் தீர்மானித்து விடுவார்கள். ஆதலால் பரிசுகள் கொடுக்கும் போதும் எது சிறந்த கதை என்று எல்லாம் பார்ப்பதில்லை. அதிகம் ஓட்டு வாங்கிய கதை அல்லது வாசகர்களுக்குப் பிடித்தமான கதை.

இதை வேறு மாதிரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சிறந்த டெம்ப்ளேட் கதைகள் பரிசு பெறும் வாய்ப்புகள் அதிகம்.

அது மட்டும் அல்லாமல் போட்டிக்காக எழுதிய கதைகளை அத்தளங்களே சில நேரம் உரிமை கொண்டாடவும் செய்கின்றன. தளங்களிலிருந்து அதன் சுட்டிகளை அவர்கள் போட்டி முடிந்ததும் நீக்குவதும் இல்லை. எழுத்தாளர்கள் அதற்காக அவர்களிடம் தொங்க வேண்டும்.

இன்னும் கேட்டால் வெற்றி பெறாத கதைகளும் அதற்கான வாசிப்பு எண்ணிக்கையும் அதன் மூலமாகத் தளங்கள் ஈட்டும் வருமானமும் எழுத்தாளர்களுக்கு நஷ்டமும் நேர விரயமும்தான். ஏனெனில் போட்டி கதைகளை வாசகர்கள் தளங்களில் படித்து விடுவதால்  கிண்டில்  செயலிகளில் அந்த நாவலுக்கு வருமானமும் பெரிதாக வருவதில்லை.

இதெல்லாம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் வெளிப்படையாக இந்தத் தளங்களுக்கு எதிராக யாரும் குரல் உயர்த்த முடியாது.

அந்தத் தளத்தின் பிரத்தியேக வாசகர்கள் ஒன்று கூடி கேள்வி கேட்பவர்களை அடக்கிவிடுவார்கள். மாப் மென்டாலிட்டி (mob mentality). குழுவாகச் சேர்ந்து கொண்டு தாங்கள் சொல்வதும் செய்வதும்தான் சரி என்று சுற்றி வளைப்பார்கள். சண்டைக்கு நிற்பார்கள்.

அவர்களின் கருத்தை இங்குள்ள பெரும்பான்மையான கூட்டத்தின் கருத்தாக முன்னிறுத்துவார்கள். ஒரு பொய் பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் தவற்றை சுட்டிக்காட்டியவர்களைச் சமூக ஊடகங்களிலிருந்தே  ஓடச் செய்துவிடுவார்கள். இப்படி நிறைய நல்ல வாசகர்கள் இங்கே தொலைந்து போனது உண்டு.

இது போன்ற சர்ச்சைகளுக்குப் பின்னிருந்து தெரிந்தோ தெரியாமலோ இந்தத் தள உரிமையாளர்கள் இயங்குகிறார்கள். இயக்குகிறார்கள். இப்படியாகப் போட்டிகள் என்கிற பெயரில் புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள்.

நானும் எழுத வந்த புதிதில் இது போன்ற ஒரு நாவல் போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன். ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் அறிவித்த அந்தப் போட்டியில் முதல் பரிசும் பரிசுத் தொகையும் கடைசி நேரத்தில் கொடுக்காமல் நிறுத்தப்பட்டது.

கேட்டால் முதல் பரிசுக்குத் தகுதியான நாவல்கள் எதுவும் இல்லை என்று சொல்லி இரண்டாவது, மூன்றாவது பரிசை மட்டும் அறிவித்தார்கள். உண்மையில் அதற்கு வெறும் கதையின் தரம் மட்டும்தான் காரணமா?

நான் எழுதிய நாவல் மூன்றாவது பரிசு பெற்றது. பரிசு பெற்ற நாவல்களுக்குப் பணமும் புத்தகம் போட்டுத் தருவதாகவும் ஆரம்ப விதிமுறைகளில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வாக்குறுதி என் விஷயத்தில் நிறைவேற்றப்படவில்லை. இரண்டாவது பரிசு பெற்ற நாவல் மட்டும் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது.

என் நாவலைப் பதிப்பிக்காததற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னுடைய நாவல் அதிகப் பக்கங்களைக் கொண்டது என்பதுதான். ஆனால் உண்மை அது இல்லை. அதே பக்களவில்  நான் நீண்ட காதல் காவியம் ஒன்றை எழுதி இருந்தால் அது நிச்சயம் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும்.

இது போன்ற தளங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்னையும் இதுதான். வித்தியாசமாக எழுதும் எழுத்தாளர்களும் டெம்ப்ளேட் வகைகளை எழுதும் எழுத்தாளர்களையும் பாரபட்சமாக நடத்துவது. இதுவும் அதே மாப் மென்டாலிட்டிதான்.

யாருக்கு அதிகம் வாசிப்பு எண்ணிக்கை காட்டுகிறதோ யார் கதைகளுக்கு அதிகக் கருத்துகள் வருகிறதோ அதுவே சிறந்த கதை என்கிற எண்ணத்தை ஆழமாக நம்ப வைப்பது. டெம்ப்ளேட் வகை எழுத்தாளர்களைக் கொண்டாடுவதன் மூலமாக வித்தியாசமான முயற்சிகளைச் செய்யும் நாவலாசிரியர்களின் நம்பிக்கையை உடைத்துச் சிதறடிப்பது.

இருந்தும் அந்த எழுத்தாளர்கள் அத்தளத்தை விட்டு வெளியே வர விழைவதில்லை. அங்கே இருக்கும் வாசகர்களை இழக்க நேரிடுமோ என்று பயப்படுகிறார்கள். இதனால் தாங்களும் டெம்ப்ளேட்கள் எழுதிப் பழகிக் கொள்கிறார்கள்.

எனக்கும் இதுதான் நடந்தது. என்னுடைய வித்தியாசமான முயற்சிகள் எதுவும் புத்தகமாக விற்காது என்று ஆரம்பத்தில் என்னையும் நம்ப வைத்தார்கள். என்னையும் டெம்ப்ளேட் கதைகள் எழுதச் சொன்னார்கள். அதனாலேயே நான் எழுதிக் கொண்டிருக்கும் தளத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன். எனக்குப் புத்தகம் பதிப்பித்த பதிப்பகத்திலிருந்தும் விலகி வந்தேன்.

அப்படி ஒரு பெரிய தளத்திலிருந்து நான் வெளியே வந்ததன் மூலமாக ஒரு பெரும் வாசகர் வட்டத்தை நான் இழந்தேன் என்பது உண்மைதான். என் எழுத்தின் மூலமாக எனக்குக் கிடைக்கும் வருமானம் எனக்கு முக்கியம்தான். ஆனால் அந்த வருமானத்திற்காகவும் வியாபாரத்திற்காகவும் எனது சிந்தனையையும் அடையாளத்தையும் நான் பலிகொடுப்பதை விடவும் நான் எழுதுவதை நிறுத்திவிட்டு என் வருமானத்திற்கு வேறு விதமான வழி பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் monishanovels.com  என்கிற சிறிய கூட்டிற்குள் நானும் எனது எழுத்தும் உயிர்ப்புடன் இருக்கிறோம் என்பதுதான் எனக்கான இப்போதைய மனத்திருப்தி.  அதே நேரம்  என் எழுத்தும் என்னை அப்படியொன்றும் கைவிட்டுவிடவில்லை.

கடல்களுக்கு அப்பால் இருக்கும் சிங்கப்பூரில் உள்ள ஒரு நூலகத்தில் வாசகர்கள் அதிகம் புத்தகங்கள் எடுக்கும் frequently taken sectionஇல் என் புத்தகத்திற்கும் ஓர் ஓரமாக இடம் இருக்கிறது என்பதுதான் நான் என் எழுத்தின் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.

குடும்ப நாவல் உலகத்தில் உள்ள எத்தனை பேர் தங்கள் எழுத்தின் மீது அப்படியான நம்பிக்கையை வைக்கிறார்கள்?

வார்த்தைகளை நன்றாகக் கோத்து அழகான நடையில், தெளிவாக எழுதும் திறமைகள் இருந்த போதும் இங்குள்ள பல எழுத்தாளர்களின் சிந்தனை இது போன்ற வியாபார உத்திகளால் ஒரு சிறிய கூட்டிற்குள் அடைபட்டுப் போகிறது. 

(தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.