கடந்த தூரம், தொடரும் பயணம்.

எழுபது எண்பது வருடங்கள் முன்பு ஏரலின் முஸ்லிம் பெண்களுள் விரல்விட்டு எண்ணக்கூடும் அளவில் சிலருக்குத் தமிழ் நன்றாக வாசிக்கவும் ஓரளவு எழுதவும் தெரிந்திருந்தது. தக்கலை பீர்முகம்மது அப்பா பாடல்களையும், நபி (ஸல்) அவர்களின் மகளாகிய ஃபாத்திமா நாயகியைப் புகழ்ந்து பாடப்பட்ட மாலைகள் எனப்படும் பாடல்களையும், முஹையத்தீன் ஆண்டவர்கள் போன்ற சூஃபி மகான்களைப் புகழ்ந்து பாடப்பட்ட ‘முனாஜாத்து’ எனப்படும் பாடல்களையும் அந்தந்த நூல்களைப் பார்த்துப் பாடக்கூடிய வயதான பெண்கள் சிலர் அன்றிருந்தனர்.

தமிழும் அரபியும் நன்றாகத் தெரிந்த என்னுடைய ஜுலைஹா மூமா (ம்மாவுடைய ம்மா), நபிமார்கள் சரித்திரம் என்ற பருமனான நூலை, வாசிக்கத் தெரியாத பெண்களுக்குத் தம் ஓய்வு நேரத்தில் வாசித்துக் காட்டக்கூடிய எங்கள் மோராத்து வாப்புமா, லத்திஃபா வாப்புமா, செய்னும்பு மூமா போன்ற முதிய பெண்கள் வெகு சிலர் இருந்தனர். அவர்களின் சிறு வயதில் ஏரலில் பள்ளிக்கூடம் கிடையாது. திண்ணைப் பள்ளியில் அரிச்சுவடி மட்டுமே கற்றுக் கொண்டு வாசிக்கப் பழகியிருந்தனர்.

‌ஏரலைச் சார்ந்த பிரமுகரும் செல்வந்தருமான ஜனாப் K.O. நாகூர்மீரான் அவர்களின் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிலத்தில்தான் இன்றைக்கும் ஏரலின் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது. (அதன் முகப்பில் அவருடைய மனைவியான செய்யது ஃபாத்திமா பெயர் எழுதப்பட்டிருக்கும்). அவர்களுக்குச் சொந்தமான அந்த இடம் நூறு வருடங்களுக்கு முன்பு மாடுகள் மேய்ந்து ஓய்ந்திருக்கும் புல்லாந்தரிசாக இருந்தது. அதன் ஒரு ஓரத்தில் கீற்றுக் கொட்டகையில் ஏரலின் முதல் ஆரம்பப்பள்ளி தொடங்கியது. இன்று 70 – 80 வயதிலிருக்கும் அல்லது இருந்திருக்கக்கூடிய பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் படித்தது ஓச்சமாட்டுப் பள்ளி என்ற அப்பள்ளியில்தான்.

அந்தப் பள்ளியில் சேர்ந்த அப்பெண்கள் எல்லாருமே ஐந்தாவது வரையும் கற்றனர் என்பதில்லை. மூன்றாவதுடன் நின்று விட்டவரும் பலருண்டு. மேலும் பல பெண்களோ பள்ளியின் வாசலே மிதிக்காதவர்கள்தான்.

இந்த நடைமுறைக்கொப்பவே என்னுடைய தாய்வழிப் பாட்டி வீட்டுப் பெண்களான என்னுடைய ம்மா, பூமா(பெரியம்மா ), சாச்சி(சித்தி), மாமிகளின் படிப்பும் மூன்றாவதோ ஐந்தாவதோ ஏழாவதோ வரையில் இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தில் இவர்கள் மிகக் கொடுத்து வைத்தவர்கள். என்னவென்றால் அப்போதிருந்தே என்னுடைய தாய்மாமாமார் மூவரும் நல்ல வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்தனர். அவர்கள் வாசிக்கும் பல நூல்களுடன் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி, தீபம், குமுதம், அம்புலிமாமா என்று பல வகையான இதழ்களும் வீட்டுப் பெண்களுக்குக் கிடைத்தன. எனவே மூமா வீட்டுப் பெண்கள் எல்லோருக்குமே வாசிப்பதற்கான வாய்ப்பும் பழக்கமும் தொடர்ந்தது.

குறிஞ்சிமலர், பொங்கி வரும் பெருநிலவு, சின்னம்மா, சிலநேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப் போ, ஒரு காவிரியைப் போல, சிவகாமியின் சபதம், ராஜபேரிகை, ராஜ திலகம் என வார, மாத இதழ்களில் வரும் தொடர்களை முறையாகக் கத்தரித்துச் சேகரித்து, பைன்ட் செய்த நாவல்கள் ஒருபுறம், மலைக்கள்ளன், வாழ்வு எங்கே, கள்ளோ காவியமோ போன்றவை மறுபுறம் எனப் புத்தகங்களுக்குப் பஞ்சமில்லை அவர்களுக்கு.

சாச்சிகள் மாமிகளின் காலம் இப்படியாக இருந்தபோது, நாட்டுச் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏரல் முஸ்லிம் தெருக்களில் ஒன்றான பெரிய மணராத்தெருவின் பள்ளிவாசலுக்கு எதிரிலேயே அதற்குச் சொந்தமான இடத்தில் அரசு துவக்கப்பள்ளி தொடங்கியது. அப்போதைய முஸ்லிம் சிறுமிகளுக்குப் பத்து வயதிலேயே தாவணி போடும் வழமையும் தாவணி அணிந்ததும் வெளியே சுற்றலாகாது என்ற கண்டிப்பும் இருந்ததால், அவர்கள் படிப்பும் பல வருடங்களுக்கு அத் துவக்கப்பள்ளியின் ஐந்தாவதோடேயே நின்றது.

‌1960 களிலிருந்து தூத்துக்குடி மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஏரலில் தூயதெரசாள் நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு, ஊரில் சிறப்புமிக்க பள்ளியாக இன்றளவும் செயல்பட்டு வருகிறது. அதேபோல TDTA நடுநிலைப் பள்ளி ஒன்றும் ஏரலில் உண்டு. எங்கள் தலைமுறைப் பெண்கள் எல்லோரும் அங்குதான் கற்றோம். அந்தக் காலங்களில் பெண்கள் பருவமடைவது பெரும்பாலும் 13 – 14 வயதுகளில் நடக்கும். ஆக முஸ்லிம் பெண்கள் தெரசாள் பள்ளியில் எட்டாவதோடு படிப்பை முடித்து விட்டு வீட்டில் உட்காரும் நடைமுறை இருந்தது.

‌1974ல் பெரிய மணராத்தெரு பள்ளிக்கூடம் அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியாக உயர்ந்தது. அவ்வருடம்தான் என் பெரிய லாத்தா எட்டாவது முடித்து வீட்டிலிருந்தார்கள். அரசுப் பள்ளி ஆசிரியைகள் எங்கள் தெருக்களில் வீடுவீடாக வந்து எட்டாவது முடித்த பெண்களைத் தொடர்ந்து படிக்க அனுப்பும்படி பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லியபடி இருந்தனர்.

எங்கள் வாப்பாவுக்கு எங்க லாத்தாவை ஒன்பதாம் வகுப்புக்கு அனுப்ப விருப்பம் இருந்தது. அது பெண்கள் பள்ளியாக இருந்ததும் முஸ்லிம் தெருவிலேயே இருந்ததும் இன்னும் வசதியாய்ப் போயிற்று. ஆக, வயதுக்கு வந்து விட்டால் வெளியே தலைகாட்டாத வழக்கிலிருந்து மாறி, 1974இல் ஏரலில் முதன்முதலாக எங்க ஜனுபா லாத்தா 9 ஆம் வகுப்புக்குச் சென்றார்கள்.

“இன்னா பாரு பொறவூரா பேத்தியே போறாளே”, என்று கீழத்தெருவிலிருந்து ஃபைரோஸ் லாத்தாவையும் சைபுன்னிஸாவையும் அவரவர் வீட்டினர் அனுப்பி வைக்க, அது அப்படியேத் தொடர்ந்து ஏரல் முஸ்லிம் பெண்களின் படிப்பு பெரிய பத்து எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி வரை என்று ஆனது.

இப்படி எஸ்.எஸ் எல்.சி முடித்து விட்டு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு கதைப்புத்தகங்களையும் வார, மாத இதழ்களையும் ஒருவர் வீட்டிலிருந்து இன்னொருவர் வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுப்பதும் வாங்கிச் செல்வதுமான முக்கியமான பொறுப்பு சிறுமிகளான எங்களுக்கு! நாங்கள் எங்கள் விளையாட்டுகளுக்கிடையே முணங்காமல் அதை நிறைவேற்றியதையும் நினைத்துக் கொள்கிறேன் இதனூடேயே…

‌1978இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் எஸ்.எஸ்.எல்.சியையும் கல்லூரி புகுமுக வகுப்பையும் சேர்த்து +1 ,+2 என்ற தற்போதைய மேல்நிலைப் பள்ளித் திட்டம் வந்ததல்லவா? அப்போது ஏரலுக்கு மிக அருகிலிருந்த சிறுத்தொண்டநல்லூர் பள்ளி மேல்நிலைப் பள்ளியானது. அது ஏரலிலிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே இருந்ததால், மிக எளிதாக ஏரலின் பெண்களின் + 2 முடித்தனர் இப்போது.

ஏரல் அரசுப் பள்ளி கட்டிடங்கள் இடிந்துள்ளதால், சிறுதொண்டநல்லூர் அரசுப் பள்ளியில் அமர இடமின்றி மரத்தடியில் படிக்கும் மாணவிகள், படம் : https://www.dailythanthi.com/News/State/government-school-girls-studying-under-a-tree-in-eral-811344?infinitescroll=1

‌ கூட்டம் மிகுந்த பேருந்தில் ஏறத் தயங்கி நாம் நிற்கின்றவரை நின்றுகொண்டிருக்கத்தான் வேண்டும். துணிந்து கடைசிப்படிக்கட்டிலேனும் காலை வைத்து விட்டால், பின்னால் ஏறும் கூட்டமே நம்மை நெட்டித் தள்ளி முன்னேற்றிவிடும் அல்லவா? காலம் ஓடும் ஓட்டத்தில் 1980களுக்குப் பின் தூத்துக்குடி, சாயர்புரம், திருச்செந்தூர் ஊர்களுக்கெல்லாம் பேருந்துப் போக்குவரத்து அதிகரித்தது. ஏரல் முஸ்லிம் பெண்களுக்கு இப்போது மிக இயல்பாக தூத்துக்குடி செயிண்ட் மேரிஸ், சாயர்புரம் போப்ஸ், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிகள், பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பின்னரான தொடர்ச்சிக்கு வழிசெய்தன. சமீபத்தில் பத்துப் பன்னிரண்டு வருடங்களாக காயல்பட்டினம் வாவு வஜீஹா கல்லூரியும் எங்கள் ஊர்ப் பெண்களின் கல்லூரித் தேர்வில் ஒன்றாகியிருக்கிறது .

இப்படியான படிப்படியான வளர்ச்சியாக நான் குறிப்பிடுவது ஏரலிலேயே வாழ்ந்து வந்த குடும்பங்களின் பெண்களைப் பற்றியதுதான். மற்ற‌ நகரங்களில் வசிக்கும் வாய்ப்பினைப் பெற்று இதற்கெல்லாம் மிக முன்னதாகவே எஸ்எஸ்எல்சி வரை படித்த, கல்லூரிக்குச் சென்று பட்டதாரியான ஊர்ப்பெண்களும் ஓரிருவர் அப்போது இருந்தார்கள். என் தாய்மாமா மகள், 1975லேயே மதுரை லேடி டோக் கல்லூரியில் கணிதத்தில் பட்டதாரியாகியிருந்தார். 1980களில் ஏரலில் மருத்துவராகப் பணிபுரிந்த டாக்டர் ஃபலீலா ஏரல் ஊர்க்காரர். எண்பதாம் வருடங்களில் இருந்தே ஊர்ப் பெண்களில் சிலர் ஆசிரியர் பணியிலும் இருந்து வந்திருக்கின்றனர். இப்போது சமீப வருடங்களில் கிடைக்கப்பெற்றிருக்கும் வாய்ப்புகளைத் திறமையாகப் பயன்படுத்தி பட்ட மேற்படிப்பு, பொறியியல், பல் மருத்துவம் , மருத்துவம் எனச் சிறப்பாய்த் தொடர்கின்றனர் ஏரல் பெண்கள்.

கல்லூரிகளுக்குச் செல்லும் பொருளாதார வசதியில்லாததால் பத்தாவதோடோ பள்ளி இறுதியோடோ படிப்பை நிறுத்தியவர்களில் வெகு சிலரை இன்று ஊரில் ஜவுளிக்கடைகளில் விற்பனைப் பெண்களாகப் பார்க்க முடிகிறது. ஹோட்டல்களுக்கு இடியாப்பம் அவித்துக் கொடுப்பவர்களாக, வடை சமோசா விற்பவர்களாக, ஓட்டுமாவு, சீப்பணியம், புட்டுமாவு, இடியாப்ப மாவு போன்றவை தயாரித்துக் கொடுப்பவர்களாக வீட்டிலிருந்தபடியே இயன்ற வழிகளில் வருமானம் ஈட்டக்கூடிய திருமணமான பெண்களும் இருக்கிறார்கள்.

அன்று எங்கள் வாப்புமாக்களின் காலத்தில் ஆண்துணையின்றி குடும்பப் பொறுப்பைச் சுமக்க நேர்ந்த பெண்கள் தங்கள் உடலுழைப்பினாலேயே பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினர். ஆறென வழிந்து இறங்கும் வியர்வையை உறிஞ்ச மேலே போட்டிருக்கும் துண்டைப் பந்தாகச் சுருட்டி முதுகுப் பள்ளத்தில் திணித்தபடி தகதகத்து எரியும் விறகடுப்பின் வெம்மையில் அமர்ந்து மாவு வறுத்த வாப்புமாவின் நெற்றியில் திரண்டிருந்த முத்துகள்; மொத்தமாக ஒடித்துக் கொண்டுவந்து போடப் பட்டிருக்கும் முள்குவியலிலிருந்து முள் கொம்புகளை உருவி சம நீளத்தில் சிறு துண்டுககளாகத் தரித்து ஒழுங்கான கட்டுகளாக்கிய வாப்புமாவின் விரல்களில் முட்கள் இட்டிருந்த கீறல்; இன்னும் வீடுகளுக்கு நெல் அவித்துக் கொடுத்தும், கல்யாண வீடுகளில் சமையலுக்கு உதவியும், தண்ணீர் சுமந்து நிரப்பியும் அவர்களின் முகங்களில் படிந்து விட்டிருந்த களைப்பு என அவர்களின் உழைப்பைக் கண்டிருந்தது காலம்.

கணினிப் பொறியியல் படித்துக் கை நிறையச் சம்பளம் வாங்கும் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடும்போது, பெண் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று நிபந்தனை விதித்தவர்களைத் தட்டிக் கழித்து , ‘பையன்தான் சம்பாதிக்கிறானே கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே பிள்ளைக்கி வயசாயிட்டே போகுதே’ என்ற உறவுகளின் அழுத்தத்தைத் திடமாக நின்று மீறிப் பொறுமையாகக் காத்திருந்து, திருமணத்துக்குப்பின் மகள் பணிக்குச் செல்வதை உறுதிப்படுத்திக் கொண்டாள் என் சின்ன வாப்பா மகள்.

பத்திருபது நாட்கள் முன்பு ஊரிலிருக்கும் மாமியுடன் பேசும்போது, அவரின் மகள் எம். எஸ். ஸி படித்தவள், துபாயில் கணவர் குழந்தைகளுடன் வசித்து வருபவள், குழந்தைகளைக் கணவரிடம் விட்டுவிட்டு நான்கைந்து நாட்களுக்கு அவள் மட்டும் ஊர் வந்து சென்றதாகச் சொன்னார். அங்கிருந்தபடியே இங்குள்ள பலகலைக்கழகத்தின் தொலை தூர வழிக் கல்வித் திட்டத்தின் வழி பி.எட். படித்தவள், தேர்வு எழுதுவதற்காக இங்கு வந்து சென்றிருக்கிறாள். பி.எட்.டும் முடித்தால் அங்கே ஆசிரியையாகப் பணிபுரியும் தகுதி மேலும் கூடும் என்பதால், படிப்பைத் தொடர்கிறாள். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஏரலுக்குத் திருமணமாகி வந்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி , பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவும் தொடங்கிய பின்னர், சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்டவளான உறவுப்பெண் ஒருவர், யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு விதவிதமாகக் கேக் செய்து கொடுத்து, தனக்கென ஒரு வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள் இப்போது.

கணவர் போதுமான வருமானம் ஈட்டுபவர் எனில், குடும்பத்தில் பொருளாதாரக் கட்டாயம் எதும் இல்லையெனில், பெண்கள் வேலைக்குச் செல்லவோ வருமானம் ஈட்டவோ தேவையில்லை என்ற காலங்களிலிருந்து, கல்வி பெறுவதும் பணிகளுக்குச் செல்வதும் அவசியம் என்ற தடத்துக்கு நகர்ந்து, மெதுவாகத்தான் எனினும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றனர் இந்தத் தலைமுறை ஏரலின் முஸ்லிம் பெண்கள்.

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.