ஹாய் தோழமைகளே,

போன அத்தியாயத்தில் சில சுய ஒழுங்கு வழிமுறைகளைப் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக இன்னும் சில.

3. உடற்பயிற்சி

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை நாம் உடற்பயிற்சியில் செலவு செய்தால், அது மீதமுள்ள 23 மணி நேரத்திற்கு நம் உடலை பார்த்துக் கொள்ளும் என்பார்கள். அது உடலை மட்டுமல்ல மனதில் உள்ள ஆற்றலையும் முறைப்படுத்தும். நீங்கள் கவனித்து இருப்பீர்கள், தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்ற ஒருவர் யாரிடமும் தானாக வம்புக்குப் போக மாட்டார்கள். முதல் தாக்குதல் அவர்களிடமிருந்து வராது. ஏனெனில் உடல் மற்றவரைத் தாக்கும் ஆயுதமல்ல தன்னைப் பாதுகாக்கும் கருவி என்கிற தெளிவுடன் இருப்பர்.

ஒரு தெளிந்த லட்சியம் மனத் தெளிவையும், தொடர்ந்த உடற்பயிற்சி உடலில் உள்ள ஆற்றலை நேர் வழியில் செலவு செய்யவும் உதவி செய்யும்.

4. தியானம்

தினமும் பத்து நிமிடமாவது அமைதியாக ஓர் இடத்தில் இருந்து நம்மைக் கவனிக்க ஆரம்பிக்கும் போது மன அமைதி கைவரும். என்ன நடந்தாலும் மனம் தடுமாறாமல் இருக்க உதவி செய்யும். தியானம் செய்ய பயிற்சி இல்லாதவர்கள் மூச்சுப் பயிற்சி செய்யலாம். அதிலும் பழக்கம் இல்லாதவர்கள் வெறுமனே அமர்ந்து மூச்சு உள்ளே போவதையும் வெளியே வருவதையும் கவனிக்கலாம். இந்த பயிற்சிகளே உங்களைத் தியானத்தின் அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

ஒரு பிரசித்தி பெற்ற ஆங்கிலப் பொன்மொழி உண்டு

When the student is ready the teacher will appear. When the student is truly ready… The teacher will Disappear.

இதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் மனப்பூர்வமாகக் கற்கச் செய்ய விரும்பும் ஒன்றுக்கு இந்தப் பிரபஞ்சம் உங்களைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும். ஆனால் உங்கள் விருப்பம் ஆழமானதாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்க வேண்டும்.

5. நாட் குறிப்பு எழுதுவது

இது நாம் ஏற்கெனவே பயிற்சியாகச் செய்ததுதான். ஆனால் அந்தப் பயிற்சியில் மனதில் உள்ளதை நாம் சில வரையறைக்குள் எழுதினோம். என்ன உணர்வு, ஏன், எவ்வளவு நேரம் என்றெல்லாம் எழுதினோம்.

இங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பாதிக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அப்படியே எழுதுங்கள். நீங்கள் கோபப்படும் / அன்பு காட்டும் / வருத்தமாயிருக்கும் ஒருவரிடம் என்ன வெல்லாம் சொல்ல நினைக்கிறீர்களோ அதை அப்படியே எழுதுங்கள்.

ஒருமுறை எழுதிய பின் அதை நாமே படித்துப் பார்க்கும் போது ஏதோ அந்த நபரிடமே உணர்வைக் கொட்டித்தீர்த்த நிம்மதி வரும். தேவைப்பட்டால் அதில் வேண்டிய மாற்றம் எப்போது வேண்டுமானாலும் / எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யுங்கள்.  ஒவ்வொரு முறையும் எழுதியதைப் படித்து முடித்தவுடன் மனம் லேசாவதை உணர்வீர்கள். முதலில் எழுதியதைப் படிக்கும் போது வந்த கோபமும் கண்ணீரும் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றிருக்கும். ஏன் உங்கள் எழுத்தே கொஞ்சம் மென்மையான தொனியில் மாறியிருக்கும். இனி சம்பந்தப்பட்ட நபரிடம் பேசினால்கூட உங்களால் அந்த உணர்வை அதே வீச்சில் வெளிபடுத்த முடியாது.

அவ்வளவுதான் நாம் உணர்வு பேரலையில் இருந்து வெளிவந்து விட்டோம்.

5. நண்பர்களுடனோ, ஒத்த எண்ணமுடையவர்களுடனோ மனதில் இருப்பதைப் பேசுவது

நம்மால் நம்மைச் சரிசெய்து கொள்ள முடியாமல் போகும் போது, பிறரின் உதவியை நாடுவதில் தவறே இல்லை. ஆனால் நாம் பேசுபவர் நமக்குத் தாளம் போடாதவராக, நம்மை இன்னும் தூண்டுபவராக இல்லாமல், நம் முன்னே ஒரு கண்ணாடியைப் பிடிப்பவர் போல் நம்மையும், நம் எண்ணங்களையும் நமக்கு அடையாளம் காட்டுபவராக இருக்க வேண்டும். நம்மிடம் பேசிவிட்டு சம்பந்தப்பட்ட நபரிடமும் போய் இதைப் பற்றிப் பேசாதவராக இருக்க வேண்டும்.

அப்படி யாரும் இல்லாத பட்சத்தில் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறலாம்.

நண்பரிடம் பேசுவது பிரச்னை பெரிதாகும் வரை இல்லாமல் அடிக்கடி மனம் விட்டுப் பேசும் வழக்கம், பிரச்னையை முளையிலேயே கிள்ள உதவி செய்யும்.

6. தனிமையில் நேரம் செலவிடுவது (Self Date).

நமக்கு மனம் விட்டுப் பேச யாரும் இல்லாவிடில் நாமே நம்மிடம் பேசலாம். நமக்கென தனியாக ஒரு நாளை எடுத்துக்கொண்டு ஏதேனும் பிடித்த விஷயங்களைச் செய்து உற்சாகப் படுத்திக்கொண்டு, ஒரு தளர்வான மனநிலையில், அமைதியான சூழ்நிலையில் நம்மோடு நாமே பேசலாம். இப்போது நீங்கள்தான் உளவியல் நிபுணர், உங்கள் நண்பருக்குப் பிரச்னை என்றால் எப்படிப் பேசி அவரை அமைதி படுத்துவீர்களோ அதையே உங்களிடம் பேசுங்கள்.

இது நிச்சயம் சுலபமல்ல. முயற்சி செய்தால் வராததும் அல்ல.

இதை நான் வேறு மாதிரி முயன்றிருக்கிறேன். என் தோழிக்கு எழுதுவதாக எனக்கு நானே கடிதமெழுதினேன். அதில் ஓரளவு வெற்றியும் கிட்டியது.

7. நிகழ்காலத்தில் கவனத்தை இருத்துவது.

நாம் உணர்வின் பிடியில் இருக்கும் போது, பொதுவாகக் கடந்த காலப் பாதிப்புகளோ, எதிர்காலப் பயங்களோதான் அதிகம் மனதை ஆக்கிரமித்திருக்கும். இதனால் நிகழ்காலம் என்ற ஒன்றிருப்பது நினைவில் இருக்காது. அது போக நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்களால் எதிர்காலப் பயங்களை இல்லாமல் செய்யவோ, எதிர்கொள்ளவோ முடியும் என்றும் யோசிக்க முடியாது. இன்று செய்யும் தவறான செயல்கள் எதிர்காலத்தை இல்லாமல் ஆக்கக்கூடும் என்பதும் புரியாது.

இதற்கு ஒரே வழி தினமும் சிறிது நேரமாவது சிறிய சிறிய செயல்களில் ஈடுபட்டு அந்த நேரத்தில் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருக்கப் பழகுதல். பழகப் பழகச் செய்யும் எல்லாச் செயல்களிலும் கவனம் கூடும்.

இந்தப் பயிற்சியில் வேறொரு நன்மையும் உண்டு. பல நேரம் வீட்டைச் சரியாகப் பூட்டினோமா, சிலிண்டர் நாபை மூடினோமா என நாம் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பல சந்தேகங்கள் வரும். ஏனெனில், நாம் செய்யும் வேலையில் அந்தக் கணத்தில் மனதை நிறுத்துவதில்லை. இந்தப் பயிற்சி உங்களின் நிகழ்கால கவனத்தை அதிகரிக்கும்.

சரி எப்படிச் செய்வது?

1.   தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை 108, 1008 என்கிற கணக்கில் ஜபிக்கலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு நேர்மறை வார்தையை ஜபிக்கலாம்.

ஜபிக்கவும் வேண்டும், கணக்கும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் மனதில் வேறு சிந்தனைக்கு இடம் வராது. ஆனால் வேறு வேலைக்கு நடுவில் என்றில்லாமல் இதற்கென நேரம் ஒதுக்கி அமைதியான சூழ்நிலையில் செய்யும் போது மனம் ஒருமுகப்படும்.

2.   வீட்டில் தோட்டம், மீன்தொட்டி இருந்தால், அதனைப் பராமரித்தல், சுத்தப்படுத்துதல் போன்ற வேலையில் மனம் ஒன்றி ஈடுபடலாம்.

3.   கலையார்வம் இருந்தால் நடனம், பாட்டு, ஓவியம் போன்ற கலைகளில் ஈடுபடலாம்.

4.   எதுவுமே இல்லாவிடில் தினமும் செய்யும் சிறு சிறு வேலைகளில் முழுக் கவனமும் வைத்து, அதை உங்களைத் தவிர வேறு யாரும் சிறப்பாகச் செய்ய முடியாத அளவிற்குச் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்தப் பயிற்சி கைவந்து விட்டதா என எப்படிக் கண்டுகொள்வது? நீங்கள் செய்யும் எந்த வேலையும் திருப்பிச் செய்ய வேண்டிய அவசியமே வராத அளவிற்குச் செய்யும் போது, நீங்கள் இதில் நிபுணத்துவம் பெற்றுக் கொண்டீர்கள் என்று கண்டு கொள்ளலாம்.

சரி, தோழமைகளே அடுத்த அத்தியாயத்தில் EQ வின் மற்றொரு முக்கியமான அம்சத்தை விவாதிப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.