புதியதாகத் திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்!

அன்புள்ள அம்மா,

திருமணம் என் சுதந்திரத்தைப் பறித்துவிட்டது என்று தோன்றுகிறது. ஆனால் அடுத்த கணமே நீயும் என் வயதில் என்னை மாதிரிதானே உணர்ந்திருப்பாய். நீ எனக்குக் கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்குக் கொடுக்க தயாராகி விட்டேன்.

என்றும் அன்புடன்

உன் தேவதை

இப்படி ஒரு பதிவு சுற்றுகிறது.

ஏதாவது கேள்வி கேட்டால், ‘கடவுளுக்குச் சம்பளம் கொடுப்பீர்களா? அப்படித்தான் வாழ்வில் துணைபுரியும் தன் இணையான பெண்ணுக்குச் சம்பளம் கொடுப்பதும்’எனப் பெண்ணின் வாழ்வை உடனே புனிதப்படுத்தி விடுவார்கள். தியாக்கப்பட்டம், புனிதர் பட்டம் எல்லாம் யாருக்கு வேண்டும்? நீங்களே தேவை என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெற்றோர் மற்றும் அவர்களது குழந்தைகள் ஒரு குழுவாக ஒன்றாக வாழும் இடம். (a group of one or more parents and their children living together as a unit.) இதுதான் குடும்பம் என்பதற்கான பொதுவான விளக்கம். இதில் தியாகம் என்பது எங்கு வருகிறது என்பதே புரியவில்லை. அனைவருக்கும் சமமான உரிமை இருப்பதுதான் வீடு, குடும்பம். ஒருவர் தியாகத்தில் மற்றவர் வாழ்வது அல்ல. தியாகம் என்கிற சொல்லே குடும்பத்திற்கு எதிரானது. அப்படியே தியாகம் என்றால், அது தானாகச் செய்வதுதான். அடுத்தவர்களைச் செய்ய வைத்தால் அதன் பெயர் துரோகம். அன்பாக இருங்கள், ஆனால் தியாகம் என்றுமே அன்பில் சேராது என்பதைப் புரிந்திருங்கள்!

கணவன் தன் தாய் தந்தையரை விட்டு விட்டு மனைவியோடு வாழ்வான். இருவரும் ஒரே உடலாக இருக்கிறார்கள் என்பது பைபிள் வாசகம். கணவன், அவரது குடும்பத்தை விட்டு மனைவியுடன் வந்து இருப்பதும், மனைவி தனது குடும்பத்தை விட்டு கணவனோடு வந்து இருப்பதும் தியாகம் அல்ல. தியாகத்திற்கும் படிநிலை வளர்ச்சிக்கும் பாரதூரமான வேறுபாடு உண்டு. இரண்டையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. திருமணத்தில் இந்தப் படிநிலை வளர்ச்சி என்பது இருபக்கமும் நடக்கிறது. இணையருக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்போது சுற்றிலும் உள்ள உறவுகளுக்கு இதுவரை கொடுத்த முன்னுரிமையைக் கொடுக்க முடியாது. இதைச் சிலர் தியாகம் எனக் குழப்பிக் கொள்கிறார்கள்.

அதுவரை, வேலைக்குத் தனியாகச் சென்று கொண்டிருந்தவர் மனைவியைக் கொண்டு போய் அலுவலகத்தில் விடுவார். வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். மனைவியின் வேலைகளைத் தானே செய்வது; கணவரின் வேலைகளைத் தானே செய்வது  இவையெல்லாம் காதலினால் ஏற்படும் வளர்ச்சி.

அது போலத்தான் பெற்ற பிள்ளைகளுக்குச் செய்வதும். குடும்பத்திற்கு எனச் சில கடமைகள் நாம் செய்துதான் ஆகவேண்டும். பிறந்த குழந்தைக்குச் செய்வது எல்லாம் கடமையில் வரும். அதற்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும்படியான செயல்களைச் செய்ய வேண்டியது இல்லை.

இந்தப் பயணத்தில் நமக்குப் பிடித்த பலவற்றை இழப்பது என்பது மிகவும் இயல்பானது. ஆனாலும், இந்தப் பட்டியலில் ஆணை விடப் பெண்ணின் இழப்புதான் கூடுதல். பெண்களின் தியாகத்தில் தான் குடும்பமே கட்டமைக்கப்படுவதாகக் கற்பிக்கப்படுகிறது. முதலில் மாமியாரை அம்மா என நினைக்க வேண்டும்; பிறந்த வீடு அவருக்குச் சொந்தமில்லை; பிறந்த ஊர் அவருக்குச் சொந்தமில்லை. இப்படி அனைத்தையும் விட்டு விட்டு வருகிறார்கள். வெளியூரில் போய் ஆண்கள் வாழவில்லையா எனக் கேட்கலாம். வாழ்கிறார்கள். ஆனால் அந்த ஊர் பிடிக்கவில்லை என்றால், அந்த வீடு பிடிக்கவில்லை என்றால், மாற்றிக் கொள்ளலாம். அவர்களிடம், மாமியாரை அம்மா எனச் சொல்லு என அறிவுறுத்துவது இல்லை. மனைவியின் ஊர்தான் உன் ஊர் என யாரும் சொல்வதுமில்லை. அம்மா என்பது அற்புதமான உறவு. எல்லாரையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறு பார்க்கப்பட ஒருவருக்குத் தனித் தகுதி வேண்டும். அந்தத் தகுதி மாமியாருக்கு இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளும் முன்னரே, அம்மா என நினைக்க வேண்டும் என மறைமுக நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுவே தேவையற்ற நிர்ப்பந்தம்தான்.

நிபந்தனையற்ற அன்பு (Unconditional Love) என்று ஓர் உருட்டு வேறு உருட்டுவார்கள். பிறர் நமக்குத் துன்பம் செய்தாலும், நாம் நமது இயல்பாக அன்பையே பதிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதை சொல்வார்கள். தண்ணீரில் விழுந்த தேளை ஒருவர், வெளியே எடுத்துவிட்டுக் கொண்டே இருப்பார். தேள் கொட்டியதும் வலியில் கையை உதற, தேள் மீண்டும் தண்ணீரில் விழும். இவ்வாறு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அவரிடம் கேட்டதற்கு, ‘கொட்டுவது தேளின் இயல்பு; உதவுவது என் இயல்பு’என்று அவர் கூறுவதாகக் கதை முடியும். உதவ வேண்டும் என நினைத்தால், ஒரு கம்பால் எடுத்து வெளியே போட வேண்டியதுதானே; அப்படிச் செய்தால், தேளும் வெளியேறி இருக்கும். அவருக்கும் வலி இருக்காது.

அது போலவே நிபந்தனையற்ற அன்பு, யோசிக்காமல் கொடுக்கும் அன்பு என்பது எல்லாம், இரு பக்கமும் தொல்லைதான். கம்பு கொண்டு தேளை எடுப்பது போல, ஏதோ ஒரு நிபந்தனை தேவை. இல்லை என்றால், ஒருவருக்கு உடனடித் தொல்லை; மற்றொருவர் எப்படி இருந்தாலும் நமக்கு இது கிடைக்கும் என வாழ்வதால், நாளாவட்டத்தில், வெளி ஆட்களிடம் அடி வாங்குவார்.

வீட்டில், தோசை சுடச் சுடத் தட்டிற்கு வர வேண்டும். அம்மாவும் அதைச் செய்வார். சாப்பிடும் போது நடக்கக் கூடாது; நின்று கொண்டு சாப்பிடக் கூடாது என வியாக்கியானம் வேறு சொல்லிக் கொள்வார்கள். இவர்களே வெளியில் நின்றுகொண்டே buffet சாப்பிடுபவர்கள், ரோட்டுக்கடையில் கையேந்தி பவனில் சாப்பிடுபவர்கள்தாம் இவ்வளவு முறையாகப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்கள், அமர்ந்து சாப்பிட இடம் இல்லை என்றால் பட்டினியாக வீடு வர வேண்டியதுதானே! அதைச் செய்ய மாட்டார்கள். விதிமுறை என்பது எப்போதும், அதை இயற்றுபவர்களுக்கு வளைந்து கொடுப்பதுதான். மற்றவர்களுக்கு அது ஒரு நாளும் வளையாது.

இப்படி வளர்த்து விடப்படும் பிள்ளைகள், மனைவியிடமும் அதை எதிர்பார்க்கின்றன. என் அம்மா அப்படிச் செய்வாள்; இப்படிச் செய்வாள் எனச் சொல்லும் கணவனிடம் மனைவி பதிலுக்கு என் அப்பா அப்படிச் செய்வார்; இப்படிச் செய்வார் என ஒரு தடவை சொல்லிவிட்டால், போதும்! அவ்வளவுதான். ஆண் சொன்னால் அது ஆதங்கம், பெண் சொன்னால், வீண் பெருமை. பிறந்த வீட்டுப் பெருமை பேசினால், ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பிடிக்காது. மனைவி தாய் போல இல்லையே என்று வருத்தப்படும் கணவன், ஒருமுறை தன் மனைவியை அவர் தந்தை போலக் கவனித்துக் கொள்கிறோமா என்று நினைத்துப் பார்த்தால் அம்மா பெருமையே வாயில் வரவே வராது.

எத்தனை பேர், மனைவியின் சமையல் பிடிக்கவில்லை என அம்மாவிடம் போய்ச் சாப்பிடுகிறீர்கள்? நீங்கள் 1000 ரூபாய்க்கு ஒரு துணி எடுத்து மனைவிக்குக் கொடுக்கிறீர்கள். அவர் உடனே, அப்பாவிற்கு போன் பண்ணி, அப்பா எனக்கு ஒரு துணி எடுத்து வாருங்கள் எனச் சொல்லி அவரும் எடுத்து வர, அதை மனைவியும் அதைத்தான் அணிகிறார் என வைத்துக் கொள்வோம். கேட்டதற்கு, என் அப்பா விலை உயர்ந்ததாக எடுப்பார். நன்றாக எடுப்பார் எனச் சொன்னார் என வைத்துக் கொள்வோம். உங்கள் மனநிலை என்ன? அதே மனநிலை தானே, நீங்கள் மனைவி சமையல் சரியில்லை எனச் சொல்லி, உங்கள் அம்மாவிடம் போய்ச் சாப்பிடும்போது, மனைவிக்கு வரும். அவரே கடையில் போய் வேறு துணி வாங்கி அணிந்தால்கூட உங்களுக்குக் கோபம் குறைவாகத்தான் வரும். அது போலத்தான், நீங்கள் கடையில் சென்று சாப்பிட்டால் கூட கோபம் குறைவாகத்தான் வரும்.

அம்மா சமையல் இளமையிலிருந்தே பழகியது. அதனால் அதுதான் உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும். கணவனும் ஒரு நாள், ஒரே ஒருநாள், மனைவியின் அம்மா போல மனைவிக்குச் சமைத்துக் கொடுப்பாரா? அல்லது அதற்கு முயற்சியாவது செய்வாரா? குறைந்தபட்சம் தனக்குப் பிடிக்கும் என்பதற்காகத் தன் அம்மாவிடமாவது சமையல் கற்றுக் கொள்வாரா? இல்லையே! பின் ஏன் மனைவியிடம் அதை எதிர்பார்க்க வேண்டும்? அம்மா செய்வதை எல்லாம் யாரும் செய்ய முடியாது. ஏனென்றால், அம்மா, நீங்கள் கைக்குழந்தையாக இருக்கும் போதே உங்களுக்கு அறிமுகமானவர். உங்களால் ஒன்றும் முடியாத நேரத்திலிருந்தே பணிவிடை செய்தவர். அதனால் அவர் அதை இயல்பாக எடுத்துக் கொள்வார். நீங்கள் என்றுமே அவர்களுக்குக் குழந்தைதான். அதை, நன்கு வளர்ந்த பின் அறிமுகமாகும், மனைவியிடமோ கணவனிடமோ எதிர்பார்ப்பது என்பதே அறிவீனம்தான்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமணங்கள் இருக்கும். ஆனால், மகனுக்குச் சமைத்துக் கொடுக்க ஆள் வேண்டும், அவன் வெளியில் சாப்பிட்டுச் சிரமப்படுகிறான் எனத் திருமணம் செய்து வைப்பது, எல்லாம் ஒருத்தி வந்தால் சரி ஆகிடுவான் எனத் தீய பழக்கங்கள் கொண்ட மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்றவை எல்லாம் நம் ஊரில்தான் நடக்கும். தீயப் பழக்கங்களை மறைத்து திருமணம் செய்து வைத்து, எத்தனை பெண்களின் வாழ்வைப் பெற்றோர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நம்மைச் சுற்றிப் பார்த்தாலேயே தெரியும்.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் மகள்கள், சகோதரிகளைத் திருமணம் செய்து வைக்காதீர்கள். குடிப்பழக்கத்தால் என் மகன் இறக்கும் போது,  அவன் மகனுக்கு வயது இரண்டு என ஒருவர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். இவர் தனது மகனுக்கு ஏன் திருமணம் செய்து வைத்தார் என்பதுதான் கேள்வி. கேட்டால், “திருமணம் ஆனால் திருந்தி விடுவான் என நினைத்தேன்”என்பார்கள். இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக உங்களால் முடியாத அந்தத் திருத்துதலைப் புதிதாக வந்திருக்கிறவர் செய்ய வேண்டுமா? அதற்காகவா மருமகள் பிறந்திருக்கிறார்?

மனைவி இரண்டு நாள், தனது உறவினர் வீட்டிற்குப் போய்விட்டால், சாப்பாட்டிற்கு என்ன செய்வேன் எனக் கணவன் புலம்புவார். மனைவியை எங்கேயும் போக விடாமல் வைத்துக் கொள்வார். ‘நான் இல்லை என்றால், அவருக்கு வேலையே ஓடாது’என இது குறித்துப் பெருமை பேசும் மனைவிகளும் உண்டு. குழந்தை பிறப்பிற்கு என நாட்கணக்கில் என்ன மாதக்கணக்கில் அம்மா வீடு சென்றால்கூடச் சமாளிக்கத் தெரிந்த கணவனால், இரண்டு நாட்கள் சமாளிக்க முடியாதா எனப் பெண்கள் யோசிப்பதே இல்லை. இதில்,‘யாரோ பெத்த புள்ளயைக் கல்யாணம் பண்ணிக் காலம் முழுக்கச் சோறு போடும் உயர்ந்த உள்ளம்தான் ஆண்’என ஆண்கள், தங்களுக்குத் தாங்களே தட்டி வேறு கொடுத்துக் கொள்வார்கள். மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ணைவிட, நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணுதான் ஆண்களுக்குத் தேவை என அவர்களின் தேவையை வெளிப்படையாகவே எந்த உறுத்தலும் இல்லாமல் அறிவிப்பார்கள்.

உணவகங்களில், திருமணம் மற்றும் பல நிகழ்ச்சிகளில் ஆண்கள்தாம் சமைக்கிறார்கள். பொது வெளியில் என்றால் பெண்கள் இன்னும் யூ டியூப்களில்தாம் சமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுதான் சிலர் வீட்டிலிருந்து சமைத்துக் கொடுக்கும் தொழிலைச் செய்கிறார்கள். மற்றபடி குடும்பத்தினருக்கு மட்டுமே அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கணக்கில் தனியாக இருந்து சமைத்துச் சாப்பிட்டவர்கள்கூட மனைவி என ஒருவர் வந்து விட்டால், அடுப்பு பக்கமே போவதில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக உலகப் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணர் வந்திருந்தார். அவர் தனது வீட்டு அடுக்களைக்குள் நுழைந்ததே இல்லை என்கிறார். இவர் அந்தக் கலையை கற்றால் என்ன? கற்காவிட்டால் என்ன?

சமையல் என்று மட்டுமல்ல எந்த வீட்டு வேலையும் ஆண்கள் செய்வதில்லை. கழிவறை சிறிது அப்படி இப்படி இருக்கிறதா? உடனே மனைவிக்குத்தான் தகவல் சொல்வார்கள். அவர்கள் தனியாக இருக்கும் போது அனைத்தையும் செய்தவர்கள் தானே. தங்கள் வீட்டு வேலைகளைத் தாங்கள் செய்யாமல் யார் செய்வார்கள்? செய்கிறார்கள். இவையெல்லாம் வேலை அல்ல. survival skill சமைக்க முடியாது அல்லது தெரியாது என்று சொல்வது எல்லாம் என்றாவது ஒரு நாள் பெரும் விளைவைக் கொடுக்கும். முன்பு போல இப்போது கூட்டுக்குடும்பம் கிடையாது. ஒரு பெண் இல்லையென்றால், இன்னொரு பெண் செய்வாள் என்பதற்கு. மனைவி பத்து நாள் கொரோனா எனப் படுத்துவிட்டால், அடுக்களை அருகில்கூட அவரால் வர முடியாது. அடிக்கும் காய்ச்சலுக்குத் தண்ணீரைத் தொடக்கூட முடியாது. பின் கழிவறையைத் தூய்மை எல்லாம் செய்வது எங்கே?

இவ்வாறு வாழும் ஆண்கள் அடிப்படை வேலைகளுக்குக்கூட இன்னொருவரைச் சார்ந்திருக்கும் நோயாளிகளாக மாறி விடுகிறார்கள். குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்றால்கூட நோயாளி போல யாரையாவது எதிர்பார்ப்பது என்பது அவர்களது தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. கணவனை இழந்த மனைவிகள் பெரும்பாலும் சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால் மனைவி இறந்ததும் பெரும்பாலான ஆண்கள் நிலைகுலைந்து போகிறார்கள். அதற்கு அவர்களின் அந்தத் தன்னம்பிக்கைக் குறைவே காரணியாக அமைகிறது. 

சோம்பேறியாக்குவதில் அம்மாவின் பங்கு மிகவும் கூடுதல் என்பதால், மகனும் அம்மா பக்கம் சாய்வது உண்டு. அதனால், அவனது அம்மா என்றால், நூறு டாக்டர்களுக்குச் சமம். அவர் என்ன சொன்னாலும் சரி என வாதிடும் பிள்ளையாக அவர் உருமாறுகிறார்.

இதனால், தான் என்னவாக இந்த வீட்டில் இருக்கிறோம் என்று தெரியாமலே வாழ்நாளைக் கழித்த பெண்கள் ஏராளம். புழுவைக் கொட்டிக் குளவியாக்குவது போல, இவர்கள் கொட்டிக் கொட்டி குளவியான பெண்களும் உண்டு. சிறுவயதில் தன்னைக் கட்டிப் போட்ட சங்கிலியை, வளர்ந்து பெரிதான பிறகும், அந்தச் சங்கிலியை அறுத்துவிடக் கூடிய பலம் வந்த பின்பும், கட்டுப்பட்டு நிற்கும் யானை போலத் தன் பலம் என்ன எனத் தெரியாமல் வாழ்நாளைக் கழிக்கும் பெண்களும் உண்டு. ஆனால் அவர்கள் சிறு முயற்சி செய்தால்கூட விடுபட்டு விடுவார்கள்; அந்த முயற்சி எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என் மகன் நல்லவன். மனைவியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறான். அதனால்தான் மருமகள் அனுசரித்துப் போகிறாள் எனச் சிலர் சொல்வதுண்டு. ஆனால் மருமகள் மனது வைக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு தோசைகூடச் சுட்டுத் தராமல் இருக்க முடியும். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

அம்மா தியாகம் செய்தவராக இருதிருந்தால், அதே போல உன் மனைவியை நடத்தாதே எனச் சொல்வதுதான் அவர் செய்யக்கூடிய ஆகச் சிறந்த தியாகம். நாம்தான் தவறாக வாழ்ந்தோம் என்றாலும் நமது மகன்களுக்காவது அவரது மனைவியை மதிக்கச் சொல்லிக் கொடுப்போம். ஒரு தலைமுறை விட்டுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாற்றத்தை நமது தலைமுறையிலிருந்து ஏற்படுத்துவோம். மாமியாரிடம் அவ்வப்போது அடக்கும் எண்ணம் தலைதூக்கினாலும் அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்வது குடும்பத்தில் உள்ள அனைவரின் கடமை. குறிப்பாக மகனின்/ கணவனின் கடமை.

பாதிக்கப்பட்டவரைவிடப் பாதிப்பை ஏற்படுத்தியவரின் சொல்லுக்குத் அழுத்தம் கூடுதல். அதனால் அப்பா கண்டிப்பாக மகனிடம் சொல்ல வேண்டும். ‘நான் செய்தது முறையல்ல. என்னைப்போல் இருக்காதே, உன் அம்மாவை இனி நான் நன்கு கவனித்துக் கொள்வேன். அவள் குறித்து நீ கவலைப்படாதே. நீ உன் வாழ்வை மகிழ்ச்சியாகத் தொடங்கு; தொடரு’என அப்பாதான் சொல்ல வேண்டும். இவ்வளவு சொன்னாலே அம்மா, தானாகவே கீழே இறங்கி வந்துவிடுவார். நானும் சாரி நீயும் சாரி என அவர்களுக்குள் இருக்கும் பிரச்னைகூட முடிந்துவிடும்.

ஆனால் ஆண்கள் தங்கள் தவற்றை மறைக்க மீண்டும் மீண்டும் தாங்கள் தேவமாதாவிற்குப் பிறந்ததாகக் காட்டிக் கொள்வார்கள். விளைவு, மகன் நாம் அப்பா போல இருக்கக் கூடாது என விலகுவான். அல்லது சிரமப்பட்ட அம்மாவைத் தான் நல்லபடி வைக்க வேண்டும் எனத் தலையில் தூக்கி ஆடுவான். தியாகம் மீண்டும் மீண்டும் தொடரும். இது தேவையா? யோசிப்போமா?

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.