தனக்குக் கிடைக்காத பெண், யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் கொலை செய்ததாக, ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கொன்றிருக்கிறார். இப்படிச் செய்தியை அவ்வப்போது செய்தித்தாளில் பார்க்கலாம். உடனே, “ஆண்களைப் பெற்ற பெற்றோர், பெண்களை மதிக்கும் குணத்தைக் கற்றுத்தர வேண்டும். இளைஞர்களை, பிற உயிரை மதிக்கும் பண்பு மிக்கவர்களாகப் பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து வளர்க்க வேண்டும்’’ என ஆளாளுக்கு அறிவுரை சொல்வோம். மறுநாள் மறந்து கடந்துவிடுவோம்.
கொலை செய்வது என்றாலும் தற்கொலை செய்வது என்றாலும் அபாரமான மனத்துணிவு வேண்டும். இந்த மனத்துணிவை வாழ்ந்து காட்டுவதில் ஏன் காட்டக் கூடாது?
எல்லாரும் காதலில் வென்றவர்களா?
ஆட்டோகிராஃப், அழகி, விண்ணைத்தாண்டி வருவாயா, பூ, 96 எனக் காதல்
தோல்விக்குப் பின்னான வாழ்க்கைக் குறித்துப் பல திரைப்படங்கள் வெளி
வந்திருக்கின்றன. வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன; அல்லது
பேசப்பட்டிருக்கின்றன. அவற்றை ஓட வைத்தவர்கள் யார்? அவை குறித்துப்
பேசுபவர்கள் யார்? பலரும் தங்களது கடந்தகால வாழ்க்கையை, திரும்பிப்
பார்க்க ஏதுவாக இருப்பதால் இவை ஓடுகின்றன. அதாவது பலரின் வாழ்விலும் இருக்கும் காதல் தோல்வி பொங்கி வழிவதுதான் இத்தகைய படங்களின் வெற்றியாக அமைகிறது.
நம்பிக்கை இல்லை என்றால், காதல் தோல்விக்குப் பின் வெற்றிகரமாகத் திருமணம் செய்து யாராவது வாழ்கிறார்களா என உங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். ஒருதலைக்காதல், இருவரும் காதலித்த காதல், திருமணத்தின் விளிம்பு வரை சென்று வந்த காதல் என ஓராயிரம் கதை சொல்வார்கள். என்னிடம் கேட்டால் நானே பல கதைகள் சொல்வேன். எல்லாரும் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நிறைவாகத்தான் வாழ்கிறார்கள். அதெப்படி எனக் கேட்கலாம்?
எனக்குத் தெரிந்த ஒரு பெண், ஒரு பையனைக் காதலித்தார். அவனுக்காக
ஆண்டுக்கணக்கில் காத்திருந்தார். காதலித்த அவனோ அவன் பெற்றோர் பேச்சைக் கேட்டுக்கொண்டு வேறு ஊரில் ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ போய்விட்டான். காரணம் சொல்லி விலகிப் போயிருந்தால்கூட அப்பெண்ணிற்குச் சிறு ஆறுதலாக இருந்து இருக்கும். பெற்றோர் பேச்சைக் கேட்டு வெளியூர் போனவன் போனவன்தான். காரணம் என்ன? எங்கே இருக்கிறான் என்னவென்றே தெரியாமல் ஆண்டுகள் பல காத்திருந்த அந்தப் பெண், இப்போது வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ்கிறார். இந்தப் பக்குவதைக் காலம் அவருக்குக் கொடுத்திருக்கிறது. ‘நல்லவன் செய்வதைவிட நாள் செய்யும்’ என்கிற பழமொழி போல பலருக்கும் காலம் இந்த முதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது
வெற்றிகரமான தொழில் அதிபர் ஒருவர். இருவரும் வேறு வேறு மதம். தான் மதம் மாறப்போவதாகச் சொல்லித்தான் ஆண் திருமணம் செய்து இருக்கிறார். கணவனே கண்கண்ட தெய்வம் என மனைவி மாறிவிடுவாள் என்பது இவரது நினைப்பு. ஆனால், மனைவி தன் கொள்கையில் உறுதியாக இருக்க, இவர் மாறமாட்டேன் என்று சொல்ல நாட்கணக்கில்தான் அவர்களின் திருமண வாழ்வு நிலைத்து இருக்கிறது.
பையன் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது வருமானத்தை எதிர்நோக்கிப் பல சகோதரிகள். நன்றாகக் படிக்கக் கூடியவர்தான். ஆனாலும் ஒரு காலகட்டத்தில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் சூழ்நிலை. பெண் இதற்கு நேர் எதிர். சுமாராகப் படிப்பாள். நிலக்கிழாரின் மகள். இருவரும் பிறந்ததில் இருந்தே ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஆனால், இளமைக் காதல் ஒன்றும் அது இல்லை.
மழை தண்ணீர் பொய்த்தபின், தோட்டம் வைத்திருப்பது சுமை என மாறிவிட்டது. ஆனாலும் பெண் வீட்டில் வறுமை இல்லை. பணக்காரர்கள் நடுத்தர குடும்பமாக மாறினார்கள். பெண்ணின் இரண்டு அண்ணன்களும் வெவ்வேறு விபத்துகளில் இறந்து விட்டனர். இப்போது இவரின் வறுமையும் அவரது உறவுகளின் இழப்பும் இருவரையும் நெருங்க வைத்தன. ஒருவர் இன்னொருவர் மேல் ஏற்பட்ட பரிதாப உணர்ச்சி காதலாக மாறியது. பெண் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் எனக் காதலிக்கும் போதே இருவருக்கும் தெரியும். ஆனால், அந்தப் பையன் துணிவுடன்தான் இருந்தார். அவர், இருவருக்கும் பொதுவான தோழியின் அம்மா வீட்டிற்குத்தான் கடிதம் போடுவார்.
ஒரு காலகட்டத்தில், பெண் என் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் எனச் சொல்லி வேறு திருமணம் செய்துகொண்டார். கொஞ்ச நாள் கழித்து, பையனும் வேறு திருமணம் செய்துகொண்டார். 30+ ஆண்டுகளுக்குப் பின் அந்தத் தோழி, அப்பெண்ணுடன் பேசுகிறார். அத்தான் அத்தான் எனத் தனது கணவரைப் பற்றி மனநிறைவாகப் பேசுகிறார். குடும்பம், பிள்ளைகள் என நிறைவான வாழ்க்கையாகத்தான் அவரின் சொற்கள், பேசும் விதம் அனைத்தும் தெரிகின்றன.
இந்த வாட்ஸப் யுகத்தில் அந்தப் பையனும் அதே தோழியுடன் ஒருநாள் பேசுகிறார். பலரைப் பற்றியும் பேசுகிறார். 30+ ஆண்டுகளின் கதைகளை இருவரும் மணிக்கணக்கில் பேசுகிறார்கள். ஆனால், அந்தப் பெண் குறித்து ஒரு சொல் கூட அவர் சொல்லவில்லை. குறைந்தபட்சம் அவளுடன் தொடர்பில் இருக்கிறாயா என்றாவது கேட்பார் எனக் காத்திருந்த தோழிக்கு ஏமாற்றம். ஏனென்றால் அந்தப் பெண் மூலம்தான் இவர் அவருக்குத் தோழியாகினார். தோழி என்றாலே அவர் மனதில் அப்பெண்ணின் நினைவு வராமல் இருந்திருக்கவே முடியாது. ஆனாலும் அவர் எதுவுமே கேட்கவில்லை. முன்பு, காதலுக்கு உண்மையாக இருந்தார்; இப்போது திருமணத்திற்கு உண்மையாக இருக்கிறார். இதுதான் நிறைவு பெற்ற மனிதரின் வாழ்க்கை. ஒரே இடத்தில் பணிபுரிந்த ஆணும் பெண்ணும் காதலித்தார்கள். மிகவும் சமமான குடும்பம். பெரியவர்களின் ஈகோவால் திருமணம் நடக்கவில்லை. இருவரும் நன்றாகத்தான் வாழ்கிறார்கள்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீரே என்னவர் என வாழ்ந்தவர்கள்தாம் இவர்கள் எல்லாரும். இவ்வளவு ஏன் காதலித்துத் திருமணம் செய்து, நல்லபடி வாழ்ந்து மணமுறிவு ஏற்பட்டு வாழ்பவர்கள் இல்லையா? வேறு திருமணமும் அவர்கள் செய்துகொள்வது இல்லையா? வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இணையர் இறந்து வேறு திருமணம் செய்து நிறைவாக வாழ்பவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? இவர்களால் எல்லாம், கடந்த காலத்தை மறந்து வாழ முடியும்போது, உங்களால் ஏன் முடியாது?
‘காதல், காதல், காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்’
என்கிற பாரதிக்குக்கூட வேறு காதல் இருந்தது. ஈர்ப்புக்கும் காதலுக்கும் நூலிழைதான் வேறுபாடு. ஈர்ப்பு திருமணத்தில் முடிந்தால் அது காதல். காதல். திருமணத்தில் முடியவில்லை என்றால் அது ஈர்ப்பு எனச் சொல்லிக் கடந்தவர்கள் பலர் உண்டு.
எந்தப் பொருளும் கையில் இருக்கும் வரை பொருள். தொலைந்துவிட்டது என்றால் அது பொக்கிஷம்; திரவியம். அந்தப் பொருளே மீண்டும் கைக்கு வந்துவிட்டால் அது ஒரு பொருள் என மாறிவிடும்.அது எங்கே இருக்கிறது என்றே தெரியாது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும். சில நேரம் அது தொந்தரவாகக்கூடத் தெரியக்கூடும். காதலும் அது போலத்தான்.
திரைப்படத்தின் பெயர் நினைவில் இல்லை. ஒரு ஆண் தனது முறைப் பெண்ணை ஒருதலையாகக் காதலிப்பார். அப்பெண்ணோ வேறு ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வார். இவர் தண்ணியடிக்கத் தொடங்கிவிடுவார். சில நாட்கள் கழித்து, அந்தக் காதல் கணவனும் இவரும் சேர்ந்து தண்ணீர் அடிப்பார்கள். அவர் அப்பெண்ணைத் திருமணம் செய்ய முடியவில்லையே என அடிக்கிறார் என்றால், இவர், அவரைத் திருமணம் செய்து கொண்டதால், அடிப்பதாகச் சொல்லுவார். ஒருவர் வெற்றி என நினைப்பதை மற்றவர் தோல்வி என நினைக்கிறார். அவரது பொக்கிஷம் இவருக்கு அவஸ்தையாகத் தெரிகிறது.
நிராகரிப்பும் தன்முனைப்பும் (ஈகோ)
பிரிவு வலிதான். பிரிவு இயற்கையாக அமையும்போது வரும் வலியைவிட நிராகரிப்பினால் வரும் வலி கூடுதல்தான். ஏனென்றால் இது நமது தன்முனைப்பை (ஈகோ) உசுப்பிவிடுகிறது. நம்மை அவர் எப்படி நிராகரிக்கலாம் என்கிற எண்ணமே நம்மை வெறுப்படைய வைக்கிறது. அந்த வெறுப்பு அழுகையாக மாறுகிறது. பெண்கள் அழுவதற்குத் தடை இல்லை. ஆனால், ஆம்பிளைப் பிள்ளை அழக் கூடாது எனச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதால், அழ முடியாத ஆணின் வெறுப்பு ஆத்திரமாக மாறுகிறது. மகிழ்ச்சியைச் சிரித்து அனுபவிப்பது போல, கவலையை அழுது ஆற்றுவது ஒன்றும் தவறில்லை. கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும். ஆண்கள் அழக் கூடாது எனச் சொல்வதைவிட்டு மகனை அழவிடுங்கள்.
விரும்புவதற்கு நூறு காரணிகள் இருந்ததுபோல இப்போது பிரிவதற்கு ஆயிரம் காரணிகள் இருக்கலாம். எங்கிருந்தாலும் வாழ்க எனக் கடந்து போக வேண்டியதுதான் நேர்மையான அணுகுமுறை. அன்பு செலுத்தியவர் மீது எப்படி வன்முறையை ஏவ முடியும்? நமக்குக் கொஞ்சமாவது தன்மானம் இருந்தால், பின்னால் போய் கெஞ்ச மாட்டோம், வாயில் வந்த சொற்களைப் பேச மாட்டோம். நன்றாக இருக்கட்டும் என நினைத்துக் கடந்துவிடுவோம்.
சினிமாவும் காதலும்
எல்லாருக்குமே வாழ்வில் பல ஆசைகள், இருக்கும். ஆனால், அது நேர்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், இது நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
’குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ போல துரத்தி துரத்தி காதலிப்பதுதான் படம். பல திரைப்படங்களில் ஸ்டாக்கிங் எனப்படும் பின்தொடருதல்தான் நாயகனின் செயல். ஆனால், நாயகனை ஒரு தலையாகக் காதலித்த பெண் வில்லியாகத்தான் இருப்பார். அது படையப்பா நீலாம்பரி மாதிரி, எவ்வளவு அழுத்தமான பாத்திரமாக இருந்தாலும் சரி. ஆனால், இதை எல்லாம் செய்யும் ஆண், நாயகனாகவே இருப்பதுதான் வேதனை.
பல பழைய படங்களில் நாயகனைப் பலர் காதலிப்பார்கள். இறுதியில் நாயகன் யாரைக் காதலிக்கிறாரோ அவரைத் தவிர அனைவரும் தியாகியாக மாறுவர். அல்லது இறந்துவிடுவர். கணவனே தவறு செய்து இருந்தாலும், கணவனின் அடுத்த மனைவி அல்லது காதலி பெற்ற குழந்தைக்குத் தாயாகி அதை வளர்ப்பார். அதாவது பெண் ஒருதலையாகக் காதலித்தால், இறக்க வேண்டும். அல்லது தனது வாழ்வைத் தியாகம் செய்ய வேண்டும். அல்லது முறை தவறிய நாயகனின் (?) குழந்தையை வளர்க்க
வேண்டும். இதுதான் நியதி.
ஒழுக்கமான நாயகன் ஏதாவது ஒரு விதத்தில் இருவரைத் திருமணம் செய்துகொண்டு இருந்தால், ஏதோ ஒரு நேரத்தில் இரு மனைவிகளும் கணவனை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், பெண் என்றால் அப்படி இரு கணவன்கள் இருக்கிறார்களா? என்றால், அப்படித் திரைப்படம் வந்ததாகவே தெரியவில்லை. ஒருவர் உறவாகவும் இன்னொருவர் கள்ள உறவாகவுமே காட்டப்படுவார்.
இப்படித் திரைப்படங்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் ஆணுக்கு ஒருவிதமான
குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. அதற்காக சினிமாதான் பிள்ளைகளைக் கெடுக்கிறது என ஒரே வரியில் சொல்லிவிட்டுக் கடந்துவிட முடியுமா? பிள்ளைகள் படமே பார்க்கக் கூடாது எனச் சொல்லத்தான் முடியுமா? இருக்கும் படங்களில் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க நாம்தான் அவர்களைப்
பழக்க வேண்டும். படத்தில் இருக்கும் சரி தவறுகளைத் தாராளமாக விவாதிக்கலாம். அதுவும் திரைப்படத்தின் நாயகன் தவறு செய்பவராக இருக்கிறார் என்றால், அது தவறு என வீட்டில் உள்ள பிள்ளைகளிடம்
சொல்லுங்கள். தொடர்ச்சியாக நாம் விவாதம் செய்யும்போது இதை நாம் செய்யக்கூடாது எனப் பிள்ளைகள், குறிப்பாக மகன்கள் மனதில் கொஞ்சமாவது தோன்றும். நாம் செய்வது சரிதானா என எண்ணத் தோன்றும். தனது செயல்கள் குறித்துச் சிந்திப்பதே தவறுகளைக் குறைக்க உதவும். அவர்களே, நல்ல கதாபாத்திரங்களை வாழ்க்கையிலும் பின்பற்றுவதைப் பெருமையுடன் தொடரலாம்.
(தொடரும்)
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.