திகம்பர சாமியார் 1950ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். வடுவூர் துரைசாமி  எழுதிய புதினம்தான் ‘திகம்பர சாமியார்’.

திரைப்படமாக உருவெடுத்தது. இவரது மேனகா, மைனர் ராஜாமணி, பாலாமணி அல்லது பக்காத் திருடன், வித்யாபதி போன்ற பிற புதினங்களும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. 

சினாரியோ என கோ.த. சண்முக சுந்தரம் எனப் போடுகிறார்கள் .

பாடல்களை க. மு. ஷெரிப், ஏ. மருதகாசி,    கே. பி. காமாட்சிசுந்தரம், கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் இயற்றினர் எனப் போடுகிறார்கள். யார் யார் என்ன என்ன பாடலை எழுதினார்கள் எனத் தெரியவில்லை.

ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். 

பின்னணிப் பாடியோர்: கே. வி. ஜானகி,            யு. ஆர். சந்திரா, கே. பி. கோமளம்,  டி. ஆர். கஜலட்சுமி, பி. லீலா, மாஸ்டர் சுப்பையா  எனப் போடுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் பின்னணிக்கெனத் தனி பாடகர்கள் என்கிற நிலை இயல்பாகி விட்டது.  

நடனம் லலிதா, பத்மினி, குமாரி கமலா.  நடனப்பயிற்சி வழுவூர்  பி. இராமையா, மாதவன் மற்றும்    ஆர். டி. கிருஷ்ணமூர்த்தி. வழுவூர்                      பி. இராமையாவின் இளைய மகன்தான் சமீபத்தில் மறைந்த பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம்.

நடிகர்கள் 

எம். என். நம்பியார் 

பி. வி. நரசிம்ம பாரதி 

டி. பாலசுப்பிரமணியம் 

எம். ஜி. சக்ரபாணி 

ஆள்வார் குப்புசாமி 

வி. எம். ஏழுமலை

ஏ. கருணாநிதி 

டி. கே. ராமச்சந்திரன்

வி. கே. ராமசாமி 

எஸ். எஸ். சிவசூரியன் 

எம். ஏ. கணபதி 

ஸ்ரீநிவாஸ் கோபாலன்

திருப்பதி 

மணி 

(மாஸ்டர்) சுப்பையா 

நடிகைகள் 

எம். எஸ். திரௌபதி 

லட்சுமிபிரபா

சி. கே. சரஸ்வதி.

கே. டி. தனலட்சுமி

கே. ஜெயலட்சுமி 

பேபி லலிதா 

கமலம்

கண்ணம்மா

சரஸ்வதி

கதை 

கும்பகோணத்தில் வாழும் நேர்மையற்ற வழக்கறிஞர் சட்டநாதன். தவறு செய்பவர்களுக்கே எப்போதும் துணை போகிறவர். நீதி கேட்டு வருபவர்களை அடித்துவிரட்டுவது, கொலைகூடச் செய்வது என வாழ்பவர். வடிவாம்பாள் என்கிற பெண்ணை, சட்டநாதனின் தம்பிக்கு இருவீட்டாரும் இணைந்து திருமணத்திற்குப் பேசி வைத்துள்ளார்கள். வடிவாம்பாளுக்கு அந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. வடிவாம்பாளின் பெற்றோர், அவரை வீட்டினுள் பூட்டி வைக்கிறார்கள். 

இந்த நேரத்தில் வடிவாம்பாளின் வீட்டிற்கு அவரது தாத்தா வருகிறார். அவருக்கு மகளின் போக்கு பிடிக்காததால் இதுவரை, இங்கு வந்ததே இல்லை. இப்போதுதான் பேத்திக்கு தாத்தாவைத் தெரிகிறது. வடிவாம்பாளின் அம்மா திருமணம் ஆனவர் இல்லை. அந்தக் கால லிவிங் டுகெதர். அதனால்தான் அப்பாவிற்கு மகள் மீது கோபம் எனச் சொல்கிறார். வடிவாம்பாள், தனது சிக்கலைச் சொல்கிறார். தாத்தா, பேத்திக்காகப் பரிந்து பேச, அவரை எடுத்தெறிந்து பேசி விரட்டி விடுகிறார் வடிவாம்பாளின் அம்மா. 

இன்னொரு பக்கம், ஒரு கோயில் வாசலில் ஒரு துறவி இருக்கிறார். அவரிடம் ஓர் அம்மா வந்து, அனைத்து தவறுகளையும் செய்யும் ஒருவனை நீர் ஏன் அழிக்க முயற்சி செய்யக் கூடாது எனக் கேட்க, அவரும் அவ்வாறே புறப்படுகிறார்.

துறவி, சட்டநாதன் குறித்து விவரங்கள் சேகரிக்கத் தொடங்குகிறார். வடிவாம்பாள், வீட்டிலிருந்து தப்பி, தாத்தாவிடம் போய்க் கொண்டிருக்கும் போது, திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்கிறார். அவரை, துறவி சாமர்த்தியமாகக் காப்பாற்ற, இருவரும் தாத்தாவைத் தேடி மன்னார்குடி செல்கிறார்கள். 

தாத்தா, கண்ணப்பன் என்பவர் குடும்பத்துடன்தான் தங்கி இருக்கிறார். வடிவாம்பாள், கண்ணப்பன் இருவரும் காதலிக்கிறார்கள். கண்ணப்பன் குடும்பமும் சட்டநாதனால் பாதிக்கப்பட்ட குடும்பம்தான். அப்போது கண்ணப்பன் குழந்தை. குடும்பம், சட்டநாதனின் குதிரை லாயத்தில் குடியிருந்து இருக்கிறது. திடீரென ஒரு மழை நாளில் வந்து சட்டநாதன், குழந்தை கண்ணப்பன், அவனின் அப்பா, கர்ப்பிணியான மனைவி எனக் குடும்பம் முழுவதையும் வீட்டைவிட்டுத் துரத்தி விடுகிறான். சொக்கநாதர் என்பவர் உதவி செய்துதான் கண்ணப்பன் குடும்பம் நல்ல நிலைக்கு வந்து இருக்கிறது.

சட்டநாதன், அந்தச் சொக்கநாதர் மேலும் பொய் வழக்கு போட்டு, இருக்கிறான். வழியில்லாமல், அந்த மனிதர், சொத்தை விற்றுக்  கடனை அடைத்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி இப்போது, கண்ணப்பனின் குடும்பத்தினருடன்தான் இருக்கிறார். 

துறவி (திகம்பர சாமியார்), சட்டநாதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரைப் போய்ப் பார்க்கிறார். 

இந்தக் காலகட்டத்தில் வடிவாம்பாளின் அம்மா மற்றும் சட்டநாதனின் குழு வந்து வடிவாம்பாளைத் தூக்கிச் செல்கிறது. திருமண ஏற்பாடும் நடக்கிறது. 

வடிவாம்பாளைக் காப்பாற்ற திகம்பரம் சாமியார், இஸ்லாமியர் (குலாம் உசான்) வேடத்தில் போகிறார். சட்டநாதனின் நண்பர் எனச் சொல்லி, அவரது நண்பரிடம் வந்து கடிதம் வாங்கிச் செல்கிறார். இரண்டாவது, இன்னோர் இஸ்லாமியர் (ஷேக் ராவுத்தர்) மாதிரி சட்டநாதனின் தம்பியாகிய மாப்பிள்ளையிடம் செல்கிறார். மூன்றாவது, கால் நடக்க முடியாத மலையாள சைவ சாமியார் போல வருகிறார். இப்போது, வடிவாம்பாள் எங்கே மறைத்து வைக்கப் பட்டிருக்கிறார் எனத் தெரிந்துகொள்கிறார். 

அடுத்து கன்னடக்காரராக வடிவாம்பாள் தங்க வைக்கப்பட்டிருக்கும் தெருவிற்கு வருகிறார். இப்போது கண்ணப்பன் குழுவும் இவருடன் இணைந்துகொள்கிறது. ஐந்தாவது நாதஸ்வர கலைஞராக பெண்ணழைப்பிற்கு வருகிறார். ஆனால் வடிவாம்பாள், தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அது தடைபடுகிறது. ஆறாவதாக தெலுங்கு பேசும் தபால்காரர் வேடத்தில் வருகிறார். ஒருவாறு வடிவாம்பாளைச் சந்தித்து, விவரங்கள் தெரிவிக்க, வடிவாம்பாள் தப்பி, மன்னார்குடி வந்துவிடுகிறார். 

சட்டநாதனை அம்பலப்படுத்த திகம்பர் சாமிக்கு, ஆளுநரே உதவுகிறார். அதனால், மன்னார்குடி நீதிமன்றத்திற்கான அரசு வழக்குரைஞராக நியமிக்கிறார். சட்டநாதனை மூன்று நாட்கள் தூங்காமல், வேலை வாங்கினால், மனநிலை தடுமாறி உண்மையை உளறிவிடுவான் என்பதுதான் திட்டம். 

அண்ணன் சுந்தரத்தின்  சொத்தை அடைய தங்கைக்கு ஆசை. முழு சொத்தையும் அடைய சட்டநாதனுக்கு ஆசை. அவரது குழந்தையைக் கடத்திக் கொண்டுபோய் வேறு நபர்களிடம் கொடுத்து வளர்க்கிறார். அந்தப் பெண்தான் வடிவாம்பாள். இப்போது தனது தம்பிக்கு வடிவாம்பாளை மணமுடித்து வைத்தால், மகள் கிடைத்து விட்டதாகச் சொல்லி, மொத்த சொத்தையும் சுருட்டி விடலாம் என நண்பரிடம் சொல்கிறார். சுந்தரத்தின் மனைவியின் நடத்தைக்கும் களங்கம் விளைவித்து அவரையும் துரத்தியது சட்டநாதனின் திட்டம்தான். 

இவை எல்லாம் பதிவு செய்யப்படுகின்றன. சட்டநாதனுக்குத் தண்டனை கிடைக்கிறது. சுந்தரத்தின் மனைவி வேறு யாருமல்ல. முதலில் திகம்பரம் சாமி பார்த்த அம்மையார்தான்.

கண்ணப்பன் திருமணத்திற்குச் சொக்கலிங்கம் வந்துவிடுவார் என்கிறார் திகம்பரம் சாமியார். வருபவர் இவரேதான். இவர்தான் சொக்கலிங்கம். 

நம்பியார்தான் திகம்பர சாமியார். கடைசிக் காட்சி தவிர அனைத்துக் காட்சிகளிலும் தாடி வைத்தே வருகிறார்.

இஸ்லாமியராக வரும்போது நம்மிள்க்கு நிம்பிள்க்கு எனத் தமிழ் பேசுகிறார். எனக்குத் தெரிந்து இஸ்லாமியர்கள் உருது பேசும் தமிழர்களாக இருந்தாலும், வெளியில் எப்போதுமே அந்தந்த ஊரின் வட்டார வழக்கில் தமிழ் பேசுகிறார்கள். இந்தச் சிந்தனை எப்படி அப்போதிருந்தே இருக்கிறது எனப் புரியவில்லை. சமீபத்தில் உவரி கடற்கரையில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தான். நான்கு வயது இருக்கும். அவன் அப்பா அவனிடம், உருதுவில் பேசினார். அது ஹிந்தி மாதிரிதான் இருந்தது. நான் எனக்குத் தெரிந்த ஹிந்தியில், இங்கே வா எனக் கூப்பிட்டேன். 

அதற்கு அவனது அப்பா, ‘அவனுக்கு நன்றாகத் தமிழ் தெரியும். வெளியில் எல்லாரிடமும் தமிழ்தான் பேசுவான். உருது தெரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் வீட்டில் மட்டுமே பேசுவோம். ஆத்தங்கரைப் பள்ளிவாசலுக்கு வந்தோம். அருகில் இருப்பதால் உவரி வந்தோம்’ என்றார்.

இப்படித்தான் எனக்குத் தெரிந்த இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். உருது தெரியாத இஸ்லாமியர்களைக்கூட நான் பார்த்திருக்கிறேன். தமிழ் தெரியாத இஸ்லாமியர் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. நான் பார்த்தது இல்லை.

அனைத்து வேடத்திலும் தாடி, தலைப்பாகைதான். பேசும் மொழிதான் வேறுபடுகிறது. குரல் எதிலும் எந்த மாற்றமும் இல்லை. மச்சம் வைத்துவிட்டு, மாறுவேடம் எனச் சொன்ன கதைதான். 

‘திருடறவனும் சாமியாரா ஆகிடுறான். கொலை செஞ்சவனும் சாமியாரா ஆயிடுறான். நீங்க சின்ன வயசில தப்பு செய்ஞ்சுட்டு சாமியாரா ஆனீங்களா? காலம் கெட்டுக் கிடக்குது பாருங்க’ எனச் சாமியாரைக் கேலி செய்வது போன்ற காட்சிகள் சில உள்ளன.

‘மைசூர்ல மழை வருது, காவேரியில் தண்ணி வருது. அதுக்கு வரி. வித்தா வரி; வாங்கினா வரி; காபி குடிச்சா வரி; வெத்தலையைப் போட்டா போயிலைக்கு வரி; சுருட்ட குடிச்சா நெருப்பெட்டிக்கு வரி;. கொஞ்ச நேரம் தமாஷா பொழுதைப் போக்கிட்டு வரலாமுன்னா அதுக்கும் தமாஷா வரி’ என வரி குறித்து விமரிசனம் வருகிறது.  

திருக்குறள் குறித்து அடிக்கடி உரையாடல்களில் குறிப்பிடுகிறார்கள். 

திரைப்படத்தில் வரும் ‘ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்’ எனக் கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது. Tiger எனப் பெயர் போட்டு பட்டாசு வைத்து சிறுமி ஆடுவதும் நன்றாக இருக்கிறது. அப்போது அது பிரபலமான பட்டாசு நிறுவனமாக இருக்கலாம். சிறுமியின் துடிப்பான நடிப்பும் நன்றாக இருக்கிறது. 

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.