என் உயிருள்ளவரை வாசிக்கின்ற, எழுதுகின்ற ஆர்வத்தைக் கடவுள் எனக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லும் எழுத்தாளர்    ஆர். பொன்னம்மாளின் வயது எண்பத்தைந்திற்கும் மேல். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப்பணியில் தன்னைத் தீவிரமாக அர்ப்பணித்துக்கொண்டவர். குழந்தைகளுக்கான நூல்கள் எழுதுபவர்களே இங்கு அரிது என்கிற நிலையில் இவர் குழந்தைகளுக்கான ஆன்மிக, நகைச்சுவை நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கான சிறுகதைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் எனப் பல பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான நூல்களைப்  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வந்த  எழுத்தாளர் ஆர். பொன்னம்மாளை நேரில் சந்தித்தபோது, உடல்நிலை சற்றுத் தளர்வடைந்த நிலையிலும் தனது எழுத்துலகப் பயணத்தை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை திருவல்லிக்கேணியில்தான். 1937ஆம் ஆண்டு பிறந்தேன். அப்பா ராமசுப்ரமணியம், அம்மா  லஷ்மி அம்மாள். எனக்கு ஒரு இளைய சகோதரி சிவகாம சுந்தரி. என் இளம்பருவம் இனிதாக இயல்பாக போய்க்கொண்டிருந்த ஒரு நாளில், என் ஏழாவது வயதில் நிகழ்ந்த தந்தையின் திடீர் மரணம் எங்கள் வாழ்வைப் புரட்டிப்போட்டது. பிறகு அம்மாதான் வேலைக்குப் போய் எங்களைக் காப்பாற்றினார். 14 வயது வரை சென்னையில் குடியிருந்த நாங்கள், சென்னையில் இருந்து மதுரைக்கு மாற வேண்டி இருந்தது. நான்கு மாதம் அங்கு தங்கியிருந்த பிறகு, அங்கிருந்து மறுபடியும் நெல்லையில் உள்ள  கல்லிடைக்குறிச்சிக்குச் சென்றோம். இப்படி வாழ்வில் அடுத்தடுத்த திருப்பங்கள் இருந்தாலும் எனக்குள்ளே ஒரு சிறந்த பழக்கம் இருந்தது. அதுதான் இன்றளவும் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அது வாசிப்புதான்.

சிறு வயதில் இருந்தே நான் நிறைய வாசிப்பேன். வேர்க்கடலைச் சுற்றி வரும் காகிதத்தைக்கூட விடமாட்டேன். அந்த அளவுக்கு வாசிப்பு ஆர்வம் எப்படி வந்தது என்றே தெரியவில்லை.  படிப்பு நேரம் போக, என் தோழிகளிடமிருந்து அம்புலிமாமா, டமாரம், ஜில்ஜில் போன்ற சிறுவர் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன்.

வாசிக்கும் பழக்கம் இருந்த காரணத்தினாலோ என்னவோ, நான் நன்கு கதைகளும் சொல்வேன். என் தங்கை உள்பட நிறைய குழந்தைகள் என்னைச் சுற்றி அமர்ந்து என்னிடம் கதை கேட்பார்கள். இப்படி வாசிப்பும் கதையும் என்னுள் இரண்டற கலந்திருந்தது.

எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது நான் பெரியவளானதும் அக்கால வழக்கப்படி எனது படிப்பு நிறுத்தப்பட்டது. எனக்குப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறைய இருந்த காரணத்தால் என் படிப்புக்கு ஏற்பட்ட தடை எனக்குப் பெரும் துயரைக் கொடுத்தது. அப்போது என் மாடியில் என் பெயர் கொண்ட பெண்மணி ஒருவர் குடியிருந்தார். அவர் என்மீது கொண்ட பிரியத்தால் பொழுதை வீணே கழிக்காதே நிறைய படி. அது வாழ்க்கைக்கு உதவும் எனச் சொல்லி பாடப் புத்தகங்களைத் தாண்டி எனக்கு வேறு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்தினார். கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களையும், நிறைய கதைப் புத்தகங்களையும் எனக்குப் படிக்கத் தருவார். லஷ்மி, தேவன் கதைகளை விரும்பிப் படிப்பேன்.

லஷ்மியின் கதை புத்தகங்கள் வாழ்க்கைக்கான தன்னம்பிக்கையினை  வழங்கின எனச் சொன்னால் மிகையாகாது.

எனக்குப் பதினாறு வயது இருக்கும்போது, வேலை எல்லாம் முடிந்த பின் இரவு நேரத்தில் பெண்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நான் அழகாக கதைகள் சொல்வேன். அங்கே ருக்மணி எனும் தோழி ஒருவர் கதைகள் எழுதுவார். அவர் இவ்வளவு நன்றாகக் கதை சொல்கிறாயே நீயும் ஏன் கதை எழுதக் கூடாது எனக் கேட்டார். அதன்பின் நானும் கதைகள் எழுதி பிரசுரத்திற்கு அனுப்பிப் பார்த்தேன். எதுவுமே பிரசுரமாகவில்லை. கதைகள் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி வந்தாலும் எனது கதை எழுதும் ஆர்வம் மட்டும் வற்றவில்லை.

18 வயதில் நத்தம் என்கிற ஊருக்கு என் தாய்மாமா வீட்டுக்குச் சென்றோம். அங்கே மாமா தந்த பதினெண் கீழ்க்கணக்கு, விக்ரமாதித்தன் போன்ற நூல்களை வாசித்தேன்.

எனக்கு 19 வயது இருக்கும் போது தமிழ்நாடு என்கிற பத்திரிகை நடத்திய ஒரு கதைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தேன். ஒரு கதை எழுதி போட்டிக்கு அனுப்பினேன். இரட்டைப்பரிசு எனும் அந்தக் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அதைப் பார்த்ததும் வானில் இறக்கைக் கட்டிப் பறப்பது போல் இருந்தது. அந்தக் கதைக்குப் பத்து ரூபாய் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் அது பெரிய பணம். அதுவும் எம்.எஸ். சுப்புலட்சுமி கையால் எனக்கு அந்தப் பரிசு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆக எனக்குமே இரட்டைப்பரிசுதான். (சிரிக்கிறார்)

அதன் பிறகு அந்த மகிழ்ச்சி தந்த ஊக்கத்தால் நிறைய கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். தமிழ்நாடு பத்திரிகையின் ஆசிரியர் எம். எஸ்.பி. சண்முகம் என்னை ஊக்கப்படுத்தி தொடர்ந்து கதைகள்  எழுத வைத்தார். அந்தப் பத்திரிகையில் பல கதைகள் வெளிவந்தன.

1958இல் எனக்குத் திருமணம் நடைபெற்றது. எஸ்.எம். சுப்ரமணியம் என்பவரை மணந்தேன். மறுபடி சென்னை வாழ்க்கை. திருமணத்திற்குப் பிறகு குடும்பச்சூழல் காரணமாக எழுதுவதைச் சற்று ஒத்திப்போட்டேன்.  குழந்தைகள் பிறந்த பிறகு சிறு தேக்கம். இது போல் அவ்வவ்போது வாழ்வியல் சூழல் காரணமாகத் தேக்கங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன்.

பின்னர் குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு,  எழுத வீட்டில் அனுமதி கேட்டேன். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு நான் கதைகள் எழுதுவதில் அவருக்கு எதுவும் பிரச்னை இல்லாததால் மறுபடி கதைகள் எழுத ஆரம்பித்தேன்.

1976ஆம் ஆண்டு தினமணி நாளிதழோடு இணைந்து குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கதைப்போட்டி ஒன்றின் அறிவிப்பைப் பார்த்தேன். அதில் கலந்துகொள்ளச் சொல்லி என் குழந்தைகள் வற்புறுத்தியதால் எழுதி அனுப்பினேன். ‘கடவுளின் கருணை’ என்கிற என் சிறுகதைத் தொகுப்பிற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அப்போதுதான் அழ. வள்ளியப்பாவைச் சந்தித்தேன். அதன்பின்னர் அவரும் தொடர்ந்து குழந்தைளுக்குக் கதைகள் எழுதச் சொன்னார். அதனால் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

நான் முதலில் ஜனரஞ்சகமான சிறுகதைகள் எழுதினேன். பிறகு குழந்தைகளுக்கான சிறுகதைகள், புராணக்கதைகள் நிறைய எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகின. நிறைய பரிசுகளும் கிடைத்தன.  எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். என் பிள்ளைகள் அனைவருமே எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார்கள். என்னைக் கதை எழுதச் சொல்லி மிகவும் ஊக்கம் கொடுப்பார்கள். கணவரும் எந்தத் தொந்தரவும் செய்ததில்லை. அதனால்தான் என்னால் இவ்வளவு வருடங்கள் தொடர்ந்து எழுத முடிந்தது. பகலில் வேலையெல்லாம் முடித்துவிட்டு இரவில் அமர்ந்து எழுதுவேன். எழுதிக்கொண்டிருந்ததுதான் என் மகிழ்ச்சியின் ரகசியம்.

எழுத்தாளர்களையும் சந்தித்திருக்கிறேன். வை. மு. கோதைநாயகி அம்மாள் எனக்கு எழுதச் சொல்லி நல்ல ஊக்கம் கொடுத்தார். தடைகளைப் பற்றி எல்லாம் யோசிக்காதே. தடைகள் இருக்கத்தான் செய்யும். எழுதினால்தான் நீ வளர முடியும் என்று உத்வேகமாகப் பேசுவார்.

எழுத்தாளர் லஷ்மியை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராக இருந்த எஸ். சுஜாதா எனக்கு நல்ல தோழி.

பதிப்பகங்களைச் சேர்ந்தவர்களும் என் புத்தகங்கள் வெளிவர நல்ல உறுதுணையாக இருந்தார்கள். எனக்குச் சேர வேண்டிய தொகையையும் சரியாகக் கொடுத்துவிடுவார்கள்.   வானதி பதிப்பகம் என்னுடைய பல நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டார்கள்.

என் கணவருக்கு ஜோதிடம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர் நிறைய ஜோதிடம் சார்ந்த புத்தகங்களை வாங்கி வருவார். அவற்றைப் படிப்பேன். ஜோதிடம் மற்றும் சமஸ்கிருதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்த பின், இதழ்களுக்கு ஜோதிடக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். ஜோதிட நூல்கள் எழுதினேன்.

வானொலி நாடகங்களும் நிறைய எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. மறுபடியும் மகள் திருமணம், மகளின் பிள்ளைப்பேறு எனக் குடும்பச்சூழலில் பரபரப்பாக இருந்ததால் எழுத்தைச் சற்றுத் தள்ளிப்போட்டேன். எழுத்து வேலைகளுக்கு கமா வைத்தேன். 

1994இல் என் மகள் தன் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு மறைந்துபோனார். 1996ஆம் ஆண்டு பணி நிமித்தமாக எனது இளைய மகன் வெளிநாடு சென்றார். அச்சமயம் தான் மயிலாப்பூரில் காமகோடி பத்திரிகை நடத்தி வந்த கிரி என்பவரைச் சந்தித்தேன். தீராத்துயரில் நான் இருந்ததைக் கண்ட அவர், ’துக்கத்தைத் தூக்கிப்போடு. காமக்கோடிக்கு எழுது’ என என்னை உற்சாகப்படுத்தி எழுத வைத்து,  துக்கத்தில் இருந்து என்னை மீள வைத்தார். அவர் நடத்திவந்த காமகோடி என்னும் ஆன்மிகப் புத்தகத்தில் நிறைய கதைகளை எழுதினேன். 2020, 21 வரையிலும்கூட காமகோடியில் எழுதி வந்தேன். தோழி இதழில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதினேன். கோகுலம் பத்திரிகையிலும் நிறைய எழுதினேன். நிறைய  பத்திரிகை ஆசிரியர்களும், பதிப்பகத்தாரும் நான் எழுதுவதற்கு உத்வேகம் கொடுத்தார்கள். உறுதுணையாக நின்றார்கள். அவர்களால்தாம் என்னால் இவ்வளவு எழுத முடிந்தது. அவர்களை என்றென்றும் மறக்கமாட்டேன்.

ஆன்மிக நூல்கள் எனக்குச் சிறந்த பெயரை வாங்கித் தந்தன. ராமாயணம், பாண்டுரங்கன் மகிமை, திருவிளையாடற் புராணம் போன்ற பல நூல்களை எழுதி இருக்கிறேன். குழந்தைகளுக்கான ஆன்மிக நூல்களும் எழுதி இருக்கிறேன்.

நீதி நூல்கள் எழுதி இருக்கிறேன். வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதி இருக்கிறேன். ஆரம்ப காலத்தில் ஆர். மாலதி என்கிற பெயரில் சில கதைகள் எழுதினேன். என் தாயார் லஷ்மி அம்மாள் பெயரிலும் எழுதி இருக்கிறேன். சமீப இரண்டு வருடங்களாக உடல்நிலை காரணமாக எதுவும் எழுதுவதில்லை. எனது மூத்த மகனுடன் வசித்து வருகிறேன். மகனும் மருமகளும் என்னை நன்கு கவனித்துக்கொள்கிறார்கள். இந்நிலையிலும் என் எழுத்திற்காக என்னைத் தேடி வந்தது மகிழ்ச்சி” எனப் புன்னகைத்து விடைகொடுத்தார் ஆர். பொன்னம்மாள்.

 ஆர். பொன்னம்மாள் நூல்கள்

குழந்தைகளுக்கான நூல்கள் சில.

பேசும் குதிரை

வெற்றிப்பதக்கம்

நட்பின் பெருமை

அன்பு உள்ளம்

திருக்குறள் கதைகள் (ஸ்டேட் பாங்க் பரிசு பெற்ற நூல்)

மூதுரை கதைகள்

குழந்தைகளுக்கான ஆன்மிகக் கதைகள் சில:

நாரதர்

பரமசிவன்

ஆர். பொன்னம்மாள் பெற்ற விருதுகள் சில:

தமிழக அரசு குழந்தை எழுத்தாளர் விருது

அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது.

தங்கப்பதக்கம் (கருணை வள்ளல் நாவலுக்காக)

படைப்பாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

பெண் படைப்பாளிகளைச் சந்தித்து இவர் எடுத்த நேர்காணல்கள், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.