என்னுடைய தலைமுடி ஒன்பதாவது வயதில் இருந்தே மிகவும் நீளமாக இருக்கும். தலை வாருவது என்று நினைத்தாலே மிகவும் கோபம் வரும். குறிப்பாக என்னுடைய முடி மிகுந்த அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கும்.

‘தலைக்கு குளிக்கணும்’என்று நினைத்தாலே பிடிக்காது. அதனுடைய பின்விளைவு சாதாரண நாட்களில் தலையை வாருவது கடினமாக இருக்கும்.

சிறிய வயதில் பிருந்தாவிடம் (அம்மா) தலை வாரும்பொழுது பெரும்பாலான நாட்கள் கண்ணீருடன்தான் முடியும். ஏனென்றால் என் முடி அப்படி. யாராவது தலையில் கையை வைத்தால் கூடவே ஒரு யோசனை தோன்றும், இன்றைக்குச் சிக்கு இன்னும் கூடுதலாக இருக்கப் போகிறது என்று. சாதாரண பின்னல் போடுவதைத் தவிர்த்து என் முடியில் வேறு எதுவும் செய்ய இயலாது.

பிரெஞ்சு பிளாட் போட நினைத்தாலோ சாதாரண போனிடைல் போட நினைத்தாலோ அது நடக்காத காரியம்.

பின்னலைப் போட எவ்வளவு கடினமோ அதே அளவில் இருக்கும், அதைப் பிரிக்கும் போதும்.

பிருந்தா, தலையில் சிக்கு எடுக்கும்போது ஒவ்வொரு முறையும் தோன்றும் ‘என் முடி சிறிது கோரை முடியாக (ஸ்ட்ரெயிட் ஹேர்) இருந்தாலாவது இந்த அளவுக்குச் சிக்கு இருக்காது; முடியைக் குட்டையாக வெட்டினாலும் அது நிற்கும்; இப்படிப் பஞ்சுமிட்டாய்போல பறக்காது’ என்று.

நான் நிறைய பேரைப் பார்த்ததுண்டு. ‘உனக்கு அடர்த்தியான கூந்தல்’என்று சொல்லி முடியைப் போட்டு இழுப்பார்கள்; அது மற்றவர்களுக்கு எந்த அளவு வலிக்கும் என்று யோசிக்க மாட்டார்கள்.

இன்னும் நிறைய பேர் என்னுடைய கூந்தல் நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். நான் நினைப்பேன் முடிக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று.

முடியை வெட்டிவிட வேண்டும் என்று நினைத்தேன்.

ஒற்றைப் பின்னல் போடும்போது என்னுடைய கைகளும் கழுத்தும் ஒருவழி ஆகிவிடும்; பின்னலைப் போட்டு முடித்த பிறகும் வலித்துக் கொண்டே இருக்கும்.

முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், தலைவாரிய பிறகு, கொட்டும் முடியை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்ட பிறகும்கூட, வீடு முழுவதும் இங்கும் அங்கும் முடிகளால் சூழப்பட்டு இருக்கும்.

இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் டிசம்பர் 28, 2023 அன்று முடியை வெட்டினேன்.

ஜனவரி முதல் வாரத்தில் கல்லூரிக்குச் செல்லும் போது நிறைய தோழிகளும் என்னுடைய பேராசிரியர்களும் நன்றாக இருக்கிறது என்றார்கள். சில பேர் ‘முடியை வெட்டிட்டியா’ என்று சற்று வருத்தத்தோடு கேட்டார்கள்.

என்னுடைய யோகா வகுப்பிற்கு வரும் தோழி என்னைப் பார்த்துவிட்டு, ‘நீதானா என்னால கண்டுபிடிக்க முடியல; ரொம்ப கண்றாவியா இருக்கு’என்றாள். சரி, அது அவளுடைய கருத்து என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த உலகம் நீங்கள் எதைச் செய்தாலும் குறை கூறிக்கொண்டுதான் இருக்கும், அதற்குப் புரியும் வரை, ஒருவேளை புரியாமலும் போகலாம்.

என் வகுப்பில் இருக்கும் ஒரு மாணவி, ‘ஏன் முடியை வெட்டினாய்? ஏதாவது ஹெல்த் இஸ்யூஸா’என்று கேட்டாள். ‘முடியை ஏன் நான் வெட்டினேன் என்பதற்கு காரணமே கிடையாது’என்றேன். இந்தப் பதிலை அவளால் நம்பவே முடியவில்லை!

என்னுடைய சொந்தக்காரர்கள், ‘எத்தனை காலமாக உனக்கு நீண்ட முடி நல்லா இருக்கு. பெண்கள் என்றால் முடியை வெட்டக் கூடாது. நல்லா இருந்த முடியை ஏன் வெட்டிட்ட?’என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

என்னுடைய முடியை இழந்தது எனக்கு நன்றாக இருக்கிறது. தலையை வாருவது சுலபமாயிற்று. எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது என்பது உங்களுடைய விருப்பம். ஆனால், சில நேரம் மாறுவதற்குத் தயக்கம் கொள்ளத் தேவையில்லை.

12 வயது வரை விரும்பிதான் முடியை வளர்த்தேன். அதற்கு அப்புறம் அதை விருப்பம் இல்லாமல்தான் வைத்துக்கொண்டேன். பஞ்சுமிட்டாய் முடியை வெட்டவும் முடியாது; வளர்க்கவும் முடியாது.

இப்பொழுது நான் முடியை எனக்காகத்தான் வெட்டினேன்.

முடி வெட்டிய பிறகு நான் ஒருநாள் விடிகாலையில் சாலையில் நடந்து செல்லும் பொழுது ஒரு பெண்மணி இதுவரைக்கும் இப்படி யாரையும் பார்த்ததில்லை என்பதுபோல் என்னைப் பார்த்துச் சென்றார்.

ஒரு முறை பிருந்தாவுடன் வெளியே சென்றிருந்தபோது அங்கே இருந்த ஒருவர், ‘தம்பி முதல்ல இறங்கிக்கட்டும்; நீங்க காரை அங்க போய்ப் பார்க் பண்ணுங்க மேடம்’என்று பிருந்தாவிடம் கூறினார். சில இடங்களில் என்னை ‘சாரா’கவே ஆக்கிவிட்டார்கள்.

ஆண்கள் நீளமாக முடி வைத்திருந்தால் மேம் என்றா கூப்பிடுகிறார்கள்?  கூப்பிடுவதுகூட பரவாயில்லை. கிராப் கட் செய்து இருந்தால் அது ஆண்தான் என்று எப்படி முத்திரை குத்த முடியும்?

முடியை வெட்டிய பிறகு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; எப்பொழுதும் செய்யாத ஒரு செயலை எடுத்துச் செய்தபோது, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம்கூட வரவில்லை. நான் வெட்ட நினைத்தேன் வெட்டினேன் அவ்வளவுதான். மகிழ்ச்சி.

படைப்பாளர்:

 ரித்திகா

ரித்திகா (18.06.2005) வயது 18, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினரான இவர் இதுவரை ட்ரெக்கிங், ட்ராவல் சென்ற இடங்கள் : பல்லாவரம் இரண்டு முறை, வொய்ஹெச்ஏஐ வழியாக – இராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடர் (2015), கோவா (2016), இராஜஸ்தான் பாலைவன ட்ரெக்கிங்(2017); சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ வழியாக – ஜவ்வாது மலை ட்ரெக்கிங் (2017), பரம்பிக்குளம் பயணம்(2016), பாண்டிச்சேரி (2017), கோதாவரி பயணம் (2018) ஆகியவை.

ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். கல்லூரியில் படித்து வருகிறார்..