சாகித்ய அகாதெமி வழங்கும் ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ பெற்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர். தமிழக அரசின் விருதுகள் பெற்றவர் என்கிற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர், குழந்தை எழுத்தாளர் தேவி நாச்சியப்பன். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகள் இவர் என்பது கூடுதல் சிறப்பு. தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளையாகக் குழந்தை இலக்கியச் செயல்பாட்டினை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுபவர் தேவி நாச்சியப்பன். 40 ஆண்டு காலமாகக் குழந்தை இலக்கியக் களத்தில் இயங்கி வருபவர். தன் விரிவான இலக்கிய வாழ்வினைப் பற்றி அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டவை…

நான் பிறந்தது ஜூலை, 8, 1961. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். ஆனால், பெற்றோரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இராயவரம். என் தந்தையார் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா. தாயார் வள்ளியம்மை ஆச்சி. பெற்றோர் எனக்கு வைத்த பெயர் தெய்வானை. அனைவரும் அழைக்கும் பெயர் தேவி. சென்னை மயிலாப்பூரில் உள்ள சில்ட்ரன் கார்டன் , லேடி எம்.சிடி.எம். பள்ளிகளில் எனது பள்ளிப் படிப்பை முடித்தேன்.

நான் பிறந்து வளர்ந்ததே குழந்தை இலக்கியச் சூழலில்தான். படிக்கத் தெரியாத காலத்திலே அப்பாவிடம் பாட்டு, கதைகள் கேட்டு வளர்ந்தேன். படிக்கத் தெரிந்த பிறகு அப்பாவுடைய படைப்புகள் மட்டுமல்லாமல் மற்றவர்கள் எழுதிய குழந்தை இலக்கியங்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். அதனால் இளம் வயதிலேயே எனக்குக் குழந்தை இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது.

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தோம். அங்கு தந்தையார், அவர்களுடைய மானசீகக் குருவின் நினைவாக ‘கவிமணி குழந்தைகள் சங்கம்’ (1974 ) என்கிற அமைப்பை நிறுவினார். என்னை அதன் அமைப்பாளராக இருந்து நடத்தச் சொன்னார். தந்தையாரின் ஆலோசனைப்படி நடத்தினேன். மாதம் ஒரு முறை எங்கள் வீட்டில் அந்தப் பகுதி குழந்தைகளை எல்லாம் ஒருங்கிணைத்துக் கூட்டம் நடைபெறும். குழந்தை எழுத்தாளர்கள் வந்து கதை சொல்வார்கள். குழந்தைகளும் ஆடல், பாடல், கதை சொல்வது எனத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் உரிய களமாக அமைந்தது சங்கம். அந்தச் சங்கத்தினுடைய ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றைத் தயாரித்து வழங்குவோம். நான் சிறுமியாக இருந்தபோது நடத்திய, ‘பலகாரத்தில் சிறந்தது இட்லியா? தோசையா?’ பட்டிமன்றம் பெரும் புகழ் பெற்றது. கவிமணி குழந்தைகள் சங்கத்தின் மூலம் பெற்ற பயிற்சியே பின்னாளில் நான் குழந்தை இலக்கியத்தில் ஈடுபட வழிவகுத்தது.

ஆரம்ப காலத்தில் அப்பா நான் எழுதும் கதை, கவிதைகளைத் திருத்தம் செய்வார். அப்போது, ”குழந்தைகளுக்கான எழுத்து நடை கைவர வேண்டுமெனில் பிறமொழிக் குழந்தை இலக்கியங்களை முதலில் மொழி பெயர்த்துப் பழகு” எனச் சொன்னார். அதனால் குழந்தைகளுக்கான ஆங்கில நூல்களைப் படித்து, மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.

1983இல் ‘கோகுலம்’ சிறுவர் மாத இதழில் என் முதல் மொழிபெயர்ப்புக் கதை வெளியானது. தொடர்ந்து எனது மொழிபெயர்ப்புக் கதைகள் சிறுவர் இதழ்களில் வெளிவந்தன; மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரிக் காலங்களில், புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், தந்தையின் சொற்படி மரபுக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். தந்தையாரின் வழிகாட்டுதலின்படி குழந்தை எழுத்தாளரானேன்.

அப்பா, அம்மாவுடன் தேவி நாச்சியப்பன்

நான் இலக்கிய உலகில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தில், என் தந்தையார் கல்லூரியில் தமிழ்ப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார். அதன்படி இளங்கலை, முதுகலை தமிழ் படித்தேன். ஆசிரியர் பணிக்காகக் கல்வியியல் இளங்கலை, முதுகலை படித்தேன். குழந்தை இலக்கிய ஆர்வத்தால், “குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள் ” என்கிற தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு, 2012 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றேன்.

1984 ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடைபெற்றது. கணவர் நாச்சியப்பனும் கவிஞர். எனவே அவரது கவிதை நூலான ‘மௌன ராகங்கள்’ என்கிற நூலும் எனது மொழிபெயர்ப்பு நூலான ‘பல தேசத்துக் குட்டிக் கதைகள்’ பாகம் -1 என்கிற நூலும் எங்கள் திருமண நாளில் 09.09.1984 அன்று வெளியிடப்பட்டன. வங்கியில் பணியாற்றிய என் கணவர் எனது இலக்கியப் பணிக்கு உறுதுணையாக இருந்தார். அது நான் மேலும் இலக்கியத்துறையில் இயங்குவதற்கு உதவியாக இருந்தது.

1990 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியிலுள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் மேல்நிலைப் பள்ளியில் எனக்குத் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆசிரியப் பணியில் அதிகமான மாணவச் செல்வங்களுடன் பழகும் நல்வாய்ப்புக் கிட்டியது. வகுப்பிற்குள் நுழைந்ததும் அன்றைய பாடத்துடன் தொடர்புடைய கதை அல்லது கவிதையோடுதான் அந்தப் பாடவேளையைத் தொடங்குவேன். மாணவர்களின் திறமையறிந்து ஊக்கப்படுத்துவதும் அவர்களைப் போட்டிகளுக்குத் தயார் செய்து அனுப்புவதும் மகிழ்ச்சிக்குரியன.

நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் என்னுடைய மாணவர்களின் கதைகள், ஓவியங்கள் இடம் பெற வழிவகை செய்துள்ளேன். மாணாக்கர்களை மதுரைக்கு

அழைத்துச் சென்று அகில இந்திய வானொலியில் ‘நாற்றங்கால்’ நிகழ்ச்சி தயாரித்து அவர்களைப் பங்கேற்க வைத்துள்ளேன். பள்ளியிலும், காரைக்குடியில் எங்கள் வீட்டில் நடத்திவரும் கவிமணி குழந்தைகள் சங்கத்திலும் மற்றும் உறவினர் குழந்தைகளிடமும் பழகிப் பெற்ற அனுபவங்கள் என் படைப்புகளாக மலர்ந்தன.

என்னுடைய படைப்புகள் கோகுலம், தினமணி- சிறுவர் மணி, இந்து தமிழ், அமுதசுரபி, வெற்றிக்கொடி போன்ற பல இதழ்களில் வெளியாகின.

லேடீஸ் ஸ்பெஷல், முகம், அமெரிக்காவிலிருந்து வெளிவரும்

‘தென்றல்’ இதழ்கள் என்னை நேர்காணல் செய்து கட்டுரை வெளியிட்டுள்ளன. புதுவை பாரதி இதழில் நான் எழுதிய கதைகள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பத்திரிகைகள் தரும் ஆதரவால், சிறு வயதில் ஆரம்பித்த எழுத்துப் பணி இன்று வரை தொடர்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை வானொலி நிலையம் முதன்முதலாக, என்னைத் தரை வழித் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘தாய்வீடு’ என்கிற நிகழ்ச்சியை நேரலையாக ஒலி பரப்பியது. அகில இந்திய வானொலியின் புதிய முயற்சியில் நான் பங்கேற்றது நினைவில் நிற்கும் நிகழ்ச்சி.

சன் டிவி – ‘வணக்கம் தமிழகம்’, பொதிகை – ‘நம் விருந்தினர்’ நிகழ்ச்சிகளிலும் என்னுடைய நேர் காணல்கள் ஒளிபரப்பாயின. விஜய் டிவி ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டுள்ளேன்.

நாச்சியப்பனுடன் தேவி

1997 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பந்தும் பாப்பாவும்’ வெளியானது. அதனை அடுத்து 2002இல் ‘பசுமைப் படை’ என்கிற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியானது. இது போன்ற பல சிறுகதை நூல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் பட்டிமன்றம், பயண நூல், வாழ்க்கை வரலாறு என்கிற வடிவங்களிலும் எழுதி வருகிறேன். இதுவரை 22 நூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூல்களில் பல திருப்பூர் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி- குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம், கம்பம்- பாரதி தமிழ் இலக்கியப் பேரவை,

ராஜபாளையம் – மணிமேகலை மன்றம், கருவூர் – திருக்குறள் பேரவை பொதிகை மின்னல் சிற்றிதழ் போன்ற அமைப்புகள் வழங்கிய பரிசுகளைப் பெற்றன.

என் தந்தையாரின் முதல் நூலான ‘மலரும் உள்ளம்’ கவிதை நூலை வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் மூலம் என்னுடைய பல சிறுகதை நூல்கள் வெளிவந்ததும் அவற்றில் 5 நூல்கள் பரிசுகள் பெற்றதும் எனக்குப் பெருமை. NCBH, மணிவாசகர் பதிப்பகம், ஏகம் பதிப்பகம், சாகித்ய அகாதமி, Books for Children போன்ற பதிப்பகங்களும் என்னுடைய நூல்களை வெளியிட்டு ஊக்கமும் உற்சாகமும் தருவதில் மகிழ்ச்சி.

என் தந்தையார் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த நாள் 16.03.1989. அந்த ஆண்டு தொடங்கி, அவர் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் நாளைக் ‘குழந்தை இலக்கிய தின விழா’வாகக் குழந்தைக் கவிஞரின் பிள்ளைகள் ஐவரும் அடுத்த தலைமுறையினரான எங்கள் பிள்ளைகளும் இணைந்து கொண்டாடி வருகிறோம்.

தந்தையாரின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவை அவர் பிறந்த ஊரான இராயவரத்தில் 07.11.2002 அன்று கொண்டாடினோம். என் தந்தையாரின் நண்பர்களான சிலம்பொலி செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனர் செ.மெ. பழனியப்ப செட்டியார், மேனாள் மதுரை வங்கியின் தலைவர் ராம. முத்தையா, கவிஞர் செல்ல கணபதி போன்ற பல சான்றோர்களும் எழுத்தாளர்களும் இராயவரம் ஊர்ப் பெருமக்களும் பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளும் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். அன்றைய தினம் நான் தொகுத்த ‘நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்’ என்கிற நூல் வெளியிடப்பட்டது. அன்று 81 கட்டுரைகளுடன் வெளியிடப்பட்டது. பின்னர் குழந்தைக் கவிஞர் நூற்றாண்டை முன்னிட்டு என் தந்தையாரின் நண்பர்கள் 20 பேரிடம் புதிதாகக் கட்டுரைகள் பெற்றுச் சேர்த்துப் புதிய பதிப்பாக வெளியிட்டோம்.

நவம்பர் 7, 2022, ‘குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு நிறைவு விழா’ சென்னை ராணி சீதை அரங்கில், கவிஞர் செல்ல கணபதி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 67 வயதில் மறைந்த என் தந்தையார் குறித்த நினைவுகளைப் பல ஆண்டுகளுக்குப் பின் அவருடைய நண்பர்கள், குழந்தைக் கவிஞரிடம் கொண்ட அன்பினையும் அவர்தம் மானுடப் பண்புகளையும், குழந்தைக் கவிஞரோடு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ நிகழ்வுகளையும் தம் கைப்பட எழுதி அனுப்பி இருந்தனர். இந்நூலில் டாக்டர் கோ.வேங்கடசாமி, பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சௌந்தரா கைலாசம், கல்கி ஆசிரியர் ராஜேந்திரன், சீதாரவி, டாக்டர் கு. கணேசன், டாக்டர் பூவண்ணன், கவிஞர் செல்ல கணபதி, கவிஞர் ரா.பொன்ராசன், முனைவர் ஈ.எஸ்.ஹரிஹரன், இயக்குநர் வசந்த், எஸ். சாய் போன்ற பலரது கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள கட்டுரைகளை வாசிக்கும் போது மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தன.

குழந்தை இலக்கியம் படைப்பதுடன் பல்வேறு குழந்தை இலக்கியப் பணிகளிலும் பங்கேற்கக் கூடிய நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சென்னை வானொலி தொலைக்காட்சி சிறுவர் சங்கப் பேரவை, சிவகங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம், வள்ளியப்பா இலக்கிய வட்டம், காரைக்குடி புத்தகத் திருவிழா போன்ற பல அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறேன்.

பல பல்கலைக்கழகங்களிலும் சாகித்ய அகாதெமியிலும் கருத்தரங்குகளில் பங்கேற்றுக் குழந்தை இலக்கியக் கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். சிங்கப்பூர் பள்ளி ஆசிரியர்களுக்கு மதுரை, கோவையில் நடைபெற்ற பயிலரங்குகளில் பயிற்சி அளிக்கும் வாய்ப்பும் பெற்றேன்.

கவிஞர் செல்ல கணபதி தொடங்கிய ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ அமைப்பின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் புதுச்சேரி,

காரைக்காலிலும் உள்ள பள்ளிகளில் ‘வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா’ நடத்தப்பட்டது. அதில் நானும் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

காரைக்குடியில் மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (CECRI) மற்றும் பல இலக்கிய அன்பர்களின் துணையோடு கடந்த 2000 ஆம் ஆண்டில் தொடங்கிய புத்தகத் திருவிழாவில் ஆரம்ப முதலே இணைந்து பல்வேறு பொறுப்புகளில் இருந்து, என்னால் இயன்ற தொண்டாற்றியுள்ளேன்.

ஆசிரியப் பணிக்காக 2012இல் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், பல்வேறு அமைப்புகளில் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றுவதால் 2017இல் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதும் பெற்றேன்.

மேலும் சென்னை கம்பன் கழகம், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், புதுக்கோட்டை இலக்கியப் பேரவை, காரைக்குடி ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம்,

தொழில் வணிகக் கழகம், சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவை, சிவநேயப் பேரவை போன்ற பல அமைப்புகளும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ( BAPASI ) 2023புத்தகக் கண்காட்சியில் ‘குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா இலக்கிய விருது’ வழங்கிச் சிறப்பித்தது. என் தந்தையார் பெயரில் பல ஆண்டுகளாக BAPASI வழங்கி வந்த குழந்தை இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்குக் கிடைத்தது மனநிறைவை தந்தது.

மத்திய அரசின் சாகித்ய அகாதெமி நிறுவனம் 2010 ஆம் ஆண்டு முதல் குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருது வழங்கி வருகிறது. பொதுவாக எழுத்தாளரின் குழந்தைகளுக்கான ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி வந்தனர். ஒட்டு மொத்தக் குழந்தை இலக்கியப் பங்களிப்புக்காக, எனக்கு 2019இல் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

என் தந்தையாரின் வழிகாட்டுதலோடு சென்னையில் 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கவிமணி குழந்தைகள் சங்கத்தை 1984 ஆம் ஆண்டு என் திருமணம் நடைபெற்ற பின் தொடர்ந்து நடத்த இயலவில்லை.

பின்னர் 2004 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டன்று, அச்சங்கத்தை காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் முன்பாகத் தொடங்கினோம். பின்னர் தொடர்ந்து காரைக்குடியில் எங்கள் இல்லத்தில் மாதம் தோறும் குழந்தைகளை அழைத்துக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். கொரோனா காலத்தில் கூட்டங்களை இணைய வழியில் நடத்தினோம். பள்ளியில் இருந்து பணி நிறைவு பெற்றாலும் குழந்தைகளுக்கான பணிகளைச் சமூகக் கடமையாக எண்ணித் தொடர்ந்து செய்து வருகிறேன்.

என் தந்தையார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நண்பர்களான சென்னையில் வசித்து வரும் குழந்தை இலக்கியப் பணிச்செல்வர் புதுகை பி. வெங்கட்ராமன், கோவையில் வசிக்கும் அண்ணன் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி, காரைக்குடியைச் சேர்ந்த பொற்கிழிக் கவிஞர் காசி ஸ்ரீ அரு.சோமசுந்தரன், நற்கதை நம்பி டாக்டர் அய்க்கண், அமெரிக்காவில் வசிக்கும் அண்ணன் சோமலெ சோமசுந்தரம் போன்ற பல சான்றோர்கள், என் உடன்பிறந்தோர், உறவினர்கள், பிள்ளைகள் தரும் ஊக்கத்தால் தொடர்ந்து செயல்பட முடிகிறது.

ஏடு தூக்கிப் பள்ளியில்

இன்று பயிலும் சிறுவரே

நாடு காக்கும் தலைவராய்

நாளை விளங்கப் போகிறார்.

என்பது குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் வைர வரிகள்.

தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளில் நூலகப் பயன்பாடு அதிகரிக்கவும் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் உருவாகவும் கலைத் திறமைகள் மேம்படவும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் நாடு காக்கும் தன்னலமில்லாத் தலைவர்களை உருவாக்க இயலும்.

எனவே இத்திட்டங்களுக்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பிள்ளைகள் பாடப் புத்தகங்களோடு பிற நூல்களையும் படித்தால் பல துறை அறிவும் பண்பாடும் வளரும். குழந்தைகள் நிறைய வாசிக்கணும். ஆளும் வளரணும்; அறிவும் வளரணும்;நாடு செழிக்கணும்; நன்மைகள் பெருகணும்.

தேவிநாச்சியப்பன் நூல்கள்.

பல தேசத்து குட்டி கதைகள் பகுதி1 பல தேசத்து குட்டி கதைகள் பகுதி 2 கடவுளைக் கண்டவர்கள்

பந்தும் பாப்பாவும்

நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்

பசுமைப் படை

புத்தகத் திருவிழா

பேசியது கைபேசி

சிறுவர் பட்டிமன்றம்

( வாழ்க்கை வரலாற்று நூல்கள்-3)

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

உலகம் சுற்றிய தமிழர் சோமலெ

குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி

குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள் (ஆய்வு நூல்)

குழந்தை எழுத்தாளர் சங்கம் (கட்டுரை)

பனி லிங்கமும் படை வீரரும் குழந்தைகள் சென்ற குஷியான பயணம்

10 முத்தான கதைகள்

தேன் சிட்டுக்கு என்ன ஆச்சி ?

பயணப் புறாவில் பறப்போமா? குழந்தைகள் உலகம்

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல் தொகுப்பு (சாகித்ய அகாதமி வெளியீடு)

பூஞ்சிட்டு (தொகுப்பு நூல் )

படைப்பாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

­