பூரணி அம்மாள் நினைவலைகள் (1913 -2013)

சம்பூரணம் என்கிற பெயருக்கேற்ப நிறை வாழ்வு வாழ்ந்தவர் எழுத்தாளர் பூரணி. தன் எழுத்தினாலும் முற்போக்கு சிந்தனைகளாலும் நம் நினைவுகளில் இன்றும் வாழ்பவர். எழுத்தாளர் க்ருஷாங்கினியின் தாயார். தள்ளாடும் வயதிலும் தீராத இலக்கிய ஆர்வத்துடன் திகழ்ந்த தன் தாய் பூரணியைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் கவிஞர் க்ருஷாங்கினி.

அம்மா சம்பூரணம்மாள், பழனிக்கு அருகில் உள்ள கலயம்புதூர் கிராமத்தில் 1913ஆம் ஆண்டு பிறந்தவர். தாத்தா ராமசாமி ஐயர் (அம்மாவின் அப்பா) தமிழ் பண்டிட். தாத்தா படித்தவராக இருந்ததனால் வீட்டில் எந்நேரமும் புத்தகங்கள் இருக்கும். அதனால் அம்மா ஒன்பது வயது முதலே வாசிப்பதில் ஆர்வம் கொண்டார். வாசிப்பறிவின் காரணமாக சிறுவயது முதலே அம்மா முற்போக்கு சிந்தனை உடையவராக இருந்திருக்கிறார். 1926 ஆம் ஆண்டு, 13 வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

தன் வீடுகளிலே பெண்கள் இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்பெறுவதும் சிலர் சிறுவயதிலே விதவையாகி மூலையில் முடங்கிக் கிடப்பதையும் பார்த்தவர், தன் தந்தையிடம் தான் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட மாட்டேன் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். சொன்னதோடு மட்டுமல்லாமல் தன் முடிவில் தீர்க்கமாகவும் இருந்திருக்கிறார். அதனால் அவருக்கு அந்த அநீதி நடைபெறவில்லை. ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் அம்மாவின் இல்லறம் தொடங்கியது.

அம்மாவிற்குத் திருமணம் ஆனதும் தனது புகுந்த வீட்டில் நிறைய புத்தகங்களைக் கண்டதும் பேருவகை கொண்டவர், அது அத்தனையும் கணக்குப் புத்தகங்கள்தாம் என்றறிந்ததும் பெருத்த ஏமாற்றமடைந்தார். ஆனால், அம்மாவைச் சரியாகப் புரிந்துகொண்ட அப்பா, எல்லாப் பத்திரிகைகளுக்கும் சந்தா கட்டி புத்தகங்களை வீட்டிற்கு வரவழைத்தார். அம்மாவும் மகிழ்ச்சியாக வாசிக்கத் தொடங்கினார்.

16 வயது முதல் அம்மா தீவிரமாக கவிதைகள் எழுத ஆரம்பித்தார். முதலில் மரபுக் கவிதைகள் எழுதினார். அதன் பிறகு சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். அவரது சிறுகதைகள் பிரசன்ன விகடன் எனும் இதழிலும் மற்றும் வேறு சில இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. பெண்ணியம் சார்பான கதைகள் நிறைய எழுதினார்.

சுதந்திரத்திற்கு முன் பிறந்தவர் என்பதால் அம்மா சுதந்திர ஆவல் உடையவராக இருந்தார். போராட்டங்களில் ஈடுபட இயலாத சூழ்நிலையில் தன் கவிதைகள் மூலம் சுதந்திர தாகத்தைத் தீர்த்துக்கொண்டார். ஆம்… எங்கள் கல்யாண வீடுகளில் எல்லாப் பெண்களும் சடங்கு பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த காலத்தில் அம்மா மட்டும் சுதந்திர பாடல்களைச் சுப நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார்.

அம்மாவிற்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். நான் எட்டாவது. வீட்டு வேலைகள் செய்ய வேண்டியதல்லாமல், வாசிக்கவும் எழுதவும் தோதான நேரம் நிறைய கிடைக்கும் என்பதால் அம்மா பிரசவக் காலங்களில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். 1929 முதல் 1945 வரை அம்மா நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்.

அம்மாவின் கவிதைகள் மனித வாழ்க்கையின் பல நிலைகளை எடுத்துரைப்பவை. அத்துடன் சமூக அவலங்களைச் சாடுவதாகவும் மனித நேயத்தையும் பெண் முன்னேற்றத்தையும் வலியுறுத்துவனவாகவும் இருக்கும்.

அம்மாவிடம் ஒரு சிறந்த பழக்கம் உண்டு. அது கவிதையோ கதையோ எதை எழுதினாலும் தேதி குறிப்பிட்டு எழுதி வைத்திருப்பார்.

தன் பிள்ளைகள் ஒன்பது பேரில் அம்மா என்னிடம் மட்டும் சற்றுக் கூடுதல் அன்போடு இருப்பார். இலக்கியப் பரிவர்த்தனைகள்கூடக் காரணமாக இருக்கலாம். ஊரில் வசித்து வந்த அம்மா தொண்ணூறுகளில் (90ஆம் ஆண்டு) சென்னை வந்து என்னுடன் வசிக்க ஆரம்பித்தார். சென்னை வந்த பிறகு ஒருமுறை தனது சொத்துகள் என்று சொல்லி தனது படைப்புகளை என்னிடம் ஒப்படைத்தார். தன் முதல் கவிதைப் புத்தகம் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வர வேண்டும் என்று விரும்பினார். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு அம்மாவைக் காண வந்த எழுத்தாளர் அம்பையிடம் அம்மாவின் ஆசையைத் தெரிவித்தேன். அம்பையின் முயற்சியால் 2003 ஆம் ஆண்டு அம்மாவின் 90 வது வயதில் அவரது கவிதைகள் காலச்சுவடு பதிப்பகத்தால் ‘பூரணி கவிதைகள்’ என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. அதுதான் அம்மாவின் முதல் புத்தகம். அம்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.

அம்மா தனது 75 வயதில் தன் வரலாறு எழுதி வைத்திருந்தார். அதில் தன் வாழ்க்கையின் மீதான புலம்பல்களோ, பெருமிதங்களோ ஒன்றும் இல்லை. எனவே அம்மாவின் சுயசரிதை வெளிவர வேண்டும் என்று நான் விரும்பினேன். பூரணி கவிதைகள் தொகுப்பு வெளிவந்து இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து அம்மாவின் சுயசரிதையை நான் எனது சதுரம் பதிப்பகம் மூலமாக வெளியிட்டேன். அதற்குப் பிறகான சில ஆண்டுகளில் அம்மாவின் சிறுகதைத் தொகுப்பும் (மணிவாசகர் பதிப்பகம்), சிறுவர் கதைத் தொகுப்பும் (செவிவழி கதைகள்) வெளியாகின.

அம்மாவின் படைப்புகள் இன்னமும் மிச்சம் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் பாதுகாக்கக் காரணம் அம்மாவின் இலக்கிய ஆர்வம்தான். தன் தள்ளாத வயதிலும் அம்மா இலக்கியம் படைத்துக்கொண்டே இருந்தார். இலக்கியம் படைப்பது, வாசிப்பது மட்டுமல்லாமல் இலக்கிய உலகின் பல விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். இலக்கிய உலக அறிவு மிகவும் அதிகம்.

என்னுடைய தாத்தாவே இலக்கிய ஆர்வம் உடையவர். என்னுடைய சகோதரரோ ஞானரதம் இதழின் ஆசிரியராக இருந்த கே.வி. ராமசாமி. எனவே வீடு முழுதும் இலக்கியவாதிகளாக இருந்ததாலோ என்னவோ பெரும்பாலும் எனது சிறுவயது முதலே எங்கள் வீட்டிற்கு இலக்கியவாதிகள் அடிக்கடி வந்தவண்ணம் இருப்பர். அதுமட்டுமின்றி அம்மாவிற்கு 85 வயது இருக்கும் போது சில காலங்களுக்குத் தொடர்ந்து நான் எங்கள் வீட்டில், வாரம் ஒன்று என இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தேன். அப்போது அம்மா வாரா வாரம் ஒரு கவிதை எழுதி அந்த இலக்கியக் கூட்டத்தில் வாசிப்பார். ஒரு வாரம் தவறாமல் கவிதை எழுதிவிடுவார். அம்மாவிற்கு காது மட்டும் சரியாக கேட்காது. எனவே மற்றவர்களின் கவிதைகளை எழுதி வாருங்கள் எனச் சொல்லி அவற்றையும் படிப்பார். படித்து கருத்தும் சொல்வார்.

அந்த நேரத்தில் அவருக்கு கண் ஆபரேஷன் செய்ய வேண்டி வந்தது. மிகவும் சிரமமாக இருக்கும் என்று கண் மருத்துவர் சொன்னபோது, “நான் சாப்பிடாமகூட இருந்திடுவேன். படிக்காம இருக்க முடியாது. படிப்பதற்காக எந்த வலியையும் தாங்கிக்கொள்வேன்” என்று அம்மா சொன்னார். அதன்படியே வலியைப் பொறுத்துக்கொண்டு அம்மா ஆபரேஷன் செய்துகொண்டார். மருத்துவரே ஆச்சரியப்பட்டுப் போனார்.

அம்மாவின் 94 வது பிறந்த நாளுக்கு இலக்கியவாதிகளை அழைத்திருந்தேன். பெரும்பாலானோர் கலந்துகொண்டார். அவர்களிடம் அம்மா சிறப்பாக இலக்கியம் பேசிக்கொண்டிருந்தார். அதன் பிறகும் 98 வயது வரையிலும் அம்மா எழுதிக்கொண்டுதான் இருந்தார். காது கேட்காத போதும் துல்லியமான அறிவோடும் ஞாபகசக்தியோடும் சோம்பல் இன்றி அம்மா எழுதி வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 98 வயதிற்குப் பிறகு அம்மா மறுபடி ஊருக்குச் சென்றுவிட்டார்.

அம்மா தெய்வ நம்பிக்கை உடையவராக இருந்த போதிலும் மூடநம்பிக்கைகள் அற்றவராக இருந்தார். அம்மா கட்டி இருந்தது மடிசார்தான் என்றாலும் மாதர் முன்னேற்றத்தில் கவனமுடையவராகவே எப்போதும் இருந்தார். அம்மா மாதர் சங்கத்தலைவியாக இருந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக செயல் புரிந்திருக்கிறார். அதனால் முன்னாள் முதல்வர் காமராஜரின் திருக்கரத்தால் விருதும் பெற்றிருக்கிறார்.

கவிதைகள் எழுதுவதோடு இந்தியில் சாகித்யம் பெற்ற அம்மா, பல பெண்களுக்கு இந்தி கற்றுக்கொடுத்து வந்தார். இந்தியிலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான சரஸ்வதி ராம்நாத் அம்மாவிடம் இந்தி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவின் படைப்புகளுக்கு இதுவரை ‘திருப்பூர் சக்தி கலை இலக்கிய விருது’ம், இல. கணேசனின் ‘பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்க’த்தின் தங்கப் பதக்கமும் கிடைத்திருக்கிறது. தமிழக அரசு நடத்திய ‘சென்னை சங்கமம்’ விழாவில் அம்மாவின் கவிதை வாசிக்கப்பட்டது. எழுத்தாளர் நகுலனும் ஒரு மேடையில் அம்மாவின் கவிதையை வாசித்தார் என்பது பெருமைக்குரிய விஷயம். டைரக்டர் அருண்மொழி அம்மாவைப் பற்றி ஆவணப்படம் ஒன்று இயக்கி இருக்கிறார்.

எங்களைப் பொய் சொல்லக் கூடாது என்று வலியுறுத்தி சிறந்த பிள்ளைகளாக வளர்த்தார். அம்மாவிடம் எப்போதுமே உற்சாகம் இருக்கும். அடுத்தவருக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில்தான் எப்போதும் பேசுவார். எல்லாக் குழந்தைகளிடமும் பாசமாக இருப்பார். கொஞ்சி விளையாடுவார். குழந்தை மனத்துடன் விலங்கு, பறவையினங்களிடம்கூட அன்பாக இருப்பார்.

நூறாண்டு காலம் தாண்டியும் ஒரு மாதம் வாழ்ந்ததோடு, கிட்டதட்ட 85 ஆணடு காலம் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்த அம்மா 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். இலக்கிய உலகில் அவருக்கான அங்கீகாரம் கிடைத்ததில் எனக்கு எப்போதும் பெருமைதான்.

(தொடரும்)

படைப்பாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

­­