‘உனக்குத் திருமணம் ஆடிச்சா? எப்போ திருணம்? ஏன் இன்னும் திருமணம் பண்ணிக்கல?’ போன்ற கேள்விகள் இருபதைத் தொட இருக்கும் பெண்களிடமும், 25 வயதைக் கடந்த ஆண்களிடமும் சாதரணமாகக் கேட்கப்படும் கேள்விகள். பெரும்பாலான நலம் விசாரிப்புகள் இப்படியே தொடங்கும். இன்னும் கிராமப்புறங்களில் பெண்கள் பருவமடைந்ததிலிருந்தே திருமணம் குறித்த விவாதங்கள் தொடங்கிவிடும்.

“இவள ஒருத்தங்கிட்ட கட்டி குடுத்துட்டா, இவன் கல்யாணத்த பார்த்துட்டா என்னோட கடமை முடிஞ்சிரும்” என்று ஏதோ திருமணம்தான் அனைத்துக்கும் நிவாரணம் என்பது போலான போக்குகள் இன்னும் பொதுச் சமூகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது.

வரலாற்று ஆய்வாளர் மார்கரேட் ஹண்ட் (Margaret Hunt) கூற்றுபடி திருமணம் என்பது சொத்து, தொழில், உறவு, சொந்தம், பணம், கால்நடைகள், பெண்ணை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமே திருமணம் என்று குறிப்பிடுகிறார். இது தனியுடைமை சமூகத்தின் நீட்சியாகவே பார்க்க முடிகிறது. இத்தகைய மனநிலையின் விளைவாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் வாழ்க்கையில் திருமணம் நடக்காதது மிகப்பெரிய கறை என்பது போலவும், திருமணத்தைத் தவிர்த்தது குற்றவுணர்வைத் தரவில்லையா, இனியாவது திருமணம் செய்துகொள்ளுங்கள் போன்ற ஐந்து பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத ஆலோசனைகளையும் அழுத்தத்தையும் கொடுக்கத் தயாரக இருக்கிறது. இந்தக் கேள்வியைக் கேட்கவா ஊடகவியலாளர் ஆனார்கள்?

பொதுவாழ்க்கையில் ஈடுபடக்கூடிய ஓர் அரசியல் கட்சி தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்கள் தங்களது சராசரி வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்வார்கள்? திருமணம் குறித்துச் சமீபத்தில் ஊடகங்கள் அதிகம் பேசக் காரணம், ஆண்களுக்குப் பெண் கிடைப்பதில்லை என்பதே. பெண்ணுக்குப் பையன் கிடைப்பதில்லை என்பதல்ல என்பதையும் இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்கள் இருக்கும் வீடுகளில் பெண்ணின் விருப்பம் கேட்காமலே கட்டிவைத்தால் கடமை முடிந்தது என்று திருமணம் செய்துவைத்த போதெல்லாம், ‘பெண் கறுப்பா இருக்கா, குண்டா இருக்கா, லட்சணமா இல்ல, அப்போ இரண்டு சவரண் கூடுதலா போடுங்க, பையன் கவர்மெண்ட் உத்யோகம் பாக்குறார்னு வரதட்சணை கூடுதலா தாங்க’ என்று வியாபாரம் பேசும் போது வராத கேள்வி ஞானம், சமைக்கத் தெரியுமா, பாடத் தெரியுமா எனச் சம்மந்தமே இல்லாமல் கேள்வி கேட்டு உதறிவிட்டு போகும்போதெல்லாம், ‘நா கேட்கல எங்க அம்மாதான் கேக்குறாங்க’ என்று பெண்ணுக்கு எதிரி பெண்தான் என்று முத்திரை குத்தும்போதெல்லாம், வரதட்சணை கொடுக்க முடியாமல் பெண்கள் திருமண ஆசையே கூடாது என்று பெண்கள் வீட்டோடு அடங்கித் தங்களுக்குள் புழுங்கும்போதெல்லாம் இந்தப் ’பொதுச் சமூகம்’ இப்படிக் கதறவில்லை.

இன்று ஓரளவுக்குப் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் தன்னிசையாக முடிவெடுக்கும் தகுதியை வளர்த்துகொண்டதால், பெண்கள் தங்களுக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுப்பதில் தங்களது விருப்பம் முக்கியம் என்று கருதுகிறார்கள். அப்படித் தனக்கேற்ற மாப்பிள்ளையை ‘இப்படி இருந்தால்தான் சம்மதம்’ எனச் சொல்லும் பெண்களால் வீரமிக்க ஆண்கள் பதற்றமடைந்துவிடுகிறார்கள். எங்களிடமே டிமான்ட் (demand) வைக்கிறாயா என்கிற ஆணவம்தான் வேறு என்ன?

ஆனால், திருமணம் என்கிற பெயரில் பெண்ணுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் எப்போதும் இங்கு பேசுபொருளாவது இல்லை. கடந்த 2017 முதல் 2021 வரை 35,493 வரதட்சணை மரணங்கள் நடந்துள்ளன. தினமும் வரதட்சணை கொடுமையினால் 20 பெண்கள் இறக்கின்றனர். வருடவாரியாக 2017 – 7,466, 2018 – 7,167, 2019 – 7,141, 2020 – 6,966, 2021 – 6,753 என வரதட்சணை மரணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்கிற புள்ளிவிவரங்களை மத்திய இணை அமைச்சர் அஜெய் குமார் மாநிலங்களவையில் குறிப்பிட்டார். இந்தியாவில் 2021இல் 2,222 வரதட்சணை இறப்புகள் பதிவு செய்யப்பட்டு உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 27, கேரளா 9, அந்தமான் நிக்கோபார் 1.

புள்ளிவிவரங்களையும் தாண்டி திருமணம் எனும் ‘நிறுவனம்’ பெண்ணை உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக எவ்வாறு சுரண்டுகிறது என்பதை அனுபவ ரீதியாகப் பெண்கள் பார்த்துவருகின்றனர். கணவர் தினக்கூலிக்காரராக இருந்தாலும் சரி, மாத வருமானம் பெறுபவராக இருந்தாலும் சரி, எந்த வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பமாக இருந்தாலும் சரி, இது தொடரத்தான் செய்கிறது. ‘பொண்டாட்டியோட ஏடிஎம் கார்டை வாங்கி வெச்சிக்கிட்டு, மனைவி என்ன வாங்கணும், வாங்கக் கூடாது’ என முடிவெடுக்கும் கணவர், திருமணம் ஆகி பல வருடம் ஆகியும் வேலைக்குப் போகாமல் வீட்டில் அதிகாரம் செய்யும் கணவர்கள், சம்பளத்தை எல்லாம் குடிச்சிட்டு வந்து வீட்டில் பெண்களையும் குழந்தைகளையும் அடிக்கும் ஆண்கள், மனைவி மீது சந்தேகப்படுவதையே சதா வேலையாகக் கருதும் ஆண்கள்… இப்படியான கணவர்களை பெண்கள் பொறுத்துச் செல்லக் காரணம் இந்தச் சமூகம் பெண்ணுக்குக் கொடுக்கிற ‘புருசன் இல்லாதவ’ என்கிற கொடுமையவிட, இவன்கூடவே வாழ்ந்துட்டுப் போய்விடலாம் என்கிற எண்ணம்தான்.

கொரோனா தடுப்பு களப்பணியாளராக வேலை செய்தபோது நிறைய பெண்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா களப்பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். குறிப்பாக 18 வயது முதல் 35வயது வரை சுய சாதி திருமணம், காதல் திருமணம், சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட பெண்கள். அவர்களின் கதைகளெல்லாம் கேட்கும்போது ‘குடும்பம்’ ஏன் பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும் அதிகம் வன்முறை நிகழ்த்தும் நிறுவனமாக மாறிப்போயின என்கிற கேள்வி எழுகிறது. இவற்றைக் குறித்தெல்லாம் எந்த அரசியல் தலைவர்களோ கட்சிகளோ வெகுஜன ஊடகமோ ஏன் பேசத் துணிவதில்லை?

குடிக்கு அடிமையாகிய காதல் கணவன் வாரத்துக்கு இரண்டு நாளைக்கு வேலைக்குப் போய்விட்டு, அந்தப் பணத்தையும் குடித்தே தீர்த்துவிட்டு, வீட்டுக்கு வெளியிலிருந்து சண்டை சச்சரவுகளை இழுத்துக்கொண்டு வரும்போதெல்லாம், ‘யார பாக்குறது, என்ன செய்றது, குழந்தைய எங்க விட்டு போறது’ என்று தெரியாமல், போலிஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்கும் அலையும் ஐஷ்வர்யா. திருமணம் ஆகி குழந்தை இல்லாததால், அதற்குக் காரணம் கணவனின் குடிப்பழக்கம் என்பதை வெளியே சொல்ல முடியாமல் குழந்தையின்மைக்குக் காரணம் தான்தான் என்கிற பழியைச் சுமந்துகொண்டு ஒரு பக்கம் கணவனின் குடிப்பழக்கத்தைக் குறைக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும், தெரிந்த, தெரியாதவர்கள் சொல்லும் மருத்துவமனைகளை எல்லாம் சுற்றித் திரியும் பிரியா. வாழ்ந்த கொஞ்ச காலத்தில்கூட நான்கு நல்ல வார்த்தைகளைக்கூடப் பேசாமல் குடித்தே செத்துபோன கணவன் குடுத்துட்டுப் போன இரண்டு பிள்ளைகளை எப்படி வளர்க்கிறது, படிக்க வைப்பது என உள்ளுக்குள்ளே குமுறும் கவிதா அக்கா எனப் பல பெண்கள் திருமணம் என்கிற ஆணாதிக்க நிறுவனத்தால் நிலைக்குலைந்து போனவர்கள். திருமணத்தால் படிப்பைத் தொடர முடியாமல், திருமணத்திற்குப் பின் வேலையைத் தொடர முடியாமல், பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக என எல்லாவற்றுக்கும் கணவனைச் சார்ந்து இருக்க வேண்டும் எனப் பண்பாட்டு நிறுவனங்கள் வழி பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு உள்ளுக்குள்ளே குமுறிப்போனவர்களுக்கு அரசியலமைப்பு கொடுக்கும் உரிமைதான் ‘விவகாரத்து.’ திருமணங்களை வரவேற்கும், கொண்டாடும் நம் சமூகம் விவகாரத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. பிரபலங்களான நயன்-விக்கி, ஆதி – நிக்கி கல்ரானி போன்றவர்களின் திருமணத்தைக் கொண்டாடிய பொதுச் சமூகம், சமந்தா – நாகசைதன்யா, தனுஷ் – ஐஷ்வர்யா விவாகரத்துகளை ஏற்றுக்கொள்வதில்லை. எப்படித் திருமணம் என்பது சாதாரணமான நிகழ்வோ அப்படித்தான் விவகாரத்தும் என்பதை எப்போது இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளப்போகிறது? விவாகரத்துக்குப் பின் பெண்கள் சந்திக்கும் சமூகச் சிக்கல்கள் அதிகம். விவாகரத்து செய்த பெண்களை ஆணாதிக்க சமூகம் இழிவுபடுத்தியே வருகிறது. அத்தகைய சமூகத்தின் பிரதிபலிப்புதான் ‘கையில் சரக்கு பாட்டிலோடு விவாகரத்தை கொண்டாடிய பெண்’ எனச் செய்தி போட்டு தனது வன்மத்தைக் காட்டிக்கொண்டது ஒரு நாளிதழ்.

அடக்குமுறை நிறைந்த ‘திருமணம்’ என்னும் கட்டமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் விடுதலை உணர்வைக் கொண்டாடும் பெண்ணை வெகுஜன ஊடகமும் பொதுச்சமூகமும் இப்படியாகத்தான் அணுகும்.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத் ‘தேவை’ திருமணம் என்கிற நிலை கடந்து இன்று, ‘திருமணம்’ என்கிற கட்டமைப்பு இல்லாமலே ஆணும் பெண்ணும் வாழலாம் என்றவுடன் இங்கு பலருக்குப் பதற்றம் வாந்துவிடுகிறது. திருமணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா? குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா? என்கிற தனிநபர் விருப்பங்களில் தலையிடுவதைத் தார்மீக உரிமையாகக் கொண்டுள்ளது இந்தப் பொதுச்சமூகம்.

காதலித்தால் பிரியக் கூடாது. திருமணம் செய்தால் விவாகரத்து வாங்கக் கூடாது. காதலிக்கிறவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும். கல்யாணம் பண்ணிக்கொண்டால் கட்டாயம் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற சமூக விதியை ஆண் மேலாதிக்கச் சமூகம் கட்டமைக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் ஆண் மீறும்போது கண்டுகொள்ளாத சமூகம், பெண் எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது கலாச்சாரம் கெட்டுப்போகிறது என்று பொங்கி எழுகிறது.

‘பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் ஏற்படுகின்றன’ என உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியது அவர் ‘கருத்து’ மட்டுமே, தீர்ப்பு அல்ல. நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் உச்சநீதிமன்றம் தீர்ப்பே வழங்கிவிட்டது போன்றதான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கின்றனர். வேர்ல்ட் ஆப் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் புள்ளிவிரங்களின்படி உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைவான விவாகரத்துகளே நடக்கின்றன.

பெரும்பாலான விவகாரத்துக்கு முக்கிய காரணங்களாக இருப்பது இணையருடன் அர்ப்பணிப்பு இல்லாமல் இருப்பது (Lack of Commitment), திருமணத்திற்கு வெளியே தொடர்பு வைத்துக் கொள்வது (Extra marital affair), சரிசெய்ய முடியாத வேறுபாடுகள் (Irreconcilable difference), குடும்ப வன்முறை (Domestic Violence), சிறு வயதில் திறுமணம் செய்துகொள்வது (Marrying too young) என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் எந்த ஊடகமோ நீதித்துறையோ சுட்டிகாட்டவில்லை.

The National Fmily Health Survey (NFHS)ன் புள்ளிவிவர அறிக்கைப்படி18 – 49 வயது பெண்கள் 29.3% குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். 3.1% கர்ப்பிணி பெண்கள் உடல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர். எனினும் குடும்ப வன்முறை குறித்து காவல்நிலையத்தில் குறைந்தபட்ச வழக்குகள் மட்டுமே பெண்களால் பதிவு செய்யப்படுகின்றன. பெரும்பாலான வழக்குகள் காவல்துறைக்கு வருவதே இல்லை என்பதையும் குறிப்பிடுகின்றனர். அதிக குடும்ப வன்முறை நடக்கும் மாநிலங்களான கர்நாடகா (44%), பீகார் (40%), மணிப்பூர் (39%), தெலுங்கானா (36%), தமிழ்நாடு (38%).

இங்கு எது நடந்தாலும் விவாகரத்துப் பெறக் கூடாது என்பதில் இந்தியக் குடும்ப உறவுகள் கறார்த்தன்மை காட்டுகின்றன. ஏனெனில் இங்கு திருமணங்கள் புனிதமானதாகவும் மனமுறிவுகள் இழிவானதாகவும் கருதப்படுகின்றன. எத்தனை அடக்குமுறை நிகழ்ந்தாலும் குடும்பம் என்கிற கட்டமைப்பு உடையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெண்களின் கையில் கொடுக்கப்பட்டிருப்பதிலிருந்து இந்த ஆணாதிக்க நுட்பத்தை அறிந்துகொள்ளளாம். எனவே இந்தியாவில் விவாகரத்துகள் குறைந்த சதவீதத்தில் நடைபெறுகின்றன என்பதில் எந்த பெருமிதமும் இல்லை.

புனித குடும்ப அமைப்பில் பெண்கள் மீது நடத்தப்படும் உடல் மற்றும் உளவியல் ரீதியான வன்முறை, வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, குழந்தைத் திருமணங்கள் குறித்து யாரும் கொண்டுகொள்வதாக இல்லை. சம்பளம் இல்லாத தொழிலாளராகவும் (unpaid domestic labours), எமோஷ்னல் தொழிலாளர்களாகப் (Emotinal Laburs) பெண்கள் வதைபடுவதைக் குறித்தெல்லாம் இப்போதுதான் பொது வெளியில் பெண்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

இத்தகைய பிரச்னைகள் பேசப்படாமல் கடக்கக் காரணம் ஆண்மைய சமூகம். ‘ஆணாதிக்கம்’ என்பது அமைப்பு, சித்தாந்தம் ஆகிய இரண்டு கூறுகளினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் பெண்ணிய அறிஞர் டோபாஷ். ஆணாதிக்கத்தின் கட்டமைப்பு அம்சம் சமூக நிறுவனங்கள் மற்றும் சமூக உறவுகளின் படிநிலை அமைப்பில் வெளிப்படுகிறது. எனவே சமத்துவமற்ற படிநிலை சமூக நிறுவனங்களை ஜனநாயக அமைப்புகள் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கின்றன. பண்பாட்டு ரீதியான உரையாடல்களின் வழியே இச்சமத்துவமற்ற படிநிலையைக் கட்டுடைக்க முடியும்.

படைப்பாளர்:

மை. மாபூபீ

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.