தெனாலியில் சொல்வது போல் நின்றால் பயம், நடந்தால் பயம் என்று இல்லாவிட்டாலும் நம் அனைவருக்கும் ஏதோ ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. வெளியே தெரியாவிடினும் அது நம் முழு உயரத்தை அடைய தடையாக இருக்கிறது.

பயம் என்கிற உணர்ச்சியே ஆபத்து நேரத்தில் நம்மைத் தற்காத்துக்கொள்ள, அடுத்த நடவடிக்கை எடுக்க யோசிக்க இயற்கை நமது மூளைக்கு அளித்த கொடை.

ஆனால், நாம் பயம் என்கிற அளவிலேயே நம்மைச் சுருக்கிக்கொள்கிறோம். அதைத் தாண்டி வர முயற்சிப்பதில்லை.

இந்தப் பய உணர்ச்சி உடலில், உள்ளத்தில் பல்வேறு விதமாகப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. ரத்தத் கொதிப்பு, திடமிழக்கும் நரம்புகள், அளவுக்கு மீறிய பயத்தால் மூளையின் முடிவெடுக்கும் திறன் பாதிப்பு என நமது செயல்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்கிவிடுகிறது. அதனால் வெற்றியின் சாத்தியக்கூறும் சுருங்கிவிடும்.

உதாரணமாக ஒருவருக்கு மோசமான விபத்து நடந்து அதிலிருந்து உடலால் முழுதாகத் தேறினாலும், மனதால் முழுமையாக வெளிவருவாரா என்றால், இல்லை. விபத்து ஏற்படுத்திய விளைவு ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்ததால் எப்போது வாகனம் ஓட்டினாலும் அந்தப் பயம் வந்து மனதில் ஆட்சி செய்யும், பதற்றம் அதிகமாகி தவறு நேரும் போது மறுபடியும் விபத்து நிகழலாம். இதற்குக் காரணம் உங்கள் ஆழ்மனப் பதிவும் அதன் வெளிப்பாடாக உங்கள் பதற்றமும்தான். ஆனால், நான் பயந்தது போலவே ஆகிவிட்டதென வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்.

எல்லாவிதமான பயங்களும் தவறா என்றால் நிச்சயம் இல்லை.

‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்கிற வள்ளுவர் வாக்கின்படி எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு நிச்சயம் அஞ்ச வேண்டும், எல்லாவற்றிற்கும் அல்ல.

இயற்கையான பய உணர்வு உங்களை எச்சரிக்கும், முடக்காது, எதிரே ஒற்றை யானையைப் பார்த்தால், 150 கி.மீ. வேகத்தில் மகிழுந்து ஓட்டினால், ஆள் அரவமற்ற இடத்தில் தனி வீடு கட்டிக் குடியேறினால், இரவில் நிறைய நகைகளோடு நடமாடினால் நம் மூளை அதில் உள்ள ஆபத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கும். இது போன்ற பயங்கள் நமக்குத் தேவை. இது இப்போது செய்யும் காரியம் ஆபத்தை விளைவிக்கும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மனித மூளை நமக்கு அளிக்கும் சமிக்ஞைகள். இதை வீண் பயம் என்று ஒதுக்காமல் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இவை எந்த நேரமும் மனதை ஆக்கிரமிக்காது. எப்போது தேவையோ அப்போது மட்டுமே வெளிப்படும்.

ஆனால், நம் ஆழ் மனப் பதிவினால் வரும் பயம் எப்போதும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். எப்போது சாலையில் கால் வைத்தாலும் விபத்தாகிவிடும் என நம் செயல்களை முடக்கும். இதை எப்படிச் சரி செய்வது?

இது நிச்சயம் சரியாகக்கூடியதுதான், தொடர் முயற்சியால் சாத்தியபடாதது எதுவும் இல்லை. ஆனால், முதலில் நம்மைப் பரிவோடு அணுக வேண்டும்.

  1. இது சரி செய்யக்கூடிய விஷயம் என்று முழுமையாக நம்புங்கள்.
  2. மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். நாள்பட்ட பயிற்சி மனதை அமைதியாக்கும், பதற்றத்தைக் குறைக்கும். தெளிவான சிந்தனை தரும்.
  3. எது உங்களைப் பயமுறுத்துகிறதோ அதை ஒரு பரீட்சார்த்தமாகச் சிறிது சிறிதாகப் பயற்சி செய்யுங்கள்.

இதனால் ஆபத்து வரும் என்கிற ஆழ் மனப் பதிவு மாற ஆரம்பிக்கும்.

  1. அப்படியும் பதற்றமான நிலை வரும் போது, சிறிது நேரம் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, ஆழ்ந்த மூச்செடுத்த பின் உங்களிடம் நீங்களே மனதுக்குள் பேசுங்கள். ஏதேதோ செய்துவிட்டோம் இதைச் செய்ய மாட்டோமா என்று விஜய் பாணியில் உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
  2. ஓய்வாக இருக்கும் போது உங்கள் பயத்தை நீங்கள் வெற்றி கொண்டு பெருமிதமாகச் செயல்படுவது போன்று கற்பனை செய்யுங்கள். நீங்கள் நிஜமாகப் பயிற்சி செய்யும் போது உங்கள் கற்பனை காட்சியை மனதில் ஓட்டிப் பாருங்கள். மகிழ்சியும் உத்வேகமும் கூடும்.
  3. மெது மெதுவாக உங்களின் பயத்தில் இருந்து நீங்கள் வெளிவருவதை மகிழ்ச்சியுடன் காணத் தயாராகுங்கள்.

உங்களுக்கு ஒருவேளை எந்தப் பயமும் இல்லையெனில் நீங்கள் கீழே காண்பவற்றில் எங்கு உள்ளீர்கள் என ஆராயுங்கள்.

  1. வசதி / பாதுகாப்பான வாழ்வு முறை (comfort zone)

இதில் நமக்குப் பயமே கிடையாது, ஏனெனில் எதையும் நாம் புதிதாக / தனியாக முயற்சிப்பதில்லை. எந்த முடிவும் நமது அல்ல. நிறைய பெண்களின் நிலை இது. பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டு சிறிய வட்டத்திலேயே வாழ்கின்றனர். வாழ்வே அந்த வட்டத்தைத் தாண்டிதான் இருப்பதை உணர்வதே இல்லை. ஆனால், இது வெறும் வசித்தல், வாழ்தல் அல்ல.

  1. பய உணர்வுள்ள வாழ்வு முறை (Fear zone)

ஒரு சில பெண்கள் பாதுகாப்பில் இருந்து சற்று வெளியேறி புதிய விஷயங்களைச் செய்ய முயலும் போது, (கற்கும்போது தவறுவது சகஜம்தானே) ஏற்படும் தவறைக் கையாளத் தெரியாமலும், சமூகம் பல காலமாகக் கற்றுத் தந்த தளையினில் மாட்டிக்கொண்டு பயத்தோடே வாழும் நிலை.

  1. கற்றுக்கொள்ளும் வாழ்வு முறை (Learning zone)

ஒரு சிலர் பயம்தானே தடை, அதை வெல்ல தேவையானவற்றைக் கற்போம் எனக் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பது. ஆரம்பத்தில் கற்றுக் கொள்வதில் உள்ள சிரமம், மற்றவரின் கேலி பேச்சு போன்றவை இருந்தாலும், நாம் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம் என்கிற உற்சாகம் நம்மைச் செயல்படத் தூண்டும்.

  1. வளர்ச்சியை நோக்கிய வாழ்வு முறை (Growth zone)

பயத்தைத் தாண்டி, கற்றுக்கொள்ள ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்ட பின் வரும் நிலை. இங்கேதான் கனவுகளுக்குச் சிறகு முளைக்கிறது. பயத்திலிருந்து முழு விடுதலை, நிஜமான வாழ்வு தொடங்குகிறது.

வாருங்கள் தோழிகளே, நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் வளர்ச்சியை நோக்கிய வாழ்வுக்கு முன்னேறுங்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.