அறுவை சிகிச்சை செய்து, சதைப் பகுதியை இழுத்து ஒரு பந்துபோல் கட்டி வைத்திருந்ததால் கைகளைத் தூக்கி சட்டையோ நைட்டியோ போட முடியாது. அதனால் டூ பீஸ் நைட்டிக்கு மாறினேன். வெளியில் செல்லும்போது புடவை கட்ட முடியாது. வேறு வழியில்லை, சுடிதார்தான் போட வேண்டும். ஆனால், 60 வயதுக்கு மேல் சுடிதார் போடுவது சரியா, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற தயக்கம் எனக்குள் இருந்துகொண்டேயிருந்தது. அமெரிக்காவிலிருந்து என்னைப் பார்க்க வந்த மகன் வினோபா, ‘உடை என்பது அவரவர் வசதிக்குப் போடுவது. அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று எதற்கும் பயப்படாத நீங்கள், ஒரு உடைக்கு இப்படி யோசிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மாற்றம் தவிர்க்க இயலாதது’ என்று சொன்னதும் எனக்குள் இருந்த தயக்கம் மறைந்தது. கோவை செல்வகுமார் மூன்று செட் நைட் டிரஸ்களையும் பிரேமா நான்கு செட் சுடிதார்களையும் வாங்கிக் கொடுத்தார்கள்.

முதல் கீமோதெரபி முடிந்து பத்து நாட்களில் உடை மாற்றம் நிகழ்ந்துவிட்டது. முதல் முறை கண்ணாடியில் சுடிதாரில் என்னைப் பார்த்ததும் எனக்கே பிடித்துவிட்டது. ஓய்வில் இருந்தால் மனம் என்னென்னவோ நினைக்க ஆரம்பித்துவிடும் என்பதால், வினோபாவுக்காக நானே சமைக்க ஆரம்பித்தேன். அவனுக்குப் பிடித்ததைச் செய்யும்போது வலியெல்லாம் தெரியாது, மனம் முழுக்க சந்தோஷமாக இருக்கும். களைப்பு கொஞ்சம் எட்டிப் பார்க்கும். ஆனாலும் என்னைச் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள விரும்பினேன். மகனும் புரிந்துகொண்டு, என்னால் முடிந்த வேலைகளைச் செய்ய அனுமதித்தான். நகைச்சுவையாகப் பேசக்கூடிய என் தம்பி, இப்போதும் ஏதாவது சொல்லி, என்னைச் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதையே முழு நேர வேலையாக எடுத்துக்கொண்டான். புற்றுநோயாளிகள் இப்படி மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால், விரைவில் நோய் குணமாகும் என்பதை இவர்கள் அறிந்திருந்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

அமெரிக்காவில் புற்றுநோயாளிகள் Fight Against Cancer என்று எழுதிய டிசர்ட்களை அணிந்துகொண்டு, கீமோதெரபி எடுத்துக்கொண்டு, அலுவலகத்துக்குச் சென்றுவிடுவார்கள். ஜாகிங் செல்வார்கள். அங்கே மருத்துவர்கள் புற்றுநோய் தீர்க்க முடியாத நோய் அல்ல என்பதை நோயாளிகளுக்குத் தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். அதனால் அவர்களுக்குப் பயம் இருக்காது. நம்பிக்கையுடன் சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள் என்றெல்லாம் வினோபா சொன்னதைக் கேட்டதும் எனக்கும் நம்பிக்கைப் பல மடங்கு அதிகரித்தது.

21 நாள் இடைவெளியில் கீமோதெரபி கொடுப்பார்கள். ஒவ்வொரு கீமோதெரபிக்கு முன்னும் இரண்டு முறை ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த ரிப்போர்ட்டை அறுவை சிகிச்ச செய்த மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரத்த செல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதை அறிந்து, குறைந்திருந்தால் ரத்தம் ஏற்ற வேண்டும். எனக்கு ஒருமுறைகூட கீமோதெரபி கொடுக்கும்போது, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் உருவாகவில்லை. தினமும் கீரை சாப்பிட்டேன். நல்ல புரதச் சத்துள்ள உணவை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டேன். நிறைய பழங்கள், ஜூஸ் சாப்பிட்டேன். மீன் தவிர வேறு எந்த அசைவ உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மிளகு காரம்கூடச் சாப்பிட முடியாது. இதனால்தான் நான் ரத்த விருத்திக்கான மாத்திரைகளைச் சாப்பிடவே இல்லை.

மகன் வினோபாவுடன் மோகனா

ரத்தம் குறைவாக இருந்தால், கீமோதெரபி கொடுக்க முடியாது. கீமோதெரபி கொடுக்க முடியாமல் தள்ளிப்போனால், நோய் குணமாவதிலும், வாழ்நாள் நீட்டிப்பதிலும் சிக்கல் ஏற்படும். எனவே புற்றுநோயாளர்கள், என்னதான் முடியவே இல்லை என்றாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் புரத உணவைத் திடமாகவோ திரவமாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் வாயிலிருந்து மலக்குடல் வரை புண்ணாகவே இருக்கும்.

நான் அறுவை சிகிச்சை செய்து, 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது ஏராளமான நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. என்றாலும்கூட மார்பகப் புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் கீமோதெரபியின் முக்கிய மருந்து Red Devil எனும் ADRIMதான். புற்றுநோய் செல்களைக் கொல்வதிலும் அவற்றைப் பரவாமலும் மேலும் வளரவிடாமல் தடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பொதுவாக இரண்டாவது கீமோதெரபிக்குப் பிறகு முடியெல்லாம் கொட்டத் தொடங்கிவிடும். ஒரு சிலருக்கு முதல் கீமோ முடிந்ததும், சிலருக்கு இரண்டாவது கீமோவின் கடைசி நிலையிலும் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

இரண்டாம் கீமொதேரபிக்காக முதல் நாள் மாலையே கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம். அதிகாலை 4 மணிக்கு கீமோதெரபி கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரவு அதிகம் சாப்பிடக் கூடாது. மூன்றரை மணிக்கே எழுந்து தயாராக வேண்டும்.

முதல் கீமோதெரபியின்போது வாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதால், இந்த முறை அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்கிற முடிவுடன் இருந்தேன். 4 மணிக்கு டாக்டரும் நர்ஸும் வந்தனர். கீமோதெரபி மருந்தை ஏற்றினர். அது 6 மணி நேரம் ஓடும். அதுவரை எதுவும் சாப்பிடக் கூடாது. நர்ஸுடன் அரட்டை அடித்தேன். புத்தகம் வாசித்தேன். என்ன ஆச்சரியம், இந்த முறை வாந்தியோ வயிற்றுப்போக்கோ ஏற்படவில்லை. டாக்டர் மீண்டும் என்னைப் பரிசோதனை செய்துவிட்டு வீட்டுக்கு அனுப்பினார்.

ஓரிரு நாளில் கீமோதெரபி தன் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டது. உடலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் உதிர்ந்தன. கால் விரல்கள், கை விரல்கள் எல்லாம் கறுப்பாக மாறின. நாக்கு முழுமையாகக் கறுப்பாகிவிட்டது. என் தோழி பார்வதி, வள்ளிதாசன், சுஜாதா, பாலாஜி, ஜான் ஆகியோர் என்னைப் பார்க்க வந்தனர். எல்லாருக்கும் நான்தான் உணவு தயாரித்துக் கொடுத்தேன்.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.