நதிகள், ஆறுகள் போன்றவற்றுக்குப் பெண்களின் பெயரை வைத்து வழிபடும் நம் நாட்டில் தான் வரதட்சணை என்ற பெயரில் பெண்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. வரதட்சணைக் கொடுமையால் எத்தனையோ கொலைகள், தற்கொலைகள் நடந்துள்ளன. வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவில் இன்னும் முதிர்ச்சியடையாத மனங்களால் தாம் இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. கல்வியறிவின்மை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை, சமூகத்தில் கிடைக்கும் மரியாதை (?)  போன்ற காரணங்களாலேயே பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை.

விஸ்மயா வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. விஸ்மயாவைத் தற்கொலைக்குத் தூண்டிய அவருடைய கணவர் கிரண்குமாருக்குப் பத்து வருடங்கள் சிறைத்தண்டனையும், பன்னிரண்டரை லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் சரியாகத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் தண்டனை கிடைக்காமல் தப்பித்த இதர குற்றவாளிகளான விஸ்மயாவின் தந்தை, கிரண்குமாரின் குடும்ப உறுப்பினர்கள், கௌரவத்தை மட்டுமே பேசுபொருளாகக் கொண்ட இந்தச் சமுதாயம், எதிர்த்துப் போராடும் துணிவைச் சொல்லித் தராத நமது கல்விமுறை… இவர்களுக்கெல்லாம் தண்டனை வழங்க இயலாத நமது நீதித்துறை (?) இவர்களுக்கு என்ன தண்டனையை வழங்கப் போகிறோம்? 

விஸ்மயா

 விஸ்மயா தன் தந்தையிடம் கணவன் அடிப்பதாகக் கதறி அழுகிறார். ஆனால், அவரோ “குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும்… அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ” என்று சாதாரணமாகச் சொல்கிறார். மனைவியைக் கணவன் அடிப்பது தான் குடும்பமா? அந்தப் பெண்ணுக்கு ‘நானிருக்கிறேன்’ என்ற நம்பிக்கையைத் தராத ஒரு தந்தை என்ன மாதிரியான மனிதர்? ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஸ்மயா இன்று உயிரோடு இருந்திருப்பார். இன்று அழுவதால் பயனொன்றும் இல்லை.      

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல கிரண்குமார்,  “எனக்கு ஹோண்டா சிட்டி தான் பிடிச்சுது. உங்க எச்சத்தனத்தைப் பாத்துட்டு தான் அது காஸ்ட்லினு முடிச்சிட்டேன்” என்கிறார். திருமணம் செய்ய மாமனாரிடம் வரதட்சணை என்ற பெயரில் பணம் பிடுங்குவது எச்சைத்தனமாகத் தெரியவில்லை இவருக்கு. திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை வரதட்சணையாக 11 லட்சம் மதிப்புள்ள ஒரு காரும், 1.25 ஏக்கர் நிலமும், 100 சவரன் தங்க நகையும் தந்துள்ளார்.

அதிக விலையுள்ள காரை வாங்கித் தராதது தான் இங்கே கேவலமாக்கப்படுகிறது. 

 குடும்ப கௌரவம் மட்டுமே முக்கியமான ஒன்று என்று பேசும் சமுதாயத்தின் பிற்போக்குத்தனம் எப்போது மாறப் போகிறது? அந்தப் பெண்ணின் மன வேதனையையும் வலியையும் உணர முடியாத சமூகம் பேசும் பேச்சுதான் அந்தத் தந்தைக்குப் பெரிதாகப் போயிற்று. அப்படியாவது கௌரவத்தை நிரூபித்து, நிலைநாட்டி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? 

நமது கல்வி நமது சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ குறைந்தபட்சம் நமது வாழ்க்கையிலாவது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லவா? கொடுமைப்படுத்தும் புகுந்த வீட்டினர், காதலும் புரிதலும் இல்லாத கணவன் என்ற அந்தச் சூழலை உதறிவிட்டுத் தன் காலில் நிற்கும் தைரியத்தையும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும் தராத இந்தக் கல்விமுறையால் யாருக்கு என்ன பிரயோஜனம்?  யாருமற்ற சூழலில் தனியே நிற்கும் துணிச்சலை விஸ்மயாவுக்கு ஏற்படுத்தாத அந்தத் தாயும் ஒரு குற்றவாளியே. கணவனை எதிர்த்து மகளை அழைத்து வராமல் அக்கம்பக்கத்தினரின் பொழுதுபோக்கு பேச்சுகளுக்கு மதிப்பளித்து வாய்மூடி மௌனித்திருந்த விஸ்மயாவின் அன்னையும் இதில் சம்பந்தப்பட்டவரே. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எப்படி விடை கிடைக்கப் போகிறது?

           

படித்தவர்கள் விகிதம் அதிகம் என்று பெருமையடித்துக்கொள்ளும் கேரளாவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. படிப்புக்கும் அடிப்படை மனிதத் தன்மைக்கும் சம்பந்தம் இல்லை என்று இது நிரூபித்திருக்கிறது. ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தோம். அந்த வீட்டில் ஒரு சிறிய பெண்குழந்தை அழகாகப் பேசி வந்தவர்களை உபசரித்தது. நாங்களும் மகிழ்ச்சியுடன் அந்தக் குழந்தையை எங்கள் அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்துப் பேசிக்கொண்டு இருந்தோம். சிறிது நேரத்தில் உள்ளிருந்து தேநீருடன் வந்த அந்தக் குழந்தையின் பாட்டியாகப்பட்டவர், அந்தக் குழந்தையை எழுந்து உள்ளே போகச் சொல்லி கடுமையாக மலையாளத்தில் பறைந்தார். அதிர்ந்த நான் விவரம் கேட்டதற்கு, “ஆம்பளைங்க முன்னால அவ உக்காந்துட்டு இருக்கிறா… அது என்ன பழக்கம்? நாங்கள்லாம் ஆம்பளைங்க முன்னாடி நின்னுகூடப் பேச மாட்டோம்” என்றபோது எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவேயில்லை. இவர்களெல்லாம் இன்னும் நாலைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னாலிருக்கிறார்கள் என்ற நினைவே பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தியது. அப்புறம் அந்தத் தேநீர் எனக்கு அதிகமாகக் கசந்தது.          

வரதட்சிணை என்பது அந்தந்தக் காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது. தாய்வழிச் சமூகமாக இருந்த காலத்திலும், பெண்களின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த நாட்களிலும் ஆண்கள் நகை அல்லது பணம் கொடுத்து, பெண்ணைத் திருமணம் செய்தார்கள். அதன்பின் தந்தைவழிச் சமூகமாக மாறிய பின்னர் வரதட்சணை என்பது வலுக்கட்டாயமாகப் பெறும் ஒன்றாக மாறிவிட்டது.  இந்தியாவில் பெண்களை இன்னும் ஒரு பொருளாகக் கருதும் மனநிலைதான் இருக்கிறது.   

 நமது நாட்டில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961லிருந்து  தடை செய்யப்பட்டுள்ளது. 2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 சதவீதக்குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். 

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது. அவை:

  • வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு, ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில நேரத்தில் அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961இல், சில திருத்தங்கள் 1984 மற்றும் 1986இல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டு, கணவனும் அவன் உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப்படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. 

            

முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986இல், 304 பி என்ற பிரிவு வரதட்சணை சாவு குறித்துக் கொண்டுவரப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சணை கொடுமைகள் நடந்திருந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் பதிவு செய்யப்படும். கொடுமை செய்த கணவனும் அவர் உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தான் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும்.          

மைக்கேல் விட்செல் என்பவர் பண்டைய இந்திய இலக்கியங்களிலும் வேத காலத்திலும் வரதட்சணை நடைமுறைகள் குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை என்று கூறுகிறார். பண்டைய இந்தியாவில் பெண்களுக்குச் சொத்தில் உரிமை வழங்கப்பட்டதாகவும், பெற்றோர் தாங்களாகவே வழங்கியதாகவும் அல்லது ஆண் பிள்ளைகள் இல்லாத நேரத்தில் பெண் பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இப்படியெல்லாம் இருந்த சமுதாயம் இடைப்பட்ட காலத்தில் ஆண்களின் ஆதிக்கத்தால், மட்டுமின்றி ஆண்களின் சிந்தனையைத் தனது மூளைக்குள்ளும் புகுத்திக்கொண்ட பெண்களால் சரமாரியாகத் தடம் புரண்டது கிடக்கிறது.           

பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகும்போது அதை ஆதாரத்துடன் சட்டரீதியாக எதிர்கொள்ளும் வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வரதட்சணை கொடுக்க மாட்டோம் மற்றும் வாங்க மாட்டோம் என்பதை வெறும் கோஷத்துடன் முடித்துக்கொள்ளாது உண்மையிலேயே கடைப்பிடிக்க வேண்டும். நான் என் கல்லூரி நாட்களில் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று உறுதிபூண்டேன். அதேபோல ஒரு பைசாகூட வரதட்சணை கொடுக்கவில்லை. ஆண்களும் திருமண நேரத்தில் குடும்பத்தின் பின்னால் சென்று பதுங்காமல் தைரியமாக வரதட்சணையை மறுதலிக்க வேண்டும். எத்தனையோ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் பெற்றிருந்தாலும் சக உயிரான பெண்களை மதித்து நடக்கும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்பிள்ளைகளை வளர்க்கும் போதே பெண்ணை சக மனுஷியாக மதித்தால் போதும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். இனியாவது இத்தகைய வரதட்சணைச் சாவுகள் நடக்காமலிருக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.