விடிந்தும் விடியாத காலைப் பொழுது, குளிர் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது, மார்கழி மாதம் அல்லவா! போர்வையை இழுத்துப் போர்த்தி, இரு கைகளை நெஞ்சோடு சேர்த்து அழுத்தி, இரு கால்களையும் ஆடைக்குள் இழுத்து மடக்கிப் படுத்திருப்பது சுகம்தானே. அப்படி ஒரு சுகத்தில்தான் அயர்ந்து நித்திரையில் இருந்தாள் மலர்.

“மணி 3ஆகுது இப்படிப் படுத்திருந்தா என்ன அர்த்தம்? ஜோசியர் என்ன சொன்னார், 3மணிக்கு எந்திச்சி குளிச்சி பக்கத்துல இருக்குற அம்மன் கோயில சுத்தி வந்து கும்பிட்டு, மரத் தொட்டில் கட்டச் சொன்னார். அத விட்டு இப்படித் தூங்குனா எப்படி? கல்யாணம் முடிச்சி 3வருஷம் ஆகுது வயித்துல ஒரு புழு பூச்சியக்கூடக் காணோம், சும்மா தெண்டதுக்குக் கட்டிட்டு வந்து அழ வேண்டி இருக்கு” என்கிற மாமியாரின் வசைச் சொல்லில் விழியை திறந்தாள் மலர்.

பதில் பேசாமல் குளியல் அறையின் உள்ளே சென்று தன்னைப் புதைத்துக்கொண்டாள். பல பெண்களின் கண்ணீர், தண்ணீரோடு தண்ணீராகக் கலந்து கரைந்து கொண்டு ஓடும் இடம் இந்தக் குளியல் அறைதானே.

கோயில் பிரகாரத்தில் கால் எடுத்து வைக்கும் போதே அழுகையின் உச்சத்திற்குச் சென்றுவிட்டாள். அரச மரத்தின் அருகில் வந்து மரத் தொட்டிலை அதன் கிளையில் கட்டினாள். ஏற்கெனவே பல தொட்டில்களைத் தன் வசம் வைத்திருந்த அரச மரம், அவளைப் பார்த்து ஏளனமாக வாங்கிக் கொண்டதாகத் தோன்றியது மலருக்கு.

வீட்டுக்கு வந்து சமையல் அறையினுள் நுழைந்து தன் தினசரி வேலைகளைத் தொடங்கினாள். பக்கத்து வீட்டு ராணி, “அக்கா” என்று மலரின் மாமியரை அழைத்துக் கொண்டு வந்தார்.

“வா ராணி.”

“அக்கா, உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம தேவி அக்கா மருமகள், அதான் இப்ப கல்யாணம் முடிஞ்சிதுல அந்தப் பொண்ணு முழுகாம இருக்கு அக்கா.”

“ஆமா ராணி நானும் கேள்விப்பட்டேன். இங்க வந்து 3 வருஷம் ஆகுது. ஒன்னயும் காணோம், ஒரு புள்ள பெத்து குடுக்க துப்பில்ல. என்ன பாவம் பண்ணாளோ தெரியல, எல்லாக் கோயில் குளமும் ஏறி இறங்கியாச்சு?” எனப் பொரிந்து தள்ளினார் மாமியார்.

அந்த நேரம் மலர் ஒரு டம்ளர் நிறைய சீனியை அடைத்துக் கொண்டிருந்தாள்.

ராணி, “ஆமா அக்கா, உங்களுக்குப் போய் இப்படி ஒரு புள்ள பெத்து குடுக்க முடியாத மலடி மருமகள் வாச்சிருக்கே, என்னால தாங்க முடியல. இந்தக் குடும்பத்துக்கு ஒரு வாரிசு இல்லாம ஆருயிச்சே அக்கா” என உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தார்.

“என்ன பண்ண, என் தலை எழுத்து.”

“அது வந்து அக்கா கொஞ்சம் சீனி இருந்தா குடுங்களேன். கடை பூட்டிருக்கு, நாளைக்கி தரேன் ” என்றார் ராணி.

“மலர்” என மாமியார் குரல் கொடுத்ததும், “வரேன் அத்தை” என்று ஏற்கெனவே தயாராக வைத்திருந்த சீனியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மலரின் நாத்தனர் பேறு காலத்திற்கு வந்திருந்தாள். குழந்தையும் பிறந்தது. நாத்தனாரின் குழந்தையைத் தொட்டுப் பார்க்க ஆசை. ஆனால், வளைகாப்பு நிகழ்வில் நடந்ததை நினைவுபடுத்திக் கொண்டாள். வளைகாப்புக்கு வந்த வயதான பெண்மணி மலரைத் தனியாக அழைத்து, “நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, பார்த்துப் பக்குவமாக நடந்துக்கோ” என்று சொல்லி விட்டுச் சென்றார்.

ஒருநாள் ரகு மலரிடம், “நமக்கு குழந்தையே இல்ல. எவ்வளவோ மருத்துவம் செஞ்சாச்சு. அதனால அம்மா என்ன சொல்றாங்கன்னா….” என்று வார்த்தைகளை முழுங்கிக் கொண்டிருந்தான்.

“வேற கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்களா?”

ரகு அமைதியாக இருந்தான்.

மலர் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வீட்டிலிருந்த ஒருவரும் அவளைத் தடுக்கவில்லை.

தோழி மூலம் ஒரு வேலையில் சேர்ந்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, தோழியுடன் ஷாப்பிங் போனபோது அந்த போர்டு அவள் கவனத்தை ஈர்த்தது.

அது ஒரு குழந்தைகள் காப்பகம். ‘தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஏங்கிய மலர், ஒவ்வொரு குழந்தையும் தனக்கு ஒரு தாய் வேண்டும்’ என்று ஏங்குவதாக உணர்ந்தாள்.

“ஏய் மலர், ரகு வேற கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி, நீயும் பண்ணிக்கலாம். அவசரப்படாதே” என்றாள் தோழி.

“இன்னொரு முறை ஏச்சும் பேச்சும் வாங்க என்னால முடியாது. எனக்கு ஒரு குழந்தை வேணும்” என்றவள்,

விடுதி காப்பாளரிடம் தத்து எடுக்கும் முறையைக் கேட்டாள்.

முதலில் குழந்தையைத் தத்து எடுக்க தகுதிகள்:

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

திருமணம் ஆனவர்களும் திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.

தனி ஆண்மகன், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகே தத்தெடுக்க முடியும்.

வயது விதிமுறைகள்:

தனி பெற்றோராக இருந்தால் 50 வயது.

செயல்முறைகள்:

1. தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் தங்கள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

2. ‘காரா’ (CARA- Central Adoption Resource Authority) வலைத்தளத்தில் (cara.nic.in) அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

3. விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்.

4. அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஆதரவு அற்ற இல்லங்கள், அமைப்புகள், தன்னார்வ இயக்கங்கள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் காண்பிக்கப்படும்.

5. தாங்கள் விரும்பும் குழந்தையைத் தேர்வு செய்ய முடியும்.

6. இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.

7. தகுதியான பெற்றோர் குழந்தையைத் தத்து எடுத்தவுடன் அரசு சாரா இயக்கம் அல்லது இல்லம் குழந்தையை தத்து கொடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவ்வாறு குழந்தையைத் தத்தெடுக்கலாம்.

இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும் என்று ஒப்புவித்தார் விடுதி காப்பாளர்.

மலர் விண்ணப்பித்து ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தாள். யாசினி என்கிற தேவதை அவள் வாழ்க்கை மேலும் அழகாக்கினாள்.