நமது நாட்டில் சமீபமாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபரிமிதமானது. ஒருவரின் கதையோ கருத்தோ அல்லது தனிப்பட்ட திறமையோ பலவும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்த வழி தெரியாமல், சின்ன வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து மடிந்தவர்கள் அதிகம். ஆனால், தற்போது சமூக வலைத்தளம் சாமன்யர்களின் குரலையும் ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.

திரை நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் என ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்த பிரபலத்தன்மை இன்று சர்வ சாதாரணமாகப் பலரையும் சென்றடைந்து வருகிறது. தங்கள் அரசியல் சார்பை, கருத்துகளை, சமூக அக்கறையை, கலையை, இலக்கியத்தை என எதையும் பக்கம் பக்கமாக எழுதுபவர்கள், நறுக்கு தெரித்தாற்போல நான்கு வரிகளில் ட்வீட்டுபவர்கள், கிண்டல் தொனியில் வடிவேலு படத்துடன் மீம்ஸாகப் பதிந்து கடந்து செல்பவர்கள் எனப் பலர் அவரவரின் திறமைக்கு ஏற்ப புகழடைகின்றனர்.

சமையலில் ஆரம்பித்து ஆடல், பாடல், வியாபாரம் வரை பல மனிதர்களைச் சமூக வலைத்தளங்கள் பிரபலத்தன்மை அடையச் செய்திருக்கிறது. அது சந்தோஷமான விஷயமும்கூட. ஆனால், இந்தப் பிரபலத்தன்மையின் மறுபக்கம் வன்மம் செறிந்ததாக இருக்கிறது. பிரபலத்தன்மையடைய ஆசைப்பட்டு தன் திறமைகளை வெளிக்கொணர துடிப்பவர்களைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் விமர்சனத்தை எதிர்நோக்கியிருப்பார்கள். இல்லையென்றாலும் யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள். அதனால் அதனை எதிர்கொள்ளவோ புறக்கணிக்கவோ தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள். இதில் எதுவும் இல்லாமல் பிரபல நிகழ்ச்சிகளில் தங்கள் முகத்தைக் காட்டும் ஆசையில் உள்ளே வரும் அப்பாவிகள் பலிகடாக்களாக ஆக்கப்பட்டு, பொதுவில் அதிக அவமானத்துக்குள்ளாக்கப்படுவது குறித்துப் பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளாமல் கடப்பதுதான் வேதனை தரும் விஷயம்.

பல உண்மை சம்பவங்கள் அடிப்படையிலான நிகழ்ச்சிகள், பொது மக்களைப் பங்கு பெறச் செய்து நடக்கும் விவாதங்களின் தீர்ப்புகள் ஒருதலைபட்சமாக அல்லது பார்வையாளர்களை உணர்வுவயப்படச் செய்து, அதன் மூலம் பரபரப்பைக் கூட்டி, தங்கள் டிஆர்பி ரேட்டிங்கைக் கூட்டுவதற்காக நடத்தப்படுகிறதோ என்கிற சந்தேகத்தை எழச் செய்கிறது.

மக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிலர் அங்கு அவமானப்படுத்துப்படுவது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்களில் ட்ரோல் மெட்டீரியலாக, இரண்டு நாட்களுக்கு ஆய்வுப் பொருளாக, பேசு பொருளாக உருட்டிப் பந்தாடப்படுகிறார்கள். அடுத்து ஒருவர் சிக்கும் வரை இது தொடர்கிறது.

இதனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு என்ன மாதிரி பாதிப்புகள் இருக்கும், அவர் அடையும் மன உளைச்சல்கள் பற்றி அக்கறை யாருக்கும் இருக்கிறதா என்றே தெரியவில்லை.

இந்த நிகழ்வுகள் மூலம் பல கருத்துகள் விவாதப்பொருளாக மாறியுள்ளது ஏற்கத்தக்கதுதான் என்றாலும், அதை நடத்துபவர்கள் சென்சிபிளாக இருக்கிறார்களா என்றால் பலர் அப்படி இல்லை. பெரும்பாலும் தங்களின் அதிமேதாவித்தனம், அறிவுஜீவித்தனம் ஆகியவற்றை வெளிப்படுத்த உபயோகிக்கும் தளமாகப் பார்க்கப்படுகிறது. உணர்வுகளை விவாதமாக்கி வியாபாரமாக்கும் கலை தெரிந்தவர்களிடம், அப்பாவியாக, உண்மையாக இருக்கும் மக்கள் மாட்டிக்கொண்டு அவமானப்படுவதைப் பொதுச் சமூகம் ரசிப்பதைப் பார்க்கும் போது மனம் அதிர்கிறது.

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள், நடத்துபவர்கள் கூறுவது அவர்கள் முன்வைக்கும் நியாயங்கள், வாதங்கள் உண்மையானது போலத் தோன்றினாலும், உண்மையில் நியாயமானதாக இருப்பதில்லை. உதாரணமாக அதிகம் பேசப்பட்ட, சமூக வலைத்தளங்களில் ஒரு பெண்ணைப் பொதுச் சமூகத்தின் பார்வையில் மிக கீழ்மையாகச் சித்தரித்த ஒரு நிகழ்வைப் பற்றி மட்டும் கூறுகிறேன். பலரும் பார்த்திருக்கக்கூடும் ஒரு பெண் தன் உதவாக்கரை கணவரை பற்றிக் கூறுகிறார். அவர் கூறியதில் சில வார்த்தைகள் பொதுவெளியில் பகிரக்கூடாததாகக்கூட சமூகத்தால் வரையறுக்கப்பட்டிருக்கலாம்.

ஏனென்றால் எதுக்குமே உதவாத, குடும்பப் பொறுப்பில்லாதவனாக ஒருவன் இருந்தாலும், அவனை எங்கேயும் எப்போதும் விட்டுக்கொடுக்காமல் பேசுவதுதான் ஒரு மனைவியின் அழகு. ஏனென்றால் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் போன்ற அழகியலால் கட்டமைக்கப்பட்டதுதானே நம் சமூகம்! அதனால் அந்தப் பெண் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவதையும், அதிகம் படிக்காத அவளின் கணவர் தனது மகள் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கணவன் என்றும் பாராமல் அந்தப் பெண் பொதுவெளியில் கிண்டல் செய்தது பெரும் பேசு பொருளாக்கப்பட்டு விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளானது. அந்தக் குழந்தையின் தந்தை அவமானப்படுத்தப்பட்டு, ஓர் ஆணின் தன்மானத்திற்கு இழுக்கு வந்தபோது, உடனடியாக அது அறச்சீற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டு சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு எத்தனை எத்தனை வசைகள்?

குடும்பத்துக்காக எதையும் செய்யாது, மனைவியின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடக்க, தன்னை மேம்படுத்திக்கொள்ளாது, கழிவிரக்கத்திலும் இயலாமையிலும் உழலும் ஆணுக்குச் சிறந்த தந்தை பட்டம். எவ்வளவு அற்புதமான விஷயம்! இதே இடத்தில் பாலினம் மாறி பெண்ணுக்குப் பதிலாக ஆண் இருந்தால் சிறந்த தாய் பட்டம் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டு இருக்குமா? எதற்கு கொடுக்க வேண்டும்? கணவன் எப்படியானவனாக இருந்தாலும் ஒரு குடும்பத்தை நடத்துவதும், குழந்தையின் வளர்ப்பும் பெண்ணின் கடமை. அதற்குச் சிறந்த தாய் பட்டமெல்லாமா கொடுப்பாங்க?

அந்த ஒரு பெண்ணின் பேச்சு மட்டும் ஆண், பெண்களால் ஒட்டு மொத்தமாகச் சுட்டிக் காட்டப்பட்டு மற்றவை எல்லாம் பின்தள்ளப்படுவதில் இருக்கும் அரசியலைப் பலருக்கும் புரிய வைக்க முடியாது போவதுதான் கொடுமை. அந்த நிகழ்ச்சி வந்த சில நாட்களிலேயே அந்தப் பெண்ணின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வசைமாறி பொழியப்பட்டதுடன், யூ டியூப் சேனல்கள் அனைத்திற்கும் பேசு பொருளானார்.

அந்தப் பெண் சாதாரணமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர், அவருக்கு எந்த அரசியலும் தெரியாது, பிரபலமானவர் இல்லை. தன் மனதில் உள்ளதைச் சட்டென உணர்ச்சி வேகத்தில் கொட்டிவிட்டார். அதற்காக அவள் வேலை பார்க்கும் இடத்தில், குடும்பத்தில் எத்தனை அவமானமும் கேலியும் சந்தித்து இருப்பார். இதைப் பற்றிய அக்கறை நிகழ்ச்சி நடத்துபவர்களுக்குதான் இல்லை என்றால், அவரை அவரது படத்தை வைத்து ட்ரோல் செய்தவர்களாவது நினைத்துப் பார்த்தார்களா? பொதுவில் அப்படிப் பேசினாங்க இல்லையா, அதுக்கு வேண்டும் என்பவர்கள் மனதில்தான் எத்தனை வன்மம்?

ஆனால், இன்றளவும் பெண்டாட்டி வீட்ல சும்மாதான் இருக்கா, உனக்கு என்ன வெளியுலகம் தெரியும், வேலைக்குப் போனாதான் வலி தெரியும் உள்ளிட்ட இத்யாதி இத்யாதி வசைகள் காலம்காலமாகப் பெண் மீது விழுந்து கொண்டிருப்பது என்றைக்காவது பேசு பொருளாக ஆகியிருக்கிறதா? பட்டிமன்ற மேடைகளில்கூட இவையெல்லாம் ஜோக் என்கிற ரீதியில்தான் பார்க்கப்படுகின்றன. அதற்கும் பெண்கள் கைதட்டி ரசிக்க பழக்கப்பட்டு இருக்கிறோம்.

ஒரு விஷயம் பேசுபொருளாக மாற்றப்பட்டிருப்பதற்கு, மாற்றப்படுவதற்குப் பின் உள்ள அரசியலோ, உள்நோக்கமோ பலருக்குப் புரிவதில்லை.

ஒருவரை விமர்சிக்க, தூற்ற தங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியை அளவீடாகப் பயன்படுத்துகின்றனர். அதில் வெளிப்படுவது நான் அப்படியானவர் இல்லை, ரொம்ப பர்பெக்ட் என்பதைத்தான் வெவ்வேறு வகையில் கூற முயல்கின்றனர்.

இதே போல ஒரு பெண் தனது கணவன் இறந்ததைப் பொதுவில் கூறியதும், விவாகரத்து பெற்றதைக் கொண்டாடி போட்டோ சூட்டிங் எடுத்து பகிர்ந்ததை அதன் பின்னணி குறித்து அறியாமல் பலரும் குதறி எடுத்தனர். ஒரு மனைவி நாய் கடித்து இறந்து போக, அந்த நாயை வாங்க க்யூவில் கணவர்கள் நின்றதாகக் கூறும் கதையை நகைச்சுவை கதை என விழுந்து விழுந்து சிரிப்பவர்களால் ஏன் இதனை நகைச்சுவையாகக் கடக்க முடியவில்லை?

சாலையில் நாம் செல்லும்போது ஒரு விபத்து நடக்கிறது என்றால், அது எதனால் நடந்தது என்றுகூட யோசிக்காமல், குடித்துவிட்டு வண்டி ஒட்டியிருப்பார், பேசிக்கொண்டே ஓட்டி இருப்பார் என நாமாக ஒரு முன்முடிவு எடுத்துக்கொண்டுதான் அதனை அணுகுகிறோம். தான் எடுத்த முன்முடிவை மறுக்கப் பலரது ஈகோ இடம் தராது. அதனால் தான் எடுத்த முடிவுக்கு வலு சேர்க்க காரணிகளைத் தேடுவார்கள்.

ஆட்டோக்காரரும் கார் ஓட்டுனரும் இடித்து நடு ரோட்டில் சண்டை போட்டால், கூட்டம் கூடி வேடிக்கை பார்ப்பவர்கள், தாங்களாக ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து, இந்த ஆட்டோக்காரர்கள் இப்படித்தான் என்று ஒரு சாராரும், கார் வச்சிருக்கவங்களுக்கு ப்ளைட் ஓட்டுறது போல நினைப்பு என்று ஆரம்பிப்பார்கள். இந்தச் சண்டையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகர முடியாமல் இருப்பவர்கள் ஏதோ தங்களால் மேலும் நகர முடியாமல் நிற்க வேண்டி இருப்பதால் சொல்கிறார்கள் என்றால், ஓர் ஓரமாகத் தன் பாட்டுக்கு நடந்து போய்க்கொண்டு இருப்பவர்கூட ஆட்டோக்காரங்களுக்கும், கார் ஓட்டுபவர்களுக்கும் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லை என்று போகிற போக்கில் சொல்லிச் செல்வார்கள்.

இதில் யாருக்குப் போக்குவரத்து விதிகள் பற்றிய தெளிவு இருக்கும் என்று பார்த்தால், பலருக்கும் அடிப்படை விதிகள்கூடத் தெரியாது. சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான விவாதங்கள் இப்படியாகத்தான் செல்கிறது. ஒரு பிரச்னையின் ஆணி வேர் புரியாமல், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தங்களுக்குத் தெரிந்த, அல்லது கற்பிக்கப்பட்ட வாழும் ஒழுக்க நெறிகளைப் பறைச்சாற்றிக்கொள்ள அடுத்தவர்களைக் காறி உமிழ்வதை எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் பலரும் செய்கிறோம். அதனாலேயே பல பிரச்னைகளின் உண்மைத்தன்மையை நாம் உணர்வதே இல்லை.

அறிவென்பது ஆராய்ந்து உண்மை அறியவும், நம்மைத் தெளிவடையவும் செய்ய வேண்டுமே தவிர, பொறுப்பில்லாமல் பிறரை எள்ளி நகையாடுவதற்காக இல்லை என்பதை எப்போது உணரப் போகிறோம்?

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.