ஷாலினி, உன் ஹஸ்பெண்ட் கெட்ட வார்த்தை பேசுனதாலயா நீ வீட்டை விட்டு வெளிய வந்த?” என்று கவிதா கேட்டாள்.

“ஆமா கவிதா… எங்களுக்குள்ள சண்டை இதுக்கு முன்னாடியும் வந்திருக்கு. ஆனா, இப்ப புதுசா கெட்ட வார்த்தையும் சொல்லிப் பேசுறான். என்னால இப்படி எல்லாம் கேட்டுட்டு வாழ முடியாது.”

“ஏன் ஷாலினி, இந்த ஆண்கள் எவ்வளவு ஈசியா கெட்ட வார்த்தையா நம் மேல வீசுறாங்க? நினைத்தாலே உடல் எல்லாம் கூசுது” என்கிற கவிதாவின் மீது நித்யாவிற்கு அனுதாபம் மேலிட்டது.

“அப்போ, அருண் கெட்ட வார்த்தை பேசுனதுதான் உனக்குப் பிரச்னை…” என்று கேட்டாள் நித்யா.

“ஆமாண்டி…கேக்கும் போதே காதுல ஈயத்த காய்ச்சி ஊத்துன மாதிரி இருக்கு” என்றாள் ஷாலினி.

“ஆமா, அவங்களுக்குச் சொல்லுறதுக்கு நாக்கு கூசவே இல்லை” என ஆமோதித்தாள் கவிதா.

“எல்லார் பிறப்புக்கும் ஆதாரமாக இருக்கிற ஒரு விஷயத்தை, எப்படிக் கேவலமாகப் பேசுவதற்கு மனசு வருதுனு தெரியல. ஆணுக்கும் பெண்ணுக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒன்றை, தன் வாழ்வுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை, ஏன் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை ஏன் இவ்வளவு கேவலமாகப் பேச வேண்டும்? இழிவாக இளக்காரமாக நினைக்க வேண்டும்? காரணம் என்னவாக இருக்க முடியும் நித்யா?”

ஷாலினி, கவிதாவின் கண்களைப் பார்த்து, “நரியும் திராட்சையும் கதை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

“ஆமா.”

“அதே கதையாகக்கூட இருக்கலாம். சீ… சீ… இந்தப் பழம் புளிக்கும் தத்துவம் மாதிரியாகக்கூட இருக்கலாம். அதனால்தான் எல்லாருக்கும் எல்லாத் தோல்விகளுக்கும், இழிவான ஒன்றுக்கும் அதையே குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ.”

“இவங்க எல்லாம் பெண்ணுறுப்பை இவ்வளவு கேவலமாகப் பேசிப் பேசி, பெண்களுக்கு ஒருவித வெறுப்பு வந்து விடுகிறது. மதிப்பு குறைந்த ஒன்றாக நினைத்துக் கொள்கிறோம். நாமும்கூட உச்சரிப்பதற்கு எவ்வளவு சங்கோஜப்படுகிறோம். அது மட்டுமல்ல, பெண்ணுறுப்பு சிதைப்பும் இன்றளவும் உலகில் நடந்து கொண்டுதானே இருக்கிறது?”

“உண்மைதான்… இங்கு யாரும் வெற்றி பெற்றமைக்காகவோ நல்ல விஷயங்களுக்காகவோ அவற்றைக் குறிப்பிடுவதில்லை” என்றாள் ஷாலினி.

“இதன் பின்னால் இருக்கும் நுண்ணரசியலை தெரிந்து கொள்ள வேண்டும்.”

“அரசியலா? என்னது?” ஆர்வமாகக் கேட்டாள் கவிதா.

“வாரிசுக்காகவும் தன் உடல் தேவைக்கும்தான் தன்னை ஒரு ஆண் கல்யாணம் பண்ணியிருக்கிறதா நம்புகிறாள் கவிதா. அப்படியானால், அந்த இரண்டிற்கும் ஆதாரமாக இருப்பதை, அவள் பெருமையாகத்தானே நினைக்கணும்? ஆனால், அது குறித்து இழிவாகவும் தாழ்வாகவும் நினைக்க வைச்சிருக்குதில்ல. அதுதான், இந்தச் சமுதாயம் நம்மையும் மீறி, நமக்கும் தெரியாமல், நமக்குள்ள புகுத்தியிருக்கிற உடலரசியல். அது மட்டுமல்ல… சமூகம் சார்ந்த கட்டுப்பாடுகள், மதம் சார்ந்த கட்டுப்பாடுகள், தீட்டு எனச் சொல்லி எல்லாரையுமே ஏதோ ஒரு விதத்தில் குறைவாக நினைக்க வைத்திருக்கிறது இந்தச் சமூகம். ஏனென்றால், பிற மொழிகளிலும்கூடப் பெண்ணையும் பெண்ணுறுப்பைச் சுட்டுவதாகவும் கெட்ட வார்த்தைகள் இருக்கு. நாம் ஒவ்வொருவரும் இங்கு இருப்பதற்கான காரணமே, பெண்ணுறுப்புதானே? ஆனால், அதை ஏன் கீழான ஒன்றாக, கீழ்த்தரமான சொல்லாக வேண்டும்?”

சரி என்ன தான் செய்ய முடியும்?

பிரத்யேகமாக, பெண்களை அவமானப்படுத்த வேண்டி சொல்லும்போது, கெட்ட வார்த்தையில் முன்னால் இருக்கும் ஜட்ஜ்மெண்டான சொல் ‘கெட்ட’ என்பதை நீக்கி விட்டு, அது வெறும் வார்த்தை மட்டுமே என பார்க்க முயற்சி செய்யலாம்.

பெண்ணுறுப்பு சிதைத்தல் எத்தனையோ இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. ஒட்டுமொத்த பிரச்னையுமே அங்குதான் இருக்கிறது போலவே கருதப்படுகிறது. அடுத்த முறை பெண்ணுறுப்பையோ நம் உடல் பாகங்களையோ மதிப்பு குறைவாகச் சொல்லும்போது, அதை இழிவாகவோ நம்மிடமிருந்து பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமோ இல்லை என்கிற தெளிவுடன் இருக்கலாம். மாறாக, ஆமாம்… பெண்ணாக இருப்பதில் எனக்குப் பெருமைதான் எனச் சொல்லிக்கொள்ளலாம். நம்மிடமிருந்து ஆரம்பிக்கும் சிறிய மாற்றம் இதுவாக இருக்கலாம்.”

“இங்கே பெண்கள் ஒவ்வொருவருக்குமே, ஒவ்வொரு விதமான காயங்கள். அது உடலளவில் நடந்த அத்துமீறல்கள், சீண்டல்கள், வார்த்தைகள் தந்த வலிகள், புறக்கணிப்பு என நீண்டு செல்லும். பெரும்பான்மையான நேரத்தில் இவை மன அழுத்ததிற்கு இட்டுச் செல்லும். அது நம்மை நமது முக்கியத்துவத்தை, நமது பலத்தை உணரச் செய்யாமல் தடுக்கும். அதுவே, சில நேரத்தில் நம் மீதான கோபமாகவும் மாறிவிடுகிறது. ஏனென்றால் நம்மையும் அறியாமல், நம் உடலைப் புறக்கணிக்க ஆரம்பிக்கிறோம். உடல், உள்ள ஆரோக்கியம்தான் அடிப்படையான தேவை இங்கு. எனவே, உடலை, எல்லா உறுப்புகளையுமே பெருமைக்குரியதாக, நமக்குரிய அளப்பெரிய சொத்தாக நினைத்துக் கூடுதல் அக்கறை செலுத்துவோம். அலட்சியத்திற்கு இடமே இல்லை.

எல்லாருமே பாதிக்கப்பட்டவர்கள்தாம் என்றாலும், பெண்ணுக்குத்தான் இங்கு உடலே சுமையாக ஆக்கப்படுகிறது. பாதிப்புகள், தன்னுடலை சுமையாக நினைக்கின்ற உணர்வுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாமல் இருக்க, நாம் செய்யும் சிறிய மாற்றம், நம்மை நாமே அங்கீகரிப்பது மட்டும்தான்.”

“அப்படியானால், இந்த மாதிரி பேசித் திரிபவர்களை என்ன செய்வது?”

“ம்… குடும்பங்களில் ஷாலினி மாதிரி எதிப்பு காட்டலாம்.

ஆனால், பொது வெளியில் நம்மையும் மீறி சொற்கள் காதுகளை வந்தடையும் அளவிற்கு வார்த்தைகளை உதிர்த்து தவறு செய்பவர்கள் திருந்துவதற்கான முதற்படி என்ன தெரியுமா? நம் உடல் குறித்த முழு அதிகாரத்தையும் முழு அங்கீகாரத்தையும் நம் கையில் வைத்துக் கொள்வதுதான்.

ஏனென்றால், மரத்தின் விதையை மண்ணில்தான் விதைத்தாக வேண்டும். சுதந்திரத்தின் விதை மனதில்தான் முளைத்தாக வேண்டும். பெண்ணுயிர் உறைந்திருக்கும் பெண்ணுடலுக்கான சுதந்திரம், பெண்ணுடலை அங்கீகரிப்பதில்தான் இருக்கிறது. மனித குலத்திற்கான தலைவாசலே பெண்ணிடம் இருக்கும் போது, நாம் ஒவ்வொருவரும் , நம்மை முழுவதுமாக, நம் ஒவ்வொரு நுண்ணிய, நுணுக்கமான பகுதிகளோடு அங்கீகரித்து, பாராட்டிக் கொள்ளலாம். நிறைய அன்பை நமக்கு நாமே தரலாம். ஏனென்றால், பெண்ணுயிர் பேரதிசயத்தின் எல்லா அங்கங்களுமே பெருமைக்குரியவைதான்!”

(தொடரும்)