“ஹாய்.”

“ஹாய்.”

“எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன். நீங்க?”

“ம்… சாப்டியா?”

அந்தக் கேள்வியைத் திரையில் பார்த்ததும் வருணுக்குத் தொண்டை விக்கிக்கொண்டது. உண்மையில் அவன் ஏதும் சாப்பிட்டிருக்கவில்லை.

தீபாவளிக்கு முன்பு குழந்தைகளுடன் மாமனார் ஊருக்கு வந்தது முதலே ஓயாத வேலை. மாமனார் வீட்டில் சமையல் வேலை, வீட்டு வேலைக்கு இருந்தவர்கள் எல்லாம் தீபாவளி கொண்டாட விடுமுறையில் சென்று விட்டிருக்க, கைக்கு ஒத்தாசையாக மாமனார் வருணை அழைத்துக்கொண்டது நினைவிருக்கலாம்.

வேலை செய்வதுகூடப் பிரச்னை இல்லை, ஆனால் வருணுக்கும் வயிறு ஒன்று இருப்பது அந்த வீட்டில் யாருக்கும் நினைவில் இல்லை. சொல்லப் போனால் ஆண்கள் யாரும் சரியாகச் சாப்பிட்டே பார்த்ததில்லை. பல காலமாகக் காலை உணவைத் துறந்த மாமனாருக்கு ஐம்பது வயதிலேயே அல்சர் வந்துவிட்டது.

இதோ இன்று, காலையிலேயே நிலாவின் தம்பி வந்திருப்பதை அறிந்து நிலாவின் அண்ணனும் குடும்பத்தோடு வந்து விட்டான்.

மருமகள்களை நல்லபடியாகக் கவனிக்க வேண்டுமே என்று மாமனாருக்கு டென்ஷன். மகன்களை வேலை வாங்கவும் கூடாது. பாவம் பிறந்த வீட்டில்தான் ஓய்வெடுக்க வருகிறார்கள் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்ட மாமனாருக்குக் கொஞ்சம் உடம்பு முடியாமல் போய்விட்டது.

வேறு வழி?

“நீங்க இருங்க மாமா, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வருணே எல்லாம் செய்தான். ஆனாலும் சமையலறையில் ஓர் ஓரமாக நாற்காலி போட்டு அமர்ந்தபடி மாமனார் உத்தரவுகளைப் பிறப்பிக்க, வருண்தான் ஓடியாடி எல்லாம் செய்தான். சின்ன மருமகளுக்கு மீனை இப்படிச் செய்தால் பிடிக்காது. பெரிய மருமகள் சிக்கன் தவிர எதுவும் சாப்பிட மாட்டார் என்கிற நிபந்தனைகளுக்கேற்ப ஆளுக்கு ஒன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தான் வருண்.

வியர்த்து விறுவிறுக்கச் சமையலை முடித்துப் பாதி ஆறிப்போயிருந்த டீயைக் குடித்து முடித்தான். அப்படியும் பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் சாப்பிட நேரம் இருக்கவில்லை. தான் சாப்பிடும்போது மாமனார் ஒரு முறை நினைவுபடுத்தியது உண்மைதான். ஆனால், அந்த நேரம் சரியாக நிலாவின் தோழி வந்துவிட்டார். நிலா வருணை அழைக்க, அவர்களுடன் கொஞ்சம் சிரித்துப் பேசிக் கொண்டு நின்றதில் நேரம் போய்விட்டது. சாப்பிட மறந்துவிட்டான்.

பூரியும் மசாலாவும் ருசியாக இருந்தது என்று பாராட்டிய அத்தனை பேரில் ஒருவர்கூட வருண் சாப்பிட்டானா இல்லையா என்று அறிந்திருக்கவில்லை. கேட்கவும் இல்லை.

“வருண், பொம்பளைங்களுக்கும் குழந்தைகளுக்கும் இலையப் போடுப்பா. நிலா பசி தாங்க மாட்டா.”

“நீங்களும் சாப்பிடுங்க மாமா” என்று வற்புறுத்தி மாமாவையும் உட்கார வைத்தான் வருண். மாமனார் மெச்சும் மருமகனாக இருக்க வேண்டாமா?

சாப்பிட்டு விட்டு அவர் கண்ணயரப் போகிறேன் என்று அறைக்குள் சென்றுவிட்டார்.

பெண்கள் அனைவரும் கிளாசும் கையுமாக இருந்தனர். பத்து முறை அழைத்த பிறகே வந்து இலை முன் அமர்ந்தனர். அரட்டையும் பேச்சுமாக அவர்கள் சாப்பிட்டு முடிக்க இரண்டு மணி நேரம் ஆனது.

குழந்தைகள் இலையெல்லாம் களேபரம். சரியாகச் சாப்பிடாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு அப்பாக்கள் அடியை வைத்துக் கொண்டு ஒரு புறம் ஊட்டிக் கொண்டிருந்தனர்.

இறுதிப் பந்தியில் வருண், நிலாவின் அண்ணன், தம்பி மட்டுமே பாக்கி. வீட்டுப் பையன்கள் முதலில் நன்றாகச் சாப்பிடட்டும் என்று வருண் பார்த்துப் பார்த்துப் பரிமாறினான்.

“மாமா, சமையல் சூப்பர்!” என்று மனதாரப் பாராட்டினார்கள் இருவரும், வருணின் கண்கள் பனித்தன. சிக்கன் கிரேவியில் ஒரு பீஸ்கூட இல்லை. மீனிலும் தலையும் வாலும் மட்டும் இருந்தது. சோறும் ஆறிப்போயிருந்தது.

வருண் சாப்பிட்டு முடிக்கும் வரைகூட இருக்க ஆளில்லை. ஆளுக்கு ஒரு பக்கம் போன் பேசப் போய்விட்ட பின் வருணும் இடது கையால் போனை நோண்டிக் கொண்டிருந்த போதுதான் மெசஞ்சரில்… ‘ஹாய், சாப்டியா?’

என்று அனுப்பியது நிலாவின் ஃபேக் ஐடி என்று தெரியாமல் தனது உணர்வுகளைக் கொட்டத் தொடங்கினான் வருண்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.