“மாமா, இந்தாங்க டிபன்.” சுடச்சுட இரண்டு தோசைகளைத் தட்டில் வைத்து அருகில் ஸ்பூனுடன் சட்னி கிண்ணத்தைக் கொண்டு வந்து வைத்தான் வருண். ஃபேனைப் போட்டான். அருகில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான்.

“அத்தை சாப்டாச்சா?

“சாப்டாங்க மாமா. யசோதா ஆன்ட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க.”

“நிலா சாப்பிட்டுப் போனாளாப்பா?”

“இல்ல மாமா. டிபன் வேண்டாம்னு சீக்கிரமே கிளம்பிட்டா. கார்ன் ஃப்ளேக்ஸ் மட்டும் போட்டுக் குடுத்தேன்.”

“ம்ச்… டெய்லி இதையே குடுத்தா அவ ஒடம்பு என்னத்துக்கு ஆகுறது?” (முணுமுணுக்கிறார்…)

“கேஸ் புக் பண்ணணுமே, பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன் மாமா.” சிங்கில் விழுந்த பாத்திரங்களைக் கழுவி முடித்தான். அதற்குள் மாமா சாப்பிட்டு முடிக்கவும்,

“சரிங்க மாமா, நான் குளிக்கப் போறேன், லேட்டாயிடுச்சு” என்று அவசரமாக வருண் லுங்கியில் ஈரக்கையைத் துடைப்பதை மாமா அதிருப்தியுடன் பார்த்தார்.

”சரி, அந்தக் கீரைய எடுத்துக் குடு. அன்னிக்கு நீ சரியா ஆயவே இல்ல. நிதானமா எதையும் செய்ய மாட்டேங்குற. எப்பப் பாரு பதட்டம்…”

கீரை, கத்தி, முறம், ஆய்ந்து போடப் பாத்திரம் எல்லாவற்றையும் எடுத்து வைத்தான் வருண்.

”கீரையெல்லாம் நல்லாவே இல்லை. பழுத்துப் போய்க் கிடக்கு. எங்கே வாங்குன?” தரையில் அமர்ந்து கீரையை ஆய்ந்தார் மாமா.

“வழக்கமா வாங்குற கடைலதான் மாமா.”

“சரி, நேத்திக்கு நான் கோயில்லேருந்து வர லேட்டாயிடுச்சு. கோவலன் சீரியல் பார்த்தியா?”

“ம்… சமையல் செஞ்சுக்கிட்டே கேட்டுக்கிட்டு இருந்தேன் மாமா.”

“என்னாச்சு? சிவாவோட மாமனார் அவனுக்கு விஷம் வெச்சிட்டானா இல்லியா?”

“இல்ல மாமா. ப்ளான் பண்ணிக்கிட்டேதான் இருக்காரு. அப்புறம் குமார், கவிதா கல்யாணத்துல நடந்த தகறாரைத்தான் காட்டுனாங்க. குமாரோட மாற்றாந்தகப்பனும் அவன் பையனும் சேர்ந்து குமாரை வீட்ல கட்டிப் போட்டு வீட்டுக்குத் தீ வெக்கப் பாக்குறாங்க. கவிதா வந்து அவங்களை அடிச்சு உதைச்சு மூஞ்சியப் பேத்து குமாரைக் காப்பாத்திட்டுப் போறா. குமார் கவிதா கால்ல விழுந்து அழறான். குமாரோட அண்ணன், தம்பி எல்லாரும் ஆனந்தக் கண்ணீர் விடறாங்க.”

அவசர அவசரமாக கிச்சனைச் சுத்தம் செய்து கொண்டே மாமாவிடம் பேச்சுக் கொடுத்தான் வருண். ஒரு கண் கடிகாரத்தில். பத்து மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. டென்ஷன் எகிறுகிறது.

“அப்ப சிவாவுக்கு இன்னும் அவன் மாமனார் விஷம் வெக்கலியா?”

“இல்ல மாமா. விஷத்தை எடுத்துக்கிட்டுக் கிச்சனுக்குள்ள போறாரு. அதுக்குள்ள தொடரும் போட்டுட்டாங்க.”

“ச்சை. எவ்ளோ நாள் சஸ்பென்ஸ நீட்டுறாங்க பாரு. இன்னிக்கு மறக்காம பார்த்துடணும்.”

(இவருக்கு ஒரு நாள் வெச்சிடணும். மருமகனுக்கு விஷம் வெக்கிற சீன்ல எவ்ளோ ஆர்வமா இருக்கு பாரு கிழம். ட்ரெயினிங் எடுக்குதோ? – வருணின் கடுப்பு மைண்ட் வாய்ஸ்.)

“சரிங்க மாமா. எனக்கு டைமாச்சு. நான் கிளம்புறேன்.”

குளித்து விட்டு அவசரமாகக் கிளம்பி வெளியேறினான் வருண். எதுவுமே சாப்பிடவில்லை.

நிலாவின் அலுவலகத்தில்…

“ஹாய் நிலா! குட் மார்னிங். ஆல்வேஸ் பங்சுவல்!”

“ஹாய் சுமி! எப்படி இருக்கே? சொல்லு என்ன விஷயம்?”

“ஒரு அஞ்சு லட்சம் இன்வெஸ்ட் பண்ணலாம்னு பாக்குறேன். பெஸ்ட் ஆப்ஷன்ஸ் சொல்லேன். நீதான் இதுல எக்ஸ்பர்ட்.”

“எப்படி இன்வெஸ்ட் பண்ணலாம்னு நினைக்கிறே? லாங் டெர்ம் ஆர் ஷார்ட் டெர்ம்?”

“என்ன வித்தியாசம் நிலா?”

“இல்ல ஷார்ட் டெர்ம்னா ம்யூசுவல் ஃபண்ட்ஸ் பெஸ்ட். லாங் டெர்ம்னா கவர்ன்மெண்ட் ஸ்கீம்ஸ் நிறைய இருக்கு. டாக்ஸ் பெனிஃபிட்டும் கிடைக்கும்.”

“லாங் டெர்ம்தான் போலாம்னு பாக்குறேன் நிலா. டேக்ஸ் எக்செம்ப்ஷன் முக்கியம்.” 

”That’s very wise of you. PPF இருக்கா உனக்கு?”

“இல்ல நிலா. அது கவர்ன்மெண்ட் எம்ப்ளாயிஸ்தானே வெச்சிருப்பாங்க?”

“அவங்களுக்கு அது கம்பல்ஸரி. ஆனா, நாமளும் தொடங்கலாம். 1,50,000 ரூபாய் வரைக்கும் வரி விலக்கு கிடைக்கும்.”

“தாங்க்யூ நிலா.”

“சுமி, ஒண்ணு கேட்கலாமா?”

“ஷ்யூர்… எனிதிங்!”

“உன் ஹஸ்பெண்டும் வேலைக்குப் போறான் இல்ல.”

“ஆமாம் நிலா. அவனுக்கு வந்த போனஸைத்தான் இன்வெஸ்ட் பண்ண யோசனை கேட்டேன்.”

“அவனோட ஏடிஎம் கார்ட் யார் கிட்ட இருக்கு?”

“இதிலென்ன டவுட். நான்தான் வெச்சிருக்கேன்.அக்கவுண்ட் பாஸ்வேர்ட் டீடெய்ல்ஸ் எல்லாமும் என் கிட்டதான். அவனுக்குப் பணத்தை எல்லாம் மேனேஜ் பண்ணத் தெரியாது. சமத்தா வேலைக்குப் போயிட்டு வருவான், வீட்டைப் பார்த்துப்பான். அதுக்கே அவனுக்குக் கூறு பத்தாதுப்பா. அதனால மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நான்தான்.”

(ஹும். இன்னும் பிபிஎஃப் அக்கவுண்டே திறக்காத நீ புருசனுக்குக் கூறு பத்தலைன்றியா? – நிலா மைண்ட் வாய்ஸ்.)

“அப்ப அவனுக்குச் செலவுக்கு வேணும்னா என்ன பண்ணுவான்?”

நிலா தயங்கித்தான் கேட்டாள். ஆனால், சுமிக்கு லேசாக சுர்ரென்றது.

“வாட் ஆர் யூ டாக்கிங்? அவனுக்கு என்ன பெருசா செலவு இருக்கப் போகுது? தினமும் நான்தான் ஆபிஸ்ல ட்ராப் பண்றேன். திரும்பி வர பஸ் பாஸ் வாங்கிக் குடுத்துருக்கேன். மந்த்லி ஷாப்பிங் கூட்டிட்டுப் போய் வேண்டியதை வாங்கிக் குடுப்பேன். அப்புறம்… சரியான சாக்லெட் பேபி அவன். அப்பப்போ டெய்ரி மில்க் வாங்கிக் குடுத்துட்டா ஹேப்பி ஆகிடுவான். ஹீ இஸ் ரியலி ஸ்வீட். எந்தப் பிரச்னையும் இல்ல.”

சுமியின் முகத்தில் பெருமை கூத்தாடியது.

“ஹ்ம் நீ லக்கிதான்.” பெருமூச்சு விட்டாள் நிலா.

“சரி சரி வா, ஒரு தம்மடிச்சிட்டு வரலாம். புருசனுங்களைப் பத்திப் பேசுனாலே டென்சன்தான்.” நிலா மூடு மாறுவதைக் கண்டு அழைத்தாள் சுமி.

“ஹா… ஹா… வா போகலாம்.”


(ஆண்கள் நலம் தொடரும்)


படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.