ஹார்மோன்களின் ஆட்டம் ஒரு வழியாக முடியும் போது பெண்கள் சராசரியாக 50 வயதைக் கடந்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வைட்டமின் குறைபாடு, கால்சிய குறைபாடு, நீரிழிவு ஆகியவற்றை இந்த ஹார்மோன்கள் பரிசளித்துவிட்டு விடை பெற்று இருக்கும். அவர்கள் அதற்கான மருத்துவத்தைத் தொடர வேண்டியிருக்கும்.

மேலை நாடுகளில் நாற்பது வயதில்தான் பெரும்பாலோர் திருமணம், குடும்பம் என்ற அமைப்பிற்குள் நுழைகின்றனர். ஆனால், இந்தியக் குடும்ப அமைப்பில் நாற்பது தொடங்கி ஐம்பது வயதிற்குள் பலப் பெண்கள் குழந்தைகளை வளர்த்து முடித்து செய்ய ஏதுமில்லாதவர்களாக ஆகியிருப்பார்கள் அல்லது பேரக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புகள் என அடுத்த பெரிய ஓட்டத்துக்குத் தயாராகி இருப்பார்கள். அப்படியான பெண்கள் உடல் நலன் குறித்து அக்கறை எடுத்து முதலில் பரிசோதனைகள் மேற்கொள்ளுங்கள். வீட்டு வேலைகளைக் குறைத்துக்கொண்டு, உங்களுக்குப் பிடித்ததைச் செய்வதற்காகக் கண்டிப்பாக நேரம் ஒதுக்குங்கள். அதில் நடைப்பயிற்சிக்கும், சின்ன சின்ன உடற்பயிற்சிகளுக்கும் கட்டாயம் நேரம் இருக்குமாறு பாரத்துக்கொள்ளுங்கள்.

மனநலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் அனைவருடனும் இருந்தாலும் உள்ளுக்குள்ளாகத் தனித்து இருப்பது ஆரம்பிக்கும். இந்த வயதில்தான் தேவையில்லாத பல எதிர்மறை எண்ணங்கள் அலைக்கழிக்கும். பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்குத் துணை தேட தலைப்படுவார்கள். சிலர் வீட்டுக்கு மாப்பிள்ளையோ மருமகளோ வந்திருக்கவும் வாய்ப்புண்டு. இன்றும் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்கள்தாம் அதிகம் என்பதுடன் குழந்தைகளின் சந்தோஷம் அவர்கள் எதிர்காலத்திற்காக என்று நீண்ட கால நோக்கில் வரன் தேடும் படலம் ஆரம்பித்து இருக்கும்.

பார்த்துப் பார்த்து தன் மகனுக்குப் பெண் தேடும் பெற்றோர், தன் மகன் மீது உரிமை கொண்டாட இன்னொரு பெண் வந்து இருப்பதை மனமுவந்து ஏற்கும் பக்குவம் வளர்த்துக் கொண்டால் நிறைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பெண்கள்தாம் இந்தக் குடும்ப எமோஷனல் டிராமாக்களில் அதிகம் சிக்கிக் கொள்பவர்களாக இருப்பார்கள். ஆண்கள் சிக்குவதில்லை, சிக்கிக்கொண்டாலும் பெண்கள் மேல் பழியைப் போட்டு கடந்து விடுவார்கள்.

குடும்ப கெளரவம் என்பதும் ஒழுக்கம் என்பதும் தங்கள் துணையைத் தாங்களே தேர்வு செய்து கொள்வதில் நம் சமூகம் பொதிந்து வைத்திருக்கிறது. இதனால் குடும்பத்தில் நடக்கும் குளறுபடிகளும் மன உளைச்சல்களும் மிக அதிகம். இதில் அதிகார பங்கிடல் கண்ணுக்குத் தெரியாத இழையாகப் பின்னிப் பிணைந்து இருக்கும். அதுதான் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் என்றாலும் பிரச்னையின் ஆணி வேரான அதை விட்டு, பிறவற்றைப் பிரச்னை எனச் சரி செய்ய முனைவோம்.

‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி, ஆண்களைக் குறை சொல்லாதீங்க, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் அடக்கினார்கள் என்று பொங்குகிறீர்களே முதலில் மாமியார் மருமக பஞ்சாயத்தை முடிங்க பார்ப்போம்’ என வீரவசனம் பேசுபவர்கள் அதிகம். நிஜத்தில் மாமியார் மருமகள் பிரச்னை ஏன் இவ்வளவு பெரிதாக ஊதி பெரிதாக்கப்படுகிறது? மாமனார், மருமகன் பிரச்னை வரவே வராதா? இங்குதான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு பெண்களைத் தங்கள் வசதிக்கு சாதகமாக, பெண்களைக் கொண்டே பெண்ணை ஒடுக்கும் வெளியே தெரியாத மிக தந்திரமான வலை ஒன்றைப் பின்னி, பெண்களையே பொறிகளாக வைத்துள்ளது.

வீட்டின் முழுப் பொறுப்பையும் பெரும்பாலும் பெண்கள் சுமந்து வீட்டைத் தனது அதிகார மையமாகவும் நினைத்து கோலோச்சி வந்த இடத்தில், அந்த அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இன்னொரு பெண் வரும்போது போட்டியாக நினைக்கும்படியான நிலையைக் குடும்பம் மறைமுகமாக உருவாக்கிவிடுகிறது.

தனது உலகம் என நினைத்து அதிகாரம் செலுத்தி வந்த இடம் கைநழுவி போவதால் மருமகளைப் போட்டியாகப் பார்க்கும் மாமியார்களின் பின் மறைமுகமாக இருப்பது ஆண்கள்தாம் என்பது புரியாமல் ஜோக்ஸ், நக்கல்களைத் தொடரும் ஆண் சமூகம், தாங்களே தேர்ந்தெடுத்து இருந்தாலும், தன் செல்ல மகளுக்கு மாப்பிள்ளையாக வரும் மருமகன் மீது சின்னப் பொறாமையுடன் இருக்கும் தந்தைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசாது.

எப்படி அம்மா, அம்மா எனச் சுற்றி வந்த மகன் மீது இன்னொரு பெண் உரிமை கொண்டாடுவதை ஏற்க தடுமாறுகிறாளோ அதே தடுமாற்றத்தைதான் ஆண்களும் எதிர்கொள்கின்றனர். மாமியாராக மாறிய பெண்ணை வில்லியாகச் சித்தரிக்கும் பொது சமூகம் மாமனாராக மாறிய ஆண்களின் பொஸசிவ்நெஸ் குறித்துத் துளிக்கூட அலட்டிக்கொள்ளாது. எனக்குத் தெரிந்து அபியும் நானும் படத்தில் கொஞ்சம் அதனைக் காட்ட முயற்சி செய்து இருப்பார்கள். அதுகூடத் தானாக வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கும் மருமகன் மீது சின்ன ஒவ்வாமை இருப்பதாக. ஆனால், நிஜத்தில் தந்தை தேர்ந்தெடுத்தாலுமே இந்த ஒவ்வாமை இருக்கும்.

பெரும்பாலான குடும்பங்களை உற்றுக் கவனித்தாலே தெரியும். மாமனாரும் மருமகனும் எதிரெதிரே பாச மழை பொழிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அது பெரிதுப்படுத்தப்படுவதுமில்லை. அதேபோல அந்த பொஸசிவ், கடுகடுப்பை வெளிப்படையாகக் காட்டவும் மாட்டார்கள். இதனை நுணுக்கமாக ஆராய்ந்தால் புரியும்.

ஆணுக்கு இந்தப் பொறாமை, பொஸசிவ் உணர்வில் இருந்து வெளியே வர நிறைய சூழல் அமையும், முதலாவது அவன் எப்போதும் மருமகனுடனே பயணிக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாவது மாமானாரின் வட்டத்துக்குள் நுழைவதோ அல்லது அவர் வேலையில் மருமகன் குறுக்கீடோ தலையீடோ செய்வதில்லை.

ஆனால், பெண்கள் இந்த விஷயத்தில் அதிகம் சிக்கிக்கொள்ள காரணம், அவர்கள் அதிக நேரம் மருமகளுடனே செலவு செய்ய வேண்டியுள்ளது. தன் இடத்திற்குள்ளும் அதிகார எல்லைக்குள்ளும் மருமகளை அனுமதிக்க வேண்டிய சூழல். இதன் காரணமாக அதிகளவில் பிரச்னைகள் வெடிக்கின்றன. இந்தப் பிரச்னைகள் அதிகளவில் முன்னிறுத்தப்படுவதால், இந்த வெளிச்சத்தில் ஆணின் பொஸசிவ், மாமனார் மருமகன் பிரச்னை வெளியே தெரியாமல் இருந்துவிடுகிறது. ஆண்கள் தங்கள் மருமகனுடன் சேர்ந்தே இருக்க நிர்பந்திக்கப்படுவதில்லை. அப்படி நிர்பந்திக்கப்பட்டால்தான் என்ன மாதிரி பிரச்னைகள் வரும் என்பது புரியவரும்.

விதிவிலக்குகள் இருதரப்பிலும் உண்டு. ஆண்கள்தாம் இந்தப் பிரச்னைக்கு ஆணி வேர் என்றாலும், பழி என்னவோ பெண்கள் மீதாகத்தான் இருக்கும். மற்றொன்று பிரச்னைகளின் வேர்களைப் புரிந்துகொள்பவர்கள் எளிதில் இதிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள்.

உடலில், மனதில் நடந்த மாற்றங்கள் காரணமாகவோ, சூழ்நிலை காரணமாகவோ, வயதின் காரணமாகவோ, வெறுமையின் காரணமாகவோ அல்லது வேலை இல்லாததன் காரணமாகவோ என ஏதோ ஒரு காரணம் முடக்கிவிடாமல் தங்களைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் இந்த நிலையும் கடந்து எந்த வயதிலும் சந்தோஷமாக வலம் வருவார்கள்.

பதின் பருவம் கடக்கும்போதே அவர்கள் உலகம் தனி, நம் உலகம் தனி எனத் தயாராகாத பெண்கள், பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைத்த பின்னாவது அவர்கள் உலகம் தனி, நம் உலகம் தனி என உணரத் தலைப்படலாம். ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்தாலும் சரி, தனித்தனியாக வசித்தாலும் சரி, நம் பிள்ளையாகவே இருந்தாலும் அவர்களாகக் கேட்காமல் அவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதைத் தவிர்க்கலாம்.

நம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவிட்டோம் என்பதால் நம் தலையில் புதிதாக எந்தக் கிரீடமும் தரித்துக்கொள்ள வேண்டாம். எப்போதும் இருந்த இயல்பிலேயே இருப்பது நல்லது. என்னதான் இதெல்லாம் இருந்தாலும், பேரக்குழந்தை என்று வரும்போதுதான் பல குடும்பங்களில் பிரச்னைகள் ஆரம்பிக்கும். நம் குழந்தையை நாம் வளர்த்துவிட்டோம், அவர்கள் குழந்தையை வளர்க்க வேண்டியது அவர்கள் பொறுப்பு என்பதுடன், நம்மைப் போலவே அவர்களும் அவர்கள் குழந்தையை நன்றாகதான் வளர்ப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

நம் குடும்ப அமைப்பில் பெரும்பாலும் முதுமைக்கு எனப் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் பெரிதாக இருந்ததில்லை. தற்போது பலர் அதனைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்றாலும், இருக்கும் சேமிப்பை வழித்து துடைத்து அல்லது கடன் வாங்கிதான் பல குடும்பங்களில் திருமணம் நடக்கிறது. பென்ஷன் வரும் சம்பளத்தில் இருப்பவர்கள் ஒரளவு தப்பித்துவிடுவார்கள். ஆனால், சாகும் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களும் சம்பாதித்த அனைத்தையும் பிள்ளைகளுக்கு என செலவழித்து பிள்ளைகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களும்தாம் அதிக சிரமப்படுவார்கள்.

உங்கள் குழந்தைதான், உங்கள் பணம் சொத்து எல்லாம் அவர்களுக்குதான் என்றாலும், அத்தனையும் உங்கள் காலத்துக்குப் பிறகு கொடுங்கள், உங்கள் முதுமை காலத்துக்கு எனக் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் இளவயதில் ஆரம்பிக்கவில்லை என்றாலும், மத்திம வயதிலாவது ஆரம்பித்து விடுங்கள். தனி மனித ஆயுள் அதிகரித்து வரும் நிலையில் நம்மைக் கவனித்து கொள்ளவாவது சிறிதளவு சேமிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். நம் செலவுகளுக்கு யாரையும் சார்ந்திருக்காத அளவு பணம் கையில் இருந்தாலே அதிக பிரச்னைகள் வராது.

நாற்பது வயதுக்குப் பிறகு நிறைய நேரம் கிடைக்கும். அதனை ஆக்கப்பூர்வமாக மனதுக்குச் சந்தோஷம் தரும் செயல்கள் மூலம் நிரப்பிக்கொள்ளுங்கள். தியாகம், வீண் பெருமை எனப் பிறருக்காக உங்களால் முடியாத ஒன்றில் திணித்துக்கொண்டு சுற்றி இருப்பவர்களைப் பிறாண்டாதீர்கள்.

எந்த வயதாக இருந்தாலும் நம் வாழ்க்கையை நாம் பரிபூரணமாக வாழ்வது மட்டுமே நமக்கு சந்தோஷம் தரும் என்பதை உணர்ந்து, உள்ளச் சிறகுகளைச் சந்தோஷமாக விரியுங்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.