வாழ்க்கையில் பெரும்பாலோர் வந்து போகிறவர்களே. நமது உடல் ஆரோக்கியம் மட்டுமே இறக்கும் வரை நம்முடன் வரும் என்பதை நமக்குக் குழந்தைப் பருவத்தில் இருந்து சொல்லித் தருவதில்லை. அதிலும் பெண்கள், பெண் குழந்தைகள் ஆரோக்கியம் என்பது நமது குடும்பங்களில் இரண்டாம் பட்சமாகதான் இன்றளவும் இருந்து வருகிறது.

சிறுவயதில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவு ஆரோக்கியத்துக்கான முக்கியத்துவம் முன்னெடுக்கப்படுவதில்லை. திருமணத்திற்குப் பின்னோ அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு நேரமோ கிடைப்பதில்லை. பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு அவர்கள் திருமணம் என்கிற அளவில்கூட நிற்பதில்லை. தனது பிள்ளைகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் வளர்ப்பு என ஒரு பெரிய சுற்று ஓட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். பெண்கள் தன் உடல்நலம் குறித்தோ, மனநலம் குறித்தோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. குடும்பத்துக்காகப் படிப்பு, வேலை, தூக்கம் என அனைத்திலும் தங்களின் ஆரோக்கியத்தைக் காவு கொடுத்து சமரசம் செய்து ஓடும் பெண்களில் பெரும்பாலோரை மெனோபாஸ் தலையில் தட்டி கொஞ்சம் உன் உடல் நலத்தையும் பாரேன் என்கிறது.

இருபதுகளில் திருமணமாகி குடும்பம் குழந்தைகள்தாம் உலகம் எனத் தங்களைச் சுருக்கிக்கொண்ட பெண்கள், அவர்கள் வளர்ந்து தங்கள் உலகத்திற்குச் செல்லும்போது நாற்பதுகளின் ஆரம்பத்தில் அல்லது நாற்பதுகளின் பிற்பகுதியில் இருப்பார்கள். குடும்பத்தில் இவர்களின் வேலை பெரும்பாலும் குறைந்து போய் இருக்கும், சிலருக்கு மாறாக அதிகரித்தும் இருக்கலாம்.

குழந்தைகள் படிப்பு அல்லது வேலை, திருமணம் காரணமாகப் பிரிந்து தூரமாகச் சென்றுவிட, அதுவரை குழந்தைகள் உலகம் என்று இருந்த சிலர் Empty nest Syndrome இல் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மெனோபாஸ் சிக்கலுடன் இதுவும் சேர்ந்து எதிர்கொள்ளும் பெண்கள் தங்களுக்குள் எழும் மனப்போராட்டங்களைத் தெளிவாகப் பிரித்து உணர முடியாமல் மனச்சுழலுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

கவலை, பதற்றம், அதீத மனச்சோர்வு, பயம், பாதுகாப்பற்ற உணர்வு போன்ற மனநல பாதிப்புடன் உடல்நல பாதிப்பும் சேர்ந்து கொள்ள, தங்கள் வாழ்வில் இனி ஒன்றுமில்லை எனக் கழிவிரக்கத்துடன் மேலும் ஒடுங்கி தங்கள் பிரச்னைகளைத் தீவிரமாக்கிக் கொள்கின்றனர். ஒரு சிலர் தங்கள் பயம், பதற்றம் ஆகியவற்றை மறைக்க, அனைத்து வேலைகளையும் தங்கள் தலை மேல் இழுத்து போட்டு செய்வார்கள். தான் இல்லாவிட்டால் அனைத்தும் ஸ்தம்பித்து போய்விடும் என்று தாங்களே நம்பிக்கொண்டு, அதையே அனைவரும் நம்ப வேண்டும், வீட்டின் அச்சாணியே தாங்கள்தான் என நிறுவ முனைவார்கள். இதற்காக அவர்களையும் அறியாமல் அவர்கள் செய்யும் வேலைகள் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகளை உருவாக்குவதுடன் எந்தப் பிள்ளைகள் உலகம் என்று இயங்கினார்களோ அவர்களே பிரிந்து செல்லும் நிலையை உருவாக்கும்.

இவ்வளவு நாட்கள் இவர்களுக்காகத்தானே எல்லாம் செய்தேன், அப்போ நான் தேவையாக இருந்தேன், இப்போ தேவையில்லாமல் போய்விட்டேனா என்று குமுறும் நீங்கள் முதலில் அதில் இருந்து வெளியே வர முயற்சி செய்யுங்கள். இதை வார்த்தையாகச் சொல்லிவிடலாம். ஆனால், வெளி வருவது கடினம். பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் உலகை நோக்கிச் சிறகடிப்பது இயல்பான ஒன்றுதான். அவர்களின் புது உலகத்தைக் காணும் பரவசத்தில் சற்றே நம்மிடம் இருந்து விலகி இருக்கலாம். தனக்கென ஒரு கூட்டை நிர்மாணிக்கும், பராமரிக்கும் பொறுப்புகளின் காரணமாக சில நேரம் மீண்டும் கூடடைவது சாத்தியப்படாமல்கூடப் போக வாய்ப்புள்ளது என்பதனை உணர முற்படலாம்.

அதுவரை குழந்தைகள் தவிர வேறு உலகம் எதுவும் தெரியாமல் இருந்தவர்களுக்கு இது அதிர்ச்சிதான், துயரம்தான். வேண்டுமானால் கொஞ்ச நாள் வருத்தப்படுங்கள். ஆனால் அடுத்து என்ன என்பதை யோசிக்க ஆரம்பிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும். ஏனென்றால் நாம் இறக்கும் வரை நமது வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும். அதை ஏன் வருந்தி, அழுது, புலம்பி, வெதும்பி, சபித்து வாழ வேண்டும்? சந்தோஷமாக வாழ முயற்சிக்கலாமே.

சில பெண்கள் பிள்ளைகள்தாம் உலகம் என்ற மாயையில், உறவினர்கள் மட்டுமல்லாது கணவரிடம் இருந்தும் மனதளவில் வெகு தூரம் விலகி இருந்திருப்பார்கள். கணவரும் குடும்ப பாரம், குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றில் மூச்சுத் திணறிக்கொண்டுதான் இருப்பார். நம் இந்தியக் குடும்ப அமைப்பும், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலும் ஆண்களையும் மூச்சுத் திணற வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் அவரும் நாற்பதுகளின் பிற்பகுதியில் வெறுமையைச் சுமந்தபடி வலம் வரலாம்.

கணவன் மனைவி உறவு அன்யோன்யமாக இருப்பவர்களில் பலர் குழந்தைகள் பிரிந்து சென்ற பின் ஏற்படும் வெறுமையைச் சமாளித்துவிடுவார்கள். ஆனால், குழந்தைதான் உலகம் என்று சுழன்றவர்கள்தாம் திணறுவார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தோழமையாக மாற முயற்சிப்பது வெறுமையைக் கடக்க வழி வகுப்பதுடன், எஞ்சிய காலத்தை சந்தோஷமாகக் கடக்கவும் உதவும்.

ஆனால், என்ன செய்தாலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்களைத் தனிமை ஆட்டிப் படைக்கும். தனிமையில் உழலும் மனம் எந்த எல்லைக்கும் செல்லும். சில நேரம் அது கழிவிரக்கமாக மாறி தற்கொலை எண்ணம் வரைகூட நம்மை இட்டுச் செல்லக்கூடும். அல்லது அதுவாக எதாவது பிரச்னைகளை மனதிலும் உடலிலும் உருவாக்கும். இதில் இருந்து தப்பிக்க எதிலாவது முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது அவசியமான ஒன்று. அதை நமக்குப் பிடித்தமான விஷயமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் நமது பொறுப்புதான்.

டிவி, மொபைல் இரண்டிலும் முற்றிலும் தொலைந்து போகாமல் இருப்பதும் முக்கியம். எதெல்லாம் நமக்குப் பிடிக்கும் என யோசிக்கலாம். திருமண வாழ்க்கை, குழந்தை வளர்ப்பில் கவனம் குவித்ததால், சின்ன வயதில் ஆசைப்பட்டு முடியாமல் போனதை நனவாக்க முயற்சி செய்யலாம். அது படிப்பாக இருக்கலாம், இசை, ஓவியம், வாசிப்பு, எழுத்து, சமையல், தோட்டம், ட்ரைவிங், யோகா, நடனம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம் மனசுக்குப் பிடித்ததாக, நாம் விரும்பிச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியம்.

ஆசைப்பட்டு முடியாமல் இருந்ததைச் செய்ய ஆரம்பித்தாலே கொஞ்சம் கொஞ்சமாக ஒரு புதிய பாதை புலப்படும். நம்மிடம் இருக்கும் மன அழுத்தம் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். சோசியல் மீடியா இன்று பலருக்கு வாசல் திறந்து இருக்கிறது. ஒத்த அலைவரிசை உடைய நல்ல நட்புகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாம். நான் பல இடங்களுக்குப் பயணம் சென்றது, குடும்பம் தாண்டி எனக்கான ஓர் உலகம் இருக்கிறது என்பதை உணர்ந்தது சமூக வலைத்தளம் வந்த பின்னர்தான். அதே போல எனக்கு நல்ல தோழமைகள் கிடைத்ததும், வாசிப்பு, எழுத்து என நான் அடுத்த கட்டம் நகர காரணமாக இருந்ததும் சமூக வலைத்தளமும் அதன் மூலம் கிடைத்த நட்புகளும்தாம்.

சமூக வலைத்தளங்களினால் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அதைச் சரியான விதத்தில் கையாளக் கற்றுக் கொண்டால் வழிகாட்டி போல உதவும். இன்று பல பெண்கள் நாற்பதுகளுக்குப் பின் யூடியூபில் தங்கள் தயாரிப்புகளை விற்பது, சமையல் குறிப்புகள், சுற்றுலா எனப் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவற்றில் பலவும் பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன. நாற்பதைக் கடந்த பல பெண்கள் இன்று பல்வேறு திக்கில் பயணிக்கப் பல வாசல்கள் திறந்து இருக்கின்றன. தேவை எல்லாம், வாழ்வு முடிந்து போகவில்லை என்ற நேர்மறை எண்ணமும், எதையும் எப்போதும் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையும் மட்டுமே. அது இருந்தால் ஒரு புதிய வாழ்க்கையை எந்த வயதிலும் தொடங்கலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். பெண் வயதுக்கு வந்ததைக் கொண்டாடுவது போல, அவள் மெனோபாஸைக் கொண்டாட முடியாவிட்டாலும், அந்தக் காலகட்டத்தை பெண் மகிழ்ச்சியாக ஏற்று, அடுத்த கட்டத்திற்கு நகர குடும்பத்தினர் அனைவரும் ஒத்துழைக்கலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.