அழகான தோற்றம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அது ஓர் இயற்கையான உணர்வு. ஆனால் எது அழகு, யார் அழகு என்பதை எப்படி முடிவு செய்வது?

அழகு என்பதன் பொருள் ஒவ்வொரு காலத்திற்கும், நாட்டிற்கும், ஒவ்வொருவரின் தனிபட்ட ரசனைக்கும், ஒவ்வொருவரின் மன நிலைக்கும் ஏற்ப மாறும். பின் எப்படி உலகளவில் ஒரே அளவுகோல் இருக்க முடியும்?

50 வருடங்கள் முன்பு நாம் கொண்டாடிய கதாநாயகிகள் இப்போதைய அழகின் வரையரைக்குள் வருவது சந்தேகம்தான். அன்றைய ரவிவர்மாவின் ஓவியப் பாவைகள் இன்று நேரில் வந்நால் நாம் ஆன்ட்டி என்றழைக்கும் சாத்தியங்கள் அதிகம்.

ஒரே கண்டத்தில் இருந்தாலும் சீன அழகிகள் நம் அழகிலக்கணத்தில் பொருந்த மாட்டார்கள். ஆக இங்கே அழகென்பது நம்மைத் தாண்டிய பல காரணிகள் உள்ளடக்கிய ஒன்று. ஆனால், இப்போதெல்லாம் எது அழகு என்று முடிவு செய்வது யார்? அதை இன்றைய ஊடகங்கள்தான் முடிவு செய்கிறது.

இள வயது பெண்களுக்குச் சிக்கென்ற உடல், பளபளப்பான முகம், பட்டுக் கூந்தல், வெள்ளை நிறம்தான் அழகு என்கிற எண்ணம் மிகச் சிறிய வயதிலேயே பெண் குழந்தைகள் மனதில் ஊடகங்களால் விதைக்கப்படுகிறது. இந்த வரிசையில் ஆரோக்கியத்திற்கு இடமுண்டா?

ஆரோக்கியமே அழகு என்பதை எத்தனை குழந்தைகள் தேர்ந்தெடுக்கின்றனர்?

உலக அழகிகள், நடிகைகள் கொண்டாடப்படும் அளவுக்கு மற்ற ஆளுமைகள் நம் கவனத்திற்கே வருவதில்லை. இப்படி ஒரு மாய பிம்பத்தினால் நன்மை உங்களுக்கல்ல தோழிகளே, உங்களை வைத்து நடக்கும் பெரும் வர்த்தகத்திற்கு.

இன்றைக்குச் சந்தையில், முகம் வெள்ளையாக ஆக, கூந்தல் அடர்ந்து கறுப்பாக வளர, உடல் எடை வேகமாகக் குறைய, விரும்பிய வடிவம் கிடைக்க என எல்லாவற்றிற்கும் ஒரு பொருளோ / சேவையோ கிடைக்கும். சரி, இந்த க்ரீம் உபயோகப்படுத்தினேன் நிறம் கூடியது, இந்த ட்ரிங் குடித்தேன் உயரம், எடை கூடியது / குறைந்தது , இந்த ஷாம்பூ தலையில் தேய்த்தேன் தலைமுடி பட்டுபோல் ஆகிவிட்டது என்று யாராவது உங்கள் நட்பு வட்டத்தில் கூறி உள்ளார்களா? அதாவது நிரந்தர மாற்றம்.

இதெல்லாம் உண்மை என்றால் இன்றைக்கு உலகம் முழுக்கப் பெண்கள் அனைவரும் இந்த அளவுகோல்படி ஒன்று போல பேரழகாகத்தான் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் இதற்குச்செலவு செய்யக் கூடிய அனைவரும். ஏன் இல்லை?

சரி, இந்தப் பொருள்கள் நம்மை ஆரோக்கியமாக ஆக்குமா, இல்லையா என்பதைக்கூட விட்டு விடுவோம், நமக்குத் தீங்கு செய்யாதென்ற நிச்சயம் உள்ளதா ?

அப்படியே தற்காலிகமாக நமக்கு வேண்டிய வண்ணம் கிடைத்தாலும், இத்தனை பிரயத்தனம், செலவு எல்லாம் நமக்கு நாமே தீங்கு செய்துகொள்வதற்கா? பெண் என்பவள் அழகு, அழகை மேலும் அழகுபடுத்த வேண்டும் என்கிற வாதத்தின் பின்னால் பல கோடி ரூபாய் அழகு சாதனப் பொருள் வணிகம் உள்ளது.

பெண் பூவைப் போன்று மென்மையானவள், பாதுகாக்கப்பட வேண்டிய அழகு பெட்டகம் என்கிற வர்ணனை எல்லாம் உங்களைத் தன் பிடிக்குள் வைத்திருக்க விரும்பும் ஆணாதிக்க சமூகத்தின் கட்டமைப்புகள்.

உங்களைப் பாதுகாக்க நீங்களே போதுமென்றால், உங்களின் தேவைக்கு நீங்களே பொருளீட்டிக் கொண்டால், உங்களின் இணையர் காதலுக்கு மட்டும் போதுமே. சார்ந்திருத்தல் அவசியம் இன்றிப் போய்விடும். இந்த வியாபார சங்கிலியில் கட்டுண்டு வாழ்க்கையைத் தொலைக்காமல, சமூகக் கட்டுக்குள் சுருங்கிப் போகாமல் வாடி ராசாத்தி, உனை நீயே காப்பாத்தி… புதுசா, ரவுசா தனியா…

இந்தத் தன்னம்பிக்கை தராத அழகையா நீங்கள் காசு கொட்டி வாங்கும் அழகு சாதனங்கள் தந்துவிடும்?

இனிய புன்னகை, கருணை கொண்ட மனம், உதவ நீளும் கரங்கள், சோர்ந்திருக்கும் மனதிற்குத் தரும் இதமான அன்பு, ஆரோக்கியமான மனம், உடல் எல்லாமே அழகு. இதற்கெந்த ஒப்பனையும் தேவை இல்லை. அந்த நிமிடத்தை அழகாக்கும் அனைத்துமே அழகுதான். நான் என்பது கண்ணாடியில் தெரியும் உருவம் அல்ல. நான் என்பது எனது நம்பிக்கை, எனது திறமை, எனது தோற்றம், எனது எண்ணங்கள், எனது செயல்பாடு அனைத்துமேதான்.

ரோஜா எப்போதும் தான் மல்லிகையைப்போல் இல்லை என நினைப்பது இல்லை, ஏன் இயற்கையில் எந்த உயிருமே இன்னொன்று போல் ஆக நினைப்பது இல்லை. ஆனால், அனைத்தையும்விட புத்தி அதிகமுள்ள நாம் எப்போதும் நாமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்வதில்லை. அடுத்தவரை போல ஆட வேண்டும், பாட வேண்டும், முகமும் உடலும் நடிகையைப் போல் இருக்க வேண்டும். ஆனால், அந்த நடிகை அதற்காகச் சந்திக்கும் சவால்களும் தியாகங்களும் எதிர்கொள்ளும் ஆரோக்கிய கேடுகளும் நம் கவனத்திற்கு வருவதே இல்லை.

இஞ்சி இடுப்பழகி படத்தில் வரும் ஜீரோ சைஸ் நிறுவனத்தைப் போன்ற நிறுவனங்களில் நிஜ வாழ்வில் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் தொலைத்த பெண்கள் ஏராளம்.

உங்களை நீங்களே நேசிக்கும்போது உங்களுக்குத் தீமை செய்யும் விஷயங்களை எப்படிச் செய்வீர்கள், அதற்கு ஈடாக எது கிடைத்தாலும் விலை நாமல்லவா?

நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். இந்தத் தனித்துவமே நம்மையும் இவ்வுலகையும் அழகாக ஆக்குகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமையும், அதனால் இவ்வுலகில் ஆற்ற வேண்டிய நன்மையும் நிச்சயம் உண்டு.

எப்போது நாம் நம்மை அறிந்து, கொண்டாடி நம்மிடம் உள்ள நல்ல விஷயங்களை இன்னும் மெருகேற்றுகிறோமோ அப்போது அனைவருமே அழகுதான். வாழ்க்கையில் ஜெயித்த அத்தனை பேரும் அழகாக (மீடியாவின் அளவுகோல் படி) பிறக்கவில்லை. ஆனாலும் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு அழகாக ஜொலிக்கிறார்கள்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

அழகு என்பது நல்ல எண்ணத்தில், சரியான உடற் பயிற்சியில், சரிவிகித உணவில், ஆரோக்கியமான மனதில், ஆரோக்கியமான உடலில், தன்னம்பிக்கையில் உள்ளிருந்து ஒளிர்விடும் ஜோதி.

எனதருமை தோழிகளே நன்றாகச் சாப்பிடுங்கள், நல்லதைச் சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். எண்ணங்கள் அழகாகட்டும், உங்களின் முடிவுகளைச் சுயமாக எடுங்கள், அதற்கேற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவுகளால் வரும் சவால்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளிருந்து மிளிர்வதை ஆனந்தமாக உணர்வீர்கள்.

‘விளையாடுங்க… உடல் பலமாகுங்க… ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்’ ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…’

இதன் பொருள் உங்கள் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்பட கூடாதென்பதில்லை. ஆனால், அழகென்பது வெளித்தோற்றம் மட்டுமல்ல, அது உங்களின் உடல், மன ஆரோக்கியம், சிந்தனை தெளிவு மற்றும் தன்நம்பிக்கை சேர்ந்த கலவை.

சுய நேசிப்புடன் வாழ்க்கையைக் கொண்டாடுவோம் வாங்க. அப்போது ஒவ்வொரு பெண்ணும் உலக அழகிதான்!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.