எரின் ப்ரோக்கோவிச்

பி.ஜி & ஈ என்கிற ஒரு பெருநிறுவனம் ஹிங்க்லி எனும் சிற்றூரின் மொத்த நிலத்தடி நீரையும் மாசுபடுத்திவிடுகிறது. அதனால் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்த ஊர்க்காரர்கள் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து நியாயம் கேட்கிறார்கள். விசாரணையின்போது, “20 மில்லியன் டாலர்கள் நிவாரணமாகத் தருவது கொஞ்சம் அதிகம்” என்று நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

“ஓஹோ… அப்படியா?” இப்படி நீங்கள் சொல்லும்போது எனக்குக் கோபம் வருகிறது. இந்த வழக்கில் மொத்தம் 400 பேர் பாதிக்கப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள், இன்னும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். இவர்கள் நவநாகரிக மக்கள் இல்லைதான். ஆனால், 20 மில்லியன் டாலரை நானூறு பேருக்குப் பகிர்ந்தளிக்கும்போது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மிஞ்சும் என்பது தெரியாத அளவுக்கு வெள்ளந்திகளும் அல்ல. இன்னொன்றைத் தெரிந்துகொள்ளுங்கள், இவர்கள் பணக்காரர்களாக வேண்டும் என்று கனவு காண்பவர்கள் அல்லர். நீச்சல் குளத்தில் தன்னுடைய குழந்தை விளையாடும்போது, குழந்தைக்கு இருபது வயதானால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டி வருமோ என்கிற பயம் இல்லாமல் அதை ரசிக்க விரும்புகிறார்கள். எங்களது மனுதாரர் ரோஸா டியாஸுக்கு அதுதான் நடந்தது. இதோ இன்னொரு மனுதாரர் ஸ்டான் ப்ளூமின் முதுகுத்தண்டு சீர்குலைந்துவிட்டது. ஆகவே சாக்குபோக்குகள் சொல்வதற்கு முன்பு கொஞ்சம் யோசியுங்கள். மிஸ்டர் வாக்கர், உங்கள் முதுகுத்தண்டின் விலை என்ன? மிஸ். சான்செஸ், உங்கள் கர்ப்பப்பையின் விலை என்ன? இதை ஆழமாக யோசியுங்கள். அந்த விலையை நூறால் பெருக்குங்கள். அந்தப் பணத்தைத் தவிர வேறு எதைப் பற்றி நாம் விவாதித்தாலும் அது நேரத்தை வீணாக்கும் வேலைதான்” என்று அறச்சீற்றத்தோடு வெடிக்கிறார் மனுதாரர்கள் சார்பில் பேசும் எரின் ப்ரோக்கோவிச்.

பதற்றமடையும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சான்செஸ் மேசையிலிருந்த தண்ணீர்க் குவளையைக் கையில் எடுக்கிறார்.

“இதை உங்களுக்காகவே கொண்டுவந்தோம். ஹிங்க்லியில் இருக்கும் ஒரு கிணற்றில் இறைத்த தண்ணீர் இது” என்கிறார் எரின் ப்ரோக்கோவிச். சான்செஸ் நீர்க்குவளையைக் கீழே வைத்துவிடுகிறார்.

ஜூலியா ராபர்ட்ஸ் நடிப்பில் 2000 ஆண்டில் வெளியான எரின் ப்ரோக்கோவிச் என்கிற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது. அமெரிக்காவில் ஹிங்க்லி என்கிற ஊரில் க்ரோமியம் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கிக் கொடுத்த வழக்கறிஞரான எரின் ப்ரோக்கோவிச்சைப் பற்றிய உண்மைக் கதை. நீதிமன்றத்தில் நிஜமாகவே இந்தச் சொற்கள் பேசப்பட்டனவா என்பது தெரியாது. ஆனால், படத்தில் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது ஏதோ ஒன்று தைக்கும். நானூறுக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையைப் பாதித்த ஒரு நிறுவனம் அதை எப்படிச் சாதாரணமாகக் கையாள்கிறது என்று பார்க்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.

1952ஆம் ஆண்டு முதல் 1966ஆம் ஆண்டு வரை பி.ஜி & ஈ நிறுவனம் ஹிங்க்லியின் நிலத்தடி நீரை மாசுபடுத்தியிருந்தது. இது பல ஆண்டுகள் வெளிவராமலேயே இருந்தது. அதை அப்படியே மூடி மறைக்க அந்த நிறுவனமும் எல்லா வேலைகளையும் செய்தது. இந்த விவரங்களைக் கண்டுபிடித்து இந்த நிறுவனத்தின்மீது 1993ஆம் ஆண்டு எரின் ப்ரோக்கோவிச் மற்றும் எட் மேஸ்ரி ஆகிய இருவரும் வழக்கு தொடுத்தனர். மூன்று ஆண்டுகள் இந்த விசாரணை நடந்தது. 1996இல் நிவாரண நிதி தருவதற்கு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது. மாசுபாடு தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும், அதாவது 2019ஆம் ஆண்டிலும்கூட ஹிங்கியின் நிலத்தடி நீரில் நச்சு இருப்பதாக ஓர் ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்! நச்சின் அளவு கொஞ்ச நஞ்சமல்ல. அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 மடங்கு கூடுதலான க்ரோமியம் இருந்ததாம். இத்தனை ஆண்டுகள் கடந்தும் குறையாத அளவுக்கு நீரில் நச்சு கலந்திருந்தது. இப்போதே இப்படியென்றால் அறுபது, எழுபதுகளில் அந்த நிலத்தடி நீரைப் பயன்படுத்தியவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள். நச்சு உலோகங்களின் பாதிப்பு அத்தனை தீவிரமானது.

காரீயம் (Lead), தாலியம், கோபால்ட், பாதரசம் ஆர்சனிக், காட்மியம், ஒருவகை க்ரோமியம் ஆகிய Heavy metal வகை உலோகங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடியவை. இவை மனிதர்களுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை இயற்கையில் இயல்பாகவே கிடைப்பவை என்றாலும் மனித செயல்பாடுகளால் ஓர் இடத்தில் இவற்றின் அளவு அதிகரிக்கும்போது அது ஆபத்தாக முடிகிறது. நுரையீரல் பாதிப்பு, பல்வேறு வகையான புற்றுநோய்கள், எலும்பு தேய்மானம், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறு, கருப்பை நோய்கள் என இவற்றால் ஏற்படும் பாதிப்புகளைப் படித்தாலே தலைசுற்றும்.

பல்வேறு வழிகளின் மூலம் நச்சு உலோகங்கள் மனிதர்களை சென்று சேர்கின்றன. சிலவகை பெயிண்டுகளில் உள்ள காரீயம், அன்றாடம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், பூச்சிக்கொல்லிகள், சிலவகை மருந்துகள் என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதில் குறிப்பாக நாளமில்லா சுரப்பிகளைக் குறிவைத்துத் தாக்கும் வேதிப்பொருட்கள் உண்டு. இவற்றை Endocrine Disrupting Chemicals என்பார்கள். இவை மிகவும் ஆபத்தானவை.

ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது நச்சு உலோகத்தின் அளவு, அவரது பால், வயது, பிற நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒரு சில வேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக நச்சு உலோகங்களை எதிர்கொள்வார்கள். ஆனால், அதிலும் பால்சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒரே அளவிலான நச்சு உலோகம் உடலுக்குள் சென்றாலும் ஆணுக்கு ஏற்படும் பாதிப்பை விடவும் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்களின் உடல் இயங்கியல் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதும் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. ஒரு பெண்ணின் உடலில் நச்சு உலோகம் சேர்ந்தால், அவளது கருவில் இருக்கும் குழந்தைக்கோ அவளது தாய்ப்பாலைக் குடிக்கும் பிள்ளைக்கோ அந்த நச்சு சென்றுவிடுகிறது. தாய்ப்பாலின் மூலமும் கருவுற்றிருக்கும்போது தொப்புள்கொடியின்மூலமும் தாயின் உடலில் இருக்கும் முப்பத்தி மூன்று சதவீத நச்சு உலோகங்கள் பிள்ளையின் உடலுக்குள் கட்டாயமாக சேர்ந்துவிடும் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மூன்றில் ஒரு பங்குதானே என்று அலட்சியமாக இருக்க முடியாது, குழந்தைகளின் எடை குறைவு. ஆகவே தாயின் உடலில் இருந்து 33% நச்சு உலோகம் வந்தாலே அது குழந்தையின் எடைக்கு ஆபத்தான அளவாக இருக்கலாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவு, ஆகவே பாதிப்பின் வீரியமும் அதிகரிக்கலாம்.

சில குறிப்பிட்ட வேலைகளில் பெண்களே அதிகம் பங்கேற்கிறார்கள் என்பதும் பாதிப்பை அதிகரிக்கிறது. உதாரணமாக, கிழக்காசிய நாடுகளில் மின்னணு தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள்தாம் அதிகம். மொபைல் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருக்கும் சிப்களை இவர்கள் கையாளும்போது பல்வேறு நச்சு உலோகங்கள் பெண்களின் உடலுக்குள் செல்கின்றன. கருவுற முடியாமல் போவது, ஒருவேளை கருவுற்றாலும் எளிதில் கரு கலைந்துவிடுவது, கர்ப்பத்திலேயே குழந்தையின் உடலில் நோய்களும் குறைபாடுகளும் ஏற்படுவது என்று இந்த நச்சு உலோகங்களால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. வீட்டிலிருக்கும் குப்பைகளைக் கையாள்வது, விவசாயக் குப்பைகளைக் கையாள்வது ஆகிய வேலைகளிலும் பெண்களே அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதால் அதன்மூலமும் நச்சு உலோகங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் துறைகள் உண்டு. நைஜீரியாவின் தங்க சுரங்கத் தொழில், இந்தோனேசியாவில் பூச்சிக்கொல்லிகளை நம்பியே இயங்கும் எண்ணெய்ப் பனைத் தோப்புகள், சீனாவின் உலோகச் சுரங்கங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவில் இருக்கும் பல நீர்நிலைகளில் நச்சு உலோகங்கள் கலந்திருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தும் பெண்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

அழகுசாதனப் பொருட்களிலும் தாலேட், பாரபென், காரீயம், பாதரசம், ட்ரைக்ளோஸான் போன்ற நச்சு உலோகங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாகத் தோலின் நிறத்தை வெள்ளையாக்கும் பல க்ரீம்களில் பாதரசம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. “பெண்களைக் குறிவைக்கும் விளம்பரங்கள் இந்தப் பொருட்களைப் பயன்படுத்துமாறு பெண்களைத் தூண்டுகின்றன. சமூகத்தின் பொதுபுத்தியில் இருக்கும் அழகு பற்றிய கட்டமைப்புகளை இவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன” என்று அமி ஸோடா மற்றும் பாவ்னா ஷாமசுந்தர் ஆகிய இருவரும் ஓர் ஆய்வுக் கட்டுரையில் வருத்தம் தெரிவிக்கிறார்கள். ‘அழகுக்குப் பின்னால் இருக்கும் சூழல் அநீதி’ என்கிற தங்களது கட்டுரையில், ‘ஐரோப்பிய அழகே சிறந்தது என்கிற நம்பிக்கையே இந்த அழகு சாதனப் பொருட்களின் விற்பனைக்குக் காரணம்’ என்று தெரிவிக்கின்றனர். உலகில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த அழகுப் பொருட்கள் விற்கின்றன என்று இவர்கள் பட்டியலிடுகிறார்கள். ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில் இருப்பவர்கள் தோலை வெள்ளையாக்கும் க்ரீம்களை அதிகம் வாங்குகிறார்கள். ஆப்பிரிக்கப் பெண்கள், முடியை நேராக்கக்கூடிய பொருட்களை அதிகம் வாங்குகிறார்கள். இவை எல்லாமே நிறவெறி, இனவெறியை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்களால் வருபவை. குறிப்பிட்ட உடல் / முக அமைப்போடுதான் இருக்க வேண்டும் என்பதைப் பொது புத்தியில் புகுத்தி, அப்படி இல்லாதவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விற்பனை செய்யும் யுத்தி இது. இதுபோன்ற சமூகக் காரணிகளின் பின்னணியிலேயே இந்த நச்சு உலோகங்களின் மருத்துவப் பாதிப்பை அணுக வேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த ஹிங்க்லி பிரச்னை நினைவிருக்கிறதா? அந்த நிறுவனம் நைஸாக நிலத்தடி நீரை மாசுபடுத்திக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், அதாவது 1950களில் ஜப்பானில் ஒரு பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. 1912ஆம் ஆண்டு முதலே ஜப்பானின் ஜின்ஜூ நதிக்கு அருகில் வசித்த பலருக்கு ஒரு பெரிய பிரச்னை இருந்தது. அங்கிருந்த பலர் நோய்வாய்ப்பட்டனர். குறிப்பாகப் பெண்களுக்குக் கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டது. உடல் அசதியை மீறி எழுந்து நின்றாலோ நடந்தாலோ எலும்புகள் உடையத் தொடங்கின. ஜப்பானிய மொழியில் ‘இடாய்’ என்றால் ‘ஐயோ/வலிக்கிறதே’ என்று பொருள். அதையே பெயராக்கி அந்த நோயை இடாய் இடாய் (Itai Itai) என்று அழைத்துக்கொண்டிருந்தனர்.

பலர் பாதிக்கப்பட்டாலும் யாருக்கும் காரணம் தெரியவில்லை. இது ஏதோ உள்ளூர் நோய் என்றும் பாக்டீரியா தொற்று என்றும் பலர் நம்பிக்கொண்டிருந்தனர். அதை ஏற்காத மருத்துவர் ஹகினோ தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். 1955இல் அந்த நதி நீரில் கலந்திருந்த காட்மியம்தான் இந்த நோய்க்குக் காரணம் என்றும், அங்கு இருந்த மிட்சுய் சுரங்கத்தின் கழிவுகள் மூலம்தான் காட்மியம் வந்திருக்கிறது என்றும் உறுதிப்படுத்தினார். முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு 55 ஆண்டுகளுக்குப் பிறகு நோய்க்கான காரணம் வெளிச்சத்துக்கு வந்தது. காரணம் கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து 1971ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் கிடைத்தது. ஜப்பானிய சூழலியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி இது. நச்சு உலோகங்களின் பாதிப்பு எப்படிக் கண்ணுக்குத் தெரியாமல் நம்மை உருக்குலைக்கலாம் என்பதற்கும் இது ஓர் உதாரணம்.

அந்தக் காலத்தைப் போலல்லாமல் நச்சு உலோகங்கள் பற்றிய நமது விழிப்புணர்வு இப்போது அதிகரித்திருக்கிறது. பல உலகளாவிய விவாதங்களில் நச்சு உலோகங்கள் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால், பெண்களுக்குப் பாதிப்பு அதிகம் என்பது போதுமான அளவில் கவனம் பெறுவதில்லை. அதை உரத்துப் பேசப் பெண் பிரதிநிதிகளும் அவ்வளவாக இருப்பதில்லை, இது கவலைக்குரிய போக்கு. நச்சு உலோகங்களால் பாதிக்கப்பட்ட சிற்றூர்களில் சூழல் பாதுகாப்பு இயக்கங்கள்மூலம் பல பெண்கள் போராடுகின்றனர். ஆனால், அது போதாது. முடிவுகள் எடுக்கும் அதிகார மையங்களில் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். “நச்சு உலோகங்களின் பயன்பாட்டை நெறிப்படுத்துவதற்கான பல சர்வதேச ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருக்கின்றன, இவற்றில் பெண்கள் மீதான கவனத்தையும் அதிகப்படுத்த வேண்டும்” என்பது சூழல் செயற்பாட்டாளர்களின் கோரிக்கை.

இயற்கையுடன் இணைந்த வாழ்வை இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பல குழுக்கள் இந்த உலகில் உண்டு. அந்தக் குழுக்களில் பெண்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது? சூழல் பாதுகாப்பு இங்கே எப்படி இயங்குகிறது?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!