படிப்பவர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவோ கவித்துவமாக இருக்கவேண்டும் என்பதற்காகவோ இந்தத் தலைப்பு வைக்கப்படவில்லை, உண்மையிலேயே இன்றைய சூழல் இதுதான். காற்று மாசு கருப்பை வரை சென்று வருங்காலத் தலைமுறையைப் பாதிக்கத் தொடங்கிவிட்டது.

ஓர் இடத்தில் மாசு ஏற்பட்டுவிட்டால், அது அனைவரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை, அவரவரின் உடல்நிலை, பால், வயது, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு ஏற்ப பாதிப்பும் வேறுபடும். காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதிப்பில் நிறையவே வேறுபாடு இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஒரு மனித உடலின் பால் பண்பைப் பொறுத்து என்னென்னவெல்லாம் மாறும் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள்.

சூழலில் இருக்கும் நச்சுப்பொருளில் எவ்வளவு உடலுக்குள் செல்கிறது, அது உடலுக்குள் பயணிக்கும் விதம், வளர்சிதை மாற்றத்தில் அது என்னவாக மாறுகிறது, அது உடலுக்குள் சேமிக்கப்படுகிறதா இல்லையா, அது கழிவாக மாறுகிறதா, வெளியிலிருந்து வந்த பொருள் என்று உடலுக்குள் இருக்கும் செல்கள் அதைக் கண்டுபிடித்து எதிர்வினை ஆற்றுமா, அப்படியே எதிர்வினை ஆற்றினாலும் அந்த எதிர்வினையின் அளவு என்ன என்று எல்லாமே ஆண் உடலுக்கும் பெண் உடலுக்கும் வேறு மாதிரி இருக்கிறது என்கிறார்கள். இந்தச் செயல்பாடுகள் Sex Steroids எனப்படும் வேதிப்பொருட்களால் கட்டுப்படுத்தப்படுவதால் பால் சார்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாகவும் விளக்கமளிக்கின்றனர். அது மட்டுமில்லாமல், நோய் எதிர்ப்பு மண்டலத்திலும் பால் சார்ந்த வேறுபாடுகள் இருப்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இது எல்லாவற்றையும்விட முக்கியமானது, பெண் உடலின் இனப்பெருக்கப் பண்பு. அடுத்த தலைமுறைக்கான உயிர்களை உருவாக்கும் பண்புகள் பெண் உடலில் இருப்பதால், பெண் உடலில் ஏற்படும் மாற்றமும் பாதிப்பும் நேரடியாகப் பிறக்கக்கூடிய குழந்தையைத் தாக்கிவிடுகிறது. பெண்ணின் உடலில் இருக்கும் ரத்தமே கருவிலிருக்கும் குழந்தைக்குப் போய்ச் சேர்கிறது என்பதால் நச்சுப்பொருட்களும் அதன்மூலம் பயணித்து குழந்தையைப் பாதிக்கின்றன.

2020ஆம் ஆண்டில், உலகின் முதல் சைபார்க் குழந்தை (Cyborg Baby) பிறந்திருப்பதாக நாளிதழ்களில் வந்த செய்தி பலருக்கு நினைவிருக்கலாம். அது ஏதோ தொழில்நுட்பப் பாய்ச்சல் என்று நினைத்துவிட வேண்டாம். மாசுபாட்டின் கோர முகம் அது. கருவிலிருக்கும் குழந்தைக்கு ஊட்டம் தரும் தொப்புள் கொடி, குழந்தையைச் சுற்றியிருக்கும் பாதுகாப்புப் படலம், தொப்புள் கொடிக்கு உள்ளிருக்கும் திரவம் ஆகிய எல்லாவற்றிலும் நுண் நெகிழிகள் (Microplastics) கண்டுபிடிக்கப்பட்டன! சுவற்றில் அடிக்கப்படும் வர்ணங்கள், அழகுசாதனப் பொருட்கள், தினசரி பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து இந்தத் துகள்கள் வந்திருக்கலாம் என்றும், இந்தச் சூழலில் வளரும் குழந்தைகளின் உடலில் மனித செல்களோடு பிளாஸ்டிக் துகள்களும் இருக்கலாம் என்பதால் அவை பிற உயிரற்ற பொருட்களும் கலந்த சைபார்க் குழந்தைகள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். நுண் ஞெகிழிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் வருங்காலத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் சைபார்க் குழந்தைகளாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்திருந்தனர். பாதரச நச்சால் வரும் மாற்றங்கள், கன உலோக மாசுபாட்டால் வரும் மாற்றங்கள், பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என, மாசுபாடுகளால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் பட்டியல் மிகவும் பெரியது. ஆனால், இவை எல்லாவற்றையும்விட, காற்று மாசுபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக முக்க்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

காற்று மாசுபாடுகளிலேயே மிகவும் கவலையளிக்கும் ஒரு வகைமை என்பது உட்புறக் காற்று மாசு (Indoor Air Pollution). அதாவது ஒரு வீட்டுக்குள்ளோ கட்டிடத்துக்குள்ளோ இருக்கும் காற்று மாசு இது. காற்று மாசு என்றதுமே நமக்கு வானுயர தொழிற்சாலைக் கட்டிடங்களில் இருந்து வெளியாகும் புகைதான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, வெளிப்புறக் காற்று மாசுக்கு ஈடான பாதிப்பு வீட்டுக்குள்ளும் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் சமையலறைப் புகைதான். “அட, கேஸ் அடுப்பு காலத்தில் இன்னும் அடுப்பூதும் பெண்களைப் பற்றிய பழைய புராணமா?” என்று கேட்பவர்களுக்கு, 2018இல் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை, இந்தியாவின் கிராமப்புறங்களில் இப்போதும் 83% வீடுகளில் சமையல் எரிவாயு அல்லாத பிற பொருட்களின் மூலம்தான் அடுப்பு எரிகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது! விறகு, மாட்டு சாணத்தின் வறட்டி, கரி, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மூலம் இன்றும் அடுப்புகள் இயக்கப்படுகின்றன. சமையல் எரிவாயு மூலம் சமைத்தால்கூட, வறுக்கும்போதோ பொரிக்கும்போதோ தாளிக்கும்போதோ வரும் புகை வெளியேற சரியான வழி இல்லாவிட்டால், அதுவும் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாகிவிடும்! ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பெரும்பாலான பெண்கள் சமையலறையில் நின்று சமைக்கும்போது அதிகமான வெப்பம், புகை மற்றும் இடநெருக்கடியால் சிரமப்படுவதாகக் கூறியது பலருக்கு நினைவிருக்கலாம். இப்போதைய சூழலில் சமையலறையின் அமைப்பு, பரப்பளவு, பயன்படுத்தும் எரிபொருள் என்று எப்படிப் பார்த்தாலும் அது காற்று மாசை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

வீட்டுக்குள் இருக்கும் காசு மாசுபாட்டைக் குறைவாக எடை போட்டுவிட முடியாது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உட்புறக் காற்று மாசு அதிகமாக இருக்கும் வீடுகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நுரையீரலில் கார்பன் மோனாக்சைடு நச்சுப்பொருளை ஆராய்ந்தனர். இவர்களது நுரையீரலில் 7.7 ppm அளவு வரை நச்சுகள் இருந்தன. புரியும்படி சொல்ல வேண்டுமானால், இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 7 சிகரெட் பிடித்தால் வரும் நச்சுக்கு சமம் இது! இதில் பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் உண்டு என்பதை நினைத்துப் பாருங்கள்! வீட்டிலேயே இருக்கும் பெண்கள், பள்ளி செல்லும் வயதுக்கு முந்தைய சிறு பிள்ளைகள் ஆகியோர் தினம் தினம் இந்தப் பாதிப்பைத்தான் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்!

சமையல் எரிவாயு பயன்பாட்டுக்கு மாறுவது, காற்று சுழற்சி இருப்பது போன்ற சமையலறை அமைப்பு, புகை வெளியேற வழி என்று சில மாற்றங்கள் செய்வதன்மூலம் உட்புறக் காற்று மாசுபாட்டிலிருந்து நம்மால் ஓரளவு தப்பிக்க முடியும். வெளிப்புற காற்று மாசைக் கட்டுப்படுத்துவது அமைப்புரீதியான போராட்டம். உட்புறக் காற்று மாசுக்கான தீர்வுதான் நம் கையில் இருக்கிறது. அதை நம்மால் செய்துவிட முடியும்.

வெளிப்புறக் காற்று மாசு ஏற்படுத்தும் பாதிப்புகளின் பட்டியல் திகிலூட்டுகிறது. அதிகமான துகள்மப் பொருட்கள் (Particulate Matter) காற்றில் இருப்பது பெண்களுக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகமான துகள்மங்கள் இருக்கும் பகுதிகளில், குறைப்பிரசவங்கள் (Pre-term births) 18% அதிகரிக்கிறதாம். அதிகமான காற்று மாசு இருக்கும் சூழலில் வசிக்கும் 18,000 தம்பதியினரை ஆய்வு செய்தது ஒரு சீன ஆராய்ச்சிக்குழு. இதில் 20% தம்பதிக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பு குறைவு என்றும், காற்று மாசினால் பெண்களின் கருமுட்டை வளர்ச்சியடையும் பண்பும் குறைந்திருக்கிறது என்றும் கண்டுபிடித்தனர். காற்று மாசு அதிகமான இடங்களில் வசிக்கும் பெண்களுக்கு, தொடர் புகைபிடித்தல் (Chain Smoking) மூலம் வரும் எல்லாப் பாதிப்புகளும் வருகிறது என்று உறுதி செய்யப்பட்டது! இந்தப் பெண்களுக்குக் குழந்தைகள் பிறக்கும்போது, குறைப்பிரசவம், எடை குறைந்த குழந்தைகள் பிறப்பது (Low Birth Weight), குழந்தை இறந்து பிறப்பது (Still birth) போன்ற எல்லாப் பாதிப்புகளும் வரலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமில்லாமல் காற்று மாசு அதிகமாக உள்ள இடங்களில், பதின் பருவப் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை எல்லாருக்குமே ரத்த சோகை அதிகமாக ஏற்படுகிறது என்கிறது லான்செட் இதழில் வந்த ஓர் ஆய்வு. காற்றில் துகள்மப் பொருட்களின் அளவு 10 மைக்ரோ கிராம் அதிகரித்தால், அந்த இடத்தில் பெண்களின் ரத்த சோகை விழுக்காடு 7.23% அதிகரிக்கிறதாம். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பெண்களுக்கு ரத்த சோகைப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இதில் காற்று மாசினாலும் இந்தப் பிரச்னை வரலாம் என்ற தகவல் கவலையளிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பிரச்னை (Health Risk) காற்று மாசுபாடுதான். ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசுபாட்டால் நேரடியாகவோ மறைமுகக் காரணிகளாலோ இந்தியாவில் மட்டும் 16.7 லட்சம் பேர் இறக்கிறார்கள்.

இன்னும் அச்சமூட்டக்கூடிய புள்ளிவிவரங்களைத் தந்துகொண்டே இருக்கலாம் என்றாலும் பிரச்னையின் தீவிரம் ஓரளவு புரிந்திருக்கும். ஆகவே நாம் தீர்வுகளைப் பற்றிப் பேசலாம். தீர்வில் முதல் படி, பெண்களுக்கு அதிகமாகப் பாதிப்பு வரும் என்பதை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பது. அதுவே இங்கே நடப்பதில்லை. அப்படியே அது நடந்தாலும், தீர்வுகள் பெண்களை மையப்படுத்தியவையாக இருப்பதில்லை. காற்று மாசுபாட்டால் பெண்களுக்கே பாதிப்பு அதிகம் என்றாலும் தீர்வுகளின்போது பெண்கள் மீது கவனம் தரப்படுவதில்லை. காற்று மாசுபாடு பற்றிய தேசிய அறிக்கையில்கூட (National Clean Air Programme) பெண்கள், பாலினம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. “பொதுவாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் இருக்கும் ஆண்மையத் தன்மையின் ஒரு பிரதிபலிப்பாகவே இதைப் பார்க்கிறேன். பெண்களை அதிகமான பாதிப்புக்கு உள்ளாகும் வகையினராகச் சட்டங்களே அங்கீகரிப்பதில்லை” என்கிறார் சட்ட வல்லுநர் அர்பிதா கொடீவரி. “காற்றின் தரம் பற்றிய வரையறைகளில் பால் பண்புகள் போதுமான அளவு பேசப்படுவதில்லை” என்று கவலை தெரிவிக்கிறார் ஆராய்ச்சியாளர் பல்லவி பந்த்.

தீர்வுகளை எதிர்பார்த்து நொந்துபோய், பெண்களே இதற்காகப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். வட இந்தியாவில் இயங்கிவரும் Warrior Moms என்ற இயக்கம், காற்று மாசுபாடு என்பது பெண்களின் உடல்நலப் பிரச்னையாகக் கருதப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது. அதற்கான விழிப்புணர்வையும் இவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். புதுதில்லியைச் சேர்ந்த சில பெண்கள் AQI Ambassadors (AQI- Air Quality Index) என்ற அமைப்பைத் தொடங்கி, முகக்கவசம் அணியும் வழக்கத்தைப் பற்றிப் பெண்களிடம் பேசுகிறார்கள். சட்டிஸ்கரின் கோர்பாவில் பெண் சுகாதாரப் பணியாளர்கள் மிதானின் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். அங்கு இருக்கும் தொல்குடிப் பெண்களிடம் இவர்கள் காற்றுமாசு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இன்னும் சில பெண்கள் அதிகார மையங்களில் இவற்றின்மீதான கவனத்தைக் கொண்டு வருவதற்காகப் போராடுகின்றனர். இவை ஆரம்பகட்ட முயற்சிகள் என்றாலும் நம்பிக்கை அளிக்கின்றன.

ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் பிரச்னை இது. ஆனால், நம் கண்ணுக்கே தெரியாதபடிகூட நச்சு நம்மை வந்து சேர்ந்துவிடுகிறது. அது என்ன வரலாறு? அது பெண்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!