அரக்கீஸ் பார் (ஏசி) வெள்ளி இரவு எட்டு மணி.

20 வயது முதல் அறுபது வயதிலான மனிதர்கள் வாரம் முழுவதும் உழைத்த களைப்பு தீர மட்டுமல்ல, புருசன் புள்ள குட்டிகளின் தொந்தரவும் இல்லாமல் சில மணி நேரம் இளைப்பாறும் நேரம். நிலா ஒரு லார்ஜ் விஸ்கியுடன் அமர்ந்திருந்தாள். மாலா வந்தாள்.

சற்று நேரம் வேலை, சினிமா, பாரில் பாடி ஆடும் கவர்ச்சி ஆண்கள், அன்றைய பரபரப்புச் செய்திகள் எல்லாம் ஜாலியாக அலசி முடித்தார்கள். நிலா என்னவோ கவலையாகவே இருப்பதாக மாலாவுக்குப் பட்டது.

”என்ன நிலா ஏதோ டென்ஷன்ல இருக்கிற மாதிரி தெரியுது?”

“ம்ச்! இப்டியே அரட்டை அடிச்சிக்கிட்டு எவ்ளோ நிம்மதியா இருந்தோம் மாலா? லேட் நைட் வீட்டுக்குப் போனா அப்பா லேசா திட்டுனாலும் சூடா தோசை சுட்டுக் குடுப்பார். சாப்டு நிம்மதியாத் தூங்க வேண்டியதுதான்.”

”ஏன் இப்பவும் அப்டி தானே இருக்கோம்! நான் எல்லாம் எங்க வீட்ல கல்யாணமானாலும் ஃப்ரெண்ட்ஸ் முக்கியம்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிருக்கேன்பா.”

“ம்ம், நானும் அப்படித்தான். ஆனா, என்னதான் இருந்தாலும் அப்பா மாதிரி வருமா? இப்பவும் எனக்கு ஒரு தலைவலின்னா பதறிப் போயிடுறார். யாருக்காகவும் அப்பாவை விட்டுக் கொடுக்க மாட்டேன்.”

“ஆமாம் மச்சி, இவனுங்க நேத்து வந்தவனுங்க. நம்ம அப்பாங்க கூடல்லாம் கம்பேர் பண்ண முடியாது. சரி, இப்ப என்னாச்சு? அதைச் சொல்லு.”

“இல்ல மாலா. தம்பி கல்யாணத்துக்காக அம்மாவும் நானும் சேர்ந்து எட்டு லட்சம் கிட்ட கடன் வாங்கி இருந்தோம். இப்ப அவங்க ரிட்டையராகி ஜாலியா உட்கார்ந்துட்டாங்க. எப்டி திரும்பக் கட்டப் போறேன்னே தெரியல.”

மாலா பேசாமலிருந்தாள். அண்ணன் தம்பி என்று யாரையும் கரையேற்ற வேண்டிய பொறுப்பு அவளுக்கு இல்லை. நிலா கடன் கேட்பாளோ என்ற பயமும் இல்லை. ஆனாலும் எப்போதுமே நிலா மீது லேசாகப் பொறாமை உண்டு மாலாவுக்கு. மாலாவின் கணவன் மாதவன் சரியான அசடு. படித்திருந்தாலும் வேலைக்குப் போக விருப்பமில்லை. வருணைப் போல் கலகலப்பாகப் பேசுபவனுமில்லை.

சற்றே வசதியான வீட்டிலிருந்து வந்திருந்த மாதவன், மாலா தன்னை ராஜா மாதிரி உட்கார வைத்துச் சோறு போட வேண்டுமென்று விரும்பினான். ஏனோ தானோவென்று சமைப்பான் மாதவன். மற்றபடி டிவி பார்த்துக் கொண்டு அக்கம்பக்கத்து ஆண்களுடன் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பதுதான் அவனது பொழுது போக்கு. பேரழகன் என்ற நினைப்பும் இருந்ததால் சதா அலங்காரம்தான்.

செய்யும் வேலையில் மாமனார் ஏதாவது சிறு குறை சொன்னாலும் பொறுத்துக் கொள்ள மாட்டான். மாலா வீடு திரும்பியதும் நை நை என்று கோள் மூட்டிப் பெரிய சண்டையாகப் போடுவான்.

மாலாவுக்கும் மாதவனுக்கும் உறவில் விரிசல் விட்டுப் பலகாலமாகி இருந்தது. தலையெழுத்தே என வாழ்ந்து கொண்டிருக்கும் மாலாவுக்குப் புருசனைவிடத் தோழி நிலாவுடன் ஊர் சுற்றத்தான் பிடிக்கும்.

நிலாவோ வருணுடன் ஆசையாக நேரம் செலவிடலாம் என்று திட்டமிடும் போதெல்லாம் போன் செய்து எங்காவது அழைத்துக் கெடுத்து விடுவாள். வருணுக்கு எரிச்சலாக வரும். ஆனால், தோழியைப் பற்றித் தவறாக எது பேசினாலும் நிலாவுக்குக் கோபம் வந்துவிடும் என்பதால் பேசாமல் இருந்து விடுவான்.

நிலாவிடம் எப்போதும் குத்தல் பேச்சு பேசி அவள் கணவன் வருண் மீது எதிர்மறையான எண்ணம் வரும்படி செய்து விடுவதில் மாலாவுக்கு ஓர் இன்பம் மட்டுமல்ல, பாதுகாப்பு உணர்வும்கூட. அப்போதுதானே நிலா வருணைவிட்டு விலகி மேலும் தன்னிடம் ஒட்டுவாள்!

இப்போது அருமையான தருணம் கிடைத்திருப்பதால், “அட, நீ ஏன் அலுத்துக்குற? உங்க வீட்லதான் டபுள் இன்கமாச்சே! வருண் சம்பளத்தை அப்டியே லோன் கட்ட யூஸ் பண்ண வேண்டியதான? ஏன் குடுக்க மாடடேங்குறானா?” விஷமமாகக் கேட்டாள் மாலா.

முயற்சி பலித்தது. சென்ற வாரம் தனது டெபிட் கார்டைக் கேட்டு வருண் சண்டை பிடித்தது ஞாபகம் வந்தது நிலாவுக்கு.

“ஹும்… என்ன பிரயோஜனம் மச்சி? பொண்டாட்டின்னு ஒரு மரியாதை இல்ல அவனுக்கு. எப்பப் பாரு அவன் பணம் என் பணம்னு பிரிச்சிப் பேசுறான். கடுப்பா வருது.”

மாலாவுக்குப் பரம திருப்தி. “அப்படியா? நம்பவே முடியலடி. உனக்கா இந்த நிலைமை?”

“ம்ம் ஆமாம், வீட்டுக்கு வரப்போறவன் கிட்ட கை நீட்டிக் காசு வாங்குறது அசிங்கம்னு போட்டுருக்குற பாண்ட் ஷர்ட்டோட வந்தால் போதும்னு சொன்னோம். அவன் என்னடான்னா என்னையும் என்னைப் பெத்தவங்களையுமே பிரிக்கப் பாக்குறான்!”

கசந்த சிரிப்பொன்றை உதிர்த்தபடி மேலும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள் நிலா.

“விடு மச்சி. உனக்கு நல்ல மனசு. நீ எதுக்கும் கவலைப்படாதே!” பற்ற வைத்த தீயில் லேசாக ஊதி விட்டாள் மாலா.

க்ளாஸை வேகமாகக் காலி செய்த நிலாவின் கண்களில் பொறி பறந்தது.

“எங்கே மாலா, அந்த நன்றியே அவனுக்கு இல்ல. எப்பப் பாரு சண்டை பிடிக்கிறான். எங்கப்பாம்மா பாவம் தேமேன்னு இருக்காங்க. எப்ப பார்த்தாலும் அவங்களைக் குத்தம் சொல்றான். ச்சே!”

“நிஜமாவா?” அக்கறை ததும்பும் தொனியில் கேட்டாள் மாலா.

“ஆமாம். தனிக்குடித்தனம் போகணும்னு வேற ஒரே நச்சரிப்பு. எங்கப்பா என்னைப் பிரிஞ்சா உயிரையே விட்டுடுவார். கல்யாணம் ஆனாலே பிரச்னைதான்.” பெருமூச்சுடன் சிகரெட்டை இழுத்தாள் நிலா.

இதற்குள் ஜான்சியும் சஃபியும் வந்தார்கள். ஜான்சி சோகமாக இருந்தாள். அவளது தம்பி ஜான் தன் கூடப் படிக்கும் காயத்ரியுடன் நெருங்கிப் பழகுவதாகவும், காதலாக இருக்குமோ என்று சந்தேகப்படுவதாகச் சொல்லவும் அனைவரும் முகம் சுளித்தார்கள்.

“அவன் லவ் பண்றதெல்லாம் பிரச்னையே இல்லை. யாரா இருந்தாலும் எங்களுக்கு ஓகேதான். ஆனா, சண்டேயானா பீஃப், மத்த நாள் மீன் மட்டன்னு ஒரு நாள்கூட மீட் இல்லாம சாப்பிட மாட்டோம். அதுவும் ஜான் குட்டிக்கு நாக்கு நீளம்.

தயிரை மோராக்கி அதை மட்டுமே மூணு வேளை ஊத்தித் தின்ற குடும்பத்துல போய் இவன் எப்படிக் குப்பை கொட்டுவான்? அறிவு வேணாம்? லவ்வு கிவ்வுன்னு சொல்லட்டும் காலை வெட்டிப் போட்டுடறேன்.” தம்பி மீதுள்ள பாசத்தில் ஜான்சி வெறி கொண்டு கத்தினாள்.

“விடு ஜான்சி. உன் தம்பி புத்திசாலி. போயும் போயும் அந்தக் காயத்ரிக்கு எல்லாமா விழுவான்? இவன் ரேஞ்சே வேறம்மா.”

“சரி, சரி போதும். இந்தக் குடும்பக் கவலை எல்லாம் மறந்து கொஞ்ச நேரம் ஜாலியா இருக்கத்தானே இங்கே வந்தோம்…” என்று எல்லாருக்கும் இன்னொரு ரவுண்டு ஆர்டர் செய்தாள் நிலா.

“அப்புறம் நிலா, எப்போ தனிக்குடித்தனம் போகப் போற?” எல்லோர் முன்பும் மீண்டும் சீண்டினாள் மாலா.

“…..ப் போவாங்க. இந்த ஆம்பளைங்களை வெக்க வேண்டிய இடத்துல வெக்கணும் மச்சி. இல்லேன்னா தலைக்கு மேல ஏறிடுவாங்க. இன்னிக்குப் போய் ஒரு முடிவு கட்றேன்.” ரெண்டு ரவுண்டு ஏறி இருந்ததில் தலை கிறுகிறுத்துச் சபதமிட்டாள் நிலா.

மாலா திருப்தியுடன் சைட் டிஷ்ஷைக் கொறித்தாள். இனி வீட்டுக்குப் போனவுடன் அந்த மண்டு மாதவன் என்ன கத்தினாலும் பரவாயில்லை. நிலா வீட்டிலும் சண்டைதான் நடக்கப் போகிறது என்பதே அவளுக்கு ஆனந்தமாக இருந்தது.


(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.