1700 களில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமையாக அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட பெண் எழுதிய கவிதைகள் பிற்காலத்தில் அடிமைமுறை ஒழிப்பிற்காக நடந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகித்தது என்பது வரலாற்றின் மறுக்க முடியாத உண்மை.

1753 இல் ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்த பிலிஸ் வீட்லி (Phillis Wheatley) அடிமை வியாபாரிகளால் பிடிக்கப்பட்டு, 1761இல் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்ட இவர், அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ‘வீட்லி’ குடும்பத்தினருக்கு விற்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. காரணம், இவரின் ‘பிலிஸ்’ இவரை அமெரிக்காவிற்கு அழைத்து வந்த கப்பலின் பெயர், அடிமையாக இவரை வாங்கிய வீட்லி குடும்பத்தினரிடம் இருந்து ‘வீட்லி’ என்கிற பெயரும் வந்துள்ளது.

வீட்லி குடும்பத்தினர் பிலிஸ்ஸை அடிமையாக விலைக்கு வாங்கியிருந்தாலும் அவருக்குக் கல்வி கற்பித்தனர், இதனால் அமெரிக்காவிற்கு வந்த பதினாறு மாதங்களுக்குள் பைபிள், கிரேக்க லத்தீன் கிளாசிக்ஸ் மற்றும் பிரிட்டிஷ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக வானியல், புவியியலும் கற்றார்.

பதினான்கு வயதில் தன்னுடைய எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தார் பிலிஸ். இவரது முதல் கவிதை On Messrs. Hussey and Coffin வீட்லி குடும்பத்தினரால் ஒரு செய்தித்தாளில் 1767 இல் வெளியிடப்பட்டது. அந்தக் கவிதை மாலுமிகள் பேரழிவில் இருந்து தப்பிப்பது குறித்துப் பேசியிருந்தது. இதன் மூலம் தன் கவிதைகளைப் பிரசுரித்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் இவர்.

1770இல் ‘ஜார்ஜ் ஒயிட்ஃபீல்டு’க்காக பிலிஸ் எழுதிய An Elegiac Poem, on the Death of That Celebrated Divine George Whitefield என்கிற கவிதை மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.

இவரின் மற்றொரு குறிப்பிடத்தக்க கவிதை On being brought from Africa to America. 1768இல் எழுதப்பட்ட இந்தக் கவிதை நேரடியாக கிறிஸ்தவத்தைப் புகழ்ந்து பேசுகிறது, மேலும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் மீது வெறுப்பை உமிழும் மக்களையும் சாடுகிறது.

இவை தவிர 1767 இல் To the University of Cambridge, in New England, 1768இல் To the King’s Most Excellent Majesty,1769இல் On the Death of the Rev. Dr. Sewall போன்ற கவிதைகளும் மிக பிரபலமானவை.

1773 ஆம் ஆண்டு தன் கவிதைகளைப் பதிப்பிக்கத் தன்னுடைய முதலாளியின் மகனுடன் லண்டனுக்குச் சென்றவர், தன்னுடைய முதல் புத்தகம் Poems on Various Subjects, Religious and Moral வெற்றிகரமாக வெளியிட்டார்.

இவரது கவிதைகளில் இவர் வாழ்க்கையின் பல தாக்கங்கள் பிரதிபலித்தன. மேலும் ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தின் பெருமையும் இவர் படித்த இலக்கியங்களின் மேற்கோள்களும் பைபிள் குறிப்புகளும் கவிதைகளில் தெரிந்தன. இவர் கவிதைகளில் இருந்த தனித்துவமும் இலக்கியச் செழுமையும், வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற அதே வேளையில் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இத்தனை நேர்த்தியாக பல கவிதைகள் படைப்பதை ஏற்றுக்கொள்ளாத சில அமெரிக்கர்களால் இவரது கவிதைகள் ஒரு குப்பை எனவும், வேறு சில சிறந்த கவிஞர்களிடமிருந்து நகல் எடுக்கப்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டது. அத்தனை விமர்சனங்களுக்கும் இடையில் வெகுஜன மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது பிலிஸ்ஸின் கவிதைகள்.

இவரது எழுத்துப் பயணத்தில் கான்டினென்டல் ராணுவத்தின் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டனை நியமித்ததைப் பாராட்டி இவர் எழுதிய கவிதை பலராலும் பாராட்டப்பட்டது.

பிலிஸ்ஸின் கவிதைகள் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகப் பிரசாரத்தத்தில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1778 ஆம் ஆண்டு, பாஸ்டனைச் சேர்ந்த ஜான் பீட்டர்ஸ் எனும் ஒரு சுதந்திர ஆப்பிரிக்கரை மணந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர், ஆனால் யாரும் உயிர் பிழைக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு சில கவிதைகளை வெளியிட்டார். குடும்பக் கஷ்ட்டத்திற்காக ஒரு விடுதியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்தவர்,1784 டிசம்பரில் இறந்தார்.

ஃபிலிஸ் வீட்லியின் கவிதைகள் அடிமைமுறை குறித்துப் பெரிதாகப் பேசவில்லை எனவும், காட்டமாக எதிர்க்கவில்லை எனவும் பலரால் விமர்சிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவிற்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கப் பெண், தனக்கு இருக்கும் தடைகளைத் தாண்டி, அவருக்குக் கிடைத்த கல்வியால், சிறந்த இலக்கியங்களைப் படைக்க முடியும் எனவும், இலக்கியம், கலை சார்ந்த திறமையிலும் அறிவிலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எந்த விதத்திலும் அமெரிக்கர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றும் விதமாகவும் வாழ்ந்து காட்டியுள்ளார் பிலிஸ் வீட்லி.

ஆண்மயப் படுத்தப்பட்டிருந்த சமூகத்தில் ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணாக, அடிமையாக அமெரிக்க மண்ணில் வந்து இறங்கிய இவர், காலம் கடந்தும் உயிர்ப்போடு உலகம் வியக்கும் கவிதைகள் படைத்து, இன்றளவும் உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவராகத் தனக்கென ஒரு சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் பிலிஸ் வீட்லி. அவருக்குப் பின்னால் அறிவுலகை நோக்கி வருபவர்களுக்கு வழிகாட்ட ஒளி விளக்கை ஏந்தி முன்னால் நடக்கும் ‘பிலிஸ் வீட்லி’ நாம் வியக்கும் ஆளுமையாக வரலாற்றில் எப்போதும் வலம் வருவார்!

படைப்பாளர்:

நாகஜோதி

Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். நாத்திகவாதி. பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.