பாலைவனங்கள், தீவுகள், மலைகள், காடுகள், பனிசார் வாழிடங்கள் என உலகின் பல்வேறு பகுதிகளில் தொல்குடிகள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். நிலத்தையும் நீர்நிலைகளையும் சுற்றியே இவர்களது வாழ்வும் வாழ்வாதாரமும் அமைகிறது. சிறு/குறு விவசாயம், மேய்ச்சல், வேட்டை, மீன் பிடிப்பது, காட்டிலிருந்து உணவு சேகரிப்பது என்று பல்வேறு விதங்களில் இவர்கள் தங்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கின்றனர். இந்தத் தொல்குடிகளைச் சேர்ந்த பெண்கள் இயற்கை மருத்துவம் அறிந்த வைத்தியர்களாகவும், மரபுப் பழக்கங்களைப் பின்பற்றி அதைக் கற்றுத்தரும் ஆசிரியர்களாகவும், மரபுசார் அறிவுக்கருவூலத்தைக் காப்பவர்களாகவும் இருக்கின்றனர். மாறிவரும் சூழலில் இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, இவர்களது இடம் எப்படி மாறியிருக்கிறது என்பதைத்தான் இங்கே விவாதிக்கப் போகிறோம்.

தொல்குடிப் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பலதரப்பட்டவை. அவர்களது நிலமும் வாழ்விடமும் மாசுபடுத்தப்படுகிறது, தங்களது வசிப்பிடங்களிலிருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள், பெருநிறுவனங்கள் அவர்களது இடத்தில் தொழில் தொடங்கும்போது அவர்கள் மிகக் கடுமையான வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இவற்றை எல்லாம் எதிர்த்துப் பேச முடியாதபடி சர்வதேச அரங்குகளில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமும் தரப்படுவதில்லை. ஒரு வகையில் உதவிக்கான எல்லா வழிகளும் பூட்டப்பட்ட நிலையில் வெட்டவெளியில் ஆயுதமின்றிப் போரிடும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் ‘மனிதனின் கால்படாத இடம்’ என்று குறிப்பிடுவார்கள். இப்போது அதுபோன்ற இடங்களே இந்தப் பூமியில் இல்லை எனலாம். எல்லா இடங்களிலும் பெருநிறுவனங்கள் தங்களது ஆக்டோபஸ் கரங்களை நுழைத்துவிட்டன. தொல்குடிகளின் முழுமையான பயன்பாட்டில் இருந்த பல வனப்பகுதிகளும் மலைப்பகுதிகளும் இப்போது தங்களது முந்தைய பொலிவை இழந்துவிட்டன. நச்சுப்பொருட்கள் எல்லா இடங்களுக்குள்ளும் ஊடுருவி விட்டன. தொல்குடிகள் இயற்கையில் இருந்து நேரடியாகக் கிடைக்கும் உணவை எடுத்துக்கொள்பவர்கள் என்பதால் இதுபோன்ற சூழல் சீர்கேடுகள் தொல்குடிகளை அதிகமாகவே பாதிக்கும். உலக அளவில் பல்வேறு தொல்குடிகளைச் சேர்ந்த பெண்களின் தாய்ப்பாலைப் பரிசோதித்ததில், அவற்றில் ஆபத்தான அளவில் நச்சுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது! இவர்கள் எந்த வேதிப் பொருளையும் பயன்படுத்தாதவர்கள். இவர்களின் தாய்ப்பாலுக்குள்ளும் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கிறது என்றால், அவர்களது காடுகளே மாசடைந்திருக்கின்றன என்றுதானே பொருள்? நாம் நினைத்துப் பார்க்காத இடங்களில்கூட சூழல் சீர்கேடுகள் பரவிவிட்டன என்பதற்கு இது ஓர் உதாரணம்.

“என் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று காலநிலை உச்சி மாநாட்டு அரங்கத்துக்கு வெளியில் நின்றுகொண்டு அறிவிக்கிறார் தொல்குடி செயற்பாட்டாளரான சியாம் ஹாமில்டன். “நில உரிமைப் போராட்டத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன், எப்போது வேண்டுமானாலும் நான் காணாமல் போகலாம்” என்கிறார். இன்னொரு தொல்குடி செயற்பாட்டாளரான டெலீ நிகால், “இவர்கள் செய்யும் சூழல் படுகொலைக்கும் பெண்கள் மீதான வன்முறைக்கும் நேரடியான தொடர்பு உண்டு. நமது காலநிலையைப் பாதித்து சூழலை அழிக்கும் இந்தப் பெரிய தொழிற்சாலைகள் பெண்கள் மீதான வன்முறையோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன” என்கிறார். தொல்குடிப் பெண்களை ஒடுக்குவதற்குப் பாலியல் வன்புணர்வு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. தொல்குடிப் பெண்கள்மீதான வன்முறையானது பிற பெண்கள் மீதான வன்முறையைவிடப் பல மடங்கு அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். அதிலும் குறிப்பாகத் தொல்குடிப் பெண்கள் கொல்லப்படுவதற்குச் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும், சூழல் பாதுகாப்புப் போராட்டங்களில் ஈடுபடும் பெண்களுக்கு இந்தப் பாதிப்பு கூடுதல் என்றும் தரவுகள் கூறுகின்றன.

பல இடங்களில் நிறுவனங்களுக்கு எதிராகவும் வெளியேற்றத்துக்கு எதிராகவும் பெண்கள் முனைமுகத்து நின்று போராடுகிறார்கள். சூழலை அழிக்கும் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. அது பல தசாப்தங்களாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், ‘சூழல் பாதுகாப்பு’ என்கிற போர்வையில் ஒரு காட்டைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துவிட்டு, அங்கு இருக்கும் மனிதர்களை வெளியேற்றும் போக்கு சமீபத்தில் அதிகரித்திருக்கிறது. இதைப் போல ஓர் அவலமான நகைமுரணைப் பார்க்க முடியாது. ஒரு வகையான சூழல் ஃபாசிசமாகவே இது முன்னெடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக, ‘அவர்கள் படிப்பறிவில்லாத காட்டு மிராண்டிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது’ என்று சொல்லிவிடுவார்கள். ‘எங்களால் மட்டுமே சூழலைப் பாதுகாக்க முடியும்’ என்று அறிவித்துவிட்டு, இருக்கும் இடத்திலிருந்து தொல்குடிகளைப் பிடுங்கி எறிவார்கள். அடுத்த சில நாட்களில் அந்தக் காட்டில் இருக்கும் வளங்களைச் சுரண்டும் பொறுப்பை ஒரு பெருநிறுவனத்திடம் ரகசியமாக ஒப்படைப்பார்கள். இது பல இடங்களில் வெளிப்படையாகவே நடக்கிறது. சூழலைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு சூழலைப் பாதுகாக்கும் முதல் அரண்களை வெளியேற்றும் அவலம் இது.

இதன் உச்சகட்டமாக ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களுக்குப் பதிலாக வளங்குன்றா ஆற்றலுக்கு நாம் மாற வேண்டும் என்பது பல ஆண்டுகளாகவே சூழலியலாளர்களின் கோரிக்கைதான். ஆனால், ஸ்வீடன் அரசு அதையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சமி தொல்குடியினரை ஒடுக்கியிருக்கிறது. காற்றாலைகள் அமைப்பதற்காக அவர்களது மேய்ச்சல் நிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. சமூக நீதி இல்லாமல் சூழலைப் பாதுகாத்து என்ன பயன்? மனிதர்களின் உரிமையை நசுக்கித்தான் காற்று மின்சாரம் கிடைக்குமென்றால் அது ஒருவகையில் வீழ்ச்சிதான். காலம் மாற மாற, இதுபோன்ற புதிய பிரச்னைகளையும் தொல்குடிகள் எதிர்கொள்கிறார்கள்.

சூழல் சீர்கேட்டுக்கு எதிராகவும் வெளியேற்றத்துக்கு எதிராகவும் தொல்குடிப் பெண்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சுரங்கங்கள் அமைப்பதற்கு எதிராகப் போராடிவரும் ஒடிசாவின் காசிப்பூரைச் சேர்ந்த பெண்கள், 2021இல் தங்களது நில உரிமைக்காகப் போராடிய பிரேசிலின் தொல்குடிப் பெண்கள் என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.

1978இல் உத்தரப் பிரதேசத்தில் துத்வா பகுதியில் ஒரு தேசியப் பூங்கா அமைப்பதற்காக அதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தார்கள். 46 கிராமங்களைச் சேர்ந்த தரு தொல்குடிகள் அதற்குள் வசித்துக்கொண்டிருந்தனர். தேசியப் பூங்கா வந்ததிலிருந்தே காட்டிலாகா அதிகாரிகளுக்கும் தரு தொல்குடியினருக்கும் பல முரண்கள் ஏற்பட்டன. சில இடங்களில் இருக்கும் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர், கிராமசபைத் தலைவர்கள் நீதிமன்றத்தில் போராடி வெளியேற்ற உத்தரவைத் திரும்பப் பெற்றனர். வசிப்பதற்கான அனுமதி கிடைத்தாலும் அவர்களது அன்றாட வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. அதிகாரிகள் தங்களைத் தொடர்ந்து துன்புறுத்துவதாக தரு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். “காடுகளை எரிக்கிறார்கள், வனவிலங்குகளைக் கொல்கிறார்கள்” என்று தொல்குடியினர் மீது பொய்க்குற்றம் சுமத்தப்படுகிறது. மகன்களும் கணவன்மார்களும் தொடர்ந்து அடிவாங்குவதைத் தாங்க முடியாமல் தரு பெண்கள் புழுங்கினர். ஒரு கட்டத்தில், 2009ஆம் ஆண்டில், ‘தரு தொல்குடிப் பெண் தொழிலாளர் மற்றும் விவசாயப் பேரவை’ என்கிற அமைப்பை அந்த ஊர்ப் பெண்களே தொடங்கியிருக்கிறார்கள். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பேரவை, தரு மக்களின் அமைதியான வாழ்வுக்காக இன்றும் உழைத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக கோவிட் ஊரடங்கு காலத்தில் நடந்த பல அத்துமீறல்களை இவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதே காலகட்டத்தில், அதாவது 1970களில், ஒடிசாவைச் சேர்ந்த கொடரப்பள்ளியில் ஒரு வழக்கம் நடைமுறைக்கு வந்தது. அதன் பெயர் தெங்கபலி. ‘தடியை எடுத்துக்கொண்டு சுழற்சி முறையில் பணி செய்வது’ என்று இதை நாம் புரிந்துகொள்ளலாம். கொடரபள்ளியைச் சேர்ந்த தொல்குடிப் பெண்கள், ஒவ்வொரு நாளும் லத்திகளை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் காடுகளில் ரோந்து வருகிறார்கள். காடுகளைச் சீரழிப்பவர்கள், மரம் வெட்டுபவர்கள், விறகு மாஃபியா போன்ற பலரையும் கண்டறிந்து அவர்களைப் பிடித்து ஊருக்குள் கொண்டு வருகிறார்கள். 1970களில் காடுகளில் இருந்த சில பெண்கள் மரம் வெட்டிக் கடத்திய ஒரு நபரைக் கையும் களவுமாகப் பிடித்ததிலிருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் வந்ததாம். இதுவரை 50 ஏக்கர் காடுகளை இந்தப் பெண்கள் முழுமையாகப் பாதுகாத்திருக்கிறார்கள். இதே வழக்கம் ஜார்க்கண்டிலும் பின்பற்றப்படுகிறது. ‘காடு பாதுகாப்பு சபை’ என்கிற பெயரில் அறுபது பெண்கள் கொண்ட ஒரு குழு காடுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது. ரக்க்ஷா பந்தன் திருநாளன்று இந்தப் பெண்கள் மரங்களுக்கு ராக்கிக் கயிறு கட்டி, ‘காடுகளைப் பாதுகாப்போம்” என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். புன்னை மரத்தைச் சகோதரியாக வரித்துக்கொண்ட நற்றிணைப் பெண்ணின் கதை நினைவுக்கு வருகிறது.

காலநிலைக்கான பன்னாட்டு அறிஞர் குழுவின் அறிக்கையில், தொல்குடிப் பெண்களிடம் இருக்கும் மரபுசார் அறிவுச்செல்வம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘காலநிலை மாற்றத்துக்கு எதிரான நமது செயல்பாட்டில் இவர்களது அறிவு முக்கியமான ஒரு கருவியாக விளங்கும்’ என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அது உண்மைதான் என்பதைப் பல தொல்குடிப் பெண்கள் நிரூபித்திருக்கிறார்கள். உலகின் மக்கள்தொகையில் 5 விழுக்காடு மட்டுமே இருக்கும் தொல்குடியினர், உலகில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 40% பரப்பளவுக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, காலநிலை செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டிய இடங்களில் முப்பது விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களில் இருப்பது இவர்கள்தாம். இவர்கள் இல்லாமல் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் இருக்கும் இடங்களில் கார்பன் உமிழ்வு ஒப்பீட்டளவில் குறைவு என்றும் ஒரு பிரேசிலிய ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது. ஆகவே இவர்களது வாழ்க்கை முறையே காலநிலைத் தீர்வுக்கு அடிப்படைப் பாடம் எனலாம்.

சில உதாரணங்களைப் பார்க்கலாம். குவாத்தமாலாவில் உள்ள ஓர் ஊரில் விவசாயம் பொய்த்தபோது தங்களது மரபு அறிவைத் தொல்குடிப் பெண்கள் கையில் எடுத்தார்கள். எந்த மாதத்தில் எந்தப் பயிரை வளர்க்கலாம் என்கிற நாட்காட்டியை மாற்றியமைத்தார்கள். பிற பயிர்களுக்கு நடுவில் சோளத்தை வளர்க்கும் மில்பா முறையை அறிமுகப்படுத்தினார்கள். விதைகளைப் பரிமாறிக்கொண்டார்கள். விவசாயத்தை முழுமையாக மீட்டெடுத்தார்கள். இந்தியாவின் மேற்கு ஒடிசாவைச் சேர்ந்த பொண்டா என்கிற தொல்குடியினரின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. விவசாயத் தொல்குடிகளான இவர்கள், காலநிலை மாற்றத்தால் சூழல் பாதிக்கப்பட்டபோது தங்களது அறிவையே கேடயமாக்கி தங்களது இனக்குழுவைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இவர்களது வசிப்பிடத்துக்குச் சுற்றியிருந்த இடங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டபோதும் இவர்களது சிறுதானிய விவசாய நிலங்கள் செழித்து வளர்ந்திருந்தன. இந்த வழிமுறைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள ஆய்வுகள் நடக்கின்றன.

எது உண்ணத் தகுந்த தாவரம் என்று கண்டுபிடிப்பது, விதைகளை வேதிப்பொருட்கள் இல்லாமல் பாதுகாப்பது, குறைவான செலவில் சிறு தோட்டங்கள் அமைப்பது, வளங்குன்றா முறையில் காடுகளிலிருந்து உணவு சேகரிப்பது, மூலிகைச் செடிகளை அடையாளம் கண்டு சரியான முறையில் பயன்படுத்துவது. வளங்குன்றா கால்நடை பராமரிப்பு, தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே வரப்போகும் பருவநிலையைக் கணிப்பது என்று இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அட, இவ்வளவு ஏன்? கோவிட் காலத்தில் வழக்கமான உணவுப் பொருட்கள் கிடைக்காதபோது, ஒடிசாவின் பழங்குடிப் பெண்கள் தங்களது குடியிருப்புக்கு அருகில் இருந்த காடுகளில் இருந்து மட்டும் 111 வகையான உண்ணத்தகுந்த பொருட்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்! பழங்கள், கீரைகள், கிழங்குகள், காளான்கள் என்று எல்லாமே இதில் அடங்கும்.

பூமியின் மொத்த பிரச்னைகளுக்கே இவர்களிடம் தீர்வு இருக்கிறது என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால், இவர்களுக்கான பிரதிநிதித்துவமும் ஆதரவும் போதுமான அளவில் கிடைப்பதில்லை. இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய காலநிலை நிதி ஒதுக்கீட்டில் பெரும்பங்கு ஊழலுக்குப் பலியாகிவிடுகிறது. தொல்குடியினரின் கைக்கு 17% மட்டுமே சென்று சேர்கிறது, அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு 5% மட்டுமே கிடைக்கிறது என்கிறது ஓர் அறிக்கை. நாம் அவர்கள் வசிப்பதற்கான அமைதியான சூழலையும் உறுதிப்படுத்தவில்லை, அவர்களது பிரச்னைகளை எடுத்துக்கூற வாய்ப்பும் அளிப்பதில்லை. ஆனால், காலநிலை மாற்றத்துக்கு எதிராக இவர்கள் உதவுவார்கள் என்று அறிக்கைகளில் மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இந்தச் சூழல் அநீதியைச் சரிசெய்யாமல் முன்னோக்கி நகர முடியாது. இந்த நிலையை எப்படி மாற்றலாம் என்பதைச் சூழலியலாளர்கள் ஆழமாக விவாதிக்கிறார்கள்.

இவர்களைப் போலவே விளிம்பு நிலையில் இருக்கும் சில பெண்கள் உண்டு. உணவு உற்பத்தியில் இவர்களது பங்களிப்பு மிகப் பெரியது. இவர்களின் நிலை என்னவாக இருக்கிறது? சூழல் பாதிப்பால் இந்தப் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!