15.9. 2023 வெள்ளிக் கிழமை

“அக்கா, இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சி, என்னோட பிரெண்ட பார்க்கப் போறேன்.”

துணிகளை வாஷிங் மெஷினுக்குள் திணித்துக் கொண்டிருந்த அக்கா திரும்பிப் பார்த்தார்.

“அவ தனியாதான் இருக்கா. ஒருவேளை அங்கேயே தங்கிட்டு, நாளைகூட வருவேன்.”

“ஏன்… கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி உன் இஷ்டத்துக்கு இருக்க? சரி, யாரு அந்த பிரெண்டு?”

“காலேஜ்ல எங்கூட படிச்சவ, உனக்கும் தெரியும்கா… பேரு நித்யா, பிஎஸ்ஸி முடிச்சதுக்கப்புறம், எல்எல்பி படிச்சா. இப்ப லீகல் அட்வைஸரா, இருக்கா.”

“ஓ… சரி… ஆனாலும் நீ வெளிய போயி தங்குறது எல்லாம் சரியா படல… அருண் கேட்டா என்ன சொல்லட்டும்?”

“அருணை எங்கிட்ட பேசச் சொல்லுக்கா…

இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு விபத்தில் கணவன் இறந்துவிட, தனியாக வசித்து வரும் தனது அக்காவிடம், பெரிதாகச் சம்மதம் எதிர்பார்க்காதவளாக, லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு ஆபிஸ் கிளம்பினாள் ஷாலினி.

*

காலையில் வழக்கம் போல தாமதமாக விழித்து, அவசரமாக குளித்துக் கொண்டிருந்த ரமேஷ் சோப்பைத் தேடினான். அவன் கண்களில் பட்டது அந்தச் சிறிய ரோஸ் கலர் ட்யூப். என்ன ஆயின்மெண்ட் இது எனக் கையில் எடுத்தவன் சட்டெனப் புரிந்து கொண்டான். அது ஹேர் ரிமூவல் க்ரீம் என அருகில் இருந்த பருத்தி துணியைக் கவனித்தவன் அப்படியே வைத்து விட்டான்.

காலையில் அவசரமாக உடை மாற்றிக் கொண்டிருந்தவனிடம் கவிதா மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.

“ஏங்க… இன்னைக்குச் சாயந்திரம் என் பிரெண்ட்ஸைப் பார்க்கப் போறேன்.”

“ம்… ம்… லஞ்ச் பேக் பண்ணிட்டியா?”

“ஆ… ஆமா பேக் பண்ணிட்டேன்.”

*

ரமேஷ் கிளம்பியவுடன் அவளிடம் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தாள். ஆயிரத்து எண்ணூறு இருந்தது. அதில் எண்ணூறை மட்டும் பர்ஸில் வைத்துக் கொண்டாள். கதவைப் பூட்டிவிட்டு அடுத்த தெருவில் உள்ள பார்லரை நோக்கி நடந்தாள்.

அங்கு வீட்டின் ஒரு பகுதி பார்லராக மாற்றப்பட்டிருந்தது.

உள்ளே இரண்டு பெண்கள் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். கவிதாவைப் பார்த்தவுடன் புன் முறுவலுடன் சோபாவைக் காட்டி உட்காரச் சொன்னார்கள்.

அவினாஷைக் கையில் வைத்துக் கொண்டே, அட்டவணையைப் பார்த்தவள், த்ரெட்டிங்கும் ஹேர் கட்டிங்கும் என்றாள்.

இங்கு வந்து உட்காருங்க என ஒரு நாற்காலியைக் காண்பித்தார் பார்லர் பெண்.

மொபைலில் பாப்பா பாடல்களை ஓடவிட்டு, அவினாஷிடம் அதைத் தந்துவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

கழுத்தைச் சுற்றி மெலிதான துணி போர்த்தி, முடியில் தண்ணீரை ஸ்ப்ரே செய்தார் பார்லர் பெண்.

பல வருடங்களுக்குப் பிறகு ஒருவகை பெருமித உணர்வோடு கண்ணாடியின் முன்னால் உட்கார்ந்தாள் கவிதா.

*

அலுவலக வேலையில் மும்முரமாக இருந்த ரமேஷுக்கு, திடீரென கவிதாவின் நினைப்பு வந்தது. ‘இவ பிரெண்ட பார்க்கப் போறேன்னு சொன்னா… ஆனா எதுக்கு ஹேர் ரிமூவல் க்ரீம் எல்லாம் வாங்கி வைச்சிருந்தா?’

கவிதாவின் நம்பருக்கு அழைத்தான். போன் கால் முழுவதும் ரிங் ஆகி நின்றது. ரமேஷிற்கு இருப்புக் கொள்ளவில்லை.

*

கண்ணாடியில் அடிக்கடி தன்னைப் பார்த்துக் கொண்டாள் கவிதா. முடியை அடிக்கடி தொட்டுச் சிலாகித்துக் கொண்டாள். பல மாதங்களுக்குப் பிறகு கவிதாவின் உருவம், கண்ணாடியில் நட்பாகச் சிரித்துக் கொண்டிருந்தது.

மொபைல் போன் சிணுங்க, எடுத்து ஹலோ என்றாள்.

“கொஞ்ச நேரம் முன்னாடி போன் அடிச்சேன். ஏன் எடுக்கல?” என்றான் ரமேஷ் கடுகடுக்க.

“நான் பார்லர் போயிருந்தேன். எடுக்க முடியல…”

“பார்லருக்கா? என்ன திடீர்னு…”

“என் பிரெண்ட்ஸைப் பார்க்கப் போறேனு சொன்னேன்ல..

சரி… இன்னைக்கு நான் வீட்டுக்குச் சீக்கிரமே வந்துடுவேன். நான் வந்ததுக்கு அப்புறம் உன் பிரெண்டு வீட்டுக்குக் கிளம்பு” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் ரமேஷ்.

மாலை 4 மணிக்கே கவிதா தயாராகிவிட்டாள். அவினாஷுக்குப் பழம், பால், பிஸ்கட், டயாப்பர் என அனைத்தையும் தயார் செய்து விட்டாள்.

5 மணிக்கு அங்கே இருப்பதாகச் சொல்லியிருந்தேன். இங்கேயே 5 மணி ஆகிவிட்டது. அண்ணா நகரில் இருந்து புரசைவாக்கம் போய்ச் சேர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். கடிகாரத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் கவிதா.

ரமேஷ் சாக்லேட் பாக்ஸ் உடன் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தவுடன் கவிதாவுக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியாக இருந்தது.

“இந்த சுடிதார் நல்லா இருக்கே… புதுசா?”

“இல்லை, நான் இதுக்கு முன்னாடியும் போட்டிருக்கேன்” என்றாள் கவிதா.

“ஓ, சரி சரி… நல்லா இருக்கு…”

அவன் எண்ணமெல்லாம் ஏன் திடீரென்று இவ்வளவு அலங்காரம் செய்து, யாரைப் பார்க்கப் போகிறாள் என்பதாக இருந்தது.

தானும் சந்தோஷமா வைத்திருக்க மாட்டார்கள். அவர்களாக சந்தோஷமா இருந்தாலும் பொறுக்காது. அந்த ரகம்தான் ரமேஷ். அதுவரை சிறிதும் சட்டையே செய்யாதவன், அன்று அதீத அக்கறை காண்பித்தான்.

“உன் பிரெண்ட் வீடு எங்க இருக்கு?”

“புரசைவாக்கம்.”

“எனக்கும் புரசைவாக்கம் பக்கம் கொஞ்சம் வேலை இருக்கிறது. உன்னை ட்ராப் செய்துவிட்டுப் போகிறேன்” என்றவனை, ஆச்சரியமாகப் பார்த்தாள் கவிதா.

பைக்கை ஸ்டார்ட் செய்தவனிடம், “நான் ஒரு சாவி எடுத்துக்கிட்டேன். இன்னொரு சாவியை நீங்க வைச்சுக்கோங்க” என்று நீட்டினாள் கவிதா.

“நீயே வைத்துக்கொள். நானே உன்னைத் திரும்பக் கூப்பிட வருகிறேன், நீ மொதல்ல வண்டில ஏறு” என அவசரப்படுத்தினான்.

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு கருணையோடு இருக்கிறான். உதவி செய்கிறான். பைக்கில் உட்கார்ந்த கவிதாவுக்கு மகிழ்ச்சியில் முகம் பூரித்து இருந்தது.

அட்ரஸை எளிதாகக் கண்டுபிடித்து விட்டார்கள்.

“எத்தனாவது மாடி?”

“முதல் மாடி. பி என அனுப்பியிருந்தாள்” என மகிழ்ச்சியாகச் சொன்னாள் கவிதா.

ஆசை அத்தான் முதன் முதலாகத் தன்னிடம் விபரங்கள் கேட்கிறான் என்கிற பெருமிதம்தான்.

“நீ போய்ருவ தானே?” என அக்கறையாகக் கேட்டான் ரமேஷ்.

தலையாட்டினாள் கவிதா.

கிளம்பினான் ரமேஷ். சிறு தயக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் வீட்டின் உள்ளே நுழைந்த கவிதாவை ஷாலினியும் நித்யாவும் வரவேற்றார்கள்.

கவிதாவிடமிருந்து அவினாஷைக் கையில் வாங்கிக் கொண்டாள் ஷாலினி.

“ரொம்ப சமத்தா இருக்கான்…”

“எப்படி இருக்க கவிதா?” எனக் கைகளைப் பிடித்துக் கேட்டாள் நித்யா.

“நல்லா இருக்கேன்.”

மூன்று பெண்களும் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்குமே பேச வேண்டிய கதைகள் ஆயிரம் இருந்தன. அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

சரியாக ப்பத்தே நிமிடங்களில் கவிதாவின் போன் சிணுங்கியது.

“சொல்லுங்க அத்தான்” என போனை எடுத்தவளை, நித்யாவும் ஷாலினியும் கண்கள் விரியப் பார்த்தார்கள்.

“கவிதா, உன்னிடம் வீட்டுச் சாவிய வாங்க மறந்துட்டேன். நான் இங்கதான் வீட்டுக்கு வெளியே, முதல் மாடி ‘பி’ல இருக்கறேன். சாவிய கொஞ்சம் கொடுத்துட்டுப் போயேன்.”

“இதோ வருகிறேன்” என்று சாவியை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நடந்தவள் பின்னாலே, நித்யாவும் நடந்தாள்.

ரமேஷ் தன்னை நித்யாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். உள்ளே வாங்க , காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றதும், சிறிதும் தாமதிக்காமல் உள்ளே வந்தவனைப் பார்த்து கவிதாவுக்குத் திகைப்பாக இருந்தது.

வீட்டை முழுவதும் நோட்டம் விட்டான் ரமேஷ்,

“உங்க கூட படிச்ச எல்லோரும் இன்னைக்கு வர்றாங்களா?” என்று கேட்டான் ரமேஷ்.

“இல்லங்க, நாங்க மூணு பேரும்தான்.”

கவிதா அவினாஷுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டுமா என்று மிக்கப் பரிவோடு கேட்டது ரமேஷ் தானா என நம்ப முடியாமல், தலையை இல்லை என்று ஆட்டினாள் கவிதா.

சாவியுடன் திரும்பிய ரமேஷ் உள்ளுக்குள், ‘இவுளுங்கள பாக்கவா, இவ்வளவு மினுக்கிட்டு போனா. பார்லர் போயிட்டு வந்துட்டா… ஹேர் ரிமூவல் க்ரீம் வேற… ச்சை… சல்லி காசுக்குப் பிரயோஜனமில்லாமல் நேரத்த வீணாக்கியிருக்கிறேன், இவ எல்லாம் ஒரு ஆளுனு…’ எனக் கோபத்தில் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தான்.

அழகாக டிரஸ் செய்துகொள்வதற்கும், தன் உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் காரணம், அவர்களுக்கு அது பிடித்திருக்கலாம் அல்லது சௌகரியமாக இருக்கலாம் அவ்வளவே. இதுகூடத் தெரியாமல் கோபத்தில் கவிதாவை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான், தன் கையில் இருப்பதன் மதிப்பும் தனக்கான பொறுப்பும் தெரியாத கோமாளி.

(தொடரும்)