அன்புள்ள வருணுக்கு,

அப்பா அன்புடன் எழுதிக் கொள்வது. நலம் நலமறிய அவா.

உன் கடிதம் கிடைத்தவுடன் பதில் எழுத வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், சென்ற வாரம் உன் தம்பி அருண் அவன் வீட்டில் கோபித்து, நள்ளிரவில் வெளியேறி விட்டான். அழுது கொண்டே எஸ்.டி.டி பூத்திலிருந்து அழைத்த அவனை உடனடியாகப் போய் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். ஏதோ ஒன்றரை மணி நேரம் தொலைவில் அவன் இருப்பதால் அப்படிச் செய்ய முடிந்தது.

வீட்டுக்கு வந்தால் ஒரே அழுகை. திரும்பிப் போகவே மாட்டானாம். உனக்குத்தான் தெரியுமே, சின்ன மருமகள் நல்லவர்தான். ஆனால், அருணின் மாமனாரும் மாமியாரும் அவனை ரொம்பக் கொடுமைப் படுத்துகிறார்களாம். உனக்குக் கொடுத்த அளவுக்கு வரதட்சிணை கொடுக்கவில்லை என்பது ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்குக் குறை. எப்படித்தான் இதையெல்லாம் மோப்பம் பிடித்துக் கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை.

நிலா அளவுக்கு அருணின் மனைவிக்குச் சம்பளமும் போதாது குணமும் போதாது. நாம் செய்திருப்பதே அதிகம்தான். இதில் தினந்தோறும் அதைக் குத்திக்காட்டிப் பேசி இருக்கிறார்கள். அருணுக்குக் கோபம் வந்து எதையோ சொல்லி இருக்கிறது. (வாயை அடக்கு என்று உன் தம்பிக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வருவதில்லை.)

வாக்குவாதம் முற்றி மருமகள் அகிலா வந்ததும் தனிக்குடித்தனம் போகலாம் என்று அருண் அழுதிருக்கிறது. வீட்டுக்கு வந்ததும் கண்ணீரும் கம்பலையுமாகப் புருசன் நிற்பதைப் பார்த்தால் ஒரு மனுசிக்கு எரிச்சல் வரத்தானே செய்யும்? இந்த வீட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கா என்று கத்தி விட்டு சாப்பிடாமலேயே வெளியே போய் விட்டாராம்.

“என் மகளைச் சாப்பிடக்கூட விடலையே. நீ நல்லாருப்பியா?” என்று மாமனார் அடிக்கக் கை ஓங்கி இருக்கிறார். அதை அருண் தடுக்கப் போயிருக்கிறது. அப்போது பார்த்துத் திரும்பி வந்த அருணா, “என் அப்பா மேலயே கை வைக்கிறியா?” என்று கோபத்தில் அருணை அடித்து விட்டார்.

அதுகூடப் பரவாயில்லை. “நல்லா வைக்கா. அப்போதான் மாமாவுக்கு அறிவு வரும்” என்று சின்ன மச்சினன் களுக்கென்று சிரித்ததுதான் அருணுக்குப் பொறுக்கவே முடியவில்லையாம். யாரிடமும் பேசாமல் துணிமணிகளை மூட்டை கட்டிக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து போன் செய்தான். கையில் பத்துப் பைசாகூடப் பணமில்லை. இவ்வளவு கோபம் தேவையா?

இன்று காலை மருமகள் போன் செய்தார். வந்தவுடன், “தலை வலிக்கிறது, கொஞ்சம் டீயோ காபியோ கொடு. அப்புறம் பேசிக்கலாம்” என்றுதான் முதலில் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்காமல் நம் அருண் கத்திக் கொண்டே இருந்திருக்கிறது. சரி, கோபம் தீரட்டும் என்று வெளியில் போய் ஒரு தம்மடித்து வருவதற்குள் அப்பாவும் அருணும் கைகலப்பில் இருக்கிறார்கள். வந்த ஆத்திரத்துக்கு இருவரையும் அடித்து நொறுக்க வேண்டும் போலிருந்தது.

என் புருசனைத் தானே நான் உரிமையுடன் அடிக்க முடியும். ’லேசாகத்தான் தட்டினேன். கோபித்துக் கொண்டு வந்து விட்டான்’ என்று வருத்தப்பட்டார். நீயே சொல் அருண். ஓர் ஆணுக்கு இவ்ளோ ரோஷம் இருந்தா குடும்பம் எப்படி விளங்கும்? நீயும்தான் ஒரு குடும்பத்தில் வாழப் போயிருக்கிறாய். எவ்வளவோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழவில்லையா? உனக்கு நேரமிருக்கும் போது தம்பியை அழைத்துப் புத்திமதி சொல்.

உன் மாமனார், மாமியாருக்கு என் பணிவான வணக்கங்கள். பெரியவர்கள் மனம் கோணும்படி எப்போதும் நடந்து கொள்ளாதே என்று உன் அம்மா சொல்லச் சொன்னார்.

மற்றவை உன் கடிதம் கண்டு.

அன்புடன்,

அப்பா

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.