“அகிலா… அகிலா… வா கேப் இப்ப வந்துடும்.”

“அம்மா, வாங்கம்மா. நாங்க எல்லாம் ரெடியா இருக்கோம்.”

அருணும் குழந்தைகளும் படு உற்சாகத்தில் இருந்தார்கள்.

பல காலம் கழித்து இந்த வார இறுதியில் மாமல்லபுரம் போகலாம் என்று அகிலா சொல்லி இருந்தாள். பெரிய டூர் எல்லாம் இல்லை. இரண்டு நாட்கள் கடலோரம் தங்கி இருந்து குழந்தைகளுடன் நேரம் செலவிடலாம் என்று திட்டம். அகிலா சொன்னது முதலே அருண் கனவில் மிதந்தான். குழந்தைகளோ சொல்லவே வேண்டாம்.

இருவருக்கும் பணிச்சுமை அதிகம். வார இறுதிகளில் வீட்டைச் சுத்தம் செய்வது குழந்தைகள் படிப்பைக் கவனிப்பது, கொஞ்சம் நிதானமாக, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, ஓய்வெடுப்பது தவிர சண்டைச் சச்சரவுகள் இல்லாமல் இருந்தாலே பெரிய காரியம். இதில் மனமகிழ்ச்சிக்காக எங்கும் போய் வருவதெல்லாம் அபூர்வமாகத்தான் அமைகின்றன.

“ம்ம்ம்…”

“ம்ம்ம்… ஆமாம்பா.”

“சரிப்பா…”

கடந்த முக்கால் மணி நேரமாக போனைக் காதில் வைத்துக் கொண்டு, இதைத் தவிர எதுவுமே பேசாத அகிலாவின் முகத்தில் கோடு கோடாகக் கவலை ரேகைகள். யாரிடம் இப்படி மாட்டிக்கொண்டிருக்கிறாள்?

அருண் தவியாகத் தவித்தபடி இருந்தான். ட்ரெயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் ஸ்டேஷனுக்குப் போய் ட்ரெய்னைப் பிடிக்க வேண்டுமானால் இப்போது கிளம்பினால்தான் முடியும். ஏற்கெனவே இரண்டு கேப் கேன்சல் செய்துவிட்டுக் கிளம்பி விட்டார்கள்.

“அகிலா… டைம் ஆகுது…”

அகிலா திரும்பி முறைத்தாள். அப்பாவுடன் பேசும் போது யாரும் குறுக்கிடக் கூடாது. ‘வரேன் போ’ என்று சமிக்ஞையை ஆறாவது முறையாகச் செய்தாள்.

ஒரு வழியாக போனை வைத்துவிட்டு வந்தாள் அகிலா. உற்சாகப் பட்டாசாகப் பணியிடத்திலிருந்து வந்து எல்லாரையும் சீக்கிரம் புறப்படச் சொன்னவளின் முகம் இருண்டு போய்க்கிடந்தது.

“என்ன ஆச்சு அகிலா?”

“……”

“சொல்லு அகிலா. மாமாதானே போன்ல, என்ன சொன்னாங்க?”

“ம்… அப்பாவுக்குத் திடீர்னு உடம்பு முடியலியாம். கிளம்பி வரச் சொல்றாங்க.”

அருணுக்குத் திடுக்கென்றது.

“என்னவாம் அகிலா? நேத்திக்கு நைட் பேசும்போது நல்லா தானே இருந்தாங்க மாமா.”

“என்னைப் பார்க்கணும் போல இருக்குன்னு சொல்றார். உனக்குத்தான் தெரியுமே, அப்பாவுக்கு என் மேல தனிப்பாசம். என்னை மட்டும்தான் வரச் சொல்றாங்க போதுமா? நீ வர வேண்டாம்.”

“அப்போ நம்ப ட்ரிப்?”

அகிலாவின் அப்பா ஊரில் அகிலாவின் தங்கையுடன் இருக்கிறார். சொந்த வீடு, வாடகைக்கு இருக்கும் ஆட்கள். தங்கை குழந்தைகளைச் சிறு வயது முதல் வளர்ப்பது என்று அங்கேயே ஊறிவிட்டவர். அதே ஊரில்தான் அகிலாவின் தம்பியையும் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். மாதம் இரு முறை மகனைப் போய்ப் பார்த்துவிட்டு, சீராட்டிவிட்டு வருவார். ஆனால், அங்கே தங்க மாட்டார். மகன் வீட்டில் தங்குவது அவமானமாம். ஆனால், வந்தவுடன் அகிலாவுக்குப் போன் செய்து தம்பி புகுந்த வீட்டில் படும் பாடுகளை விவரிப்பது ரொம்பப் பிடிக்கும்.

அப்பாவிடம் பேசிவிட்டு வந்தாலே அகிலாவுக்கு, ‘இந்த அருணுக்கு என்ன கேடு? எவ்வளவு சொகுசாக வைத்திருக்கிறோம். பாவம் என் தம்பி எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுகிறான்!’ என்று தோன்றும்.

மூத்த மகளான அகிலா தனிக்குடித்தனம் இருப்பதே பெரிய குற்றம் என்கிற எண்ணத்தை எப்போதும் அவளிடம் விதைத்து, கூப்பிட்ட போதெல்லாம் ஓடோடிப் போய்ப் பொருளுதவியும் பணிவிடைகளும் செய்ய வேண்டிய அழுத்தத்தை உருவாக்குவார்.

அகிலாவுக்குப் பயங்கரமான அப்பா செண்டிமென்ட். அப்பா சூரியன் மேற்கே உதிக்கும் என்று சொல்லிவிட்டால் அதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுவாள்.

அகிலாவின் அம்மாவுக்குச் சாதாரண வேலைதான். கொஞ்சம் பழமைவாதி என்பதால் அப்பாவை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். சிக்கனமாக இருந்து அரும்பாடுபட்டுக் குழந்தைகளை வளர்த்து, ஓயாமல் வேலை செய்து உடல் தேய்ந்த அகிலாவின் அப்பாவின் மீது அருணுக்கும் பாசமும் மரியாதையும் உண்டுதான்.

இருவரும் சேர்ந்தால் மணிக்கணக்கில் அரட்டையடிப்பார்கள், ஒன்றாக வேலை செய்வது, ஷாப்பிங் செல்வது என்று மாமனார் மனங்கோணாத மாப்பிள்ளை என்றே பெயரெடுத்திருந்தான் அருண்.

ஆனால், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தது மட்டுமே தன் வாழ்நாள் சாதனையாகக் கருதும் எத்தனையோ தகப்பன்மார்களில் அவரும் ஒருவர். ஏனோ மகள் என்பவள் தன் கைப்பிடியில்தான் இருந்தாக வேண்டும் எனும் எண்ணத்தில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. அம்மா கட்டளையை மீறாதவராக மனைவியிடம் அடிபணிந்து நடப்பவராகக் காலங்காலமாக இருந்தவருக்கு, மகள்கள் தங்கள் கணவர்களைச் சுதந்திரமாக நடத்துவது உறுத்தலாகவே இருந்தது.

“என்ன அருண்? இப்ப என்ன செய்யலாம்?”

“நாம் அடுத்த வாரம் போய்க்கலாம். நான் ஊருக்கு டிக்கெட் இருக்கான்னு பாக்குறேன்.”

அதிர்ச்சியும் ஏமாற்றமுமாக நின்ற குழந்தைகளைச் சமாதானப்படுத்த, அவசர அவசரமாக அவர்களைப் பார்க்குக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானான் அருண்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.