லண்டனிலிருந்து வந்திருந்த எனது பள்ளி தோழியை அவள் குடும்பத்துடன் என் வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்திருந்தேன். கட்டிடக் கலை நிபுணர்களான நானும் என் கணவரும் பார்த்துப் பார்த்து, ஆர்ப்பாட்டமில்லாமல் கட்டிய வீடு என்பதை நான் தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன். என் தோழிக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருந்தது. அளவான வீட்டில் அழகான பரந்த தோட்டத்தைக் கண்டு வியந்து போனாள். ஒவ்வோர் அறையையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். கடைசியாக என் குழந்தைகள் அறைக்குள் நுழைந்தாள். சுவர்கள் முழுவதும் குழந்தைகளின் கிறுக்கல்கள், வண்ணப்பூச்சுகள் நிறைந்திருந்தன.

‘இவை எல்லாம் எங்கள் வீட்டு வாலுகளின் வேலை’ என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

அவள் அந்தக் கிறுக்கல்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். “உன் குழந்தைகள் வரைந்த சில ஓவியங்கள் மிகவும் நன்றாக இருக்கு! இந்தப் பூனையையும் விமானத்தையும் சிங்கத்தையும் பார்” என்றாள்.

நான் அசடு வழிய சிரித்தேன்.

“அந்த க்ரயான் படங்களைச் வரைந்தது நான்தான். குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு நாள் குதூகலமாக நானும் சேர்ந்து வரைந்தது” என்றேன்.

தோழி சட்டென்று சிரித்துவிட்டாள்.

“நீ சிறு வயதில் இருந்த மாதிரி அப்படியேதான் இருக்கிறாய்” என்று கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டுச் சொன்னாள்.

“ஒரு வாரத்திற்கு முன், எழுத்துலக ஆளுமையான தோழர் ஒருவர் திரைப்பட பாடலுக்கு அழகாக நடனமாடி, அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுருந்தார். அவ்வளவு அழகு! ஒரு சிறு குழந்தையைப் போலச் சிரித்துக்கொண்டு எந்தவித மனத்தடையுமின்றி அவர் நடனமாடியது என்னை ஆச்சரியப்படுத்தியது.”

வளர்ந்தவர்களாக இருக்கும் நமக்குள்ளும் ஒரு சிறு குழந்தை அடிக்கடி எட்டிப்பார்க்கும் நிகழ்வுகள் ஏராளம்! இந்தத் துறுதுறு சிறு குழந்தைக்கு ‘அகக் குழந்தை’ என்று பெயர்.

மனநல மருத்துவர் கார்ல் ஜங்தான் முதலில் ‘அகக் குழந்தை’ என்கிற கருத்தை வெளியிட்டார். இது உளவியலின் மிக முக்கியமான கருத்து. இது உங்கள் தன்னுணர்வற்ற உள்மனதின் (நனவிலி மனதின்) குழந்தை போன்ற பகுதியைக் குறிக்கிறது.

அடிப்படையில், நம் உள் குழந்தை எதையும் சுலபத்தில் மன்னிக்கும் சுதந்திரமான மனநிலை கொண்ட பகுதி. அது இன்னும் குழந்தையாக வாழ்க்கையை உணர்ந்து அனுபவிக்கிறது. ஆனால், அது ஒரு குழந்தையாக இருப்பதன் நேர்மறையான அம்சங்களைக் (அப்பாவித்தனம், மகிழ்ச்சி, படைப்பாற்றல் போன்றவை) கொண்டுள்ளதைப் போலவே, இது சிலருக்கு அவர்களது கடந்த காலத்தின் காயத்தையும் கொண்டுள்ளது.

நீங்கள் நன்றாக உங்கள் குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள். மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருப்பது தவறா அல்லது சரியா என்று அவர்கள் ஒரு துளிகூடக் கவலைப்படுவதில்லை. அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்களே உணர்கிறார்கள். அது போல நம் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் நாமே தட்டிக் கேட்க அனுமதிப்பதும், அவற்றைச் சரி செய்வதும் நம் உள் குழந்தையைப் பராமரிப்பதற்கான வழிகளில் ஒன்று.

உங்களுக்குள் உள்ள இந்தச் சிறு குழந்தை சந்தேகத்திற்கு இடமின்றி வயதற்று, கவலையற்று, அச்சமற்று சோர்வற்று எப்போதும் துறுதுறுவென்று இருக்கும். உங்கள் வயதால் ஒருபோதும் உங்கள் உள்ளிருந்து ஒளிரும் குழந்தையை அணைக்க முற்படாதீர்கள்.

உங்கள் உள் குழந்தையை ஊக்கப்படுத்திக்கொண்டே இருங்கள், அங்கீகரியுங்கள். உங்களுக்கு நீங்களே அடிக்கடி கட்டிப்பிடி வைத்தியம் செய்துகொள்ளுங்கள். உங்கள் அகக் குழந்தைக்கு அடிக்கடி கடிதம் எழுதி நலம் விசாரியுங்கள்!

உங்கள் வேடிக்கையான, ஆக்கப்பூர்வமான, விளையாட்டுத்தனமான குழந்தையின் பக்கத்தை மட்டுமே தூண்டிவிடுங்கள்!

நீங்கள் ஓர் இக்கட்டான சூழலிலோ, மன உளைச்சலிலோ இருக்கும் போது உங்களை மீண்டும் பாதுகாப்பான, அமைதியான நினைவுகளுக்குக் கொண்டு வருவது உங்கள் அகக் குழந்தையால் மட்டுமே முடியும்.

உங்கள் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவில்கொள்ளுங்கள்! அது உங்கள் நண்பர்களுடன் கூட்டாஞ்சோறு சமைத்தது, குடும்பத்துடன் பிடித்த திரைப்படங்கள் பார்த்து கை தட்டி ரசித்தது, கபடி போட்டியில் நண்பர்களுடன் வென்றது, மெரினா கடற்கரையில் உருண்டு புரண்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள சில நிமிடங்கள் செலவிடுங்கள்.

நமது அகக் குழந்தை எப்பொழுதும் நம்முடன் தொடர்பு கொண்டுதான் இருக்கிறது. அதைக் கேட்க நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

பேரக் குழந்தைகள் விளையாட தாத்தா, பாட்டிகளை அழைக்கும்போது, ‘எங்க காலத்தில் நாங்கள் விளையாடாத விளையாட்டா’ என்று பெருமை பீத்தல் சொல்லாமல் அவர்களுடன் குழந்தைகளாக விளையாடுங்கள். மூட்டு வலி எவ்வளவு குறைந்திருக்கிறது என்று உணர்வீர்கள்.

குழந்தைகள் தங்களுடன் உட்கார்ந்து கார்ட்டூன் வரைய அழைத்தால், ‘இரவு டிபன் யாரு செய்வது உங்க தாத்தாவா’ என்று அலட்டிக்கொள்ளாமல் அவர்களுடன் சேர்ந்து எதையாவது மகிழ்ச்சியாகக் கிறுக்கித் தள்ளுங்கள். இரவு டிபன் எப்படி ருசிக்கிறது என்பதை உணர்வீர்கள்.

குழந்தைகள் ‘வாங்கப்பா, சைக்கிள் ஓட்டலாம்’ என்று அழைக்கும் போது, ‘தலைக்கு மேல ஆபீஸ் வேலை இருக்கு ‘ என்று சொல்லாதீர்கள். ஒரு ரவுண்டு ஓட்டிவிட்டு வாருங்கள். எவ்வளவு உற்சாகத்துடன் விரைவாக வேலையை முடிக்கிறீர்கள் என்று நீங்களே உணர்வீர்கள்.

நமது அகக் குழந்தை அமைதியாக இருக்கும்போது, புதிய விஷயங்களை முயற்சி செய்து முன்னோக்கிச் செல்ல முடியும். தோல்வியையோ அல்லது குழப்பத்தையோ சகித்துக்கொள்ள வழி புலப்படும்.

ஓர் ஆரோக்கியமான அகக் குழந்தையால் மட்டுமே வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளின் வலிகளை அறிந்து, பொறுத்து, பக்குவப்படுத்தி கொள்ள முடியும்.

யாரும் பார்க்காதது போல் நடனமாடுங்கள்! காயமடையாதது போல் நேசியுங்கள், யாரும் கேட்காதது போல் பாடுங்கள்! பூமியில் சொர்க்கம் போல வாழ்ந்துவிடுங்கள்என்கிற வில்லியம் டபிள்யூ பர்கியின் மேற்கோளிற்கேற்ப வாழ முனைவோம்!

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.