பரபரப்பான நகர்ப்புறங்களுக்கு மத்தியில் நாங்கள் வந்த பேருந்து எங்களை இறக்கிவிட்டு, ஏறும் பிற பயணிகளுக்காக காத்திருந்தது. ‘எல்லா ஊரிலும்தான் மியூசியம் இருக்கு, இங்கு மட்டும் என்ன புதுசா இருக்கப் போகுது?’ என்கிற மனநிலையில்தான் அனைவருமே இருந்தோம். இந்திய பிக்னிக் கலாச்சாரப்படி பை நிறைய தின்பண்டங்களுடன் வந்த லட்சுமி அக்காவின் பை (கை) அமுதசுரபி போல வற்றாமல் விநியோகித்துக் கொண்டேயிருந்தது. சீக்கிரமாக இடங்களைப் பார்த்துவிட்டால், மாலை ஷாப்பிங் போகலாம் என்பது நானும் சரிதாவும் போட்டுக்கொண்ட ரகசியத் திட்டம். கூகுளில் கரைகண்ட ஆனந்தி மார்க்கெட் பெயர்களையும் வியட்நாம் ஸ்பெஷல் என்னென்ன என்பதையும் வியட்நாமிய மொழியில் மனப்பாடம் செய்து கொண்டிருந்தார். அக்ஷய், பூஷிதா, அனந்து போன்றவர்களின் சாய்ஸ் பப் கலாச்சாரம் மிகுந்து கிடக்கும் வாக்கிங் ஸ்ட்ரீட் போக வேண்டும் என்பதாக இருந்தது. இப்படி ஆளுக்கொரு நினைவுகளுடன் வரிசையில் நின்றோம். சுற்றிப் பார்த்தேன். சரியான கூட்டம். பெரும்பாலும் அந்நிய முகங்கள். அத்தனையும் மேற்கத்திய முகங்கள். ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் பார்வையாளர்களை இந்த அருங்காட்சியகம் ஈர்க்கிறது என்று கூகுளில் பார்த்த நினைவு வந்தது. வரிசையில் நின்று நாற்பதாயிரம் வியட்நாம் டாங்குகளுக்கான நுழைவுக் கட்டணம் பெற்றுக்கொண்டு உள்ளே நுழையும்போதே மிகப்பெரிய பீரங்கி ஒன்று நம்மை வரவேற்கிறது. அதைத் தொடர்ந்து மேலும் பீரங்கிகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் வரிசைகள். அவற்றில் எழுதியிருக்கும் குறிப்புகளிலிருந்து அவை எல்லாம் அமெரிக்காவுக்குச் சொந்தமானது என்று அறிந்துகொள்ள முடிந்தது.

தனது நாட்டின் வலி மிகுந்த போர் வரலாற்றை நினைவுகளில் தேக்கி, போரின் மிச்சங்களாலும் எச்சங்களாலும் நிரம்பிக் கிடக்கிறது அந்த மூன்று மாடிக் கட்டிடம். 1946இல் முதல் இந்தோசீனா போர் ஆரம்பித்ததிலிருந்து 1975இல் வியட்நாம் போர் முடியும் வரையிலான நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது இந்த அருங்காட்சியகம் (War Reminants Museum). ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்புப் போர் குறித்த ஆவணங்களே அதிகமாக உள்ளன. செப்டெம்பர் 1975ஆம் ஆண்டில் வியட்நாம் – அமெரிக்கப் போர் முடிந்து வியட்நாம் சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே, புதிய வியட்நாம் அரசாங்கத்தால் அவசரம் அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் மீதான கோபமும் வெறுப்பும் மேலோங்கியிருந்த அந்தச் சமயத்தில் ‘அமெரிக்கப் போர்க்குற்றங்களின் அருங்காட்சியகம்’ (The Museum of War Crimes) என்கிற பெயர்தான் முதலில் வைக்கப்பட்டது. கோபம் சற்றுத் தணிந்திருந்த 1990இல் ‘போர் மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றங்களுக்கான கண்காட்சியகம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. அமெரிக்காவுடனான உறவுகள் மேம்பட்டு, பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்ட பிறகு போர்குற்றங்கள், ஆக்கிரமிப்புகள் என்கிற வார்த்தைகள் எல்லாம் நீக்கப்பட்டு, ‘போர் எச்சங்கள் அருங்காட்சியகமாக’ இன்று நிற்கிறது. ஓர் ஆவணக் காட்சிப்படுத்தலில்கூட எத்தனை அரசியல்?

பேச்சும் சிரிப்புமாக அரட்டையடித்துக் கொண்டு ஒன்றாகத்தான் உள்ளே நுழைந்தோம். தரைத்தளத்தில் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துக்கொண்டே சென்றபோது, அழுத்தமான மன உணர்வுகளில் எங்கள் சிரிப்பு தொலைந்து போனது. மிருகத்தனமான போர்கள் சாதாரணர்களின் வாழ்வை எப்படி நாசமாக்கியிருக்கிறது என அவரவர் மன நிலைக்கேற்ப வெவ்வேறு பகுதிகளில் ஆழ்ந்து போக ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து போனோம்.

தரைத்தளம் முழுவதும் போர்க்காலத்தில் அரசியல் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளும், தண்டனைக் கருவிகளும், சிறைக்கூட மாதிரிகளுமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஃபூ குவோக், கான் சோன் தீவுகளில் கட்டப்பட்டிருந்த அதிபயங்கரமான சிறைகளின் மாதிரிகளை அதன் பழமை மாறாமல் கட்டமைத்திருக்கிறார்கள். போர்க்கைதிகளின் நிலைமைகளைப் பிரதிபலிக்கும் மாதிரிகள் பயமூட்டுகின்றன. ஓர் ஆள் மட்டுமே படுக்கக்கூடிய சவப்பெட்டி போன்ற இரும்பு முள்கம்பிகளால் ஆன கூண்டு – உட்காரவே முடியாது, எப்போதும் படுத்தே கிடக்க வேண்டும். எப்படி அந்த மனிதன் புரண்டு படுக்கக்கூட முடியாமல் துன்புற்றிருப்பான்… கற்பனையில் காட்சி ஓடுகிறது. ஏதோ ஒரு பழைய ஆங்கில சினிமாவில் பார்த்திருந்த கில்லட்டின் இயந்திரம், தலையை ஒரு வளையத்துக்குள் விட்டுப் படுக்க வேண்டும். சரேலெனெ மேலிருந்து கீழிறங்கும் அகன்ற கத்தி சட்டென தலையைத் துண்டித்து உடலை இருவேறு பகுதியாக்க, தலை தெறித்து விழுவதற்கு ஒரு பெரிய அண்டா போன்ற பகுதி… உடல் நடுங்கியது. கைதிகளை அடைத்து வைக்க ‘புலிக் கூண்டு’ என்று அழைக்கப்படும் கூண்டுகளின் மாதிரிகள் –

சின்னஞ்சிறிய அந்தக் கூண்டுக்குள் கிட்டத்தட்ட 14 பேரை ஒரே நேரத்தில் அடைத்து மேலிருந்து ரசாயனங்களைத் தூவ, அந்தக் கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகள் – கிராபிக் வீடியோக்களாகத் தரைப்பள்ளத்துக்குள் ஓட, குனிந்து பார்த்தபோது தத்ரூபமாக நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது. மனதைப் பிசைகிறது, நெஞ்சம் பதறுகிறது. வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட ட்ஃபோலியன்ட் ஸ்ப்ரேக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏற்படுத்திய பயங்கரமான விளைவுகள், ‘ஆரஞ்சு’ கண்காட்சிகள் என அத்தனையும் பார்க்க சகிக்க முடியாததாக இருக்கிறது. ஆங்கிலம், வியட்நாமிய மற்றும் ஜப்பானிய மொழிகளில் விளக்கங்கள் வேறு. விவரிக்க முடியாத கொடூரக் காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்து ஒரு மணிநேரம் கடந்திருந்தது.

தரைத்தளத்தை முடித்து வெளியே வந்தோம். மையத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்கான பரந்த இடம். ஒவ்வொருவராக வந்து அமர்ந்தோம். எவர் முகத்திலும் புன்னகையில்லை. கனத்த மௌனம் நிலவியது. “இப்படிப் போய் கொல்லுவாய்ங்களாக்கும்… இப்படியுமா துன்பப் படுத்துவாய்ங்க…” மல்லிகா அக்கா திரும்பத் திரும்ப அரற்றிக்கொண்டிருந்தார். லட்சுமி அக்கா வார்த்தைகள் ஏதுமின்றி மௌனமாக அமர்ந்திருந்தார். போதும், இதற்குமேல் இனி பார்க்க வேண்டாம் என முடிவெடுத்தோம்.

அக்ஷயும், பூஷிதாவும் மட்டும் மூன்றாவது மாடி வரை சென்று, சென்ற வேகத்தில் இருண்ட முகத்துடன் ஓடிவந்தார்கள். மூன்றாவது மாடியில் இருக்கும் படங்களைக் கட்டாயம் பார்க்க வேண்டும், வாருங்கள் என வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்கள். ஒரு தளம் முழுவதும் துப்பாக்கிகளும் குண்டுகளின் வரிசைகளுமாக, ஆயுதங்களின் அணிவகுப்பாக இருந்தது. மனிதகுலத்தை அழிக்க உருவாக்கிய போரின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அந்த இரும்புப் பொருள்கள் என்னைக் கவரவில்லை.

மூன்றாவது தளத்திற்குள் நுழைந்தோம். படங்களில் இறந்த வியட்நாமிய சடலங்களின் வரிசைகள்… அதன் கீழே ஒரு கொடூரமான தலைப்பு Body Count: A US Military’s yardstick to measure the success for the war: ‘If it’s dead, it’s viet cong (உடலின் எண்ணிக்கை: போரின் வெற்றியை அளவிடுவதற்கான அமெரிக்க ராணுவத்தின் அளவுகோல்) என்கிற வாசகத்துடன் வரவேற்கிறது. அந்தத் தளம் முழுவதும், போர்க்களத்தில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு. இறந்த மற்றும் சிதைந்த வியட்நாமிய உருவங்களைத் தாங்கி நிற்கும் படங்களால் நிரம்பியிருக்கிறது. போரின்போது வியட்நாம் மக்களுக்கு, அமெரிக்க வீரர்கள் செய்த கற்பனை செய்ய முடியாத கொடூரமான செயல்கள் படங்களாக விரிந்திருக்கின்றன.

போர்க்களத்தில் பல்வேறு நாட்டுச் செய்தியாளர்களும் செய்தி சேகரித்து, நிகழ்வுகளைக் காலத்தால் அழியா வண்ணம் உறைய வைத்திருக்கிறார்கள். அப்படி வந்த ஓர் அமெரிக்கப் புகைப்படக் கலைஞர்தான் ராபர்ட் காபா. அமெரிக்காவின் ‘லைஃப்’ இதழின் புகைப்படக் கலைஞர். போர் நடக்கும் நாடுகளிலெல்லாம் சென்று உயிரைப் பணயம் வைத்து போர்க்களத்தின் நிகழ்வுகளைப் படம் எடுத்து உலகின் பார்வைக்கு வைப்பவர். ‘உலகின் மிகச் சிறந்த போர் புகைப்படக் கலைஞன்’ என்று புகழப்பட்டவன். ‘ராபர்ட் காப்பாவின் மரணம்’ என்கிற தலைப்புடன் இருக்கிறது ஒரு படம். கருத்த, அடர்த்தியான தலைமுடி, ஆழ்ந்த கண்கள். அவரது படம்தான் அது. வாயின் மூலையில் இருந்து ஒரு சிகரெட் தளர்வாகத் தொங்குகிறது. இடது கை ஒரு கேமராவைப் பிடித்திருக்கிறது. ஒரு மனிதனின் கடைசி இயக்கம் போல் அந்தப் படம் அவரது இறுதி நொடியில் உறைந்திருக்கிறது. பல போர்க்களங்களைக் கண்டவர், வியட்நாமில் கண்ணி வெடியை மிதித்ததில் கொல்லப்பட்டார். போருக்குத் தொடர்பில்லாத மனிதர்களையும் பலிவாங்கிய போர் அது.

ஜப்பானிய புகைப்பட கலைஞர் புன்யோ இஷிகாவா தனது படங்களை அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் என்கிறது குறிப்புகள். அமெரிக்காவின் ஹீதர் மோரிஸின் படம் ஒன்றில் ஓர் ஊனமுற்ற இளம் பெண் போரின் சுமையைத் தன் தோளில் சுமந்து செல்வதைப்போல் காட்டுகிறது. அந்தப் போரின்போது அவள் பிறந்திருக்க வில்லை, ஆனாலும் அவள் போரின் தண்டனையை அனுபவிக்கிறாள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது அந்தப் படம். ஆம், அமெரிக்க ரசாயனங்களின் விளைவுகளை இன்றைக்கும் வியட்நாமியர்கள் தங்கள் உடல்களில் தாங்கியே வாழ்கிறார்கள்.

ஏஜென்ட் ஆரஞ்சு என்கிற வேதி அரக்கன் நிகழ்த்திய கொடூரங்களால் அத்தனை லட்சம் மக்கள் செத்து மடிந்த பிறகும் ஏஜென்ட் ஆரஞ்சு தன் மிச்சத்தைப் பிறக்காத குழந்தைகளிடமும் அடுத்த தலைமுறைகளிடமும் இன்னமும் கடத்திக்கொண்டேயிருக்கிறது என்பதை அங்கிருக்கும் படங்கள் வெளிப்படுத்துகின்றன. நேபாம் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளின் பயன்பாடுகளால் இன்றைக்கும் கண்கள் பிதுங்கி, கைகால் மடங்கி, உருவம் உருக்குலைந்து பிறக்கும் குழந்தைகள் மற்றும் மைலாய் படுகொலை போன்ற போர் அட்டூழியங்கள் குறித்த படங்கள் கண்களைக் கசிய வைக்கின்றன. ‘Children are not for burning…’ போஸ்டர்களின் கீழ் தீக்காயங்களுடன் துள்ளத்துடிக்க ஓடிவரும் குழந்தைகள், அப்போதைய செய்தித்தாள்கள், புத்தகங்கள், உலகத் தலைவர்கள் எழுதிய கண்டனக் கட்டுரைகள்… அதற்கு மேல் பார்க்க முடியாமல் சக்தியின்றி நிற்கிறோம்.

எரியும் குழந்தைகள், கைகால்களற்ற குழந்தைகள், துண்டு துண்டாக வீசப்பட்ட உடல்கள், இரசாயனத் தூவல்களால் சிதைந்து போன உடல்களுடன் உயிர்வாழும் மனிதர்கள், வியட்நாம் வீரர்களைக் கொன்றபின் தலையைத் தூக்கிப் பிடித்தபடி திமிர்க் களிப்புடன் நிற்கும் அமெரிக்க வீரர்கள்…. மைலாய் படுகொலைகள், ஜாடியில் அடைந்து கிடக்கும் சிதைக்கப்பட்ட மூன்று மனிதக்கருக்கள், தலைகளற்ற உடல்கள், ஆண், பெண், குழந்தைகள் எனப் பேதமற்ற பிணங்கள் குவியல் குவியலாக. ரத்தத்தை உறைய வைக்கும் படங்கள். தன்னிச்சையாகக் கண்கள் நிறைகின்றன.

அமெரிக்கர்கள் வியட்நாமிய மக்களைப் படுத்திய பாடுகளை உலகுக்குக் காட்டவே, வியட்நாம் போரின் பயங்கரத்தை உலகிற்கு விவரிப்பதற்காகவே, ஏற்படுத்தப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. அவர்கள் தங்கள் துயரமான வரலாற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைகள் மறந்துவிடாமல் இருக்க கடத்துகிறார்கள். போரின் கொடூரம் குறித்த ஆடியோக்களும் வீடியோக்களும் வரைபடங்களும், புள்ளி விபரங்களும், புகைப்படங்களும், மீண்டும் மீண்டும் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அருங்காட்சியகத்தினுள்ளே ஒரு போர் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருப்பதைப்போல் தோன்றியது. எங்கும் அழுத்தமான அமைதி நிலவியது.

வெளியேறும் நேரத்தில் ஒரு படத்தைப் பார்த்தவுடன் மேலும் நகர முடியாமல் நின்றேன். உலகையே உலுக்கிய நமக்கு நன்கு அறிமுகமான படம்தான். அந்தப் படம்…

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இலங்கை ‘எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார். இவை இரண்டும் ஹெர் ஸ்டோரிஸில் தொடர்களாக வந்து, பின்னர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வியட்நாம் அனுபவங்கள் இவரது மூன்றாவது தொடர்.