‘சிட்டி சைட் சீயிங் சைகோன்’ சுற்றுலா (டபுள்டெக்கர்) பேருந்து நாங்கள் நின்றிருந்த சைகோன் ஓபரா ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்க, சிறுபிள்ளைகள்போல் அடித்துப் பிடித்து ஏறினோம். கண்ணைக் கவரும் சிவப்பு வண்ணத்தில் அலங்காரமாக இருந்த பேருந்தில், மேற்கூரையில்லாத மாடியில் இடம் பிடிப்பதற்காகத்தான் அந்தப் போட்டி. ஆனால், பேருந்தில் மொத்தமே எங்களைத் தவிர நான்கைந்து பேர்தான் இருந்தனர். 24 மணிநேரத்திற்குச் செல்லுபடியாகும் பயணக்கட்டணத்தின் விலை நாலு லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் வியட்நாம் டாங்குகள். எங்கள் மூன்று பேருக்குப் பதிமூன்று லட்சத்தைப் பெருமூச்சுடன் எண்ணிக்கொடுத்தேன். பேருந்துக்குள் ஏறும்போதே வியட்நாமின் பாரம்பரியக் கூம்பு வடிவத்தொப்பியும் இடங்கள் குறித்த வரலாற்றுச் செய்திகளைக் கேட்பதற்காக இயர்போனும் தந்துவிடுகின்றனர். பதிவு செய்யப்பட்ட செய்திகள் ஒன்பது மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. ஆனாலும் அதில் அரையும் குறையுமாக யாமறிந்த மொழி ஆங்கிலம் மட்டுமே என்பதால் அதையே தேர்வு செய்தோம்.

பத்துப் பேரும், அந்தத் தொப்பியைப் போட்டுக்கோண்டு போட்டோ ஷூட் பண்ணிய அலப்பறை கண்டு வியட்நாம் காற்று ஒரு நிமிடம் உறைந்து பின் வீசியது! அடுத்த நிறுத்தம் ‘போர் எச்சங்கள் அருங்காட்சியகம்’ என அறிந்துகொண்டோம். தொப்பி விளையாட்டுகளை நிறுத்திவிட்டு, வியட்நாம் குறித்த வரலாற்றுச் செய்திகளை சீரியஸாக உள்வாங்க, காலம் டைம் மெஷின் உதவியின்றி என்னைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

அத்தனை பெரிய ஆசியாவில் சீனாவின் வால்போல் நீண்டிருக்கும் ஒரு குட்டி தேசம் பண்டைய நாகரிகங்களின் தாயகமாக, பல்வேறு வம்சங்களின் வரலாறாக, பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பது உலக வரலாற்றின் விநோதங்களில் சகஜமானதுதான். அதற்குச் சான்றாக 22,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்வின் பயன்பாட்டுக் கலைப்பொருள்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. 5 லட்சம் வருடங்கள் பழமையான ஹோமோ எரெக்டஸ் மனித எச்சங்கள் வடக்கு வியட்நாமின் லாங் சான் மற்றும் ங்கே ஆன் மாகாணங்களிலுள்ள குகைகளில் உறைந்திருந்த செய்தி வாய் பிளக்க வைக்கிறது. தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வோர் ஆய்வின் முடிவிலும் வியட்நாமின் தொன்மை நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பழங்கற்காலத்திலும் வெண்கலக்காலத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக நிரம்பிக் கிடக்கின்றன. கி.மு. 2879க்கு முன்பே இங்கு அடர்த்தியான மனித வாழ்க்கை தொடங்கியிருக்க வேண்டும் என்று கணிக்கிறார்கள். வியட்நாமின் வரலாறு குறைந்தபட்சம் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லையெனினும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாக இருக்கிறது.

ஆனால், இத்தனை தொன்மையான வரலாற்றின் பக்கங்கள் எங்கும் போர்களின் வடுக்கள் கெட்டிதட்டிக் கிடக்கின்றன. போர்கள் ஒன்றும் இந்தப் பூமிக்குப் புதிதல்ல, மனிதன் தோன்றியபோதே போர்க்குணங்களும் தோன்றியிருக்க வேண்டும்தான். தனக்குச் சொந்தமில்லாததை, தன்னால் முடிந்தவரை கையகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தனிமனித ஆசையே, பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்தேனும், தன் தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் வேட்கையாக மாறுகிறது. அப்படியான போர்களின் கொடூரமான கால்தடங்கள் நிரம்பிக்கிடக்கும் தேசங்களுள் இந்தக் குட்டிதேசம் முன்வரிசையில் நிற்கிறது. கூகுளுக்குள் நுழைந்தால், வியட்நாம் என்கிற வார்த்தையுடன் போர் என்கிற வார்த்தையும் எப்போதும் பின்னிப் பிணைந்து தொடர்கிறது. வியட்நாமின் போர்நிறை உலகிற்குள் அமானுஷ்யமாக நுழைந்தேன்.

காலம்: கி.மு. 207

இடம் : ஆசியாவின் பெருந்தேசமான சீனா

சீனாவின் கின் வம்சத்தைச் சேர்ந்த ட்ரியூ டாவால் என்கிற மன்னர் தன் படைப்பரிவாரங்களுடன் தேசவலம் வருகிறார். தங்கள் தேசத்தின் காலுக்குக் கீழே கடற்புறத்தே நீண்டிருந்த நிலப்பகுதி கண்ணில் படுகிறது. மனிதவளமும் செல்வமும் நிரம்பியிருந்த அந்தப் பகுதி இன்னும் ஏன் தன் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை? படைகளைத் திரும்பிப் பார்க்கிறார். அவர் பார்வை புரிந்து படைகள் தங்கள் பணியை செவ்வனே செய்ய அடுத்த சில நாட்களில் அந்த நிலமும் அவருக்குச் சொந்தமாகிறது. ஆம், தன் அத்தனை பெரிய தேசத்துடன் மூலையில் ஒடுங்கியிருந்த அண்டை நிலத்தையும் தன் பேரரசுடன் சேர்த்துக்கொள்கிறார். ஆசை…இல்லையில்லை… பேராசை மனிதனின் இயல்புதானே? அப்போது வியட்நாம் என்றெல்லாம் பெயரிடப்படாத வளம் கொட்டிக்கிடந்த குட்டி தேசம் அது. அதன்பின் விரும்பியபோதெல்லாம் தங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும் சீன அரசை எதிர்த்து வியட்நாமியர்கள் கிளர்ச்சி செய்து தங்கள் நிலத்தை மீட்பதும், மீண்டும் சீனா ஆக்கிரமிப்பதுமான ‘பூப்பறிக்க வருகிறோம்… பூப்பறிக்க வருகிறோம்…’ விளையாட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பாலும் விளையாடப்பட்டுக்கொண்டே இருந்தது.

வியட்நாம் அதன் புவியியல் நிலப்பரப்பு அமைப்பினால் இயற்கைக்கு எதிராகவும் அருகாமையிலிருந்த கொடுங்கோன்மைக்கு எதிராகவும் சதாசர்வகாலமும் போராட வேண்டிய சூழலில் இருந்தது. நிலம், பொருளாதாரம், ராணுவம் என அனைத்திலும் சக்தி வாய்ந்த அரக்கனாக, வியட்நாம் என்கிற முயலுடன் ஒப்பிட்டால் யானை போன்ற ஒரு மாபெரும் நாடாக இருந்த சீனா, தன்னருகில் இருந்த அழகிய முயல்குட்டி தேசத்தை கையகப்படுத்திக் கொள்ள எப்போதும் முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றதில் வியப்பில்லை. ஆனால், சந்தர்ப்பம் வாய்த்த நேரத்திலெல்லாம் சீன அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து, தன் எதிர்ப்பை வரலாற்றில் பதிவுசெய்ய வியட்நாமும் தவறவில்லை. கொடுங்கோன்மைக்கு எதிராக கி.பி.39இல் முதன்முதலாக கிளர்ச்சி தொடங்கிய வியட்நாமியர்கள், 1975இல் வியட்நாம் என்கிற தனி நாடாக முழுச் சுதந்திரம் அடையும்வரை போர் செய்து, போர் செய்து களைத்துப் போனார்கள்.

காலம் : கி.பி. 907

சீனாவின் டாங் வம்சத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது. எந்தவொரு வளர்ச்சிக்கும் வீழ்ச்சி இருக்கும்தானே? 938இல் நடைபெற்ற பாக் டாங் போர் சீனர்களின் ஆட்சியை முற்றாகத் தகர்த்து, டாங் வம்சத்தை வேரோடு சரித்தது. அன்றைய வியட்நாம் நிலப்பரப்பின் வெற்றிக்குக் காரணமான தலைவர் Ngo Quyen, ஒரு புதிய ராஜ்ஜியத்தை உருவாக்கி, அதற்கு நாம் (தெற்கு) வியட் என்று பெயரிட்டார். அதன்பின் கிட்டத்தட்ட 800 வருடங்கள் (15ஆம் நூற்றாண்டில் சில வருடங்கள் தவிர) வியட்நாமிய மண்ணின் மன்னர்கள் பல்வேறு ஊடுருவல்களைக் கடுமையான போர்களின் மூலம் தடுத்து, ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டனர்.

காலம் : கி.பி. 15 ஆம் நூற்றாண்டு

சீனாவின் சக்தி வாய்ந்த மிங் வம்சத்தினர் மீண்டும் வியட்நாமைக் கைப்பற்றுகின்றனர். இந்த முறை அவர்களது ஆட்சிமுறை வேறாக இருந்தது. வியட்நாமிய மக்களைச் சீனக்கடவுள்களை வணங்கவும் சீனமொழி பேசவும் கட்டாயப்படுத்தினர். இயற்கை வளங்களைக் கைப்பற்றினர், அழித்தனர். “வியட்நாம் இதுவரை அனுபவித்ததைவிட மிங்கின் ஆட்சி மிக மோசமாக இருந்தது” என்கிறார், ‘தி ஸ்மாலர் டிராகன் : எ பொலிட்டிகல் ஹிஸ்டரி ஆஃப் வியட்நாம்’ என்கிற நூலின் வரலாற்றாசிரியர் ஜோசப் பட்டிங்கர். சீனாவின் அடக்குமுறையைத் தொடர்ந்து மீண்டும் மிகப்பெரிய கிளர்ச்சி எழுந்தது. 1428இல் லீ லோய் என்பவர் தலைமையில் ஹனோயில் புதிய தலைநகர் நிறுவப்பட்டு, சுதந்திர ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு அடுத்த 400 வருடங்கள் பல்வேறு அந்நிய சக்திகளின் ஊடுருவல்களுக்கிடையே வியட்நாமியர்களின் ஆட்சி தொடர்கிறது.

காலம் : கி.பி. பதினாறாம் நூற்றாண்டு

போர்ச்சுகல், ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் சாரைச் சாரையாக உலகம் முழுக்கப் பயணிக்கின்றனர். அன்றைய ஐரோப்பியர்களின் நோக்கம் ஒருபுறம் வணிகம், அதன்மூலம் ஆக்கிரமிப்பு, அதன்வழியே செல்வ வளங்களைச் சுரண்டுதல் என்பதாகவும், மற்றொரு புறம் கிறிஸ்தவ மதம் பரப்புதல் என்பதாகவும் இருந்தது. அதனால் செல்வத்தையும் மக்களையும் குறிவைத்த அவர்கள் பார்வையில் வியட்நாம் என்கிற தேசம் கண்ணில்பட, அல்வா போல அள்ளிக்கொண்டனர். அப்படி வந்தவர்களுக்குள் நடந்த வணிகப் போட்டியில் இறுதியாக பிரெஞ்சு வணிகர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டனர்.

காலம்: கி.பி. 1850

வணிகம் செய்ய வந்தவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசை தன்னிச்சையாகத் தொற்றிக்கொள்ள, பிரெஞ்சு வணிகர்களின் கோரிக்கைக்கேற்ப பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் பிரெஞ்சுப் படையை அனுப்பி வைக்க, 1859இல் அவர்கள் சைகோனைக் கைப்பற்றியதிலிருந்து வியட்நாமில் பிரெஞ்சு ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியது. உலகளாவிய பேரரசை நிறுவ வேண்டும் என்கிற பேராசையுடன் பிரான்ஸ் நாட்டுக் கடற்படை வியட்நாமிய படைகளுடன் 25 வருடங்கள் ஓயாது போரிட்டு 1883இல் வியட்நாமை முழுமையாக தம்வசப்படுத்தினர்.

பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில், வியட்நாமியர்களின் வாழ்க்கைத்தரமும் தொழிலும் வீழ்ச்சியடைந்தது. அவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் சாதாரண மக்களை அச்சமுறச் செய்தன. குறைந்த ஊதியத்திற்குப் பயங்கரமான சூழ்நிலையில் நீண்ட நேரப் பணி எனச் சாமானியர்களின் வாழ்க்கை மிகவும் கடினமாகியது. அதன் விளைவாக தேசியவாதக் கனவுகள் மீண்டும் உயிர்பெற்றன. “பிரான்சின் ஆட்சி திறமையற்றதாகவும் சீரற்றதாகவும் கடுமையானதாகவும் மக்களின்பால் அக்கறையற்றதாகவும் இருந்தது” என்கிறார் ‘எ டைம் ஃபார் வார்’ என்கிற நூலின் ஆசிரியர் ராபர்ட் டி ஷூல்ஜிங்கர் (Robert D Schulzinger). மக்கள் மீதான அக்கறையற்ற பிரான்சின் செயல்கள் ‘அந்நிய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு’ என்கிற எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றி நெருப்பைப் பெருக்க, பிரான்சை வியட்நாமில் இருந்து வெளியேற்றுவதற்கான வலுவான இயக்கம் இயல்பாக உருவாகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள் தங்கள் நிலத்தை முதன்முதலில் கைப்பற்றியபோது ஆழ்மனதில் அடக்கப்பட்டு வழிவழியாக கடத்தப்பட்டிருந்த கோபம், அழுத்தப்பட்ட பிரெஞ்சு காலனித்துவ ஆதிக்கத்தில் பெரு வெடிப்பாக வெடித்தது. உள்நாட்டில் அமைதியின்மை அதிகரித்தது. வியட்நாமியர்களின் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளையும் அமைதியான போராட்டங்களையும் மிருகத்தனமாக அடித்து நொறுக்கியது பிரெஞ்சுப் படை. வியட்நாமிய மக்களின் வாழ்க்கை கிளர்ச்சிகளாலும் போராட்டங்களாலும் தினம்தினம் நரகமானது.

காலம் மாறியது, இரண்டாம் உலகப்போர் விஸ்வரூபமெடுத்தது. உலக நாடுகளின் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன. எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும் வியட்நாமியர்களின் வாழ்வு மட்டும் விடியவேயில்லை. இரண்டாம் உலகப் போரினால் உலகே பற்றி எரியும்போது சந்தடி சாக்கில் ஜப்பான் மூக்கை நுழைக்கப் பார்த்தது. பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்களும் முதலில் ஜப்பானிய சிப்பாய்களை, தங்களை மீட்க வந்த ரட்சகர்கள் என ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். ஆனால், “மூக்கணாங்க் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது” என்று எச்சரிக்கை விடுத்தார் ஹோ சி மின். இரண்டாம் உலகப் போரின் எஞ்சிய காலத்தில் வியட்நாமின் தேசியவாத கெரில்லாக்கள் பிரெஞ்சு, ஜப்பானியர்களுக்கு எதிராகப் போரிட்டனர். இதற்கு அமெரிக்க உளவுத்துறையின் ஒத்துழைப்பும் இருந்தது.

செப்டம்பர் 2, 1945இல் வியட்நாம் சுதந்திரம் அடைந்து விட்டதாக ஹோசிமின் உலகத்திற்கு அறிவித்து, தேர்தலை நடத்த ஹோ சி மின் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வாகை சூடியது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து போயின. பிரான்ஸ் கலகலத்துப்போனது. பொருளாதாரம் மிக மோசமாக உடைந்தது. போர்க்காயங்களிலிருந்து மீண்டு வரவேண்டுமென்றால், வியட்நாமை மீண்டும் கைப்பற்றுவது அவசியம் என பிரான்ஸ் முடிவு செய்தது. பிரான்ஸ் தனது பழைய காலனித்துவப் பிரதேசத்தில் ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது அமெரிக்கா எதிர்க்கவில்லை. (அமெரிக்காவின் அரசியல் அன்றும் இன்றும் என்றும் புரியாத புதிர்தான்.) ஹோ சி மின் வியட்நாமிய சுயராஜ்யத்தை அங்கீகரிக்கும்படி எட்டுமுறை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனுக்குக் கடிதங்கள் எழுதினார். ஆனால் அமெரிக்காவும், பிற நாடுகளும் இந்த அங்கீகாரத்தை மறுத்துவிட்டன. 1946இல் பிரெஞ்சு, வியட்நாமின் படைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வந்த போர்கள் இறுதியாக முழுப் போராக வெடித்தது.

1946 முதல் 1954 வரை பத்து ஆண்டுகள் கடுமையான போர் நீடித்தது. இறுதியில் 1954இல் வியட்நாமை வடக்கு, தெற்கு எனப் பிரிக்கும் ஒப்பந்தம் ஜெனீவாவில் கையெழுத்தாக, வியட்நாம் இரண்டாகப் பிளக்கப்பட்டு, வடக்கில் கம்யூனிச அரசாங்கமும் தெற்கில் அமெரிக்க ஆதரவு அரசாங்கமும் அமைந்தன.

‘மறுபடியும் முதல்லா இருந்தா?’ என அலுத்துக்கொண்டே வியட்நாம் ஒன்றுசேருவதற்காக மீண்டுமொரு 30 ஆண்டுகாலப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதாயிற்று. முழு வியட்நாமும் கம்யூனிஸ்ட் நாடுகளாகிவிடக் கூடாதே என்கிற அச்சத்தால் போரை வலுக்கட்டாயமாக நீட்டித்து லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியது அமெரிக்கா. வியட்நாம் கம்யூனிஸ்டுகளின் கைகளுக்குள் போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் குறிக்கோள். இதற்காகப் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தள்ளியிருந்த வியட்நாமில் வழக்கம்போல தனது மூக்கை நுழைத்து பொம்மை அரசை உருவாக்கியது. உலகை உலுக்கிய கடுமையான போரின் முடிவில் 1975இல் அமெரிக்காவைத் தோற்கடித்து வட வியட்நாம் வெற்றி பெற்று சுதந்திர நாடானது.

ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பேராசையினாலும் ஆணவத்தாலும் அந்த நிலம் நோக்கிச் சென்றனர். ஆனால், மற்றொரு நாட்டின் பகுதியாக இருக்க வியட்நாம் ஒருபோதும் விரும்பவில்லை. இருபதாம் நூற்றாண்டு முழுவதும் ஏற்பட்ட பத்துப் போர்களால் கடுமையான சமூக – அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மைக்கு உட்பட்டது வியட்நாம். வியட்நாமிய வரலாறு இந்த எண்ணற்ற போர்களின் இருண்ட ஆட்சியால் நிரம்பியுள்ளது.

சீனா, பிரெஞ்சு, அமெரிக்கா, ஜப்பான் என நான்கு ஏகாதிபத்தியங்களை முறியடித்து வெற்றிவாகை சூடிய வீரஞ்செறிந்த மக்கள் வியட்நாமிய மக்கள். தேச விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது அவர்களது போராட்டம். உலகின் மிக நீண்ட போரைத் தன் மார்பில் சுமந்து தன்னைத் தொலைக்காமல் மீட்டெடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷமான வியட்நாம் உண்மையில் போர்களின் தேசம்தான். அத்தகைய போர்களை அனுபவித்தவர்கள், இன்று போர் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல், அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கொடூரமான போர்கள் அவர்களை மனிதநேயமிக்கவர்களாக மாற்றியிருக்கிறது. நிறைய புன்னகை செய்கிறார்கள். உதவி செய்வதில் தாராளமானவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

வியட்நாமின் வரலாற்றுப் போர்களுக்குள் மூழ்கிப்போன என்னைத் தட்டி எழுப்புகிறாள் மகள் பூஷிதா. பேருந்துக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கிறேன், மிகப்பெரிய கட்டிடம் பெயர்ப்பலகையுடன் தெரிகிறது, ‘போர் எச்சங்கள் அருங்காட்சியகம்.’

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இலங்கை ‘எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார். இவை இரண்டும் ஹெர் ஸ்டோரிஸில் தொடர்களாக வந்து, பின்னர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வியட்நாம் அனுபவங்கள் இவரது மூன்றாவது தொடர்.