ஞானசவுந்தரி, இந்தப் பெயர், நினைவு தெரிந்த நாளிலேயே எங்கள் மனதில் பதிந்த பெயர். ஊரில் நடைபெறும் பல விழாக்களில் இந்தத் திரைப்படம் திரையிடப்படும். வீட்டில் விழா என்றால், “அருள் தாரும் தேவ மாதாவே” பாடல் பெரும்பாலான வீடுகளில் முதல் பாடலாக ஒலிக்கும். முதல் பாடல் என்பதால், இசைத்தட்டின் ஊசியை வைப்பதற்கான சரியான இடம் தெரியாமல், பாடல் வேகமாகவோ மெதுவாகவோ இருக்கும். இன்றும் அந்தப் பாடல் கேட்கும் போது அந்த நினைவுவரும். எங்கள் ஊரில் ஐம்பதுகள் காலகட்டத்தில் திரையரங்கம் திறந்த போது முதலில் திரையிடப்பட்டது இந்தத் திரைப்படம்தான் என்கிறார்கள் பெரியவர்கள். அப்படி ஊருடன் ஒன்றிய திரைப்படம் இது.

“அருள் தாரும் தேவ மாதாவே”, “கன்னியே மாமரித்தாயே” போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம். இன்றும், கோயிலில் தேர் முன் இப்பாடல்களை இசைக்கலைஞர்கள் வாசிப்பதைக் கேட்கலாம்.

வீடுகளில் பாட்டிகளிடம் கேட்டால் சொல்லும் முதல் கதை ஞானசவுந்தரிதான். ஞானசவுந்தரி அம்மானை, நாகர்கோவில் குருசடிக் கோயில் திருவிழாவில் ஒன்பதாம் நாள் மாலையில் பக்தர்கள் முன் இது அரங்கேறியது. இந்த அம்மானை கி.பி.1806இல் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஞானசவுந்தரி அம்மானை எழுதியவரின் ஊர் நாகர்கோவில் தளவாய்புரம்” என்கிறது கீற்று இணையதளம்.

1930களில் ஐயா நவாப் ராஜமாணிக்கம், இந்தக் கதையை ஊர் ஊராகப் போட்டிருக்கிறார். ஞானசவுந்தரியின் கைகள் வெட்டப்படுவதும் மீண்டும் கைகள் வருவதும் தந்திரக் காட்சி மூலம் காட்டப்பட்டிருக்கிறது. அது குறித்துப் பலரும் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், எங்கள் பகுதியில் அதற்கு முன்பே இந்தக் கதை பிரபலமாகி இருக்க வேண்டும். ஏனென்றால், 1910 களில் பிறந்த பாட்டிகள் ஒருசிலருக்கு இந்தப் பெயர் இருந்திருக்கிறது. இந்த நாடகத்தின் தாக்கம்தான் என அந்தப் பெயர்கள் என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

கதைச் சுருக்கம்

ரோம அரசர் தர்மர் (ரோம அரசரின் பெயர் தர்மரா எனக் கேட்கக் கூடாது). அவருக்கு ஆறு வயதில் ஞானசவுந்தரி என்கிற பெயரில் பெண் குழந்தை இருக்கிறது. மனைவியை இழந்த அரசர், லேனாள் என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அப்பாவிற்கு மகள் மீது அளவு கடந்த அன்பு. இது சிற்றன்னைக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. ஞானசவுந்தரி வளர்ந்து இளம் பெண்ணாகிறார். அப்பாவிற்குத் தெரியாமல், சித்தி ஞான சவுந்தரியைத் தொடர்ந்து கொடுமை செய்தவண்ணம் இருக்கிறார்.

காட்டு விலங்குகள் விவசாய நிலங்களை அழிக்கின்றன என மக்கள் முறையிட்டதால் மன்னர் வேட்டைக்குப் புறப்படுகிறார். லேனாள் இருவருக்குப் பணம் கொடுத்து ஞானசவுந்தரியைக் காட்டிற்குக் கொண்டு போய்க் கொன்று விடுமாறு கூறுகிறார்.

மயக்கமடைந்த நிலையில் ஞானசவுந்தரியைக் கொலையாளிகள் காட்டிற்குப் பல்லக்கில் தூக்கி வருகிறார்கள். ஞானசவுந்தரி, ஒரு மரத்தைக் கட்டிப் பிடித்தபடி நின்றபோது, இருபுறமும் இருந்து, கொலையாளிகள் ஞானசவுந்தரியின் இரு கைகளையும் வெட்டி விடுகிறார்கள். அந்த நேரத்தில், வேட்டைக்கு வந்த பக்கத்து நாட்டின் இளவரசன் பிலவேந்திரன் வர, கொலையாளிகள் ஓடிவிடுகின்றனர். இளவரசன் காட்டில் இருந்து ஞானசவுந்தரியைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார். திருமணம் செய்துகொள்ளவும் விரும்புகிறார். கையில்லாத பெண் என்பதால், பெற்றோருக்கு விருப்பம் இல்லை என்றாலும், சம்மதிக்கிறார்கள். திருமணமும் நடக்கிறது.

வேட்டையை முடித்துவிட்டு நாட்டுக்கு வந்த .தருமரிடம் லேனாள், “எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உங்களைத் தேடி ஞானசவுந்தரி காட்டுக்குப் போய்விட்டாள்” என்கிறார். மன்னரும் நம்புகிறார். காட்டில் மகள் இறந்து இருக்கக்கூடும் என நினைத்து வருந்துகிறார்.

இந்தக் காலகட்டத்தில் பகைவர்கள் தருமரின் நாட்டின் மேல் படையெடுத்து வருகின்றனர். தருமர், பிலவேந்திரனின் அப்பாவிடம் உதவி கேட்கிறார். இதனால் பிலவேந்திரன் போருக்குப் போகிறார். பிலவேந்திரனுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தூதன் கொண்டு வர, பிலவேந்திரன் பதில் கடிதம் எழுதி அனுப்புகிறார்.

பிலவேந்திரனுடன் வந்த வீரர்கள் மூலம், ஞானசவுந்தரி உயிருடன் இருப்பதை லேனாள் அறிகிறார். பிலவேந்திரன் எழுதிய ஓலையைக் கைப்பற்றி, வேறு ஒரு ஓலையை எழுதி அனுப்பிவிடுகிறார்.

.ஞானசவுந்தரியையும் குழந்தையையும் கொல்லச் சொன்னது அந்தப் புதிய ஓலை. பிலவேந்திரனின் தந்தை அவ்வாறு செய்யாமல், ஞானசவுந்தரியைக் காட்டுக்கு அனுப்பி விடுகிறார். ஞானசவுந்தரி காட்டில் அன்னை மரியாள் உதவியால் இழந்த கைகளைப் பெறுகிறார்.

பிலவேந்திரன் போர் முடிந்த பின் தன் வீட்டிற்குத் திரும்பி, நடந்ததை அறிகிறார்; மனைவியைத் தேடிச் சென்று, கண்டுபிடித்து, ஞானசவுந்தரியுடன் ஊர் திரும்புகிறார்.

தருமர், தனக்கு உதவி செய்வதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மனைவியுடன் பிலவேந்தரின் நாட்டுக்கு வருகிறார். மகளைக் காண்கிறார். நடந்தவற்றை அறிந்து லேனாளைக் கொல்ல ஆணையிடுகிறார். அவரை மன்னிக்கும்படி ஞானசவுந்தரி சொல்கிறார். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

1948 ஆம் ஆண்டு ஞானசவுந்தரி படம் திரைக்கு வந்திருக்கிறது. படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. கதை அமைப்பு F நாகூர், ஜோசப் தளியத் Jr எனத் திரையில் போடுகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்துதான் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். சிட்டாடல் ஸ்டூடியோ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவக்கி படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். நாஞ்சில் நாடு T N ராஜப்பா வசனம் எழுதியிருக்கிறார். ஒலிப்பதிவு S விமலன், எடிட்டர் V B நடராஜ். இசை எம் வி வெங்கட்ராமன்.

பிலவேந்திரன் – டி.ஆர்.மகாலிங்கம்

ஞானசவுந்தரி – எம்.பி.ராஜம்மா

சிறுமி ஞானசவுந்தரி – பேபி ராஜா மணி

லேனாள் – சிவபாக்கியம்

ஆரோக்கியம் – பி.ஆர்.மங்களம்

நாயகனின் அம்மா பாக்கியம் -B சாரதாம்பாள்

தருமர்-பாலசுப்பிரமணியம்

நாயகனின் அப்பா சிமியோன் -CV நாயகம்

அந்தோணி- புளிமூட்டை ராமசாமி

சூசை- பபூன் சண்முகம்

குழந்தை ஞானசவுந்தரி – பேபி ராஜாமணி

என்பதாக கதாபாத்திரங்கள் உள்ளன.

லலிதா, பத்மினி சகோதரிகள் அரண்மனையில் ஒரு நடனம் ஆடுகிறார்கள். நாதரின் பங்கப்பாடு காட்சிகள் – மதராஸ் கத்தோலிக்க மெடிக்கல் கில்ட் அங்கத்தினர் எனப் போடுகிறார்கள். இது இயேசு, இறுதி நாளில் பட்ட பாடுகளைச் சொல்கிறது. இயேசு கசையடி பட்டது, பிலாத்து, கைகழுவது, இயேசு சிலுவை சுமப்பது, தொங்குவது என இக்காட்சி செல்கிறது.

எழுத்து போடும்போது, T R Magalingam M V Rajammaa In என இருவர் பெயரையும் இணைத்தே போடுவது சிறப்பு.

அனைவரின் நடிப்பும் இயல்பாகவே இருந்தாலும், குழந்தை ஞானசவுந்தரியாக வரும் பேபி ராஜாமணியின் தோற்றமும் நடிப்பும் கொள்ளை அழகு.

இதே காலகட்டத்தில், ஜெமினி ஸ்டூடியோவும் ஞானசவுந்தரி கதையைப் படமாக்கி இருக்கிறது. இந்திய சூழலில் நடப்பது போல உரையாடல், அலங்காரம் எல்லாம் இருந்திருக்கிறது. படம் வெற்றி பெறவில்லை. அதனால் வாசன், தான் எடுத்த படத்தின் படச் சுருள்கள் அனைத்தையும் திரும்பிப் பெற்று நெருப்பு வைத்துவிட்டார். அதனால், அந்தப் படத்தின் சுவடே இல்லாமல் போய்விட்டது.

வரலாறு ரோமில் நடைபெறுவதாலும் கதாபாத்திரங்கள் அங்கு வாழ்பவர்களாக இருப்பதாலும், அங்கு கதை நகர்வதாக காட்ட வேண்டும். அதற்காக, ஆடை, காட்சியமைப்புகளில் சிரத்தை எடுத்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது.

இயக்குநர்களில் ஒருவரான F நாகூர் ஆர்ட் டைரக்டராக மிக நன்றாகப் பணிபுரிந்து இருக்கிறார். அடுப்பு வெளிநாட்டில் இருக்கும் fire place போல வடிவமைத்து இருக்கிறார். பெரிய கூஜாவில் ஞானசவுந்தரி தண்ணீர் சுமக்கிறார். வீடு கழுவக் கொடுக்கும் விளக்குமாறுகூட, நீளக் கம்பு கொண்டு இருக்கும் ப்ரஷ் துடைப்பமாக இருக்கிறது. அரண்மனையில் வெளிநாட்டு வகை நாய் புசுபுசுவென நிற்கிறது.

ஞானசவுந்தரியின் ஆடை அலங்காரம் தலையில் tiara எல்லாம் வைத்து, மேல் நாட்டுப் பாணியில் இருக்கிறது. ஆடை அலங்காரம் வடிவமைத்தவர், M நடேசன் . கனவுக்காட்சியில் வரும் காட்சியமைப்பு, இன்றைய பாரதிராஜா படங்களில் வரும் தேவதைகள் போல வெண்ணுடையில் இருக்கிறது. இவை எல்லாம், இயக்குநர் மற்றும் குழுவினரின் சிரத்தையைக் காட்டுகிறது.

திருமணக் காட்சியில் வரும் கோயில், அப்படியே மேலை நாட்டுக் கட்டுமானம் என்கிற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. கோயிலின் முன்புறம் இருந்து ஆயர், பீடச்சிறுவர்களுடன் வருவது, பாடகர் குழு எனக் காட்சிகள் அனைத்தும் ஐரோப்பிய, அரசக் குடும்ப விழாக்களை நினைவுபடுத்துகின்றன. திருமணத்தில், சம்மதமா என மனமக்களிடம் தமிழில் கேட்கிறார்கள். ஜெபம் லத்தீனில் ஆயர் சொல்கிறார். அப்போதைய வழக்கம் இது. அறுபதுகள் வரைகூடக் கத்தோலிக்க ஆலயங்களில் வழிபாடு லத்தீனில் தான் நடந்தது என்கிற வரலாற்றை நம் கண் முன்னே காட்டுவதில் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது .

திருமணத்திற்குத் தாலியும் கட்டாமல், மோதிரமும் மாற்றாமல் புத்திசாலித்தனமாக, ஆயரின் மோதிரத்தை மணமகன் முத்தமிடுவதாகக் காட்டி முடித்து விடுகிறார்கள். அப்போதும் சரி இப்போதும் சரி, கிறிஸ்தவ திருமணங்களில் தாலி கட்டும் வழக்கம்தான் நம்மிடம் இருக்கிறது. திருமண திருப்பலிக்கே தாலிக்கட்டு பூசை என்றுதான் பெயர். இதனால், வெளிநாடுகள் போல மோதிரம் மாற்றுவது போலக் காட்டியிருந்தால், அது நம் மக்களுக்கு அந்நியமாகவே தோன்றியிருக்கும். தாலி கட்டுவது போலக் காட்டியிருந்தால், கதை அமைப்பிற்குப் பொருத்தமாக இருந்து இருக்காது.

காட்டில் திடீரென ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடிவருவதும், படுத்திருக்கும் ஞானசவுந்தரி உடலில் அது பட்டதும் கைகள் மீண்டும் வருவதும், விழித்துப் பார்த்தால், கைகளை அணைப்பது போல விரித்தபடி அன்னை மரியாள் காட்சி தருவதும், அந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த தொழில்நுட்பம் எனப் பேசப்பட்டவை.

அருகில் வந்தாள் உருகி நின்றாள் என நாயகன் சொல்லும் காதல் மொழியை முதல் சொற்றொடராக வைத்து பிற்காலத்தில், காத்திருந்த கண்கள் திரைப்படத்தில், காதலி ஏமாற்றிவிட்டார் எனப் புலம்பும் பாடல் ஒன்று உள்ளது. அந்த அளவிற்கு இப்படத்தின் வசனம் பிரபலமாக இருந்திருக்கிறது.

“நான் கொடுப்பது பாதுகாப்பு அல்ல பூரண சுதந்திரம் உனக்கு உண்டு” என நாயகன் சொல்வதாகட்டும், காட்டில் குழந்தையுடன் இருக்கும் ஞான சவுந்தரியைத் தேடி பிலவேந்திரன் வந்தபோது, நான் ஏன் வரவேண்டும் எனக் கோபத்தில் ஞானசவுந்தரி கணவனுடன் சண்டையிடுவதாகட்டும், பெண்ணடிமைத்தனத்தைப் பெரிய அளவில் தூக்கிப் பிடிக்காத படம் என இதைச் சொல்லலாம்.

பெரும்பாலான பெண்குரல் பாடல்களைப் பி. ஏ. பெரியநாயகி பாடியிருக்கிறார். ‘அருள் தாரும் தேவ மாதாவே’ பாடலை ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில், பெரியநாயகி அவர்கள் ஏற்கெனவே வேறு ஒருவருக்குப் பின்னணி பாடியிருந்தாலும், இப்படம் தான் அவர்களை முழுநேரப் பின்னணிப் பாடகராக மாற்றிய படம் எனலாம். ஜிக்கி குழந்தை ஞானசவுந்தரிக்காகவும், பெரியநாயகி பெரிய ஞானசவுந்தரிக்காகவும் பாடியிருக்கிறார்கள். இதுவே ஜிக்கி பாடிய முதல் பாடல்.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.