கனலி
காட்சி : 1
அது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடம். மாலை வேளையானதால் நடைப்பயிற்சி செய்பவர்கள், மென் ஓட்டம் செல்பவர்கள், இரு சக்கர வாகனம் ஓட்டப் பழகுபவர்கள், காதல் ஜோடிகள், விளையாடும் குழந்தைகள் என்று பலதரப்பட்ட மக்கள் பரபரப்பாக இருந்தனர். அந்த வழியாக காரில் செல்லும் போது ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். கண நேரத்தில் விவாதம் முற்றி அந்தப் பெண்ணின் கன்னத்தில் ஆண் ஓங்கி அறைந்துவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்களை அந்தக் காட்சி எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
காட்சி : 2
தோழியின் கணவர் ‘கை நீளம்’ கொண்டவர். அவளைத் திருமணம் செய்து அழைத்துச் செல்லும் போதே மாமியார் அவளிடம், “அவன் கிட்ட எதுத்துப் பேசாதே… அவன் கொஞ்சம் கோபக்காரன்” என்று பயமுறுத்தினாராம். திருமணம் ஆன மூன்றாவது மாதத்தில் நீளத் தொடங்கிய அவரது கை இன்னும் மடங்கவேயில்லை என்று தோழி சொன்னாள்.
காட்சி : 3
திருமணம் ஆன புதிதில் கணவருடன் திரைப்படம் பார்க்கச் சென்ற இன்னொரு தோழி, “தியேட்டருக்குள்ள ஒரே இருட்டா இருந்துச்சு.. கண்ணு தெரியலை. ஸ்டெப்ஸ்ல ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன். அதுக்கு அறிவிருக்கா உனக்குன்னு திட்டிட்டு, ஓங்கி அறைஞ்சிட்டாருடி. ஏற்கெனவே கீழே விழுந்து கணுக்கால் சுளுக்கிடுச்சு.. நடக்க முடியாம இருந்துச்சு. அதுக்குள்ள அடிச்சது வேற அசிங்கமா போச்சு. அப்புறம் படம் பாக்குற மூடே போயிருச்சு. அழுதழுது மூஞ்சியெல்லாம் வீங்கியதுதான் மிச்சம்” என்று வருத்தப்பட்டாள்.
இந்தியா விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எத்தனையோ முன்னேறி விட்டதாகச் சொல்கிறார்கள். இதோ, நிலவுக்குச் சந்திரயானை வெற்றிகரமாக ஏவி விட்டோம். ஆனாலும் நம் இந்திய சமூகத்தில் இன்னும் நீடிக்கும் மிக மோசமான பழக்கம் மனைவியைக் கணவன் அடிப்பது. கேட்டால், “என் மனைவியை அடிக்கும் உரிமை எனக்கு உண்டு” என்றும் “புருஷன்னா அப்படித்தான் இருப்பான்” என்றும் பிதற்றுவார்கள். பொது இடத்தில் மனைவியை அன்பாக அணைக்கவோ, ஆதூரமாக முத்தமிடவோ தயங்கும் இந்தியக் கணவர்கள்தாம் பளாரென்று அறைவதை ஆண்மையின் பெருமையாகவும், வீரமாகவும் புளகாங்கிதம் அடைகிறார்கள். போதாக்குறைக்கு, “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்கிறார்கள்.
திரைப்படங்களில் திமிர் பிடித்த பெண்ணை அடக்க கதாநாயகன் அவளை ஓங்கி ஓர் அறை விட்டால் போதும். உடனே ஸ்விட்ச் போட்டாற் போல அவள் திருந்தி விடுவாள். அப்புறம் அவனைக் காதலித்துப் பணிவிடைகள் செய்வாள். சீரியல்களில்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை வந்தால் இறுதியில் ஆண் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்ததும் சட்டென்று பின்னணி இசைகூட நின்றுவிடும். ஒரு படத்தில்கூடப் பெண் ஆணை ஓங்கி ஒன்று விட்டு சண்டையை முடித்ததாகக் காட்டியதேயில்லை. சண்டிராணியைக்கூட சூப்பர் ஸ்டார் ஓர் அறை விட்டுத்தானே ‘ஆணவத்தை’ அடக்குவார். விசு படங்களைப் பற்றிச் சொல்லவே விருப்பம் இல்லை.
மனைவி என்கிற உரிமையில் அடிப்பதாகச் சொல்கிறவர்களிடம் ஒரு கேள்வி. அதே உரிமை பெண்ணுக்கும் உண்டல்லவா?. அப்போது பெண்ணும் ஆணின் பேரில் கோபம் கொள்ளும் போது இதேபோல் அடிக்கலாம் அல்லவா?. அப்போது மட்டும் ஏன் கலாச்சாரக் கேடயங்களைத் தூக்கிக் கொண்டு வருகிறீர்கள்? திருமணம் என்பது இருமணம் இணையும் ஓர் ஒப்பந்தம் தானேயொழிய அதில் எந்தப் புனிதமும் இல்லை. பெண்ணும் ஆணும் ஒருவரை இன்னொருவர் புரிந்து கொள்ள இயலாதென்பதைப் புரிந்துகொண்டு, தங்களுக்குள் சகித்துக்கொண்டு வாழ்தலே திருமணம். இதில் ஆண் தனக்குக் கீழ்தான் பெண் என்று நினைத்து, அவள் எந்தவிதத்திலும் தன்னைவிட முன்னேறிவிடக் கூடாதென்று அடக்கி வைக்க நினைக்கிறான். அதற்காக அவளை அடிக்கத் தொடங்குகிறான். இதுவொரு அநாகரிகமான செயல் என்று பெரும்பாலானோருக்குத் தோன்றுவதில்லை. இது இயல்பான ஒன்றாகச் சமூகத்தாலும் பெரும்பாலான பெண்களாலுமே அங்கீகரிக்கப்படுகிறது. பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆணிடம் பதில் இல்லாதபோது அவளை அடித்து உட்கார வைப்பதன் மூலம் ஆண் பெண்ணுடலின் மேல் தனக்குள்ள உரிமையை (?) நிலை நாட்டுகிறான். அதற்காகத்தான் பெண்களை ‘வீக்கர் செக்ஸ்’ என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறான். பெண்ணால் தன்னை அடித்தவனைத் திருப்பி அடிக்க முடியும். ஆனால், நமது புனிதமான (?) கலாச்சாரமும் பண்பாடும் அவளை அவ்வாறு செய்ய இயலாமல் மாயத் தளைகளில் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அப்படி ஆணிடம் அடி வாங்கியாவது அந்தப் பாழாய்ப் போன கலாச்சாரத்தைக் கட்டியழ வேண்டுமா?
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி டிக்- டாக் செயலியில் அடிக்கடி வீடியோ பதிவேற்றம் செய்து பிரபலமாக இருந்தனர். அவர்களது வீடியோக்களுக்கு அதிகம் பாலோவர்ஸ் இருந்தனர். சம்பவத்தன்று இருவரும் புதியதாக ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்வதற்காக வெளியே சென்று உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கணவன் தன் மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் முழுவதும் நேரலையில் பதிவாகி வைரல் ஆனது. இந்த வீடியோவைப் பார்த்த அவர்களது ஃபாலோவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து அந்த கணவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி, 3 வருடங்களுக்கு மனைவியை எந்த வகையிலும் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் இந்தச் செயல் மூலம் அங்கே நிலை நாட்டப்பட்டிருக்கிறது. இதைக் கேள்விப்படும் நம் நாட்டு மக்களுக்கு இது விசித்திரமாகத் தெரியலாம். என்றாலும் பெண்ணின் உணர்வுகளுக்கு அந்த நாட்டில் மதிப்பளித்துள்ளதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நமது இந்தியன் பீனல் கோர்ட் செக்சன் 498A ன்படி ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். மனைவியை அடிப்பதற்கான காரணங்கள் குடிப்பழக்கம், பொறாமை, ஈகோ, பாலியல் இணக்கமில்லாமை, உணர்ச்சிவசப்படுதல், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல், அநாவசிய உறவுகளில் சிக்கியிருத்தல் என்று பலவகை உண்டு. மாமியாருக்கு அவமரியாதை செய்தல், வீடு மற்றும் குழந்தைகளைப் புறக்கணித்தல் ஆகிய காரணங்களால் கணவன் மனைவியை அடிப்பதுதான் அதிகம் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மனைவி ஒரு பண்டம் கிடையாது. அவளுக்கும் உணர்ச்சிகள், சுயமரியாதை எல்லாம் உண்டு. இதைப் புரிந்து கொண்டால் பெண்ணை சக மனுஷியாக நடத்தினால் போதும். அப்படி நடத்த முடியாத போது திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது இருவருக்கும் நன்மை பயக்கும். ஆனால், காலங்காலமாகப் பெண்கள் இத்தகைய ஆணாதிக்கப் போக்கை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்தான் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான ஆண்கள் பணியிட டென்ஷனை, மேலதிகாரிகள் மீதான வெறுப்பை வீட்டிலுள்ள மனைவியின் மீதுதான் காட்டுகிறார்கள். அவர்களை அடிக்கவோ, அடக்கவோ, தண்டிக்கவோ, வசை பாடவோ இயலாத சூழ்நிலையில் அதைப் பெண்கள் மீது காட்டித் தங்கள் வெறுப்புணர்வைத் தணித்துக்கொள்கிறார்கள். இது எவ்வளவு மோசமான பழக்கம். இது இயல்பென்றால் வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெண்களும்கூட தங்கள் ஸ்ட்ரெஸைத் தணிக்க ஆண்களை அடிக்கலாம் அல்லவா?
சமீபத்தில் வெளியான ‘ஜெயஜெயஜெய ஹே’ திரைப்படத்தில்கூட நாயகன் தன் மனைவியை உணவு சரியில்லை என்று அறைவான். பின்னர் அவளைச் சமாதானம் செய்ய ஹோட்டலில் சாப்பிடவும், திரைப்படத்திற்கும் அழைத்துச் செல்வான். இந்திய ஆண்களின் பொதுப் புத்தி அவ்வளவுதான். அடித்த பிறகு அல்வாவும் மல்லிகைப்பூவும் அவர்களைச் சமாதானப்படுத்திவிடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும். பெண்ணை அடக்கி ஆள்வதன் மூலம் கிடைப்பது பெருமை இல்லை. பெண்ணை மதித்தால் கிடைப்பதே பெருமை என்று ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஆண் தன்னை அடிப்பதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் பெண்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டார்கள். இருபாலாருக்கும் இயற்கை சமமான வாய்ப்புகளைத்தான் வழங்கியிருக்கிறது. ஒன்றை அடக்கி, ஒன்று விஞ்ச நினைக்கும்போதுதான் பிரச்னைகள் தோன்றுகின்றன. பெண் ரத்தமும் சதையுமான சக மனுஷி என்பதை ஆண்கள் புரிந்துகொண்டால் போதும். மாற்றங்கள் தன்னால் நிகழும்.
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.