பரமசிவத்துக்கு மகன் அருணைப் பார்க்கும் போதெல்லாம் பற்றி எரிந்தது.

முப்பத்தியொரு வயதாகியும் இன்னும் ஒரு பெண்ணுக்குக் கணவனாகாமல் வெட்டியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பையனைப் பார்த்தால் எந்தத் தந்தைக்குத்தான் பிடிக்கும்? லேசாக வழுக்கை வேறு விழத்தொடங்கிவிட்டது.

இதுவரை இருபத்தியேழு பெண்கள் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டனர். ஒரு பெண்ணுக்குக்கூட அருணைப் பிடிக்கவில்லை. அருணுக்கு எந்தக் குறையும் இல்லை, லகான் கோழி போலச் சோகை பிடித்த நிறம் என்பதைத் தவிர.

வந்த பெண்கள் அனைவரும் சொன்ன முக்கியக் காரணம் பையனின் வெளுத்த நிறம் பிடிக்கவில்லை என்பதே.

அடுப்புக்கரியை நன்கு உலர்த்தி உடல் முழுதும் பூசிக் குளிக்க வைத்தார்கள், கடுகு, மிளகு, கறுப்பு திராட்சை அதிகம் சேர்த்துக் கொண்டால் மேனி கறுப்பாக மிளிரும் என்று வற்புறுத்தித் தின்ன வைத்தார்கள். ஒன்றும் பயனில்லை.

பன்னிரண்டு மணி உச்சி வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் மேனி ஒரு வாரத்தில் கறுத்துவிடும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு, மொட்டை மாடியில் மகனை நிற்க வைத்தார் அப்பா பரமசிவன். அருண் மயங்கி விழுந்து அக்கம்பக்கத்தினர் தூக்கிக்கொண்டு வந்ததும் பரமசிவனின் மனைவி பார்வதி, “என் புள்ளைய இனிமே இப்படிக் கொடுமைப்படுத்துன, நடக்குறதே வேற” என்று கணவனை நையப்புடைத்ததும் வரலாறு.

பார்வதி அரசு அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார். சுற்றத்திலும் அக்கம் பக்கத்திலும் செல்வாக்குடையவர். பரமசிவன் வீட்டுக் கணவன், அதிகம் படிக்கவில்லை. மனைவியும் மகனும்தான் அவருக்கு உலகம். ஆனால், கண்ணுக்கு அழகனாக, குணவானாக இருந்ததால் பார்வதி அவரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்.

கணவனும் மனைவியும் கிரானைட்டில் செதுக்கிய அழகிய கருஞ்சிலைகளாக இருக்க, மகன் மட்டும் கூழாங்கல் நிறத்தில் பிறந்துவிட்டான். பெற்றவர்கள் அன்பில் குறை வைக்காவிட்டாலும் சுற்றமும் நட்பும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அருணின் நிறத்தைக் குத்திக் காட்டத் தவறியதில்லை.

இன்று மாலை அருணைப் பார்க்க வரும் நிலா, அமெரிக்காவில் படித்தவள். இங்கு ஐடி கம்பெனி ஒன்றில் உயர் பதவியில் இருப்பவள். எத்தனையோ ஆண்களுடன் பழகி இருந்தாலும் எவரிடமும் மனம் ஒட்டவில்லையாம். அமெரிக்க நாகரிகத்திலேயே வளர்ந்துவிட்ட தங்கள் மகளைத் திருத்த, சொந்த மண்ணைச் சேர்ந்த ஒரு சாதாரண, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அடக்கமான மருமகன் வேண்டுமென்பது அவளது பெற்றோரின் எண்ணம்.

இதோ வந்துவிட்டார்கள். நிலா, நெய்பூசித் துடைத்து வைத்த எஃகுச் சிலை போன்ற வாட்ட சாட்டமான உருவம், நெளி நெளியாக அலையும் கூந்தல், இறுக்கமான ஜீன்சும் மேலே வெள்ளை ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த அருணுக்கு இந்த அழகிக்கு என்னை எங்கே பிடிக்கப் போகிறது. ஹும்! பெருமூச்சு விட்டான்.

அருண் வெள்ளையாக இருந்தாலும் களையான முகம் கொண்டவன். அழகன்தான். இருந்தாலும் சிறுவயது முதல் கூடப் படிக்கும் சிறுவர்களும் குடும்பமும் நிறம் குறித்து விதைத்திருந்த தாழ்வுணர்ச்சியை அவனால் மீறமுடியவில்லை.

“ம்…என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கே? இந்தா இந்த டிபன் காப்பியைக் கொண்டு போய்க் குடு!”

கேசரியும் போண்டாவும் மணத்தது. பாவம், அப்பா இரண்டு மணிமுதல் அடுப்பங்கரையில் வெந்து செய்துகொண்டிருக்கிறார். அதன்பின் இவனுக்கு அலங்காரம் வேறு. பட்டு வேட்டியும் மடிப்புக் கலையாத பட்டுச் சட்டையுமாகத் தட்டுகளை ஏந்தி வந்தான் அருண்.

அப்பாவுக்காகவாவது இந்தப் பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்க வேண்டுமே என்று குற்றவுணர்வு கொண்டான்.

நிலா, நிலாவின் அம்மா, அக்கா சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கீழே பாயில் நிலாவின் அப்பா, தம்பி, சித்தப்பா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

“எங்க அருண் இந்தக் காலத்துப் பசங்க மாதிரி இல்ல. நல்லாப் படிச்சு வேலைக்குப் போறான். சூப்பரா சமைப்பான். இந்த டிபன்கூட அவன் செஞ்சதுதான். ” கூசாமல் பொய் சொன்னார் அப்பா பரமசிவன்.

“அதெல்லாம் சரி, பையனோட அம்மா எங்கே?”

பரமசிவனுக்கு டென்சனானது. எப்போதும் இந்த மனுஷி இப்படித்தான். நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை. செல்லை எடுத்து ஐந்தாவது முறையாக மனைவியின் நம்பரை அழைத்தான். பிசி என்று வந்தது. ஆறாவது முறை அழைத்த போது எடுத்தார் பார்வதி. “என்ன, மீட்டிங்ல பிசியா இருக்கும் போது எதுக்குத் தொண தொணன்ற?”

“இன்னிக்கு அருணைப் பையன் பார்க்க வராங்க, சீக்கிரம் வாங்கன்னு சொல்லி இருந்தேன்ல? என்னங்க இப்டிப் பண்றீங்க?” பரமசிவனுக்கு அழுகையே வந்து விட்டது.

மகனுக்கு வரன் பார்க்க வரும்போதும்கூட மனைவி இப்படிப் பொறுப்பில்லாமல் தோழிகளுடன் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாரே என்று பொறுமினார் பரமசிவன்.

“சரி சரி, நை நைன்னாதே. இன்னும் பத்து நிமிசத்துல வீட்டுக்கு வந்துடுறேன்.”

பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அனைவரிடமும் கலகலத்து உபசரித்துச் சூழலை இயல்பாக வைத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருந்தான் பரமசிவன். பெண்ணின் அண்ணனும் இன்னும் ஓர் உறவுக்காரனும் அருணின் அழகை அங்க அங்கமாக வர்ணித்து, அவன் நிறத்தையும் கிண்டலடித்துக்கொண்டிருந்தது தெளிவாகவே கேட்டது.

அரைமணி நேரம் கழித்துப் பார்வதி வந்தார். பாயில் அமர்ந்திருந்த ஆண்கள் எழுந்து உள்ளே சென்றனர். நிலாவின் அம்மாகூடச் சும்மா இருக்க, அப்பாதான் நீட்டி நீட்டி மகளுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கத்திக்கொண்டிருந்தார். நிலாவின் அம்மா, “நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்று அதட்டிய பிறகே அமைதியானார்.

நிலாவின் அம்மாவை இடைமறித்து நிலாவே பேசினாள்.

“இங்கே பாருங்க, நான் சுத்தி வளைக்க விரும்பல. எனக்குக் கணவனா வரப்போறவன் கொண்டு வர சீர் செனத்தில வாழுறது எனக்கு அவமானம். கை நிறைய சம்பாதிக்கிறேன். வரப்போறவனை ராஜா மாதிரி பார்த்துப்பேன். உங்க பையன் அருணை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்படி ஒரு ஹோம்லியான சிரிச்ச முகத்தோட இருக்கிற பையனை இந்தக் காலத்துல பார்க்கவே முடியாது. அருண் வெள்ளையா இருக்கிறதெல்லாம் எனக்குப் பிரச்னையே இல்லை. எங்க குடும்பத்தை, குறிப்பா என்னை நல்லாப் புரிஞ்சிக்கிட்டு அன்பா இருந்தாலே போதும். கல்யாணத்துக்குப் பிறகு வேலையைவிட வேண்டி இருக்கும். அமெரிக்காவுக்கு என் கூட வரணும்ல.”

பரமசிவன் ஓடிச்சென்று சாமி படத்தின் முன்பு நின்று கும்பிட்டார். பார்வதி ஆனந்தக் கண்ணீருடன் நிலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி சொன்னார். என்ன இருந்தாலும் அம்மா இல்லையா!

“பெண்ணுக்கு ரொம்ப நல்ல மனசு, இப்படி ஒரு இடம் கிடைக்க அருண் குடுத்து வெச்சிருக்கணும்” என்று குரல்கள் கேட்டன.

எல்லார் முகத்திலும் சந்தோஷம். நிலாவின் அத்தை அவளது முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“உன்னை நினைச்சா பெருமையா இருக்கு நிலா!”

அருணுக்குச் சின்ன வருத்தம் அப்பாவின் முதுகைச் சுரண்டினான்.

“அப்பா, அப்போ என் வேலை அவ்ளோதானா?”

அவன் கிசுகிசுத்தது நிலாவுக்குக் கேட்டது. குறும்பான புன்முறுவலுடன் அருணைப் பார்த்தே சொன்னாள், “உனக்கு விருப்பம்னா நீ கொஞ்ச நாள் எங்கப்பாம்மாகூட இருந்து வேலைக்குப் போகலாம். ஆனா, விசா ரெடியானவுடனே வந்து கூட்டிட்டுப் போயிடுவேன்” என்று கண்ணடித்தாள். எல்லாரும் சிரித்தார்கள்.

அருணும்தான்!

“அப்புறம் ஃப்ரான்கா சொல்றேன். நான் செய்ன் ஸ்மோக்கர் கிடையாது. ஆனா, எப்பவாவது ஸ்மோக் பண்ணுவேன். சோஷியல் ட்ரின்கர். ஆனா, அதுகூட அருண் அன்பா சொன்னால் திருத்திக்குவேன்.” பற்கள் பளீரிட நிலா சிரித்ததில் அருணுக்கு இதயத்துடிப்பு எகிறியது.

“அமெரிக்கால படிச்சு வேலை பாக்குறவங்க. இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அருண் மெல்ல மெல்ல சொல்லித் திருத்திடுவான்.”

“அருண், கொஞ்சம் ஜிம், பார்லர் எல்லாம் போய் ஃபிட்டா ஸ்டைலா ஆகணும். அமெரிக்கால போய் இப்படி அம்மாஞ்சி மாதிரி இருந்தா நிலாவோட வேலை பாக்குறவங்கல்லாம் கிண்டல் பண்ணுவாங்க” என்று அட்வைஸ் குரல்கள் பின்னணியில் ஒலிக்கத் தொடங்கின.

”அப்புறம் என்ன தட்டை மாத்திக்கலாம்” என்று பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் நிச்சயம் செய்யத் தொடங்கக் கல்யாணக் கனவுகளில் மகிழ்ச்சியுடன் மிதக்கத் தொடங்கினான் அருண்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.