எல்லாப் பெற்றோர்களும் நினைப்பது குழந்தைகளுக்கு என்ன தெரியும், அவர்களுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பது நமக்குதான் தெரியும் என்று நினைப்பதுண்டு.
ஆனால், உண்மை அதுவல்ல! எல்லாக் குழந்தைகளுக்கும் தெரியும் தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்று. பெற்றோர்கள் அதை உணர்ந்துகொள்ள முயற்சிக்கவில்லை.
உதாரணமாக குழந்தைகள் உங்களிடம் வந்து, “எனக்கு சாக்லெட் வேண்டும்” என்று கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் நான் வாங்கித் தரமாட்டேன், உன்னுடைய பற்கள் சொத்தை ஆகிவிடும் என்று கூறுகிறீர்கள். ஆனால், எந்தக் குழந்தையும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அடம்பிடிக்கும்.
இதற்கான தீர்வு, ‘நீ சாக்லெட் சாப்பிடு. ஆனா, குறைவா எடுத்துக்கோ. அப்படியே சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடிந்ததும் வாய் கழுவி சுத்தம் செய். பல் சொத்தைக்கான வாய்ப்பு குறைவு’ என்று சொல்லிப் பாருங்கள். சில மாற்றங்கள் ஏற்படலாம்.
ஆனால், பெற்றோர் காட்டுவது நீ சாக்லெட் சாப்பிடவே கூடாது என்ற கண்டிப்பு. அவர்களை மறைமுகமாகப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் சாப்பிடுவதற்கு ஊக்கமளித்துவிடும்.
குழந்தையிலிருந்தே மரியாதையாகப் பேசக் கற்றுக் கொடுங்கள். நம் வீட்டில் பணி செய்யும் சக மனிதர்களையும் ‘வாங்க, போங்க’ என்று பேசக் கற்றுக்கொடுங்கள்.
உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இடையே மனக்கசப்பு, முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அதைக் குழந்தைகளிடம் கூறி, “நீங்க அவங்ககூடப் பேசக் கூடாது. நமக்கும் அவங்களுக்கும் சண்டை” என்று உறவினர்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்.
பள்ளி செல்லும்போது, “நீ அவன்கூட சேராதே, இவன்கூட சேராதே” என்று அவர்களுடைய நட்பு வட்டத்தைச் சுருக்காதீர்கள். அவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று யாரையும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. “நல்ல படிக்கிறவங்ககூட சேர், படிக்காதவங்ககூட சேராதே” என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகும்போதும், பயணிக்கும்போதும், அவர்களுக்கான புரிதல், கண்ணோட்டம் பல பரிமாணங்களில் மேம்பட்டு, அவர்களுக்கான நட்பு வட்டத்தை அவர்களே உருவாக்கி விடுவார்கள்.
ஒருவேளை அவர்களின் நட்புவட்டம் தவறாக இருக்கும்பட்சத்தில் அதிலிருந்து அனுபவத்தைக்
கற்றுக்கொள்வார்கள். மறுமுறை அந்தத் தவறு நிகழாமல் அவர்களால் சமாளித்துவிட முடியும்.
குழந்தைகளுக்கான எல்லா முடிவையும் பெற்றோரே எடுப்பதன் விளைவு அவர்களின் கைக்குள்ளே குழந்தைகள் பயணிக்கப் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். எந்த ஓர் அவசரமான காலகட்டத்திலும்கூட முடிவு எடுக்க தெரியாமல் திணறுகிறார்கள்.
“என்னோட குழந்தை நான் சொல்றத மட்டும்தான் கேட்கும்” என்று பெருமை பேசும் பெற்றோர்களைவிட அவளுக்குத் தெரியும் எது நல்லது, எது கெட்டது என்று அவளே அதற்கான முடிவு எடுத்து, அதில் வரும் பிரச்னைகளைச் சமாளித்து வெற்றி பெறுவாள் என்று கூறும் பெற்றோர்கள் அரிது.
உங்கள் குழந்தைகள் உங்களிடம் வந்து ஒரு பிரச்னையைக் கூறி இதற்கு என்ன முடிவு எடுக்கலாம் என்று ஆலோசனை கேட்கும் போது, பிரச்னைகள் பற்றிய சாதக, பாதக அம்சங்களை மட்டும் கூறுங்கள். முடிவை அவர்களே எடுக்கட்டும்.
குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியவை:
அன்பு செய்யக் கற்றுக்கொடுங்கள்.
சக மனிதனை மதிக்க கற்றுக்கொடுங்கள்.
தனக்குத் தேவையானதைத் தாமே செய்துகொள்ள கற்றுக்கொடுங்கள்.
உதவி செய்யக் கற்றுக்கொடுங்கள்.
நேர்மையாக இருக்கக் கற்றுக்கொடுங்கள்.
தீண்டாமையை ஒழிக்கக் கற்றுக்கொடுங்கள்.
புத்தகங்களுடன் பயணிக்கக் கற்றுக்கொடுங்கள்.
தைரியமாக பேசக் கற்றுக் கொடுங்கள்.
நிறைவில் அவர்களே அவர்களுக்கான முடிவை எடுக்கும் அளவிற்குத் தங்களை மேம்படுத்திக்கொள்வார்கள்.
அன்றாட நடப்பு நிகழ்வுகளுக்கான கலந்துரையாடல் என்பது தற்காலத்தில் மிகவும் அவசியம் என்று எனக்குத் தோன்றும். சின்னக் குழந்தைகளிடம் என்ன பேச முடியும் என்று சிலர் நினைப்பதுண்டு.
செய்திகளில் வருகிற எல்லாச் செய்திகளையும் குழந்தைகளிடம் பேச வேண்டியதில்லை. நீங்கள் பார்த்த விஷயங்களை, உங்களைப் பாதித்த விஷயங்களைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்துங்கள்.
இரவில் தூங்குவதற்கு முன்பு உங்கள் உரையாடல்களை சுவாரசியமாக ஆரம்பியுங்கள். அவர்களும் தங்கள் கருத்துகளை அதே சுவாரசியத்துடன் பகிர்ந்துகொள்வார்கள்.
சமீபத்தில் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் நடந்த நிகழ்வுகளைப் பேச ஆரம்பித்தேன். “அந்தக் கிராமத்தில் இருக்கும் பட்டியலின மக்களை, ஐயனார் கோயிலில் சாமி கும்பிட அனுமதிப்பதில்லையாம் பல வருடங்களாக. இந்தச் செய்தியை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்று, அவரே நேரில் வந்து அப்பகுதி மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் சாமி ஆடி, இவங்கள கோயிலுக்குள் போகக் கூடாதுன்னு சொன்னாங்க. சாமி இப்படிச் சொல்லுமா?” என்று என் மகன்களிடம் கேட்டேன்.
“சாமி எப்படி அப்படிச் சொல்லும்? இது பொய். சாமி எல்லாரும் நம்மள கும்பிடணுமின்னு தானே நினைக்கும்” என்றான் மதி!
“இப்படி யாரையும் கோயிலுக்குள்ள போகக் கூடாதுன்னு சொல்லலாமா?”
“அம்மா, அப்படிச் சொல்லக் கூடாது. எல்லாரும் மனுஷங்கதானே” என்றான் மதி.
இந்த உரையாடலில் இருந்து தீண்டாமையைப் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர முடியும். அடுத்து நாம் படித்த படிப்பு மூலமும் அதிகாரத்தின் மூலமும் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
“நாம் படிச்ச படிப்பு என்ன செய்யும்? யாருக்கும் அடிபணியாது, அதிகாரம் தன் கடமையைச் செய்யும்.”
என்னைப் பொறுத்தவரை சகமனிதனை மதிக்கக் கற்றுக்கொண்டாலே தீண்டாமை தானாகவே ஒழிக்கப்பட்டுவிடும்.
குழந்தைகள் உலகத்தை அவர்கள் கண்வழியே காணட்டும். உங்களது பார்வையை அவர்களது கண்ணோட்டத்தில் திணிக்காதீர்கள்.
(தொடர்ந்து பேசுவோம்)
படைப்பாளர்:
திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.