முன் கதைச் சுருக்கம்:

அஃதர் குழுவில் பல மாற்றங்கள் செய்திட்ட அன்று அனைவரும் இரவு உணவிற்காக வெளியில் சென்றிருந்தனர். வாடகைக்காருக்காகக் காத்திருந்த மதியை அஃதர் அவள் தங்கும் இடத்தில் காரில் இறக்கிவிட்டுச் சென்றான். இனி மதியிடம் பேசுவோம்.

அறைக்குள் வந்தேன். அனைவரும் உறங்கி இருந்தனர். உடைமாற்றி உறங்கத் தயாரானேன். கண்களை மூடினால் இன்று காலை முதல் நடந்தவை கண்முன் அரங்கேறின. முதலில் என்னைப் பற்றி அஃதர் அளித்த கருத்து. நான் என்னை அழைப்பாரென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாம் வந்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என்ன சொல்லமுடியும் என்று சற்று அசட்டையாக இருந்துவிட்டேன். சரி, செல்வோம் என்று கிளம்பி அவர் அறையை அடைவதற்குள் வேலையில் நடந்த 2, 3 பிழைகளைப் பற்றிக் கேட்பாரோ, கோப்பினை சரியாகக் கவனிக்காமல்விட்ட அவசரக்குடுக்கை என்பாரோ என்று ஏகப்பட்ட எண்ணங்கள். கொடுக்கப்பட்ட வேலைகளில் சிலவற்றைச் சிறப்பாகச் செய்திருந்தாலும் இம்மாதிரி சமயங்களில் மனம் ஏனோ பிழைகளை முன்னிறுத்துகிறது. சரியாகச் செய்தவற்றிற்காக ஆனந்தப்படுவதை விடுத்து சிறுபிழைக்கும் உழல்கிறதே! ஆனால், நடந்தது வேறொன்று அல்லவா! பணி மாற்றம், குழுத்தலைவர் மாற்றம் இப்படி…

உண்மையில் அவை மட்டுமா மனதில் வந்தன? உண்மையில் அவை ஒரு ஞாபகத் தேடல் மட்டுமே. இன்னும் சொல்லப் போனால் சுற்றிவளைத்து வருவது. நம் இதயம் அவ்வளவு எளிதாக நம் சலனங்களை ஒப்புக்கொள்ளாது. எதை எதையோ சாக்குக்காட்டி இதுதான், இதனால்தான் இந்தப் பரபரப்பு என்று சொல்லும்; கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி நம்மை நாமே புரிந்துகொள்ளாதது போல் நடிக்கும்.

அஃதர் கொடுத்த அறிவுரை என்னைப் பாதிக்கவில்லை என்று நான் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் உணவகத்தை அடையும்வரை அஃதர் என் திறமை பற்றி கூறியவை மட்டுமே என் சிந்தையை வியாபித்து இருந்தன. ஆனால், அதன்பின் நடந்தவை… மீண்டும் மீண்டும் அவர் குரல் மனதில் வந்துபோனது. சாப்பிட ஆரம்பித்தது முதல் தற்பொழுது இறக்கிவிட்டுச் சென்றது வரை அந்த கார் பயணம் என்னை ஏதோ செய்தது. ஒரு காதலனும் காதலியும் உலா செல்வதுபோல் என்னையும் அஃதரையும் கற்பனை செய்தது. மனதுள் மறுகுரல், “ஏன்டி இப்படித்தான் ஒரு மேலதிகாரியை எண்ணுவாயா? இது தவறல்லவா, இப்படி நீ எண்ணுவது தெரிந்தால் அவர் உன்னைப் பட்டிக்காடு என்று நினைக்க மாட்டாரா? இந்தச் சென்னையில் ஆண்களும் பெண்களும் தோளில் கைபோட்டு மனதில் கள்ளம் கபடமற்றுச் செல்வது இயல்பானது. அப்படி இருக்க தனியாக அவருடன் காரில் பயணித்ததையும் அவர் நீ மறைத்த உண்மையை கண்டுபிடித்ததையும் எண்ணி எண்ணி வீண் கற்பனை செய்வது தவறாக இல்லையா? நீ இன்னும் பட்டிக்காடாகவே இருக்கிறாய்.. “இதயம் இவ்வாறு பல கேள்விகளை அடுக்கி அடுக்கி என்னைக் குற்ற உணர்வில் தள்ளியது. அதுவரை துள்ளிக்கொண்டிருந்த மனம் துவண்டு போனது. என்னை வசை பாடியது. இனி அவ்வாறு எண்ணக் கூடாது என்று என்னை நானே எச்சரித்தபடி உறங்க முயன்றேன்.

மறுநாள் அலுவலகத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. எழுந்தது முதல் இரவின் எண்ணங்கள் முற்றுகையிட்டன. அன்று அஃதரைச் சந்திப்பதை எண்ணினாலே மனம் பதறியது. அலுவலகத்துக்குச் சென்றவுடன் வேலையில் கவனம் பதிக்கலானேன். அவரை அன்று சந்திக்கவே கூடாது என்று எண்ணினேன். ஒவ்வொரு முறையும் அவரை திலீபன் இடத்தில் சந்திக்கும் நிலை வந்த போது படபடப்பை மறைத்தவாறு அவர் கண்களைச் சந்திப்பதைத் தவிர்த்தேன். மரியாதைக்குக்கூட ஒரு வணக்கம் தெரிவிக்க முடியவில்லை. பிறகு ஒரு புன்னகை செய்திருக்கலாமே என்று ஓர் அரைமணி நேரம் சிந்தித்தேன். அவரிடம் நேரடியாக நான் சமர்ப்பிக்க வேண்டிய வேலைகளும் அன்று இல்லை. இப்படியே நாள்கள் கழிந்தன.

அப்படியே பிறகு சிறிது சிறிதாகச் சிறுபிள்ளைத்தனமாக தோன்றியவற்றிலிருந்து விடுபடலானேன். சலனங்களை மூட்டை கட்டி மூளையைச் சலவை செய்தேன். மனம் லேசாகத் தொடங்கியது. இனி அவரே நேரில் வந்தாலும் கண்களைப் பார்த்துப் பேசும் தைரியம் வரலாயிற்று. ஏனோ அடுத்த இரு வாரங்கள் அவரிடம் பேசும் சந்தர்ப்பங்கள் வரவே இல்லை. அவரும் எதுவும் பேசவில்லை; என் கற்பனைகள் வளர நீரும் கிட்டவில்லை. வேலையும் வீடும் என்று நாள்கள் கடந்தன. கற்றுக்கொள்வதில் காலங்கள் கரையலாயின. அதன் பின்பு ஒரு கூட்டத்தில் ஒருமுறை அவரிடம் ஒரு குறிப்பை விளக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை முறையாகப் பயன்படுத்தினேன். அவரின் பாராட்டு அன்று ஓர் உயர் அதிகாரியின் பாராட்டாகவே இருந்தன. நிச்சயம் அன்று மகிழ்ந்திருந்தேன். இப்படி என்றாவது கிடைக்கும் வாய்ப்புகள் ஓர் உயர் அதிகாரியாகவும் குழு உறுப்பினராகவும் எனக்கும் அவருக்குமான அலுவலக ரீதியான நல்ல உறவை வளர்த்தன. உண்மையில் இது அன்றைய கார் பயணத்திலும் சிறந்தது என்று மனம் தீர்க்கமாகக் கூறியது.

இப்படித்தான், இது இப்படித்தான். புதிதாக ஒரு சிலரைப் பார்க்கும்போது மட்டும் மனம் இறக்கை கட்டிப் பறக்கும்; இயல்பான விஷயங்களை இட்டுக்கட்டி இசைபாடும்; அதை அநீதி என்றும் கூற இயலாது. சரி என்றும் தவறு என்றும் பிரிக்க இயலாது. மனிதர் என்பதால் இதன் கண் பாதகங்களும் சாதகங்களும் உடன்வரும் என்பதினால் இதனைக் கையாளும் தெளிவு இருப்பின் நலமே. உண்மையில் அத்தெளிவு என்னைச் சுயபரிதாபத்திலிருந்து காப்பாற்றியது என்றே சொல்ல வேண்டும். அன்று அஃதரினால் ஆர்ப்பரித்த மனம் புதிதாகச் சந்தித்து ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிய ரவியின் பாலும் அதைச் செய்தது. ஆனால், அன்று நான் அதிகம் யோசிக்காமல் ஒரு ஐந்து பத்து நிமிடங்களில் தெளிந்தேன். ஆக இனி தெளியவே இயலாத தீ ஒன்றில் மாட்டப் போகிறேன் என்று எண்ணியிராத சமயத்தில் தெளிந்து பறந்தேன்.

நாமும் உடன் பறப்போம்!

படைப்பாளர்:

மோகனப் பிரியா கெளரி

நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம்.  சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’