பௌத்த மதங்களில் ஆண் துறவியை பிக்கு என்றும் பெண் துறவியை பிக்குணி என்றும் அழைப்பர் .

பெரும்பாலான பௌத்த மதங்களில், ஆண் துறவிகள் பிரார்த்தனைகளை நடத்துவார்கள், பெரிய பதவிகளை வகிப்பார்கள், அதே நேரம் பௌத்த மத பெண் துறவிகளுக்கு ஆண் துறவிகளுக்குச் சமைப்பது மற்றும் மடத்தைப் பராமரிப்பது போன்ற வேலைகளே ஒதுக்கப்பட்டன.

பெண்கள் துறவிகளானாலும் பொறுப்புகள் என்னவோ அதே சமைப்பதும், தான் வசிக்கும் இடத்தைப் பராமரிப்பதும்தான் போலும்!

ஆனால், இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான துருக்பா பௌத்த வழியின் பெண் தலைவரான பன்னிரண்டாவது கியால்வாங் துருக்பா இந்த வழக்கத்தை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக மாற்றினார்.

காத்மாண்டுவில் உள்ள துருக் கவா கில்வா மடத்தில் பௌத்த பிக்குணிகளுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலைகள் கற்பிக்கப்பட்டன. குங் ஃபூ , தற்காப்புக்காகவும் அவர்களது உள் மற்றும் வெளிப்புற வலிமையை வளர்ப்பதற்காகவும், தியானத்தில் கவனம் செலுத்தவும், வலுவாக இருக்கவும், மற்றவர்களுக்காகக் கடினமாக உழைக்கவும் உதவியது.

வாள்கள், கத்திகள், சாட்டை, தடி என்று எல்லா வகையான ஆயுதங்களையும் வைத்து சரமாரியாகச் சண்டை பயிற்சி மேற்கொள்கிறார்கள் இந்த குங் ஃபூ பௌத்த பிக்குணிகள்.

இந்தத் துருக்பா பிக்குணிகள் அனைவரின் முதல் பெயரும் ‘ஜிக்மே’ என்று தொடங்கும். ‘அச்சமற்றவள்’ என்று பொருள்.

பழைமைவாத கலாச்சாரத்தில் பல்வேறு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு புழுங்கிக் கிடக்கும் பெண்களுக்குத் தங்கள் தற்காப்புக் கலை நிபுணத்துவத்தைக் கற்பிக்கிறார்கள் இந்தக் குங் ஃபூ பௌத்த பிக்குணிகள்.

நேபாளம், இந்தியா, திபெத், பூட்டானைச் சேர்ந்த ஒன்பதிலிருந்து நாற்பத்தி இரண்டு வயதுடைய சுமார் நானூறு பௌத்த பிக்குணிகள் தற்போது இந்த மடத்தில் வசிக்கின்றனர்.

கடந்த ஆண்டு, பெண் உரிமைக்காக ஐந்நூறு பௌத்த பிக்குணிகள் நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து இந்தியாவின் லடாக் வரை நாலாயிரம் கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்கள். இந்த மாபெரும் பயணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித கடத்தல் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும் முயன்றது.

அவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு சிகிச்சையகங்கள், கிராம மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்துகிறார்கள். ஆதரவற்ற, காயமடைந்த விலங்குகளை தெருக்களிலிருந்து மீட்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு நேபாளம் 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. ‘லிவ் டு லவ்’ (நேசிக்கவே வாழ்) என்ற சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பின் ஆதரவுடன், அவர்கள் முதலில் கிராமங்களுக்கு நடந்தே சென்று நிவாரணப் பணி, பொருள் உதவிகளைச் செய்தனர். பின்னர், மருத்துவ ஹெலிகாப்டர், டிரக்குகளின் மூலம் மீட்புப் பணிகள், உணவு மற்றும் மருந்து விநியோகம், சூரிய சக்தி மின்சாரம் போன்றவற்றை அளித்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இருநூற்றியொரு வீடுகளை கட்டுவதற்கு மாபெரும் உதவிகளை வழங்கினர்.

இமயமலை கிராமங்களில் ஓடும் ஆறுகளில் உள்ள நச்சுக் கழிவுகள், ஆபத்தான ஞெகிழி குப்பைகளைச் சுத்தம் செய்கின்றனர். மறுசுழற்சி மற்றும் ஞெகிழி சார்ந்திருப்பதைக் குறைப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி கிராம மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கொண்டாட்டங்களின் பகுதியாக குங் ஃபூ பௌத்த பிக்குணிகள் லண்டனுக்கு அழைக்கப்பட்டனர். ஒரு குழு கட்டா மற்றும் குங் ஃபூ விளையாட்டு செயல்முறைகளை பார்வையாளர்களுக்காக நிகழ்த்திக் காட்டியது.

இரண்டாயிரத்து பத்தொன்பதில் நியூயார்க் நகரில் ஆசியா சொசைட்டியின் ‘ஆசியா கேம் சேஞ்சர்’ விருதை குங் ஃபூ பௌத்த பிக்குணிகள் பெற்றனர்.

இவர்களை பார்த்து, ‘சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே

நீ பயமின்றி துணிந்து செல்லு’ என்று பாடத்தோன்றுகிறது அல்லவா!

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.