ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகம் தேவை. நம்பிக்கை என்பது மனிதனின் மூன்றாவது கையாகச் செயல்படுகிறது.

ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யும் மனிதர்கள் தனது சுயவாழ்க்கையில் அதிக நம்பிக்கை பெற்ற மனிதர்கள். ஆனால், மூட நம்பிக்கையானது தனிமனிதனின் அறிவை மட்டும் மழுங்கடிக்காமல் நாளடைவில் சமூகத்தின் வளர்ச்சியையும் மழுங்கடிக்கும். நடைமுறை யதார்த்தங்களில் இருந்து விலகி, இல்லாத ஒரு பொருள் அல்லது செயலின்மேல் அதிகமான பற்று உள்ளதையே மூடநம்பிக்கை எனலாம்.

தனிமனிதனின் மூடநம்பிக்கை என்பதில் தொடங்கி அது வளர்ந்து வளர்ந்து சமூகத்தின் மூடநம்பிக்கையாக மாறுகிறது. ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப இத்தகைய மூடநம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

அறிவியல் வளராத காலங்களில் உருவாகிய இத்தகைய மூடநம்பிக்கைகள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் தொடர்கதையாக உள்ளன.

மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டு முற்போக்குச் சிந்தனைகள் வளர வேண்டும் என எத்தனை குரல் கொடுத்தாலும் சிலர் இன்னும் பல்வேறு வகையான மூடநம்பிக்கைகளைக் கடைபிடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

மூடநம்பிக்கைகளின் விளைவுகளை எடுத்துச் சொன்னாலும் அதை பல நேரத்தில் மக்கள் புரிந்துகொள்வதில்லை.

அதற்குக் காரணம் அவர்கள் சொல்வது, “இது மூடநம்பிக்கையல்ல,

இது மூதாதையர் நம்பிக்கை” என்று!

அப்படிப்பட்ட நம்பிக்கைகள் மகப்பேறிலும் நிறைய உள்ளன.

இதில் பரவலாக நாம் சந்திக்கும் விஷயம் என்னவென்றால், சித்திரையில் குழந்தை பிறத்தல் கூடாது என்பது. சித்திரை வெயில் காலம் என்பதால் அந்த நேரத்தில் குழந்தை பெறுதல் சிரமமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளைப் பிரித்து வைப்பர். ஆடி மாதத்தில் புதுமணப் பெண்களை பெண் வீட்டார் அழைத்துச் செல்வது வழக்கம். இதுதான் காரணமாக இருந்தது சித்திரையில் குழந்தை பிறக்க வேண்டாம் என்பதற்கு. இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவருமே பணிக்குச் செல்வதால் ஆடி மாதம் முழுக்க விடுப்பு எடுக்க முடியாதநிலை உள்ளது. இதனால் தம்பதிகள் ஒன்றாகத்தான் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை உள்ளது. அதனால் அந்த நேரத்தில் கருத்தரிக்க வாய்ப்பு இருந்தால் இயற்கையாகவே இயல்பாகவே சித்திரையில் குழந்தை பிறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால், காலப்போக்கில் ஆடி மாத வழக்கங்களைக் கடைபிடிக்காதவர்கள்கூட சித்திரையில் பிள்ளை பிறக்கும் தேதி வந்தால் தயவுசெய்து சித்திரைக்கு முன்னோ பின்னோ பிள்ளை பிறக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்வது வாடிக்கையாகவும் உள்ளது, வேடிக்கையாகவும் உள்ளது. ஆனால், இதற்காக குழந்தை பிறப்பை மாற்றி அமைத்தல் இயலாது. அப்படிச் செய்வதும் அநீதியே! சித்திரை சிந்தனைகள் நீங்கி சித்திரங்கள் (குழந்தைகள்) பிறக்கட்டும்.

அடுத்ததாக, ‘கொடி சுற்றிப் பிறத்தல்’. தாய்க்கும் சேய்க்கும் தொடர்பைக் கொடுப்பது இந்தத் தொப்புள்கொடி. இந்தத் தொப்புள்கொடி வழியாகத்தான் கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. தாயிடம் இருந்து நல்ல ரத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் கெட்ட ரத்தத்தை தாயிடமும் சென்று சேர்க்கும் ஓர் உறவுப்பாலம்தான் தொப்புள்கொடி. பனிக்குட நீரில் ஒரு நாணல் தண்டு போல் இக்கொடி வளைந்து நெளிந்து மிதக்கும். குழந்தை பிறக்கும்போது குழந்தையின் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால் அது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழுத்தை இறுக்கும்போது அது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. சுவாசக்குழாயை இறுக்குவதால் சுவாசம் தடைபடுகிறது. இதனால் குழந்தைக்குத்தான் பிரச்னை வருமே தவிர, தாய்மாமாவுக்கு வராது. இதை விடுத்து நம் மக்கள் நம்புவது என்னவென்றால் கழுத்தைச் சுற்றித் தொப்புள்கொடி இருந்தால் அது தாய்மாமாவுக்கு ஆகாது என்பது. குழந்தை இவ்வாறு கொடிசுற்றி பிறந்துள்ளது என உறவினர்கள் தெரிந்துகொண்ட அடுத்த நிமிடமே அவர்கள் ஜோசியம் பார்ப்பவர்களைத் தொடர்பு கொள்ள ஆரம்பிப்பர். உடனே தொலைபேசியில் தகவல் கொடுத்து தாய்மாமாவுக்குப் பரிகாரம் செய்யச் சொல்லிக் கூச்சலிடுவர்.

இதுபோன்ற பரிகாரங்களுக்கு ஒரு பெரும் செலவே செய்யப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மக்கள்கூடக் கடன் வாங்கியேனும் இந்தப் பரிகாரங்களைச் செய்வர். பொருளாதாரத்தில் நாம் பின்தங்கி இருந்தாலும் அறிவில் நாம் பின்தங்கி இருத்தல் கூடாது. தாய்மாமாவுக்கும் தொப்புள்கொடி சுற்றிப் பிறப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக முருங்கைக்கீரையின் குச்சிகளை மட்டும் கொதிக்க வைத்துக் குடிக்கச் செய்யும் வழக்கம் என் கிராமத்தில் (சிவகங்கை மாவட்டம்) உள்ளது.

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும் என்பது உண்மை. ஆனால், கீரையை விட்டுவிட்டு அதன் குச்சிகளை மட்டும் கொதிக்க வைத்து பருகச் சொல்வது ஏனோ தெரியவில்லை. இந்தப் பழக்கம் எங்கள் கிராமப்பகுதியில் இன்றளவும் உண்டு.

சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக 8மாத கருவுற்றளுக்குப் பின் கணவன் – மனைவி உடலுறுவு வைத்துக்கொள்வர் கிராமப்புறங்களில்.

இப்படி உடலுறவு கொண்டால் கர்ப்பப்பைவாய் திறந்து சுகப்பிரசவம் ஆகும் என்பர். உடலுறவு என்பது ஓர் இணக்கத்தை மேலும் ஏற்படுத்தி நிறைமாதத்தில் கணவனின் உதவி இருப்பது பெண்ணிற்கு ஒரு தைரியம் தரலாம். ஆனால், இதனால் சுகப்பிரசவம் ஆகும் என்பது அறிவியல் அல்ல. இயற்கை அல்ல. கருப்பைவாயைத் தொந்தரவு செய்யாமல் இருத்தலே தாய்க்கும் சேய்க்கும் நல்லது. குழந்தை பிறப்பிற்கு 24 மணி நேரம் முன்பே கருப்பைவாய் திறக்கத் தொடங்கும்.

தேவையில்லாமல் அதற்கு ஓர் அழுத்தம் வரும்போது கருப்பைவாய் முன்கூட்டியே திறந்து குறைமாத பிரசவம், கர்ப்பப்பை தொற்று, குழந்தைக்குத் தொற்று என ஏற்படும். சுகப்பிரசவமா அறுவைசிகிச்சையா எனத் தீர்மானிப்பது தாயின் இடுப்பு எலும்பும் குழந்தையின் தலையும்தான். இது இரண்டும் ஒத்துப்போக வேண்டும். தாயின் இடுப்பெலும்பிற்கும் நிறைமாத உடலுறவுக்கும் தொடர்பில்லை.

இந்தச் செயல் தாயின் இடுப்பெலும்பை மாற்றாது.

நரிக்குறவர் இனப்பெண்களிடம் உள்ள மூடநம்பிக்கையோ எனக்கு வருத்தத்தைத் தருகிறது. குழந்தை பிறந்த இரண்டு முதல் மூன்று மாதங்கள் பத்தியம் இருக்க வேண்டும் என்றும் பத்தியச் சாப்பாடு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் நம்புகின்றனர். பத்தியச் சாப்பாடு என்ன என்றால் அரிசிச்சோறும் அதில் ஊற்றிக்கொள்ள புளி, காய்ந்த மிளகாய், உப்பு கலந்த கரைசல். இது மட்டுமே முதல் மூன்று மாதங்கள் தரப்படுகிறது பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு. காய்கறி, கீரை, பால், மீன், முட்டை என்று எந்தப் பொருளும் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் முதல் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு. காய்கறிகளைச் சேர்த்தால் சாமிக்குத்தம் ஆகிவிடும் என்கின்றனர். கர்ப்பத்தின்போது தேவைப்படுவதைக் காட்டிலும் தாய்ப்பால் ஊட்டும் போது 400-700 கிலோ கலோரிகள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் பாலூட்டும் தாய்மார்கள். அத்தகைய முக்கியமான தருணத்தில் புளிக்கரைசல் எப்படிச் சமச்சீர் உணவாகும்? இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின் தீட்டுக் கழிந்ததாகச் சொல்லி காய்கறி, முட்டை, கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கின்றனர். இத்தகைய பத்திய நாள்களில் குழந்தைகளை (புதிதாகப் பிறந்த பேரன் பேத்திகளை) மாமியார், மாமனார் மற்றும் மாமா உறவுமுறை உள்ளவர்கள் தொடமாட்டார்கள். பத்திய நாள்கள் முடிந்து தீட்டு கழிந்த பின்னரே குழந்தைகளைத் தொடுகின்றனர். தீட்டுக் கழியும் முன் குழந்தையைத் தூக்கினாலும் சாமிக்குத்தம் ஆகிவிடுமாம்.

குழந்தை பிறந்தவுடன் தாயின் தலைமுடியை எடுத்து தாயின் வாயில் திணித்து அந்த முடியை கடிக்கச் சொல்வது. அப்படிக் கடித்தால் சூல்வித்தகம் (placenta) உடனே வெளியேறிவிடும் என்பது மூடநம்பிக்கை.

குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியும் சூல்வித்தகமும் தானாக வெளியேற வேண்டும். அது வெளியேறாவிட்டால் வயிற்றுப் பகுதியில் மென்மையாக அழுத்தி, தேய்த்தால் வெளியேறிவிடும்.

குழந்தை பிறந்தபின் 20 நிமிடங்கள் ஆகும் இது தானாக வெளியேற, அதனால் முடியை வாயில் திணிப்பது என்பது தாய்க்கு வாந்தி, வயிற்றிப்போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அத்தகைய தவறான பழக்கவழக்கங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். இத்தகைய மூடநம்பிக்கைகள் களையப்பட வேண்டும்.

மெய் நம்பிக்கை உயர்த்து;

மூட நம்பிக்கை தகர்த்து!

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.