“வரைமுறையின்றி மரங்களை வெட்டுபவர்களை விரட்ட வாருங்கள்

கூடி வாருங்கள்

எல்லாரும் இணைந்துகொள்ளுங்கள்

காடுகளை அழிவிலிருந்து காப்பது

இப்போது நமது மதமாக மாறியிருக்கிறது”

என்ற தனது கராவாலி பாடல் மூலம் சிப்கோ இயக்கத்தில் பங்குபெறுபவர்களை அழைக்கிறார் கன்ஷ்யாம் ரதுரி சைலானி.

‘சிப்கோ’ என்ற இந்தி சொல்லுக்கு ‘ஒட்டிக்கொள்’ என்று பொருள். ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் உருவான காடுகள் பாதுகாப்பு இயக்கத்தின் பெயர் சிப்கோ. இதைப் பற்றி நாம் பள்ளிப்பாடங்களில் படித்திருக்கலாம்.

சிப்கோ இயக்கம் என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது, மரங்களைக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் பெண்களின் படம்தான்! இது 1974இல் நடந்த நிகழ்வு. ஆனால், இதற்கான விதை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தூவப்பட்டுவிட்டது என்றும், பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்த உரிமைப் போராட்டங்களின் நீட்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என்றும் Unquiet Woods என்ற நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே ஹிமாச்சலப் பிரதேசத்தின் கராவால் பகுதியின் மரங்களை வெட்டுவதை ஆங்கிலேய அதிகாரிகள் ஊக்கப்படுத்தினர். அவர்களுக்குத் தேவைப்படும் தேக்கு மரங்களை வழங்கவும் புதிய விளைநிலங்களை உருவாக்கவும் இந்தப் பகுதியில் இருந்த மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டன. இந்தியா முழுவதும் ரயில் பாதைகள் போடப்பட்டபோது, அதற்காகவும் மரம் வெட்டுவது தொடர்ந்தது. தங்களது சொந்த பொருளாதார நோக்கங்களுக்காக ஆங்கிலேயர்கள் பல சட்டங்கள், விதிமுறைகளையும் கொண்டுவந்தனர். காடுகளின் சில பகுதிகளை முற்றிலும் அரசே மேலாண்மை செய்யலாம் என்று இந்தச் சட்டங்கள் அனுமதித்தன. காடுகளையே வாழ்வாதாரமாக நம்பியிருந்த தொல்குடிகளும் கிராமப்புற மக்களும் அதனால் பாதிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் அந்தப் பகுதியில் இந்திய விடுதலைப் போராட்டங்களும் காந்தியச் சிந்தனைகளும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன. காடுகளை அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்கு தாரைவார்க்கும் சட்டங்களும் அதற்கு எதிரான அறப்போர் மனநிலையும் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தொடர்ந்தது. 1963இல் இந்திய சீனப் போருக்குப் பிறகு உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டுவதில் பல அந்நிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.

ChipkoMovement

1974இல் காந்தியவாதியும் சமூக செயற்பாட்டாளருமான சண்டி ப்ரசாத் பட் கிராமப்புற சுயாட்சிக்கான தாஷொலி க்ராம் ஸ்வராஜ்ய மண்டல் என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதை நடத்திக்கொண்டிருந்தார். கிராமப்புற மேம்பாட்டுக்காக இவர் தொடங்கிய பல குடிசைத் தொழில்களை செய்ய விடாமல் இந்தக் காடுசார் சட்டங்களும் வரையறைகளும் குறுக்கே நின்றன. குடிசைத் தொழில்களுக்கான கச்சாப் பொருள்களைக் காடுகளிலிருந்து எடுத்துக்கொள்ள அந்தக் காடுகளின் அருகில் வசிக்கும் மக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டது. காடுகளில் மரம் வெட்டிக்கொள்ள அரசிடம் அனுமதி பெற்ற காண்ட்ராக்டர்களின் முழுக் கட்டுப்பாட்டில் அந்தப் பகுதி முழுவதும் இருந்தது. காடுகளிலிருந்து வழக்கமாகக் கிடைக்கும் எந்த ஒரு வளமும் இல்லாமல் கிராமப்புற மக்கள் அவதிப்பட்டனர். ஒப்பந்ததாரர்களாகப் பார்த்து வேலை கொடுத்தால்தான் ஏதாவது ஒரு வருமானம் கிடைக்கும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் எழுந்தது, வெளியூர்களிலிருந்து தருவிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கிய ஒப்பந்ததாரர்கள், குறைவான ஊதியம் கொண்ட சிறு வேலைவாய்ப்புகளை மட்டும் கிராமத்தினருக்கு வழங்கினர்.

இன்னொருபுறம் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டதன் தாக்கம் மெதுவாக அந்தப் பகுதியில் தெரிய ஆரம்பித்திருந்தது. சுற்றுச்சூழல் சமநிலை சீர்குலைந்தது. வெள்ளப்பெருக்கு, மண் அரிப்பு, விவசாய உற்பத்தி குறைவது, நிலச்சரிவு, நிலப்புதைவு போன்ற சூழல்சார்ந்த பிரச்னைகள் அங்கு இருந்தவர்களின் வாழ்வைப் பாதிக்கத் தொடங்கின. மக்கள் கடும் நெருக்கடியில் இருந்தார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நடந்த ஒரு நிகழ்வு, கங்குபோல் வெந்துகொண்டிருந்த போராட்ட உணர்வைப் பற்றியெரிய வைத்தது.

விவசாயத்துக்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்ய பத்து மரங்களை வெட்டுவதற்கு மண்டல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்வராஜ்ய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். அதை நிராகரித்த வனத்துறை, விளையாட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சைமன் நிறுவனத்துக்கு 300 மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி கொடுத்தது!

கொதித்தெழுந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மரம் வெட்டுவதற்காக மண்டல் கிராமத்தில் வந்து இறங்கிய சைமன் பணியாளர்களை நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினரும் ஸ்வராஜ்ய சங்கத்தினரும் இணைந்து எதிர்கொண்டனர். மேளம் அடித்து கோஷங்கள் எழுப்பி பணியாளர்களை பின்வாங்க வைத்தனர். போராட்டம் வெற்றியடைந்தது. சைமன் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஸ்வராஜ்ய மண்டலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில கிராமங்களில் சிறிய அளவிலான போராட்டங்கள் நடந்தன.

ஜனவரி 1974இல், ரேணி கிராமத்தில் 2,500 மரங்களை வெட்டுவதற்கான அரசு அறிவிப்பு வந்தது. அங்கு சென்ற சண்டி ப்ரசாத் பட், இதே போன்ற ஒரு போராட்டத்தை நடத்துமாறு கிராமத்தினரிடம் பேசினார். மரங்களைக் கட்டிப்பிடித்துப் போராட்டம் நடத்தலாம் என்று ஆலோசனையும் கூறினார். 1974ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி மரங்களை வெட்டுவதற்கு ஆள்கள் வந்து இறங்கினர். நாள் பார்த்து, சரியாகத் திட்டமிட்டு அந்த ஊரின் ஆண்களை நிவாரண நிதி தொடர்பாகப் பேச வேறு ஓர் ஊருக்கு அரசு அன்று வரவழைத்திருந்தது! பெண்கள் மட்டுமே இருந்த கிராமத்தில் கருவிகளைக் கூர்தீட்டிக்கொண்டு மரம் வெட்டுபவர்கள் தயாரானார்கள். ரேணியில் இயங்கிவந்த பெண்களுக்கான மஹிளா மங்கள் தல் அமைப்பின் தலைவரான கௌரி தேவியிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது. 27 பெண்களை அழைத்துக்கொண்டு விரைந்த கௌரி தேவி, முதலில் வாக்குவாதம் செய்தார், அது பலிக்காமல் துப்பாக்கிகளையே எதிர்கொண்டார். அடுத்த நொடி பெண்கள் அனைவரும் மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர். மரம் வெட்டுபவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

வேறு ஊருக்குப் போயிருந்த ரேணியின் ஆண்கள் மறுநாள் காலை திரும்பி வரும்வரை இரவு முழுவதும் பெண்கள் மரங்களைக் காத்தனர். வெளியில் சென்றிருந்தவர்கள் வந்த உடன் ரேணியில் நடப்பது அனைவருக்கும் தெரிந்தது. இது பிற ஊர்களுக்கும் பரவியதில் அங்கிருந்தும் மக்கள் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, நான்கு நாள்கள் தொடர்ந்தது! நான்காவது நாள் ஒப்பந்ததாரர்களும் மரம் வெட்டுபவர்களும் வேறுவழியின்றி ரேணியை விட்டுக் கிளம்பினர். இந்தப் போராட்டச் செய்தி மாநிலத் தலைநகரத்தை எட்டியது, அப்போதைய முதல்வர் ஹேம்வதி நந்தன் பகுஹுணா கிராமப்புறத்தினருக்கு ஆதரவாக ஓர் உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன் பிறகு சிப்கோ இயக்கத்துக்குச் சிறகுகள் முளைத்தன எனலாம். சூழலியலாளர் சுந்தர்லால் பகுஹுணாவும் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1972 முதல் 1979 வரை 150 கிராமங்களில் எழுச்சி ஏற்பட்டது, பன்னிரண்டு பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்தன. 1980இல் உத்தரகாண்டில் உள்ள இமாலயப் பகுதிகளில் வணிக ரீதியில் மரம் வெட்ட 15 ஆண்டுகளுக்குத் தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இது சிப்கோ இயக்கத்தால் விளைந்த மிகப்பெரிய வெற்றி எனலாம்.

சரி… இப்போது சில முக்கியமான கேள்விகளை முன்வைக்கலாம், சிப்கோ இயக்கம் பெண்களின் தன்னெழுச்சியால் வந்ததா? இயற்கையைக் காப்பாற்றும் தன்னலமற்ற தாயுள்ளத்தால் பெண்கள் இப்படிச் செய்தார்களா?

இல்லை, இவை வெறும் கற்பிதங்களே. அன்றைய சூழலில் பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரிடமும் இந்தப் போராட்ட உணர்வு இருந்தது என்பதே உண்மை. ஸ்வராஜ்ய மண்டல் போன்ற காந்திய அமைப்புகளும் இந்தப் போராட்டத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தன எனலாம்.

இயற்கையைக் காப்பாற்றும் பெண்களின் தன்னலமற்ற தாயுள்ளம் என்பது சிப்கோ இயக்கத்தின்மீது ஏற்றி வைக்கப்பட்டு, திணிக்கப்பட்ட ஓர் அம்சம். உண்மையில் இது ஒரு வாழ்வாதாரப் போராட்டம். காடுகளின் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள கிராமப்புறத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வணிக ரீதியில் மட்டுமே மரங்களை அணுகிய பெருநிறுவனங்களிடம் அந்த உரிமை ஒப்படைக்கப்பட்டபோது உருவான அறப்போர் இது. வணிகத்தைப் புறந்தள்ளி சுயசார்பை முன்னிறுத்துவதற்கு மக்கள் ஒருங்கிணைத்த போராட்டம் என்றும் நாம் இதைப் பார்க்கலாம். போராட்டங்களை ஒருங்கிணைத்து மக்களோடு வீதியில் இறங்கிப் போராடியதில் இடதுசாரி செயற்பாட்டாளர்களின் பங்களிப்பும் இருந்தது என்பதால் இதை ஒரு வர்க்க ரீதியான உரிமை மீட்டெடுப்பாகவும் பார்க்கலாம்.

சிப்கோ போராட்டத்தில் பல அடுக்குகள் உண்டு. அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, “மரங்களைக் காக்க வந்த பூமித்தாய்கள்” என்ற ரீதியில் மட்டும் அதை சுருக்குவது தட்டையானது. வனம்சார் உரிமை, வளங்களைச் சுரண்டும் முதலாளிகளுக்கு எதிரான எளிய மக்களின் போராட்டம், சூழல் சீர்கேடுக்கு எதிரான மக்களின் போராட்டம், காலனிய எச்சங்களாக மக்களைச் சுரண்டிய சட்டங்களுக்கு எதிரான விடுதலையடைந்த நாட்டு மக்களின் எழுச்சி என்று இதைப் பல விதங்களில் அணுகலாம். இதில் காந்தியமும் இணைந்திருக்கிறது. மரங்களைத் தழுவுதல் என்ற போராட்ட முறையே அகிம்சைப் போராட்டங்களின் அச்சில் வார்க்கப்பட்டு உருவானதுதான். ரேணியில் நடந்த எழுச்சிக்குப் பிறகான போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட முறைகள் அகிம்சை வழியிலானவை. உண்ணாவிரதம், மரங்களில் புனிதக் கயிறுகளைக் கட்டுவது, மரம் வெட்ட வந்தவர்களின் கருவிகளை எடுத்துக்கொண்டு, “நீங்கள் மரம் வெட்டாமல் கிராமத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தால் எங்களிடமிருந்து கருவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று எழுதப்பட்ட சீட்டுகளை அங்கே வைப்பது போன்ற பல வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன. வளங்கள் மீதான உரிமை, சூழல் பாதுகாப்பு, வாழ்வாதார மீட்டெடுப்பு போன்ற பல அம்சங்களைக் கொண்டது சிப்கோ போராட்டம்.

அப்படியானால், இந்த சிப்கோ போராட்டத்தில் பெண்களின் பங்களிப்புதான் என்ன?

விடுதலைப் போராட்டக் காலகட்டம் முதலே பொதுவாழ்வில் பெண்கள் பங்கெடுப்பதும் வீதியில் இறங்கி போராடுவதும் தொடங்கிவிட்டது. உண்மையில் அந்த மனநிலையே ரேணியில் நிகழ்ந்த போராட்டத்துக்கான தூண்டுதல் எனலாம். ஆனாலும் இதில் சில பாலினம்சார் அம்சங்கள் இருக்கின்றன. ஊரில் ஆண்கள் இல்லாதபோதும் பெண்கள் மரம் வெட்டுபவர்களை எதிர்கொள்ளத் தயாரானது, துப்பாக்கிகள் நீட்டப்பட்டு மிரட்டல்கள் வந்தபோதும் பின்வாங்காமல் அடுத்த கட்டமாக மரங்களைத் தழுவ முடிவெடுத்தது ஆகியவை அந்தக் காலகட்டத்தில் பெரிய பாய்ச்சல்கள்தாம். அது மட்டுமின்றி, ஒப்பந்ததாரர்கள் நுழைந்த கிராமங்களில் எல்லாம் குடிப்பழக்கமும் அதிகரித்தது என்றும், மதுவை வாங்கி கிராமங்களுக்குள் கொண்டுவந்து தங்கள் வீட்டு ஆண்களுக்குத் தரும் ஒப்பந்தக்காரர்கள் மீது பெண்கள் அதிருப்தியில் இருந்ததாகவும் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இமாலயப் பகுதி போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலப்பரப்பில் காட்டு வளங்களும் விவசாயமும் மட்டுமே வாழ்வாதாரங்களாக விளங்கின, இது பெண்களையும் நேரடியாகப் பாதித்தது என்பதாலேயே அவர்களும் எழுச்சியில் பங்குகொண்டனர். ஆகவே பாலினம் சார்ந்த பல கோணங்கள் இதில் உண்டு.

தன்னலமற்ற பூமித்தாயே ரேணியின் பெண்கள் வடிவில் மரங்களைத் தழுவி சூழலைக் காத்தனர் என்பது போன்ற பிம்பங்களே சிப்கோவைச் சுற்றி கட்டமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் சிப்கோ குறித்த பல மேலை நாட்டுக் கட்டுரைகள், பெண்களிடம் இருக்கும் இயல்பான தாய்மை உணர்வைத் தொடர்ந்து மையப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட பிம்பத்துடன் கட்டுரையைப் படிக்கத் தொடங்கியவர்களுக்கு சிப்கோவின் பல அடுக்குகள் ஏமாற்றமளிக்கலாம். ஆனால், நாம் ஏன் அதை எதிர்பார்க்கிறோம் என்ற கேள்வி முக்கியமானது. வாழ்வாதாரத்தின் அடிப்படையில் தொடங்கி சூழலையும் பாதுகாக்கும் ஒரு போராட்டம் என்றால் என்ன குறைந்துவிடப் போகிறது? தன்னலங்கள் ஏதுமின்றி சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று போராடினால் மட்டுமே அது உயர்வானது என்று கருத முடியுமா? மக்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல் சூழலை மட்டும் பாதுகாத்து என்ன பயன்?

நாம் இதை மையப்படுத்தாமல் சிப்கோவின் பிற சாதனைகளைப் பேசவேண்டும். சூழல் போராட்டங்களின் வரலாற்றில் சிப்கோவுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. சொல்லப்போனால் எழுபதுகளிலேயே சிப்கோ இயக்கம் ஒரு முக்கியமான சூழல் பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது எனலாம். சூழல் பாதுகாப்புக்கும் மக்களின் உரிமைக்கும் இடையிலான இழுபறி இன்னமும் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. காடுகளைப் பாதுகாப்பது என்ற போர்வையில் தொல்குடிகள் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில், இப்போதுதான் சூழல் சமூகநீதி பற்றிய கருத்தாக்கங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால், சிப்கோ அதற்கான செயல்பாடுகளை அப்போதே தொடங்கிவிட்டது. “இந்தியாவின் அரசியல் விவாதங்களில் காடுகள் பற்றிய பேச்சுகளும் இடம்பெறுகின்றன என்றால் அதற்கு சிப்கோதான் காரணம்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஷேகர் பதக்.

கிராமப்புற ஏழை எளிய மக்கள் சூழலையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற உலகளாவிய பொது புத்தியையும் சிப்கோ இயக்கம் மாற்றியமைத்தது. வளங்கள் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்கான மக்களின் இயக்கம் வெற்றி பெறும் என்பதற்கு சிப்கோ இயக்கம் உலகளாவிய முன்னுதாரணமாக விளங்கியது. சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடுவது பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக இருந்த காலட்டத்தில், சூழலைப் பாதுகாப்பது ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் என்ற ஒரு புரிதலை சிப்கோ இயக்கம் ஏற்படுத்தியது. உலகளாவிய சூழல் லட்சியங்களில் சிப்கோவுக்கு இருந்த தாக்கம் அளப்பரியது. வளர்ச்சித் திட்டங்களைக் கண்மூடித்தனமாக எதிர்க்காமல், பெரிய அணைக்கட்டுமானங்கள், அறிவியல் அடிப்படையற்ற செயல்பாடுகள், சூழல் சுரண்டல், பேராசை கொண்ட நுகர்வு மற்றும் தொழில் மையங்கள் ஆகியவற்றுக்கு எதிராக சிப்கோ போர்க்கொடியை உயர்த்தியது. பெண்களின் நேரடி பங்களிப்பு, போராட்ட வடிவத்தில் இருந்த அகிம்சை அறப்போரின் தாக்கங்கள் ஆகியவை கூடுதலான சிறப்பம்சங்களே.

2021இல் உத்தரகாண்டின் ஜாக்னி கிராமத்தில் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுபோன்ற போராட்டங்களை சிப்கோவின் நீட்சியாகப் பார்க்கலாம். வளம்-வளர்ச்சி-வாழ்வாதாரம் ஆகிய மும்முனை விவாதங்கள் மீண்டும் கவனம் பெற்றுவரும் நிலையில் சிப்கோவின் வரலாற்றை நாம் மீண்டும் முன்னிறுத்துவது அவசியம்.

சூழல் அல்லது வளங்களை மேலாண்மை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றில் பெண்களின் இடம் பற்றிய விவாதங்களை இந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பேசாமல் கடக்க முடியாது. பெண்களுக்கும் சூழலுக்குமான வெளிப்படையான உறவை இதில் காணலாம். அப்படி என்ன வளம் அது?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!