தி சோஷியல் டிலம்மா என்றொரு டாகுமென்டரி படம் இருக்கிறது நெட்ஃபிளிக்ஸில். (https://www.thesocialdilemma.com/) சிலிகான் பள்ளத்தாக்கின் பிரபல நிறுவனங்களின் முன்னாள் பணியாளர்கள் தங்கள் கவலையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் என முன்னணி நிறுவனத்தில் முதன்மைப் பொறுப்புகளில் வேலை செய்தவர்கள் இவர்கள். சமூக வலைத்தளங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் அதீத மாற்றங்களை முறைப்படுத்த எச்சரிக்கை விடுக்கிறார்கள் இவர்கள்.

இந்த வலைத்தளங்கள் எல்லாம் இலவசம். நான் என்ன பணமா செலவு செய்கிறேன் என நினைத்து நாம் இவை அனைத்தையும் நேரம் காலம் இன்றி பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளருக்குச் சும்மா எதையாவது கொடுக்க அவர்கள் என்ன கடையேழு வள்ளல்கள் வம்சமா? நம் நேரத்தைதான் அவர்கள் பணமாக்குகிறார்கள். எவ்வளவு நேரம் நம்மை அவர்கள் வலைத்தளத்தில் வைத்திருக்க முடிகிறதோ அவ்வளவு லாபம். நாம் நாள்முழுக்க திறன்பேசியைக் கையில் வைத்து திரையைத் தள்ளிக்கொண்டே இருந்தால் போதும். இப்படி இலக்கின்றி திறன்பேசித் திரையைத் தடவிக்கொண்டே இருப்பதால் மனிதவளம் குன்றுவதன் அபாயத்தை விளக்குகிறது இந்தப் படம்.

வானொலி, தாெலைக்காட்சி, திறன்பேசி, இணையம் என எல்லா அறிவியல் வளர்ச்சிகளுமே அறிமுகமான காலகட்டத்தில் இப்படி விமர்சனம் வரத்தான் செய்தது. மக்கள் பயன்படுத்தும் விதம்தான் விமர்சனத்துகுரியதே தவிர, தொழில்நுட்பம் அல்ல. திறன்பேசியும் இணையமும் குக்கிராமத்தில் இருப்பவர்கூடத் தன் அறிவையும் திறனையும் வளர்க்க ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. எல்லாரும் நேர்மறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தம் திறன்களை வளர்ப்பதும் முன்னேறுவதும் மிகச் சிலர் மட்டுமே. பலர் வேலை நேரத்திலும் சமூக வலைத்தளங்கள், மெசேஜிங் செயலிகள் எனப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால் அலுவலகத்தில் படைப்புத்திறன் குறைகிறது. வீட்டில் உறவுச் சிக்கல்கள் ஏற்படுகிறது. டிஜிட்டல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயலிகள், ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் இன்பில்ட் வாய்ப்புகள் எனப் பல உள்ளன. தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய மற்றொரு தொழில்நுட்பம்தான் கைகொடுக்கிறது. இது ஒரு நகைமுரண்.

இன்பில்ட் போகஸ் மோடில் தொந்தரவு செய்ய வேண்டாம், குடும்ப நேரம், வேலை நேரம், தூங்கும் நேரம் எனப் பல வகையான தேர்வுகள் இருக்கின்றன. குடும்பநேரத்தில் வேலை தொடர்பான செயலிகள் வேலை செய்யாது. வேலை தொடர்பான நபர்களின் தொலைபேசிகளைக்கூடத் தவிர்க்க முடியும். அதே போல வேலை நேரத்தில் காணொலிகள், ஃபேஸ்புக் ஆகியவை வேலை செய்யாமல் தடுக்க முடியும்.

செட்டிங்ஸ் பகுதியில் உள்ள தேடுபொறியில் ஃபோகஸ் மோட் எனத் தட்டச்சு செய்யுங்கள். உங்கள் திறன்பேசியில் இருக்கும் ஃபோகஸ் மோடைக் காட்டும். இதில் நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளம், மெசேஜிங் செயலிகள் எல்லாம் இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்து அதை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடு விதித்துக்காெள்ளலாம். நீங்களாக உள்ளே வந்து இதை டர்ன் ஆஃப் செய்தால் ஒழிய இது மாறாது. காலையில் ஒன்பதில் இருந்து ஐந்து வரை வேலை செய்ய மட்டுமே என நீங்கள் செட் செய்தால் வேறெந்த சமூக வலைத்தளமும் திறக்காது.

வேலையில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ள நினைத்தால் டேக் எ பிரேக் வசதியைப் பயன்படுத்தலாம். ஐந்து, பத்து, பதினைந்து நிமிடங்களுக்குப் பயன்படுத்த முடியும். அல்லது ஏதேனும் ஒரே ஒரு குறிப்பிட்ட வலைத்தளம் அல்லது செயலி மட்டும்தான் உங்களை வேலை செய்ய விடாமல் ஈர்க்கிறது என்றால் அதற்கு மட்டும்கூட நேர வரையறை செய்யலாம். இமெயில், வாட்ஸ்அப் எல்லாம் வேலை தொடர்பாக அடிக்கடி பார்க்க வேண்டும். இந்த ஃபேஸ்புக் மட்டும்தான் வேலைக்குச் சம்பந்தமில்லாமல் அடிக்கடி பார்த்து நேர செலவாகிறது என்றால், ஃபேஸ்புக் மட்டும் வரையறைக்குள் கொண்டுவந்தால் போதும்.

கட்டுப்பாடுகள் மட்டுமின்றி எதை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம், எத்தனை முறை திறன்பேசியைத் திறந்து பார்க்கிறோம், போன வாரத்தைவிட இந்த வாரம் அதிகம் உபயோகித்தோமா என விரிவாகத் தரவுகள் வேண்டும் என்றால், கூகுளின் டிஜிட்டல் வெல் பீயிங் பயன்படுத்தலாம். இந்தச் செயலியிலும், ஃபோகஸ் மோட் போல நேர வரையறை செய்யவும் முடியும்.

நம் திறன்பேசி மட்டுமின்றி குழந்தைகள் திறன்பேசியைக் கட்டுப்படுத்தும் வசதியையும் கூகுள் அளிக்கிறது. ஆன்லைன் வகுப்புகள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், குழந்தைகள் திறன்பேசி கையாளுவது அதிகரித்துள்ளது. ஓரளவு வசதியுள்ள பெரும்பாலான வீடுகளில் குழந்தைக்கென்று தனியாக ஒரு திறன்பேசி வாங்கிக் கொடுக்கிறார்கள். மிக இளவயதில் திறன்பேசியைக் கையாளுவது பாதுகாப்பானதில்லை. பெற்றோரின் கண்காணிப்பு நிச்சயம் தேவை. இதற்கு, கூகுள் ஃபேமிலி லிங்க் எனும் செயலியைப் பெற்றோர்கள் திறன்பேசியில் நிறுவ வேண்டும். குழந்தைக்கு ஜிமெயில் கணக்கு ஆரம்பித்து, குழந்தையின் திறன்பேசியை பெற்றோர் திறன்பேசியுடன் இணைக்க வேண்டும். ஃபேமிலி லிங்க் செயலியில் இதற்கான வழிமுறைகள் தெளிவாக இருக்கும்.

இந்தச் செயலி உங்கள் குழந்தை யாருடன் என்ன பேசுகிறது என உளவு பார்க்கும் செயலி அல்ல. கண்காணிக்க மட்டும்தான் முடியும். உள்ளே நுழைந்து குழந்தைகளின் நடவடிக்கைகளை எல்லாம் வேவு பார்க்க முடியாது. புதிதாக ஏதேனும் செயலியைத் தரவிரக்கம் செய்தால் பெற்றோர் அனுமதி கேட்கும். தினமும் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம், வார இறுதியில் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என வரையறுக்க முடியும். குறிப்பாக ஒரே ஒரு செயலியை மட்டும் பயன்படுத்த அனுமதி மறுக்கலாம். இதையெல்லாம் பயன்படுத்தி கொடுமைப்படுத்தாமல் கணக்குப் பாடத்தை ஏழு மணிக்குள் முடித்தால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த பத்து நிமிடம் அதிகம் தருகிறேன் எனப் பேரம் பேசலாம்.

குழந்தை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்கும் தடங்காட்டியாகவும் இச்செயலி செயல்படுகிறது. குழந்தையின் வயதுக்கேற்ற தளங்கள், செயலிகள் மட்டுமே காட்டும்படி செய்யலாம். இதனால் வயதுக்கு மீறிய உள்ளடக்கத்தை குழந்தைகள் பார்ப்பதைத் தடுக்கலாம். எல்லாப் புதிய செயலிக்கும் பெற்றோர் அனுமதி வேண்டும் என்பதால் பாதுகாப்பில்லாத செயலிகள் தானாகவே தரவிறக்கம் செய்துகொள்ளுதல் தவிர்க்கப்படும். குழந்தையின் திறன்பேசியில் எவ்வளவு பேட்டரி இருக்கிறது என்பதுகூடப் பெற்றோருக்குக் காட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை இந்தக் குடும்பச் செயலியில் இணைத்துக்கொள்ள முடியும்.

குழந்தைகள் திறன்பேசி பயன்பாடு குறித்து அறிவுரை சொல்வதற்குமுன் பெரியவர்கள் திறன்பேசி செயல்பாடு கட்டுக்குள் இருக்கிறாதா எனச் சரிபார்க்க வேண்டும். நானெல்லாம் அப்படி ஒன்றும் அதிக நேரம் திறன்பேசியைப் பயன்படுத்துவதில்லை எனச் சொல்லும் பலரும் அதைப்பற்றிய தரவுகள் இல்லாமல்தான் அப்படி நினைக்கிறார்கள். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என ஒரு பழமொழி இருக்கிறது. இத்தகைய செயலியை நிறுவி எவ்வளவு நேரம் எதைப் பயன்படுத்துகிறோம் எனக் கணக்குப் பார்த்தால் அவர்கள் நம்பிக்கை உண்மையா, இல்லையா எனத் தெரிந்துவிடும். புகைக்கு அடிமையானவர் குடிக்கு அடிமையானவர் என யாராவது நான் இந்தப் பழக்கத்துக்கு அடிமை என ஒப்புக்கொள்கிறாரா? அப்படித்தான் திறன்பேசி அடிமைகளும். உடல் ஆரோக்கியம் போலவே டிஜிட்டல் ஆரோக்கியமும் அவசியமான ஒன்று என மறக்காதீர்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.