இதழ்: அவனது அந்தரங்கம்

பக்கம்: அண்ணாமலையின் அழகுக் குறிப்புகள்

அன்புள்ள அண்ணா,

என் மனைவி வீட்டிலேயே இருப்பதில்லை. எப்போதும் வேலை வேலை என்று ஏதோ ஓர் அழுத்ததிலேயே இருக்கிறார். விடுமுறை நாட்களிலும் தோழிகளுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறார். வீட்டிலிருக்கும் போதும் எப்போதும் புத்தகம், இசை என்று தனக்குள் மூழ்கிவிடுகிறார். என் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுவது எப்படி?

சம்சுதீன்,

திருச்சி

அன்புள்ள சம்சு,

வீட்டில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருந்தால் ஏன் உங்கள் மனைவி வெளியே போகப் போகிறார்? குழந்தைப் பேறு, வேலை என்று பெண்களுக்குப் பொறுப்புகள் அதிகம் இருக்கும் போது மனமகிழ்ச்சிக்காக அவர்கள் பல்வேறு வழிகளை நாடுவது இயல்பு. திருமண உறவைக் கட்டிக் காக்க ஆண்கள்தாம் மெனக்கெட வேண்டி இருக்கிறது; மனம் தளர வேண்டாம்.

உங்கள் மனைவி வீட்டுக்கு வரும்போது உம்மென்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளாமல் இன்முகத்துடன் அவரை வரவேற்று டீ கொடுத்து உபசிரியுங்கள். அழுக்கு லுங்கி, பனியன்களைக் களைந்து பளிச்சென்று ஷேவ் செய்து (அல்லது தாடியை ட்ரிம் செய்து) புத்துணர்ச்சியுடன் காட்சியளியுங்கள்.

உங்கள் உடல்வலிகளை மறந்து அவருக்குக் கழுத்து, கால், முதுகு என்று பிடித்துவிடுங்கள்; ஆயில் மசாஜ் செய்யலாம். அப்போது அவருக்குப் பிடித்த இசையை ஒலிக்க விடலாம். உங்களுக்கு நடனம் வருமென்றால் ஆடிப்பாடி மகிழ்விக்கலாம்.

சமையலைச் சீக்கிரம் முடித்து விட்டு மனைவியை மகிழ்விக்க இப்படியெல்லாம் நேரம் ஒதுக்குங்கள்.

அவரது தோழிகளுடன் நேரம் செலவிடுவதைக் குத்திக் காட்டாமல் புன்சிரிப்புடன் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மீது அவருக்குப் பரிவும் அன்பும் தானாக வரும். பொறுமை முக்கியம்.

அன்புள்ள அண்ணா,

நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறேன். என் மாமனார், மச்சினர் தொல்லை தாங்க முடியவில்லை. மனைவி என் மீது பிரியமாக இருந்தாலும் என்னைப் பற்றிக் குறைசொல்லி எங்களுக்கிடையே பிரச்னை உண்டாக்குவதே அவர்கள் வேலையாக இருக்கிறது.

தனிக்குடித்தனம் போய்விடலாம் என்று பேச்செடுக்கும் போதெல்லாம் என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வருகிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. என் அப்பா அம்மாவைப் பார்த்துப் பல மாதங்களாகின்றன.

குமார்

பெங்களூரு

அன்புள்ள குமார்,

கூட்டுக் குடும்பம் என்பது நமது இந்தியக் கலாசாரத்தின் பெருமை. அரிதாகி வரும் இந்த அருமையான குடும்ப அமைப்பில் வாழ்வதற்காக முதலில் பெருமைகொள்ளுங்கள்.

உங்கள் சுயநலத்துக்காக, குருவிக் கூட்டைக் கலைப்பது போல் இவ்வமைப்பைச் சிதறடிப்பது தகாத செயல். மனைவியின் குடும்பத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்து அன்பு செலுத்துவது தான் ஓர் ஆணுக்கு அழகு. மேலும் நாளை உங்கள் குழந்தைகள் பிறக்கும் போது அவர்களை அன்புடன் வளர்க்க மனைவியின் உற்றார் உறவினர்தானே உதவப் போகிறார்கள்?

அடிக்கடி உங்கள் பெற்றோர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று நச்சரிக்காமல் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்கள் அன்பும் பொறுமையும் கண்டு உங்கள் மனைவியே அழைத்துச் செல்வார்.

அன்புள்ள அண்ணா,

எனக்குக் கண்களைச் சுற்றிக் கருவளையம் அதிகமாக இருக்கிறது. வீட்டிலேயே செய்துகொள்ள ஒரு தீர்வு வேண்டும்.

சிபி, 28 வயது

மேலூர்

அன்புள்ள சிபி,

கருவளையங்கள் சரியான தூக்கமில்லாததால் ஏற்படுகின்றன. உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா? இளம் கணவர்களுக்கும் தந்தைமார்களுக்கும் தூக்கம் குறைவது இயல்புதான். நேரம் கிடைக்கும் போது நிறைய ஓய்வு எடுக்க வேண்டும். சத்தான காய்கறிகள் சமைத்துச் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய் ஜூஸ் கொண்டு தினமும் இரவு படுக்கப் போகும்முன் முகத்தைக் கழுவி வர இரண்டு வாரங்களில் நல்ல பலன் தெரியும்.

#ஆண்கள்_நலம்

(தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.