அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் (Intellectual Property Office) ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய காப்புரிமைப் பதிவுகள் பற்றிய அறிக்கையை வெளியிடும். 2017ஆம் ஆண்டுக்கான தனி காப்புரிமைப் பட்டயங்கள் (Individual Patents) பற்றிய அறிக்கையில், மொத்தமாகப் பதிவான பட்டயங்களில் 12.7% மட்டுமே பெண் கண்டுபிடிப்பாளர்களுடையது என்று தெரிய வந்தது. இது உலகளாவிய விழுக்காடு மட்டுமே. ஒரு சில நாடுகளில் பெண் கண்டுபிடிப்பாளர்களின் காப்புரிமை விழுக்காடு பத்துக்கும் குறைவாக இருந்தது.இதுதான் உண்மை நிலைமையா என்றால் ‘இல்லை’ என்று மறுக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2018ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த் குழுவினர் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்கள். அதில், 27 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்கள், விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் முறை, அங்கீகாரம் ஆகியவை பற்றி ஆராய்ந்ததில், சில உண்மைகளைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்தார்கள். காப்புரிமைக்காக விண்ணப்பித்தவர் பெண்ணாக இருக்கும்பட்சத்தில், விண்ணப்பம் நிராகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பது கண்டறியப்பட்டது. பெண்கள் விண்ணப்பதாரர்களாக இருக்கும்போது, நிராகரிப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்வதும் குறைவாகவே நடக்கிறதாம். இது மட்டுமில்லாமல், பெண்கள் கண்டுபிடிப்பாளர்களாக இருக்கும்போது, அதற்குக் காப்புரிமை பெற்று வணிகரீதியாக லாபம் பார்ப்பதில் அவர்களுக்குப் பல தடைகள் இருப்பதும் நடைமுறை சிக்கல்கள் நிலவுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இன்றைய நிலையே இப்படித்தான் இருக்கிறது என்றால், 18, 19ஆம் நூற்றாண்டுகளை நினைத்துப் பாருங்கள். திருமணமான பெண்களின் பெயரில் சொத்துகள் இருக்கக் கூடாது, அவர்களுக்குத் தனி வருமானம் இருக்கக் கூடாது, அவர்கள் கண்டுபிடித்த எந்தப் பொருளில் இருந்தும் வருமானத்தை அவர்கள் பெறக் கூடாது என்று சட்டங்கள் இருந்தன. சில நாடுகளில் பெண்களுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு விதிமுறையும் இருந்தது. காப்புரிமையை வேறு யாராவது திருடி தங்களது பெயரில் பயன்படுத்திக்கொண்டால், அதை எதிர்த்து வழக்காடும் உரிமை பெண்களுக்குத் தரப்படவில்லை. சும்மா ஒரு காப்புரிமை பேப்பரை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளலாம். திடீரென்று வேறு யாராவது அதன்மூலம் பணம் சம்பாதித்தால் எதுவும் செய்ய முடியாது. வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் பெண்கள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களை முதன்முதலில் உருவாக்கியவர்கள் பெண் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள்தாம்.

சாதாரண வேலை செய்துகொண்டிருந்த ஆலிஸ் பார்க்கர் உருவாக்கிய ஒரு கண்டுபிடிப்பு, குளிர் நாடுகளின் வாழ்க்கைத் தரத்தையே மொத்தமாக உயர்த்தியது. மேலை நாடுகளில், குளிர் காலங்களின்போது வீட்டுக்குள்ளேயே அவர்கள் விறகை வைத்து எரிப்பதைப் படங்களில் பார்த்திருப்போம். இப்படிச் செய்வதில் பல பிரச்னைகள் உண்டு. அதில் முக்கியமானது, வெப்பம் அந்த இடத்தில் மட்டும் போதுமான அளவில் இருக்கும். நெருப்பிலிருந்து தூரமாகப் போகப் போக, குளிர் அதிகமாகும். இந்தப் பிரச்னையை உணர்ந்த ஆலிஸ் பார்க்கர், வாயுவால் இயங்கக்கூடிய ஓர் உலையை (Gas Furnace) உருவாக்கினார். எல்லா அறைகளிலும் எல்லா மூலை முடுக்குகளிலும் இதன் வெப்பம் சென்று சேர்வதற்காக, அந்த உலையுடன் சில குழாய்களையும் இணைத்து முழுமையான ஒரு வெப்பமூட்டியை வடிவமைத்தார். இதில் ஆபத்து குறைவு, எரிபொருள் பயன்பாடும் குறைவு. எல்லா இடமும் ஒரே மாதிரி வெப்பத்திலும் பேணப்படும். இன்றுவரை மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் Thermostat Heating அமைப்புகளுக்கு ஆலிஸ் பார்க்கரின் கண்டுபிடிப்புதான் முன்னோடி.

பெரிய சீமாட்டியான ஜோசபின் கோச்ரேன், தனது வீட்டுப் பணியாளர்கள் தட்டுகளைக் கழுவத் தெரியாமல் கழுவுவதைப் பார்த்து நொந்துபோனார். நிறைய யோசித்து 1886ஆம் ஆண்டில் ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை (Dishwashing machine) உருவாக்கினார். உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கண்டுபிடிப்பை வணிகமயமாக்கவும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். இதற்கான முறையான காப்புரிமையைப் பெற்றார். 1893இல் நடந்த ஓர் உலகக் கண்காட்சியில் பங்கேற்ற எல்லா கேட்டரிங் நிறுவனங்களும் தன்னுடைய இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதை நடத்திக் காட்டினார். “பெரிய கண்காட்சிக்கு உணவு சமைக்கும் நிறுவனங்களே இந்த இயந்திரத்தைத்தான் பயன்படுத்துகின்றன என்றால், இது எவ்வளவு நன்றாக இருக்க வேண்டும்” என்று எல்லாரும் பேசினார்கள். தனியாக ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி இயந்திரங்களைத் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார். இறக்கும்வரை தொழில் முனைவோராக இருந்து தனது கண்டுபிடிப்பை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டுபோய்ச் சேர்த்தார்.

1912இல் பிறந்த மேரி பியாட்ரிஸ் டேவிட்சன் கென்னர் ஆப்பிரிக்க அமெரிக்கர். ஐந்து காப்புரிமைப் பட்டயங்களைப் பெற்ற சிறந்த கண்டுபிடிப்பாளர் இவர். ஆனாலும் இனவெறி மிகுந்திருந்த சமூகத்தில் தனது கண்டுபிடிப்புகளுக்கான பொது அங்கீகாரத்தைப் பெற மிகவும் போராடினார். சானிட்டரி நாப்கின்களை அணிந்துகொள்வதற்கான பெல்ட், தானாகவே எண்ணெய் எடுத்துக்கொண்டு உராய்வு இல்லாமல் இயங்கும் கதவுகள், கழிப்பறை தாள்களைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கான ஓர் அமைப்பு போன்ற பலவற்றைக் கண்டுபிடித்தார். இவரது சானிட்டரி பெல்ட் கண்டுபிடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. இவருடன் இணைந்து செயல்படுவதில் முதலில் ஆர்வம் காட்டிய நிறுவனங்கள், இவர் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதால் பின்வாங்கின. வீடு வரைக்கும் வந்து, கதவைத் தட்டி, தனது நிறத்தைப் பார்த்துவிட்டு, அந்த நிறுவன அதிகாரிகள் திரும்பிப் போனதாக வருத்தத்துடன் பதிவு செய்கிறார் மேரி.

ஆலிவ் டென்னிஸ் கண்டுபிடிப்பாளர், அமெரிக்க ரயில்வே பொறியாளர் கூட்டமைப்பின் முதல் பெண் உறுப்பினர். எளிதில் ஈரமாகாத ரயில் இருக்கைகள், வெளியிலிருந்து ரயில் பயணிகளுக்குக் காற்று வருவதற்கான அமைப்பு, ரயில்வே கழிப்பறைகளில் சோப்பு போன்ற பலவற்றை அறிமுகப்படுத்தினார். பல ஆயிரம் மைல்கள் ரயிலில் பயணித்து, தனது செயல்பாடுகள் பயணிகளுக்குச் சௌகரியமாக இருக்கின்றவா என்றும் உறுதி செய்துகொண்டார்.

மரியா பீஸ்லியின் காலகட்டத்தில் (1897-1913), கப்பல்களில் இருந்த உயிர்காப்புப் படகுகளின் (Lifeboats) நிலை படுமோசமாக இருந்தது. நேரடியாகப் படகுகளையே கப்பலில் ஏற்றிவிடுவார்கள். கப்பலில் இருந்த இடப்பற்றாக்குறையால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் படகுகளை ஏற்ற முடிந்தது. இந்தப் படகுகள் மரத்தாலானவை என்பதால், புயலில் கப்பல் பாதிக்கப்படும்போது படகுகளும் உடைந்துவிடும். ஆகவே பயணிகள் அனைவரையும் காப்பாற்ற முடியாத சூழல் நிலவியது. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தார் மரியா. காற்றை நிரப்பக்கூடிய (inflatable) படகுகளை வடிவமைத்தார். அவற்றைக் கப்பல்களின் பக்கவாட்டில் கட்டும் முறையையும் அறிமுகப்படுத்தினார். இவற்றைச் சுருட்டி மடித்து வைத்துக்கொள்ளலாம் என்பதாலும், புயலின்போது இவை உடையாது என்பதாலும் வேண்டிய எண்ணிக்கையில் இவற்றைக் கப்பலில் ஏற்றிச் செல்லலாம். சில படகுகளைப் பக்கவாட்டில் வைத்தால், கப்பல் எதிலாவது இடிக்கும்போது அந்த விசையைத் தாங்கவும் படகுகள் உதவின. இதைப் பல கப்பல்களில் பயன்படுத்தினார்கள். இது மட்டுமல்ல, பீப்பாய்களை வடிவமைக்கும் இயந்திரங்கள், காலணிகளின் மேல் பகுதியை ஒட்டும் இயந்திரம், ரொட்டி தயாரிக்கும் இயந்திரம், நீராவி இயந்திரம், ரயில் தடம்புரளாமல் தடுக்கும் ஓர் அமைப்பு எனப் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கினார் மரியா.

இன்றுவரை நாம் புல்லட் ப்ரூஃப் உடைகளில் பயன்படுத்தும் கெவ்லார் என்கிற செயற்கை இழையைக் கண்டுபிடித்தவர் ஸ்டெஃபானி க்வோலெக் என்கிற பெண். தொண்டை அடைப்பான் (Diphtheria) என்கிற ஆபத்தான நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியதும் போலியோ தடுப்பூசிக்கான அடிப்படைக் கூறுகளை உருவாக்கியதும் ஒரு பெண்தான். அவரது பெயர் ரூபி ஹிரோஸ். கண் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் லேசர் அறுவை சிகிச்சையை வடிவமைத்தவர் பட்ரிசியா பாத். மீன்களை வாழிடத்திலிருந்து எடுத்து வீட்டில் வைத்து வளர்க்கும் கண்ணாடித் தொட்டிகளை முதன்முதலில் வடிவமைத்தது ஜீன் வில்ப்ரு பவர் என்கிற பெண். பில்டர் தாள்களை வைத்து காப்பியை வடிகட்டும் இயந்திரத்தை முதலில் உருவாக்கியவர் மெலிட்டா பெண்ட்ஸ் என்கிற கண்டுபிடிப்பாளர். பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய டயாபரை முதன்முதலில் வடிவமைத்தது மரியன் டோனோவன் என்ற பெண்மணி. 1903இல் ஒரு காப்புரிமைப் பட்டயம் வழங்கப்பட்டது. காரில் இருக்கும் Windshield Wiperகான காப்புரிமை அது. இதை உருவாக்கியது மேரி ஆண்டர்சன். மழைக்காலங்களில் கார் கண்ணாடியைத் துடைக்க வைப்பரை ஆன் செய்யும்போதெல்லாம் நாம் மேரி ஆண்டர்சனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

மடிக்கக்கூடிய கட்டிலை உருவாக்கியவர் சாரா குட். தீ விபத்தின்போது கட்டிடத்தின் வெளியில் சென்று இறங்கித் தப்பிக்கும் Fire Escape வகை படிக்கட்டுகளைப் பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்போம். இதை உருவாக்கியது அன்னா கானெலி. ஐஸ்க்ரீம் மேக்கர் கருவியை முதன்முதலில் உருவாக்கியது நான்சி ஜான்சன். ஸ்டெம் செல் ஆராய்ச்சியிலும் புற்றுநோய் ஆராய்ச்சியிலும் இன்றுவரை பயன்படுத்தப்படும் பிரித்தெடுக்கும் முறையை வடிவமைத்தது ஆன் சுகமாட்டொ. எண்களாலேயே இருந்த கம்ப்யூட்டர் மொழிகளை (Numerical Computer Languages) மாற்றியமைத்து ஆங்கிலத்தில் கம்ப்யூட்டர் மொழியை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியது க்ரேஸ் ஹாப்பர். இன்று பல இடங்களில் பயன்படுத்தப்படும் COBOL மொழி அவரது கண்டுபிடிப்புதான். 1966ஆம் ஆண்டு மேரி வான் ப்ரிட்டன் ப்ரவுன் முதல் Home Security System ஒன்றை உருவாக்கினார். கேமராக்கள், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளும் அமைப்பு என முழுப் பாதுகாப்புக்கான கட்டமைப்பு அது. இப்படிப் பெண்களின் கண்டுபிடிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கரெஸ் க்ராஸ்பி என்கிற சீமாட்டி, பெண்கள் அணியும் பிராவை முதன்முதலில் வடிவமைத்துத் தைத்தார். இவர் பிராவைக் கண்டறிந்த கதை சுவாரசியமானது. அந்தக் காலத்தில் பெண்கள் அணிந்த கார்செட் என்கிற உடையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், இல்லையா? அது இடுப்பை இறுகப் பிடிக்கும் என்பதால், பெண்ணின் வடிவம் அழகாகத் தெரியும், முதுகும் வளையாது. அது உடை அல்ல, சிறை. எலும்புகள் அல்லது பிரம்பால் செய்யப்பட்ட இறுக்கமான ஓர் அமைப்பு அது. மூச்சை அடக்கிக்கொண்டு தாங்க முடியாத அசௌகரியத்துடன் அந்த கார்செட் உடையைப் பெண்கள் அணிந்துகொண்டிருந்தார்கள். கரெஸுக்கு அன்று ஏதோ பார்ட்டிக்குச் செல்ல வேண்டியிருந்தது.கார்செட்டை அணிந்து பார்த்த கரெஸ் உடனடியாகச் சிரமப்பட்டார். கார்செட்டின் கம்பி அவரை உள்ளிருந்து குத்தியது. பணிப்பெண்ணிடம் சில கைக்குட்டைகள், ரிப்பன்கள், ஊசி, நூல் ஆகியவற்றை கொண்டுவரச் சொன்னார். நொடிப்பொழுதில் ஓர் உள்ளாடையை உருவக்கினார். பார்ட்டியில் இவர் இயல்பாக நடனமாடுவதைக் கண்ட தோழிகள் இவரது உள்ளாடை பற்றி விசாரித்தார்கள், தனது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த கரெஸ் காப்புரிமைப் பட்டயத்துக்கு விண்ணப்பித்தார். அவருக்குக் காப்புரிமையும் கிடைத்தது.

எல்லாருக்கும் எளிதில் அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை, இல்லையா? சில பெண்கள் காப்புரிமையைப் பெறவே போராடினார்கள். தொழிற்சாலைப் பணியாளரான மார்கரெட் நைட் கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அடிப்பாகம் தட்டையான காகிதத் தாள்களை உருவாக்கும் இயந்திரத்தை 1870களில் வடிவமைத்தார். அதை முதலில் மரத்தில் உருவாக்கினார். காப்புரிமைப் பட்டய விண்ணப்பத்துக்கு இரும்பாலான மாதிரி வேண்டும் என்பதால் அந்த வேலையை ஒரு பணிமனைக்குக் கொடுத்திருந்தார். பணிமனைக்குத் தற்செயலாக வந்த சார்லஸ் அனான் என்கிற இயந்திரவியலாளர், இவரது ஐடியாவைத் திருடி விண்ணப்பம் அனுப்பி முதலில் காப்புரிமை பெற்றுவிட்டார். இதை அறிந்த மார்கரெட், தைரியமாக சார்லஸ் மீது வழக்குத் தொடர்ந்தார். “ஒரு பெண்ணால் இத்தனை சிக்கலான இயந்திரத்தின் இயங்கியலைப் புரிந்துகொள்ளவே முடியாது, ஆகவே மார்கரெட் இதை உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை” என்று சார்லஸ் வாதிட்டார். மனம் தளராத மார்கரெட், தன்னிடம் இருந்த வரைபடங்கள், குறிப்புகள், முந்தைய மாதிரிகள் எல்லாவற்றையும் சமர்பித்தார். தனது கண்டுபிடிப்பை நேரில் பார்த்தவர்களையும் வரவழைத்து சாட்சி சொல்லச் சொன்னார். வழக்காடுவதற்காக நிறைய பணத்தைச் செலவு செய்தார். இறுதியில் அவர் தரப்பு வெற்றி பெற்றது, அவருக்குக் காப்புரிமைப் பட்டயம் வழங்கப்பட்டது.

பெண்கள் எத்தனையோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினாலும், சமூகத் தடைகள், அவர்கள் சரியான முறையில் கல்விபெற்று கண்டுபிடிப்பை மேம்படுத்துவதற்கான தடை, விண்ணப்பிக்கும் முறையில் உள்ள பாரபட்சம் எனப் பல இடர்ப்பாடுகள் இருக்கின்றன. இதில் பலவும் இன்றும் தொடர்கின்றன. அறிவியல் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் மொத்த கண்டுபிடிப்பாளர்களில் 12% மட்டுமே பெண்கள் என்பது வருத்தமளிக்கிறது.

கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்துவது அத்தனை எளிதல்ல, மூளை எல்லாப் பக்கத்திலும் நம்மை இழுக்கும், இரவில்கூட விழித்திருந்து சறுக்கல்களைச் சரிசெய்யச் சொல்லும், பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை பித்துப் பிடிக்கவைக்கும், கேள்வியை வைத்துக்கொண்டு பதில் கிடைக்கும்வரை அலைந்து திரியச் சொல்லும். இவை எல்லாம் பெண்களுக்கு எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. ஒரு சிக்கலான பொறியியல் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிட்டது என நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்து ஓடி இயந்திரத்தைச் சீரமைக்கும் பெண்ணை நம்மால் கற்பனை செய்ய முடிகிறதா? வீட்டில் இருப்பவர்களை, அவர்கள் பேசுவதைக்கூடக் கவனிக்காமல், “இந்த இயந்திரத்துக்கு எந்தப் பக்கம் கைப்பிடி இருக்கவேண்டும்” என்று மேலே பார்த்து யோசிக்கும் பெண்ணை நம்மால் மனதில் உருவாக்கிப் பார்க்க முடியுமா? ஏன் முடிவதில்லை? இது பெண்களுக்கு ஏன் சாத்தியப்படுவதில்லை? இதற்கான பதில் கிடைத்துவிட்டால் பெண் கண்டுபிடிப்பாளர்கள் ஏன் குறைவாக இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கும் பதில் கிடைக்கும்.

மேலே நாம் பார்த்த பல கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகள் கல்வியால் நிகழ்ந்தவை அல்ல, கல்வி இல்லாமலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம். ஆனால், சில அறிவியல் புலங்களில் கால்பதிக்கக் கல்வி அவசியம் தேவைப்படும். அந்தக் கல்வியே பல சூழ்நிலைகளில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது, கல்வி மறுக்கப்பட்ட பின்னரும் பலர் விஞ்ஞானிகளாக உயர்ந்திருக்கிறார்கள். அந்த வரலாறு என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!