கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு கணினி இருந்தது. அங்கிருந்து வடக்கே 400 மைல் தொலைவில் உள்ள ஸ்டான்ஃபோர் ஆய்வு மையத்தில் மற்றொரு கணினி. இரண்டு தரப்பிலும் இருக்கும் கணினி வல்லுநர்கள் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்தார்கள். இந்த இரண்டு இடங்களில் இருக்கும் கணினிகளுக்கு இடையே தகவல் பறிமாறிக்கொள்ளும் முயற்சி அது. இங்கிருந்து எல் எனும் ஆங்கில எழுத்தை அனுப்பி, அங்கே அது வந்து விட்டதா எனத் தொலைபேசியில் கேட்கிறார்கள். ஆம் என்ற பதில் கிடைக்கிறது. அடுத்து ஓ என்ற ஆங்கில எழுத்து. அதுவும் இந்தக் கணினிக்கு வந்து சேர்ந்துவிட்டது. மூன்றாவது எழுத்து வருவதற்குள் கணினித் தொடர்பு அறுந்துபோனது. லாக்இன் என்ற வார்த்தைதான் அவர்கள் அனுப்ப நினைத்தது. முதல் இரண்டு எழுத்துகளான எல்ஓ மட்டும் வெற்றிகரமாக வந்து சேர்ந்தது. இதுதான் இணையத்தின் தொடக்கம். லியானர்ட் கிலைன்ராக் (leonard kleinrock) மேற்பார்வையில் 1969 ஆம் ஆண்டு நடந்தது இந்த முதல் முயற்சி.

இணையம் ஒரு நாளில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. யுரேகா எனக் கூவிக் கொண்டு ஓடும் அளவுக்குத் தனி நபர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆரம்பத்தில் இந்த யோசனை ரஷ்ய அமெரிக்கப் பனிப்போர் காலத்தில் உருவானது. கணினிகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்தால் ஒரு கணினியின் செயல்பாடு அழிக்கபட்டாலும் மற்றாெரு கணினியின் மூலம் தகவல்களைக் காப்பாற்ற முடியும். இதைச் சாத்தியமாக்கப் பல ஆய்வுகள் நடந்தன. அப்போது ஆர்ப்பாநெட் (Advanced Research Projects Agency Network) மூலம் தகவல்களைப் பொட்டலங்களாக (packet switching) வகுத்து ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்புவார்கள். அங்கே இருக்கும் கணினி அந்தப் பொட்டலங்களை திரும்ப தகவல்களாக மாற்றித் தரும். இப்படித் தகவல் பொட்டலங்கள் எல்லாக் கணினியிலும் புரிந்து கொள்ளப்பட பொதுவான விதிகளை உருவாக்கி டிசிபி/ஐபி (tcp/ip) எனப் பெயரிட்டவர்கள் பாப் கான் மற்றும் வின்ட் செர்ஃப். ட்ரான்ஸ்பர் கன்ட்ரோல் ப்ரோட்டாகால் / இன்டர்நெட் ப்ரோட்டாகால் என்பதை வின்ட் செர்ஃப் இப்படி விளக்குகிறார்.

வின்ட் செர்ஃப்

“ஒரு புத்தகத்தை தபாலில் அனுப்புவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தபால் முறையில் புத்தகமாக அன்றி அஞ்சல் அட்டைகளை மட்டுமே அனுப்ப முடியும். எனவே புத்தகத்தை பக்கம் பக்கமாகக் கிழிந்து அதை அஞ்சல் அட்டையில் ஒட்டி சென்று சேர வேண்டிய இடத்துக்கு அனுப்புகிறோம். ஆனால், அனுப்பும் வரிசையில் அது சென்று சேராது. எல்லாப் பக்கமும் வந்துவிட்டதா எனவும் தெரியாது. எனவே ஒவ்வொரு பக்க எண்ணையும் அஞ்சல் அட்டையில் குறிப்பிட்டு மொத்தம் இத்தனை என்பதையும் பெறுபவருக்குத் தெரிவிக்கிறோம். இந்தப் புத்தகப் பக்கங்கள் நடுவில் தொலைந்து விட்டால் என்ன செய்வது என நாமும் ஒரு நகல் இங்கே வைத்திருப்போம். பெற்றுக்கொள்ளும் இடத்தில் இருப்பவர் எல்லாம் கிடைத்துவிட்டது என்பதை ஓர் அஞ்சல் அட்டை அனுப்பி உறுதி செய்யும் வரை இந்தப் பக்கம் ஒட்டிய அஞ்சல் அட்டைகளை நாம் இங்கிருந்து அனுப்பிக் கொண்டே இருப்போம்.” இந்தச் செயல்பாடுதான் டிசிபி/ஐபி எனப்படுகிறது.

இந்தத் தகவல் பறிமாற்றத்தின் அடுத்த முக்கியக் கட்டம் கணினிகளுக்குப் பெயர் வைப்பது. 80களில் கணினிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது ஒவ்வொரு கணினிக்கும் ஐபி முகவரியைக் கையாள்வது சிரமமாக இருந்தது. இதற்காக அறிமுகமானதுதான் டிஎன்எஸ் எனச் சுருக்கமாக அறியப்படும் டொமைன் நேம் சிஸ்டம். பால் மாக்பட்ரிஸ் மற்றும் ஜான் பாஸ்டல் உருவாக்கிய இந்தத் தீர்வு பின்னாளில் வேர்ல்ட் வைட் வெப் உருவாகக் காரணமாக அமைந்தது. இப்படி ஐபி முகவரிகளில் பணிபுரியும் தனி நபர் பயனர்களைக் குறிக்க பெயர்@கணினி என்பதை முதலில் பயன்படுத்தியவர் ரே டாமில்ஸன். வெகுகாலம் இவரே மின் அஞ்சலைக் கண்டுபிடித்தவர் என அறியப்பட்டார்.

சிவா அய்யாத்துரை

இங்கே ஒரு கிளைக் கதை இருக்கிறது. இந்தியராகவும் தமிழராகவும் நாம் இதை அறிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் மின் அஞ்சலுக்குக் காப்புரிமை வைத்திருப்பவர் அமெரிக்கத் தமிழரான சிவா அய்யாத்துரை. மும்பையில் பிறந்து இளவயதிலேயே அமெரிக்கா சென்றவர். எம்ஐடியில் படித்தவர். தன்னுடைய 14 வயதில் நியுஜெர்ஸி பல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தார். அங்கே உள்ள அலுவலக நடைமுறையைப் பின்பற்றி மின்அஞ்சல் கணினி நிரலை எழுதியிருக்கிறார். தற்போது நாம் உபயோகப்படுத்தும் அனுப்புநர், பெறுநர், இன்பாக்ஸ், சிசி உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கி எழுதப்பட்டது அந்தக் கணினி நிரல். எனவே நான்தான் ஈமெயிலைக் கண்டுபிடித்தேன் என உரிமை கோருகிறார். சில வழக்குகள் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக்கொண்டார்கள். தனக்குப் பணம் செட்டில்மெண்ட் செய்யப்பட்டதே வெற்றி என்கிறார் சிவா. இமெயில் என்ற பெயரில் காப்புரிமை வைத்திருப்பதாலேயே இவர் கண்டுபிடித்ததாக ஆகிவிடாது என மறுப்பவர்களும் இருக்கிறார்கள். எனினும் 14 வயதுச் சிறுவன் எழுதிய 50000 வரி கணினிநிரல் அவர் திறமைக்குச் சான்றாக இருக்கிறது. அந்த புத்திசாலித்தனத்தை யாரும் மறுக்க முடியாது.

டிம் பெர்னர்ஸ் லீ

இப்படி அமெரிக்க ராணுவத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கண்டுபிடிப்பு மக்கள் கைகளுக்கு வந்தது 90களில். இதுவரை நடந்தது எல்லாமே பாதை அமைக்கும் வேலைகள்தாம். இந்தப் பாதையில் செல்வதற்கான கார்கள்தான் வலைத்தளங்கள். 89இல் இங்கிலாந்தைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ தகவல்களின் வலை (web of information) எனும் யோசனையை முன்வைத்தார். ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் லேங்குவேஜில் (HTML) எழுதப்பட்ட இவருடைய ஆவணங்கள் ஹைப்பர்லிங்க் மூலம் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்துடன் இணைந்திருந்தது. இந்தப் பக்கங்களை அறிய யுஆர்எல் (URL – Uniform Resource Locator) பயன்படுத்தப்பட்டது. இதை எளிமையாகப் படிக்க ஒரு ப்ரவுஸரையும் உருவாக்கினார். இந்த ப்ரஸருக்கு அவர் வைத்த பெயர்தான் வேர்ல்ட்வைட்வெப் (WorldWideWeb).

இந்த ப்ரவுஸர் மேம்படுத்தப்பட்ட கணினிகளில் மட்டுமே வேலை செய்யும் விதத்தில் இருந்தது. டிம்மின் மாணவரான நிக்காலோ இந்த ப்ரவுஸரைச் சற்றே எளிமைப்படுத்தினார். 1993இல் அமெரிக்க மாணவரான மார்க் ஆண்டர்சன் மொசாய்க் எனும் ப்ரவுஸரை அறிமுகப்படுத்தினார். இதை எளிதாகத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ முடியும். எழுத்து, படம் இரண்டையும் ஒன்றாக ஒரே பக்கத்தில் பார்க்கவும் முடியும். இது அதிகப் பயனர்களை இணையத்துக்கு இழுத்து வந்தது. தொழில் முனைவர் ஜிம் க்ளார்க் உடன் இணைந்து நெட்ஸ்கேப் நேவிகேட்டரை அறிமுகப்படுத்தினார் மார்க். 1995 வாக்கில் இந்த நெட்ஸ்கேப் நேவிகேட்டர் ப்ரவுஸர் ஒரு கோடிப் பயனர்களைக் கொண்டிருந்தது.

பிசி எனப்படும் சொந்தக் கணினி விற்பனையும் அதிகரித்திருந்த நேரம் அது. 20ஆம் நூற்றாண்டின் கடைசியில் டாட்காம் பபுள் எனப்படும் மின் வணிகத் தளங்களும் பெருகின. தேடுபொறிகள் பிரபலமானதும் அப்போதுதான். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி வலைத்தளங்களை உருவாக்கி தகவல்களை பொதுவில் வைத்தனர். வணிகம் தாண்டி தனிமனித தகவல்கள் பகிரும் சமூக வலைத்தளங்கள் அடுத்த பாய்ச்சல். 1997இல் சிக்ஸ்டிகிரீஸ் என்கிற பெயரில் முதல் சமூக வலைத்தளம் அறிமுகமானது. உலகில் எந்த மூலையில் இருக்கும் இரண்டு நபர்களையும் நண்பருக்கு நண்பர் என்கிற தொடர்பின் மூலம் அறிமுகமாக ஆறு நபர்கள் போதும் என ஒரு கோட்பாடு இருக்கிறது. அதன் பெயரில்தான் இந்தத் தளம் தொடங்கப்பட்டது. ஹாட்டா இல்லையா எனப் புகைப்படத்துக்கு மதிப்பெண் போடுவது, ஃப்ரெண்ட்ஸ்டர், மைஸ்பேஸ் என ஆரம்ப காலத்தில் இருந்த தளங்கள் யாவையும்விட அதிகம் பிரபலமானது ஃபேஸ்புக். கூகுளும் ஆர்குட், கூகுள் ப்ளஸ் என முயன்று தோற்றது. இருந்தாலும் ப்ளாகர், யூட்யூப் வடிவில் இன்னும் களத்தில் இருக்கிறார்கள். இரண்டு வரி எழுத ட்விட்டர், புகைப்படத்துக்கு இன்ஸ்டாகிராம், கட்டுரைகளுக்கு மீடியம் என விதவிதமான வடிவங்களில் சமூக வலைத்தளங்கள் இன்று இருக்கின்றன. இணையத்தின் மூலம் அனைவரும் இணைந்திருக்க காரணங்களை இவை புதிது புதிதாக ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

கணினியில் உள்ள பிழைகளை பக் (bug) என்ற வார்த்தையால் குறிப்பார்கள். முதலில் இப்படித் தொழில்நுட்பப் பிரச்னைகளை பக் எனத் தன் கடிதங்களில் குறிப்பிட்டவர் எடிசன். எனினும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் இன்சைட் ஜோக்காகத்தான் இது இருந்தது. 1947இல் தங்கள் குழுவுடன் சேர்ந்து வேலை செய்யாமல் போன மார்க் 2 கணினியை கழட்டி ஆராய்ந்து கொண்டிருந்தார் ஹாப்பர். கணிதவியலாளரான இவர்தான் மென்பொருள் உருவாக்கும் யோசனையின் முன்னோடி. ஃபர்ஸ்ட் லேடி ஆஃப் சாஃப்ட்வேர் எனப் புகழப்படுபவர். மார்க் 2 வேலை செய்யாததற்கு ஓர் அந்துப்பூச்சிதான் காரணம் என்பதை அவர் அறிந்தபோது, அவர் வேடிக்கைக்காக அதைக் குறிப்பேட்டில் ஒட்டி நிஜமான பக் கண்டுபிடிக்கப்பட்டது (first actual case of bug being found) என எழுதி வைத்தார். இந்த நகைச்சுவை பரவி பின்னர் அனைவரும் எல்லாக் கணினிப் பிழைகளையும் பக் என்ற வார்த்தை கொண்டே அழைக்க ஆரம்பித்தனர்.

இணையத்தின் கதை தொடர்பான இந்தக் கட்டுரைக்கு நேரடித் தொடர்பில்லை எனினும் இந்தத் தகவல் உங்களுக்கு சுவாரசியமாக இருந்திருக்கும். இப்படித்தான் இணையம் முழுவதும் தகவல்களால் நிரம்பியிருக்கிறது. நாமே நம்மைப் பற்றி எழுத்தாகவும், ஒளிப்படமாகவும், வீடியோவாகவும் தகவல்களைக் காெடுக்கிறோம். பல தகவல்களை நிறுவனங்களே திரட்டிக்கொள்கின்றன. இந்தத் தகவல் வலைக்குள்தான் நம் வாழ்க்கை சிக்கிக் கொண்டுள்ளது. நம் வேலை, பொழுதுபோக்கு, அரசியல், குடும்பம், நட்பு என எல்லாமே இணையம் சார்ந்தும் வலைத்தளங்கள் சார்ந்துமே இருக்கிறது. மனிதர்களின் முடிவில்லாத தகவல் போதைதான் இப்போது தொழில்நுட்பத்தின் இயங்கு சக்தியாக இருக்கிறது.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.