கல்வி குழந்தைகளிடையே படைப்பாற்றலை உருவாக்கக்கூடியது. குழந்தைகளிடம் இயற்கையாக உள்ள இயல்பூக்கம், சமத்துவமான பாகுபாடில்லாத சமூகத்தில் வெகுவாக வளர்ந்து, குழந்தைகளிடம் திறனை வளர்த்து படைப்பை உருவாக்கும் கல்வி.

பாகுபாடான சூழல் வாய்க்கப்பெறும்போது இயல்பூக்கம் குறைந்து படைப்பாற்றல் மலரத் தடையாக அமைந்துவிடும். படைப்பை உருவாக்கும் உண்மையான குழந்தை நேயக் கல்வி மலர சமத்துவ சமூகம் அத்தியாவசியமானது.

சமூகத்தில் நிலவும் பல்வேறு படிநிலைகள் பலவகை பாகுபாடுகளை ஏற்படுத்துகின்றன. அதில் பாலின பாகுபாடு நெடும் வரலாறு கொண்டு சமூகத்தின் ஒவ்வோர் இடுக்கிலும் பல்வேறு நிலைகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தகைய பாகுபாட்டைக் களைந்து பெண்கள் சமத்துவத்தை எட்ட வெகு தொலைவு பயணிக்க வேண்டி உள்ளது. அதில் கல்வி மிக முக்கியமானது.

பெண் குழந்தைகளைப் புரிந்துகொள்தல், அவர்களின் மேம்பாடு, பாகுபாட்டால் ஏற்படும் சிக்கல்கள், வாய்ப்பு மறுக்கப்படுவது எனப் பலவும் இன்றும் அதிகம் பேசப்படாமலே உள்ளது. சமத்துவ சமூகம் அமைய இவற்றையெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றைக் களைந்து, வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு விடுதலைக்கு வித்திடும் கல்விக்கு உண்டு. பெண், கல்வி பெறும் போது அவள் விடுதலைக்காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிவிடுகிறாள்.

பெண் குழந்தைகளின் கல்வி குறித்துப் பேச அவர்களோடு உறவாடும் ஆசிரியர்களால் நெருக்கமாக, உண்மையாகப் பேச வாய்ப்பு அமையும். பாலின பாகுபாட்டைப் பொருத்தவரை நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சிறு சிறு விஷயங்கள் தொடங்கி, அதிபயங்கர வன்முறை வரை நீடிக்கிறது. ஏற்கெனவே எழுதிய கட்டுரைகள் பாகுபாட்டின் பல்வேறு கூறுகளைத் தொட்டுப் பேசுகிறது. இன்னும் பேசப்படாத பாகுபாடுகள், பொதுவெளியில் பேசத் தயங்கும் விஷயங்கள் குறித்துக் காத்திரமாகப் பொதுசமூகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்தத் தொடர்.

*

நந்தினி மிதிவண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் நுழையும் போதே உரலில் ஏதோ இடிக்கும் சத்தம் கேட்டது. ‘ஒரு வேளை எள்ளு உருண்டையா, சிமிலியா இருக்குமோ?’ என்று யோசிக்கும் வேளையில் கம்பு இடிபடும் வாசம் குப்பென மூக்கு துவாரத்தில் பட்டு மூளையில் ஓர் புத்துணர்வைக் கொண்டுவந்தது.

பாட்டி தங்கம்மாள் உலக்கையில் கம்பை இடித்துக் கொண்டிருக்க, அம்மா உரலில் சிதறும் கம்பைத் தள்ளிக் கொண்டிருந்தார். “ஆயா நான் இடிக்கறேன்” எனப் பாட்டியிடம் நந்தினி கேட்க, “பார்த்து சிதறாம இடிக்கணும்” என பாட்டி சொல்ல, “உன்னளவுக்கு வராது ஆயா. ஆனா, முயற்சி செய்யறேன். கம்பு உமி நீக்க ஒரு மாதிரியும், கம்பை இடிக்க ஒரு மாதிரியும் உலக்கைல குத்தறது எவ்ளோ நேக்கு இருக்குல்ல அதுல.”

“எல்லாம் அனுபவத்துல வர்றது. அப்போல்லாம் தினமும் நாங்க கம்போ சோளமோ குத்திதான் சோறாக்கி திங்கணும். இதுலயே எங்க நேரமெல்லாம் போய்டும். அம்மாகூடப் படிக்கும் போது கம்பி குத்தி சோறாக்கிட்டுதான் பள்ளிக்கூடம் போவா. நான் சீக்கிரமா வேலைக்குப் போகறதால என்னால உதவிகூடச் செய்ய முடியாது.”

“அம்மா அப்படித்தான் படிச்சியா? ப்ப்ப்ப்பா எவ்ளோ கஷ்டம்ல உங்க காலத்துல படிக்கிறது?”

“5 ஆம் வகுப்பு வரை எங்கூர்லயே படிச்சிட்டு ஆறாம்ப்பு 9 கி.மீ. தொலைவு போகணும். காலைல கம்பு, சோள சோறு ஆக்கிட்டு நானும் என் ப்ரண்டும் மிதிவண்டில டவுன்க்குப் போயி படிச்சேன். அப்போல்லாம் பொண்ணுங்க படிக்கவே கூடாது. அதும் வயசுக்கு வந்துட்டா வாய்ப்பே இல்லை. நல்ல வேளை தாத்தா ராமசாமிகிட்ட கேட்டு எப்படியோ படிச்சிட்டேன். இப்போ அரசாங்க வேலைல இருக்கேன்” என்றார் அம்மா மணிமேகலை.

“எப்படியோ நீ படிச்சதாலதான் நம்ம குடும்பம் நல்லா இருக்கு. இல்லைன்னா ரொம்பக் கஷ்டப்படும். இல்லமா?”

“அது என்னவோ உண்மைதான். கல்வி எப்பவும் நம்மை உயர்த்தும்!”

“பள்ளிக்கூடத்துல இருந்து வந்ததும் அப்படியே கம்பைக் குத்த வந்துட்டேன். நீங்க குத்தறதப் பார்த்ததும்… கை வேற வலிக்குது. எப்படித்தான் ஆயா விடாம குத்றேன்னு தெரியல. நீ ரொம்ப பலசாலிதான்” என்று சொல்லிக்கிட்டே உரலின் அருகே இருந்த அம்மி மீது உட்காரப் போனாள் நந்தினி.

“அம்மி மேல உட்காராதன்னு எத்தனை முறை சொல்றது?.”

“ஏன் உட்காரக்கூடாது ஆயா?”

“கேள்வி கேட்காத. உட்காரக் கூடாதுன்னா உட்காரக் கூடாதுதான்.”

“என்னவோ போ ஆயா… என்னென்னவோ சொல்வ, கேள்வி கேட்டா கேட்கக் கூடாதுன்னு சொல்வ.”

“நாளைக்கு உனக்கு விடுமுறைதான, நாம சேலத்துல ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறோம்.”

“எனக்கு லீவ்தான்மா. போகலாம். ஆனா, அங்க போர் அடிக்குமே! நான் வர்ல.“

“அங்க வந்தவங்ககூடப் பேசி பழகு, உனக்கு போர் அடிக்காது.”

“ம்ம்… சரி சரி. நான் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேன்மா” என விளையாடச் சென்றுவிட்டாள் நந்தினி.

குடும்பமாகப் புறப்பட்டுச் சென்றனர்.

“வாங்க வாங்க, உள்ள வந்து உட்காருங்க” எனத் தண்ணீர் கொடுத்து உபசரிக்கும் முன் அப்பா அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர, நந்தினியும் அருகே அமரலாம் எனப் போக,

ஒரு பெண் கீழே பாயை விரிக்க, “வா நந்தினி, இங்க வந்து பாய்ல உட்காரு. அங்க சேர்ல ஆம்பளங்க உட்காருவாங்க” என்று சொன்னதும் நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அம்மாவை முறைத்தாள். இதுக்குத்தான் வரமாட்டேன் என்று சொன்னேன் என்று கண்களாலேயே தெரிவித்தாள்.

வீடு திரும்பினர். வீட்டில் அக்கா பாரதியும் மகன் சாந்தனுவும் வந்திருந்தார்கள்.

“என்ன திடீர்னு வந்திருக்கிங்க? எப்போ வந்திங்க?” என்று நந்தினி பாரதியைக் கட்டிக்கொண்டாள்.

“இப்பதான் வந்தோம். சாந்தனுவும் இங்க வரணும் வரணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். அதான் திடீர்னு கிளம்பி வந்துட்டோம்.”

“சொந்தக்காரங்க வீட்ல பாயைப் போட்டு உட்கார வைச்சதுல கடுப்பாயிட்டேன். உங்களைப் பார்த்ததும்தான் கொஞ்சம் சந்தோஷமாச்சு. அம்மா இன்னைக்குப் பேரனுக்குப் பிடிச்ச வடையும் பச்சைப் பயிறு கொழம்பும் செஞ்சு அசத்தப் போகுது. எப்படியோ நமக்கு ஜாலிதான்னு” சொல்லிக்கிட்டே போனாள்.

“அவன் வந்தா அதைத்தான் செய்யச் சொல்லி கேட்கறான். நான் செய்யறேன் அவ்ளோதான். இதுலென்ன ஸ்பெஷல், ஏன் நீ கேட்டா செஞ்சு தர்லயா?” என்று விளக்கம் கொடுத்தார் அம்மா.

“வீட்ல அத்தை, மாமா எப்படி இருக்காங்க பாரதி? இப்போ வயல்ல எள் அறுத்தாச்சா?”

“அவங்க நல்லா இருக்காங்க. இன்னும் எள் அறுக்கல. நெல் அறுத்துக்கிட்டு இருக்காங்க. அத்தை ரொம்ப பிஸியா வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. எங்க பாப்பாவும் தம்பியும் வீட்டுக்கு வரமாட்டிங்கறாங்க? லீவ்னா அக்கா வீட்ல உரிமையா வந்து தங்குனாத்தான எனக்கு சந்தோசமா இருக்கும். எவ்ளோ முறை கூப்பிட்டிருக்கேன், பாப்பான்னா வரவே மாட்டிங்கிறா. சின்னதா இருந்த போதெல்லாம் வந்தா, இப்போ பெரியவளாயிட்டு சுத்தமா வரமாட்டிங்கிறா! எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள் பாரதி.

“போக வேண்டியதான நந்தினி. ஏன் போக மாட்டிங்கிற?”

“அக்கா சொல்றேன்னு கோவிச்சுக்காத. நான் அங்க வரணும்ன்னா வீட்ல கொஞ்சம் குழி தோண்டி வைச்சிரு ஒக்காரதுக்கு… ஏன்னா மரியாதையை அந்த வீட்ல உயரத்துலதான் வைச்சிருக்காங்க!”

“அடிப்பாவி, ஏன் இப்படிச் சொல்ற?” என்று அம்மா ஆச்சரியமாகக் கேட்டார்.

(தொடரும்)

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார். ஹெர் ஸ்டோரீஸில் இவர் எழுதிய குழந்தைகள் பற்றிய தொடர், ‘நாங்கள் வாயாடிகள்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.