ஹேமர் என்பது சுமார் முப்பத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு பழங்குடி. எத்தியோப்பியாவின் கீழுள்ள ஓமோ நதி பள்ளத்தாக்கின் வளமான பகுதியான ஹேமர், பெனா வொரேடாவில் இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பவர்கள், எனவே அவர்களின் கலாச்சாரம் கால்நடைகளுக்கு அதிக மதிப்பை அளிக்கிறது, கால்நடை அவர்களின் வாழ்க்கையின் ஆணிவேர். ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று பெயர்கள் உள்ளன: ஒரு மனிதனின் பெயர், ஆடு மற்றும் மாட்டின் பெயர். அவர்கள் ஒரு பொதுவான மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஹேமர் பழங்குடி மக்களில் 95% சன்னி இஸ்லாமியர்கள். இஸ்லாமின் ஐந்து அடிப்படைப் போதனைகளான அல்லா மட்டுமே கடவுள் என்பதை ஒப்புக்கொள்வது, பிரார்த்தனை செய்தல், நோன்பு நோற்பது, ஏழைகளுக்கு தானம் வழங்குவது, மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகியவை அடங்கும். இருப்பினும், அவர்களின் பாரம்பரிய மதத்தின் கூறுகளாகிய இயற்கை பொருள்களிலும் ஆவிகள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

ஹேமர் பழங்குடிப் பெண்கள் சோளம், பீன்ஸ், பூசணி வளர்க்கிறார்கள். எட்டு வயதிலிருந்தே ஆடு மேய்த்து குடும்பத்திற்கு உதவத் தொடங்கி, தண்ணீர் எடுத்துச் செல்வது , வீடு கட்டுவது, சமைப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற பொறுப்புகளையும் அவர்கள் திறம்படச் செய்கிறார்கள். ஹேமர் பழங்குடி இளைஞர்கள் உழவுத் தொழில் செய்கிறார்கள், மந்தைகளைப் பாதுகாக்கிறார்கள். முதிர்ச்சியடைந்த ஆண்கள் கால்நடைகளை மேய்த்து, எருதுகளால் நிலங்களை உழுகிறார்கள், அகாசியா மரங்களில் தேனீக்களை வளர்க்கிறார்கள்.

பெண்கள் தங்கள் தலைமுடியை இறுக்கமான, சுருள் இழைகளாகப் பின்னிக்கொண்டு, அவர்கள் தங்கள் உடலை வளையல்கள், சிவப்பு, கறுப்பு மணிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கின்றனர் . திருமணமான பெண்கள் அடர்த்தியான செம்பு கழுத்தணிகளை அணிகிறார்கள். வெப்பமான வறண்ட காலநிலைக்கு ஏற்ற பாரம்பரிய உடையாக ஆட்டின் தோலினால் செய்யப்பட்ட எளிய பாவாடை வகை ஆடைகளை அணிகிறார்கள்.

‘காளை குதிக்கும் விழா’ ஹேமர் பாரம்பரியத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான இளைஞர்களுக்கான சடங்கு. இது ஆண்கள் வயதுக்கு வரும் சடங்கு. ‘உகுலி’ என்று அழைக்கப்படும் இளைஞன், ஒரு தொடக்க சடங்காக வரிசையாகப் பத்து காளைகளின் மீது பாய்கிறார். முதல் காளையின் முதுகில் குதிக்க வேண்டும், பின்னர் ஒரு காளையிலிருந்து மற்றொரு காளைக்குக் குதித்து , அவர் இறுதியாக வரிசையின் முடிவை அடைய வேண்டும் . அவர் வரிசையிலிருந்து விழக் கூடாது. இது போல நான்கு முறை வெற்றிகரமாகச் செய்தால் கணவனாகும் தகுதியைப் பெறுகிறான். அதில் வெற்றி பெற்றால், ‘உகுலி’ நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளவும், குழந்தைகளை வளர்க்கவும், கால்நடைகளை வைத்திருக்கவும் தகுதி பெறுகிறார்கள். இந்த விழாவில் பெண்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து தங்கள் கால்களில் மணிகளைக் கட்டிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். இந்தப் போட்டியில் இளைஞர்கள் நூறு முதல் முந்நூறு பேர் வரை கலந்துகொள்கிறார்கள்.

விழாவிற்குச் சில மணி நேரம் முன்பு, ஹேமர் பழங்குடி பெண்கள் போட்டியில் ஏற்கெனவே தகுதியடைந்த இளைஞர்களைச் சந்திக்கச் செல்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் மணக்கவிருக்கும் ஆண் உறவினர்களிடம் தங்கள் அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் காட்டுவதற்காக மரக்கிளைகளுடன் சென்று, இந்த ஆண்களால் சாட்டையடிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குவதே இதன் பொருளாக நம்புகிறார்கள்.

இத்தகைய வலியை அனுபவித்ததால், எதிர்காலத்தில் அவர்களை அந்த ஆண்கள் பாதுகாக்க இந்த நிகழ்வு ஒரு காரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஹேமர் பழங்குடியினர் பெரும்பாலும் போர்வீரர்களின் கலாச்சாரம் என்பதால், பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்ட பிறகு வலியைக் காட்ட மறுக்கின்றனர். மாறாக, பெண்கள் தங்கள் வடுக்கள் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள்.

கலாச்சார ரீதியாக, இந்தச் சடங்கில் பங்கேற்க மறுக்கும் பெண்களை இழிவாகப் பார்க்கிறார்கள். இது ஹேமர் பெண்களிடையே ஒரு வகையான போட்டியாக மாறுகிறது. இதனால் பெண்கள் பின்வாங்க மறுத்து, ஒவ்வொருவரும் மிகவும் வேதனையைத் தாங்குவதாகச் சபதம் செய்கிறார்கள்.

காற்றில் எதிரொலிக்கும் சாட்டைகளின் சத்தத்துடன், வெற்றுத் தோலின் ஒவ்வோர் அங்குலத்தையும் அந்தச் சாட்டை துளைப்பதை நீங்கள் கிட்டத்தட்ட உணர்வீர்கள்.

சாட்டையால் அடிக்கப்பட்ட பிறகு, ஒரு பெண்ணின் காயங்களில் மர சாம்பல், உலர்ந்த மாட்டுச் சாணம் ஆகியவற்றைத் தடவி, தடிமனான தழும்புகளாக மாற்றி ஒரு பெண்ணின் உடலில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. ஒரு பெண்ணுக்கு எவ்வளவு வடுக்கள் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அவள் மதிக்கப்படுவார்.

ஒரு பெண் விதவையாகிவிட்டால் அல்லது கடினமான நேரத்தை எதிர்கொண்டால், அந்த வடுக்கள் அவள் அவனுக்காக எப்படிக் கஷ்டப்பட்டாள் என்பதை நினைவூட்டுகிறது, ஒரு உகுலி அவளுக்குச் செலுத்த வேண்டிய கடனின் பதிவாகச் செயல்படுகிறது.

நடனத்தில் ஆண் ஒரு சாத்தியமான மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார், இருப்பினும் முதல் திருமணம் (ஒரு ஹேமர் ஆணுக்கு நான்கு மனைவிகள் வரை இருக்கலாம்) பெற்றோரால் தீர்மானிக்கப்படுகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், ஆணின் குடும்பம் முப்பது ஆடுகளையும் இருபது கால்நடைகளையும் பெண்ணின் குடும்பத்திற்கு வரதட்சணையாகக் கொடுக்க வேண்டும். இந்த ஆயர் சமூகத்தில் வாழ்க்கையின் முக்கியமான பகுதியான விழாவைக் கடந்துவிட்டால், மனிதன் கால்நடைகளை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுவான்.

ஆண்கள் தங்கள் முப்பதுகளில் திருமணம் செய்து கொள்கிறார்கள். மறுபுறம், பெண்கள் 17 வயதில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

முதல் மனைவியாக இல்லாத ஹேமர் பெண்கள் மிகவும் கடினமான அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

திருமணத்திற்கு நிச்சயப்பட்டிருக்கும் இளைஞன் சடங்கிற்கான அனைத்து வரதட்சணையும் வழங்கும் வரை பெண்கள் தங்கள் பிறந்த வீடுகளில் காத்திருக்க வேண்டும். இந்தப் பெண்கள் ‘உடா’ என்று அழைக்கப்படுகிறார்கள், பல வாரங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. நிச்சயம் ஆனவுடன் அவர்கள் உடல் முழுவதுமாகச் சிவப்பு களிமண்ணால் மூடப்படுகிறது. குளிப்பதற்கும் உரிமை இல்லை. அவர்களால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது. நண்பர்கள் அவளுக்கு உணவு கொண்டு வருவார்கள்.

ஓர் ஆணால் மணமகள் வரதட்சணையைக் கொடுக்க முடிந்தால், அவனுக்கு மூன்று அல்லது நான்கு மனைவிகள் இருக்க முடியும். பெண்கள் ஒருவரை மட்டுமே மணக்கிறார்கள்.

ஆண்கள் தங்கள் மனைவிகளைவிட வயதானவர்களாக இருப்பதால், அவர்கள் பெரும்பாலும் முதலில் இறக்கிறார்கள். பல ஹேமர் குடும்பங்கள் தப்பிப்பிழைத்த பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. ஓர் ஆய்வில் நாற்பது திருமணமான பெண்களில் முப்பது பேர் விதவைகள் என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு விதவை தனது கணவரின் இளைய சகோதரர்களையும் அவர்களின் கால்நடைகளையும் சேர்த்து வளர்க்கிறார்.

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.