“யம்மா, என்னைக் கொல்றானே யாராவது காப்பாத்துங்களேன்’ என்று தெருவில் யாரோ ஒரு பெண்ணின் அலறல்.

எங்கள் வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. தனி வீடுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியது போல மூன்றாவது மாடி, பிறகு மொட்டை மாடி. வீட்டுச் சுவர்களில் சுற்றிலும் கண்ணாடி வைத்த பெரிய பெரிய ஜன்னல்கள். காற்று வெளிச்சம், கூடவே இவை போன்ற சத்தமும் எங்களை வந்து சேரும்.

வீட்டின் இடது புறம் ஒரு மருத்துவமனை. ஒரு காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட மருத்துவமனையாக இருந்திருக்கிறது. இப்போதும் வருமானத்திற்கு ஒன்றும் குறைவில்லாமல், நோயாளிகளுக்கும் நோய்களுக்கும் பஞ்சமில்லாமல் வந்து போனபடிதான் இருப்பார்கள். நடு இரவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வரும். அவற்றை இறக்கி வைக்கும் ஒலி, தூக்கி வைக்கும் சத்தம், தெருவின் நிசப்தத்தில் பெரிதாகக் கேட்கும்.

கிச்சனில் நின்றால் நோயாளிகளின் அலறல்கள், வலியில் முனகும் சத்தங்கள் கேட்கும். அப்புறம் டெலிவரியின்போது இந்தப் பெண்கள் பண்ணும் அலப்பறைகள்… சிரிப்பாகவும் வேதனையாகவும் இருக்கும். ‘பிரசவ வைராக்கியம்’ என்பார்கள். எங்கள் அத்தை பெண் சியாமளாவின் டெலிவரி கதைதான் எங்கள் குடும்பத்திலேயே அதிகம் சொல்லிச் சொல்லிச் சிரிக்கப்பட்ட கதை.

‘அந்தாளை நான் இன்னிக்கே டைவர்ஸ் பண்றேன்; அந்தாளுதான என்னைய இப்படிப் பண்ணான்; அவனை இழுத்துட்டு வாங்க; எனக்கு எவ்ளோ வலிக்குது; அவனுக்கும் ஊசி போடுங்க; ஆபரேஷன் பண்ணுங்க; அவனும் அனுபவிக்கட்டும், அவன…’, பல்லைக் கடித்து, ‘அந்தாளைக் கூட்டிட்டு வாங்க; கொரவலையக் கடிச்சுச் துப்பிர்ரேன்’ என்று அந்தக்கா ஒரே ஆர்ப்பாட்டம்.

டெலிவரிக்குக் கூட்டிப் போன ஸ்ட்ரெக்சர் மேலேயே ஏறி நின்று கொண்டது. குதிச்சுருவேன் என்று ஒரே ஆட்டம். நர்ஸ், தியேட்டர் பாய்ஸ், டாக்டர்ஸ் எல்லாரும் திண்டாடிப் போனார்கள். கடைசியில் ஒரே அமுக்காக அமுக்கி படுக்க வைக்க, பிடித்துக்கொண்டிருந்த நர்ஸின் கையைக் கடித்து வைத்துவிட்டார். இது முதல் குழந்தை பிரசவமான கதை. பிறகு அந்தக்கா இரண்டு பிள்ளைகள் பெற்றுக்கொண்டார்.

எங்கள் வீட்டின் பின்புறம் பிரபலமான கல்லூரி. அந்தக் கல்லூரியின் பெயரிலேதான் எங்களது சாலையின் பெயர் அமைந்திருந்தது. அந்தக் கல்லூரியின் மைதானத்தில் காலை வேளைகளில் கால் பந்தாட்டம் விளையாடுவது, பறை வகுப்பு நடப்பது, சில நேரம் ஏதாவது விழாக்கள் நடப்பதன் பேரொலிகள் கேட்கும்.

வீட்டின் முன்புறம் சாலை. கார், வண்டிகள் செல்லும் சத்தங்கள், ஹார்ன் ஒலிகள் என எப்போதும் பிஸியாக இருக்கும். அந்தச் சாலையில்தான், ‘யம்மா என்னைக் கொல்றானே யாராவது காப்பாத்துங்களேன்’ என்று ஒரு பெண்ணின் அலறல். கத்திய பெண்ணிற்குதான் என்னவோ ஏதோ ஆகிவிட்டதென்று எட்டிப் பார்த்தால், கதை வேறாக இருந்தது. உண்மையில் இந்தப் பெண்தான் ஓராளின் தலை முடியைப் பிய்த்து ஆய்ந்து வைத்திருந்தது. அவனது சட்டைப் பித்தான்கள் கழன்று இருந்தன. சட்டை காலர் அவள் கையோடு கிழிந்து வந்திருந்தது.

எனக்கு அந்தம்மாளையும் அந்த ஆளையும் தெரியும். ஆபிஸ் போகும்போது வரும்போது, விடுமுறை நாட்களில் கடைக்குப் போகும்போது என்று பார்த்திருக்கிறேன். பக்கத்து அபார்ட்மெண்ட்டில் நான்கைந்து வீடுகளில் அந்தம்மா வீட்டு வேலை செய்கிறார். இந்தாள் கைனட்டிக் ஹோண்டாவில் இந்தம்மாவைக் கொண்டு வந்துவிடுவார். அந்தம்மா அபார்ட்மெண்ட் உள்ளே போனதும் இந்தாள் கைனெட்டிக் ஹோண்டாவின் ஹேண்டில் பாரில் காலை நீட்டிப் போட்டு, ஸ்டெஃப்னியில் தலை வைத்து சீட்டில் படுத்துக்கொண்டு, போனைப் பார்க்க ஆரம்பித்தார் என்றால், அந்தம்மா மதியம் மூன்று மணிக்கு வெளியே வரும் வரைக்கும் அப்படியே அதே போஸில் கிடப்பார்.

நான் ஆபிஸ் போகும் நேரத்தில் இருவருமாகச் சில நேரம் எதிர்ப்படுவார்கள். தனித்தனியாக அவர்களை என்றுமே பார்த்ததில்லை. என்னைப் பார்த்தால் அந்தாள் வணக்கம் வைப்பார். பொதுவாக அவர்கள் இருவரும் இன்றுதான் கல்யாணமான ஜோடி போல நடந்துகொள்வார்கள். இந்தாள் காத்திருந்து கூட்டிப் போவதும், தெரு முக்குகளில் கொஞ்சம் போல கொஞ்சல்களும் நடக்கும்.

அந்த ஜோடிதான் இன்று ‘வெட்டு, குத்து, கொலை’ என்று சண்டை. கிட்டத்தட்ட தெருவே கூடிப் போனது.

பக்கத்து அபார்ட்மெண்ட் வாட்ச் மேன், எதிர்த்த பில்டிங் வாட்ச்மேன், மருத்துவமனை வாட்ச்மேன் எல்லாரும் சேர்ந்து பஞ்சாயத்துப் பேசி அனுப்பி வைத்தார்கள்.

என்ன கதை என்று கேட்டால், இந்தம்மாளும் அந்தாளும் நான் நினைத்துக் கொண்டிருந்தது போல, கணவன் மனைவி கிடையாதாம்; இருவருக்கும் தனித்தனிக் குடும்பம் உள்ளதாம். அந்தாளுக்குப் பயங்கர சந்தேக புத்தியாம்; இந்தம்மாள் தன் கணவனோடு ஒருநாள் போக அதைப் பார்த்துவிட்டு, அந்தாள் சண்டை பிடித்தாராம். அதுதான் தெருவே கேட்கும்படி அலறலாம்.

இது போக விநோதம் என்றால், இந்த ஊருக்கு வந்த புதிதில், இந்த வீட்டிற்கு குடிவந்து சரியாக ஒரு வாரம் ஆகியபோது, தெருவில் ஏதோ விற்றுக்கொண்டு போனார்கள். அல்லது அப்போதுதான் கவனிக்க ஆரம்பித்தோம். டேப் செய்த குரல், திரும்பத் திரும்ப ஒரே மாதிரி ஒலித்தது. என்னவென்று கேட்பதற்குள் கடந்து போய்விட்டது. சரியாக தினமும் மாலை ஏழு மணிக்கு ஒலிக்கும். ‘கியாப்போய்’ என்று. இப்படி எதாவது இருக்கிறதா… என்று நாங்கள் குடும்பம் மொத்தமாகத் தலையைப் பிய்த்துக் கொண்டோம். ஏதாவது பர்மா அல்லது தாய்லாந்து நாட்டுப் பண்டமோ என்று கூகுளில் ஆராய்ந்தோம். நாங்கள் வெளியே செல்வதும், விற்றுக் கொண்டு போகிறவரும் ஒரே நேரமாக அமைந்த ஒருநாளில்தான் அது ‘கியாப்போய்’ இல்லை, ‘இடியாப்பம்’ என்று கண்டு கொண்டோம்.

எங்களது வீட்டின் வலப்புறம் ஒரு பெரிய அபார்ட்மெண்ட். அவர்களது இடது புறம் அமைந்த மொத்த வீடுகளின் பால்கணியிலிருந்தும், எங்களது வீட்டைப் பார்க்கலாம் எனும்படி அமைந்து இருந்தது. அங்கு வேலைக்கிருக்கும் செக்யூரிட்டிகள் சத்தமாக வைத்துப் பாட்டு கேட்பது, சிவகாமியின் செல்வன் கதை வசனம் எல்லாம் இங்கே எங்களுக்கும் கேட்கும்.

ஒருநாள் நானும் என்னைவிடப் பத்து வயது சிறிய கடைக்குட்டிச் செல்லம் தங்கையும் பால்கனியில் அமர்ந்து எடைக்குப் போடும் புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் ரகம் வாரியாகப் பிரித்துக்கொண்டிருந்தோம். அந்த அபார்ட்மெண்ட்டின் நேரெதிரே எங்கள் பால்கனியில் அமைந்திருந்த, வீட்டின் பால்கனியில் ஒருவர் வந்து போன் பேச ஆரம்பித்தார்.

‘ஆமாண்ணா, அம்மாகிட்ட சொல்லிடுங்க. அப்பாதான் போனமுறை நான் வந்திருந்தப்போ கேட்டார். நான்தான் கொரியரில் உடனே அனுப்பிவிட்டேன். அந்தப் பணம்தான் ஆமா. 500 ரூபாய். மறந்திடாம அனுப்பி விடுங்க. ஆமா, லதா இப்ப பத்தாவது படிக்குதா. பிள்ளைங்க எவ்வளவு சீக்கிரம் வளந்துர்றாங்க…’

‘அண்ணா அந்த 500 ரூபா…’

‘இல்ல, இங்க அதெல்லாம் கிடைக்காது.’

‘அண்ணா அந்த 500 ரூபா.’

‘அவன் இங்க வந்திருந்தப்ப பீச் கூட்டிட்டுப் போனேனே…’

‘அண்ணா 500 ரூபா.’

‘வச்சிடட்டுமா, அந்த 500 ரூபா அண்ணா.’

அன்றிலிருந்து அவருக்கு நானும் குட்டித் தங்கையும் ‘அண்ணா ஐநூறு’ என்று பேர் வைத்தோம். ‘அண்ணே, அந்த அண்ணா ஐநூறு இருக்கில்ல, இன்னிக்கு அவங்க வாட்ச்மேனோட ஒரே சண்டை’. இப்படி எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.

குட்டித் தங்கையின் பயங்களை எப்படி எதிர்கொள்வது என்பதை அவரது மிகச் சிறிய வயதிலிருந்தே எங்கள் வீட்டில் கடைப்பிடித்து வருகிறோம். ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’; ‘இருள் என்பது குறைந்த வெளிச்சம்’ என்றெல்லாம் சிறுவயதிலிருந்தே உலகைப் பார்க்கப் பழக்கி இருந்தோம்.

‘அருந்ததீ’ படம் வரும்போது தங்கைக்கு நான்கே வயது. படம் பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தபோது, தங்கைக்கு முகம் முழுக்க பவுடர் அடித்துக் கண்ணாடி முன் நிற்க வைத்து, ‘பாருடா, இப்படித்தான் படத்தில் வரும்; அதெல்லாம் வெறும் மேக்கப் அவ்வளவுதான். பயப்படாமல் பார்ப்பியா’ என்று கேட்க, ‘ம்’ மென்று தலையாட்டி நிஜமாகவே தங்கை பயப்படாமல் படம் பார்த்தார்.

பிறகும் எத்தனையோ படங்கள். எதற்கும் அவர் பயப்பட்டதே இல்லை. அப்புறம் பதின் பருவத்தில், மாயா படம் பார்க்கும்போதுகூட எதுவும் சொல்லவில்லை. ஆனால், இந்த வீடு வந்த சிறிது நாட்களில் தங்கை ஒவ்வொன்றிற்கும் லேசாக நடுங்க ஆரம்பித்தார். ‘அம்மா, எனக்கு பாத்ரூம்ல யாரோ அழுவுற சத்தம் கேட்குது’ என்று ஒருநாள்.

எங்கள் வீட்டில் கடவுள் நம்பிக்கை கிடையாது; எனவே, பேய் போன்ற மூட நம்பிக்கைகளும் கிடையாது; அம்மா, அப்பாவின் இத்தனை நாள் பெரியாரிச கொள்கைகளையும் தூக்கிச் சாப்பிடுவதாக ஒன்று கேட்டார்: ‘எதாவது பூசாரிகிட்ட மந்திரிச்சுட்டு வருவமாப்பா’. எனக்கு ‘கிர்’ரென்று வந்தது. நான் முறைத்த முறைப்பில் பேசாமல் போய்விட்டார்.

‘இந்த மாயா படம் பார்த்ததற்கு அப்புறம்தான் இப்படிலாம் சொல்றா. என்னதான் இருந்தாலும் வயசுப் பிள்ளைய இப்படிப் படத்திற்கெல்லாம் நீங்க கூட்டிப் போயிருக்கக் கூடாது’ என்று கீழ் வீட்டு அத்தையின் அட்வைஸ்.

அம்மாவைப்போல் அவரிடம் முறைக்க முடியுமா, பேசாமல் பல்லைக் கடித்துக்கொண்டு சிரித்து வைத்தேன்.

அன்று ஆபிஸுக்குச் சீக்கிரமே போக வேண்டுமென்று கிளம்பிக்கொண்டிருந்தேன். பாத்ரூமிற்குள் நுழைந்த வேகத்தில் தங்கை என்னிடம் வேகமாக ஓடி வந்தார். ‘அண்ணே, நான் சொன்னப்ப நீ நம்பல இல்ல. இப்ப வந்து கேளு. பாத்ரூம்ல யாரோ அழறாங்க.’

நான் வேகமாக பாத்ரூமிற்குள் சென்றேன். ‘ம்… ம்…’ என்று அனத்தலாய் ஆரம்பித்த குரல், புலம்பலாக, வேதனையாக வெளிப்பட்டது. வீட்டின் வேறெங்கும் அந்தக் குரல் கேட்கவில்லை.

நான் சிரிக்கத் தொடங்கினேன். அம்மாவும் வந்தார். கேட்ட கொஞ்ச நேரத்தில் அம்மாவும் சிரிக்க ஆரம்பித்தார். அந்த அனத்தல் குரல் வந்தது, எங்கள் வீட்டின் இடப்பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியிலிருந்து. இதைக் கேட்டுத்தான் தங்கை பேய் என்று பயந்திருக்கிறார். இந்த உண்மை புரிந்ததும் தங்கையின் முறைப்பு குறுஞ்சிரிப்பானது.

கீழ் வீட்டு ரகுநந்தன் அண்ணாவுக்கு மைக்கை முழுங்கிய குரல். எதற்கோ அவரது மனைவி அவரோடு கோபித்துக் கொண்டு போய்விட்டார். அவர் சென்னை வந்து கற்றுக்கொண்ட அத்தனை கெட்ட வார்த்தைகளையும் வைத்துத் தினமும் அவர் மனைவிக்குப் போன் போட்டுத் திட்டிக்கொண்டிருப்பார். எல்லாமே அவர் மனைவியைப் பல ஆண்களோடு இணைத்து அசிங்கப்படுத்தும் கெட்ட வார்த்தைகள்.

என்னோடு ஆபிஸில் வேலை பார்க்கும் ரங்கண்ணன், டூவீலர் பார்க் செய்கிற இடத்தில் இருந்து அவர் பேசுவது அத்தனையும் எனது கேபினில் அப்படியே கேட்கும். ஏசிக்காக எனது ஜன்னல் சாத்தியிருப்பதால், கேபினுள் நானிருப்பதை அறியாமல் அவர்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருப்பார். அவரும் இப்படித்தான், தனது மனைவியை அசிங்கம் அசிங்கமாகத் திட்டுவார். காரணம் மாமியார் பிரச்னை. இவரது அம்மாவைத் தான் ஏன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோபித்துக்கொண்டு, சேலத்தில் அவர் அம்மா வீட்டோடு போய்விட்டார். இவரது அம்மாவுக்கு இவரை விடவும் நாறவாய். யாருமே அந்த வீட்டில் குடித்தனம் பண்ண முடியாது. அப்படிப் பொறுத்துக் கொண்டுக் குடித்தனம் பண்ண இவரொன்றும் பெண்டாட்டியைச் சீராட்டிப் பாராட்டுகிறவருமில்லை.

நானறிந்தவரை, கணவன் மனைவி உறவில், சிலருக்குத் தினம் பார்த்துக்கொள்ளும்படி இருக்க வேண்டும்; சிலருக்கு வாரமொருமுறை, சிலருக்கோ மாதம் ஒருமுறையே போதுமானது; சிலரோ வருடத்திற்கொருமுறை சந்திக்கிற கணவன் மனைவியாக இருந்தால்தான் அந்தத் தாம்பத்யம் நிலைத்திருக்கும்.

எப்படிச் சில தாவரங்களுக்கு வருடமொருமுறை நீரே போதுமானது; சிலவற்றிற்கோ தினம் நீர்விட வேண்டும்; சில எப்போதாவது கிடைக்கும் நீரில் வாழ்ந்துவிடும்; சில நீரிலேயே வாழும் நீர்த் தாவரங்களாக இருக்கும்; அப்படி.

எங்களது ஆபிஸில் பர்சேஸ் மேனேஜர் மங்கள்ராம். அவர் மனைவி பெங்களூரில் ஐடியில் ப்ரொக்ராம் மேனேஜராக வேலை செய்கிறார். இவர் சென்னையிலிருந்து வாரமொருமுறை பெங்களூரு சென்று வருவார். பேச ஆரம்பித்தாரென்றால் மனிதர் அவ்வளவுதான். நாம் அவரது கேபின் தாண்டி சென்ற பிறகும் கதவுகளோடும் நாற்காலிகளோடும் பேசிக்கொண்டிருப்பார். சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ பேசிக்கொண்டே இருப்பார். ஆபிஸ் லேனில் மரம் மரமாகப் பேசியபடி இருப்பார். ஆபிஸ் அட்டெண்டர் சுரேஷ் சொல்வார், ‘யப்போவ், இவர் பொண்டாட்டி எப்படித்தான் இவரைச் சமாளிக்குதோ… வாரா வாரம்கிறதால ஒருவேளை பொறுத்துக்குதோ என்னமோ’ என்று.

ப்படியாகக் குரல்கள்… குரல்கள்… குரல்கள்… பக்கத்து அபார்ட்மெண்ட்டில் வாழும் மனிதர்களின் சத்தங்கள், யாரோ யாரையோ வேலைக்கு ஏவும் குரல்கள், இன்னும் யார் யாருடைய என்னென்னவோ குரல்கள்…

இவற்றினூடே, வீட்டு ஜன்னலில் புறாக்களின் அனத்தல், அது என்னவோ நம் மனதைப் பிசையும். மாலை இருளும்போது தெருவில் ‘யக்கா, பூவேய்’ என்று ஒரு பெண் கத்திப் போவார். அவர் கொஞ்சம் கிறுக்கு போல நடந்துகொள்வார்.

சின்ன வயதில் நானும் தம்பியும் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தெருவில் யாராவது ஏதாவது விற்றுப் போனால், அவர்கள் கூவுவது போலவே கூப்பிட்டுவிட்டு ஒளிந்து கொள்வோம். நல்ல விளையாட்டு அது. இப்போது நினைத்துப் பார்த்தால், நினைவிற்கே வராத இறந்து போன தம்பியின் குரல்.

கீழே எங்கிருந்தோ யாரோ போனில் பேசுவது, நினைவை நிறுத்தியது.

கீழ் வீட்டில் வேலை செய்யும் லலிதாக்காதான் அவரது கணவனோடு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். ரகுநந்தன் அண்ணா வீட்டில் வேலை செய்பவர். பெண்ணுக்கும் பையனுக்கும் திருமணமாகிவிட்டது. இவரே மாமியாரான பின்னும் இன்னும் இவருக்கு மாமியார் பிரச்னை தீரவில்லை. வாரம் ஒருநாள் இப்படி இவர் தன் கணவனோடு வாக்குவாதம் செய்வது எங்கள் வீடு வரை கேட்கும். அவர் கத்திப் பேசியது, தெளிவாகவே காதில் விழுந்தது.

மா, உங்கம்மா பதிவிரதை; அப்ப அவளோடவே படுத்துக்க; அவதான் நல்லா சமைப்பான்னா அவ போட்றதையே திங்க வேண்டியதுதான?’

படைப்பாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.